Wednesday, June 12, 2024

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER)

வயது – 4 & 5

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதுஇதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோவிற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 17

தாவீது என்ற ஆட்டுஇடையச் சிறுவன்

இஸ்ரவேல் தேசத்தின் பெத்லெகேம் என்ற பட்டணத்திலே தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். தாவீது எல்லாரிலும் இளையவன். தாவீதிற்கு ஆண்டவர்மேல் மிகுந்த பக்தி இருந்தது. ஆண்டவர் எப்பொழுதும் தன்னோடு கூடவே இருக்கிறார் என்று அவனுக்கு நம்பிக்கை இருந்ததினால் எதற்கும் பயப்படாத தைரியசாலியாய் இருந்தான்.

தாவீதின் தந்தை அவனுடைய பொறுப்பிலே சில ஆடுகளைக் கொடுத்திருந்தார். அவன் அந்த ஆடுகளுக்கு உணவு கொடுப்பதற்காக வயல்வெளியிலே மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டும். சில நேரங்களில் இரவுவேளைகளில் கூட அங்கு தங்க வேண்டியது வரும்.

தாவீது தன்னுடைய ஆடுகளை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தான். தாவீது தன்னுடைய ஆடுகளை மேய்க்கும்பொழுது, சில வேளைகளில் சிங்கம், கரடி போன்ற கொடிய மிருகங்கள் ஆடுகளை பிடிப்பதற்காக வரும். அவைகள் பதுங்கியிருந்து பாயும். ஆகவே தாவீது எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தாவீது தன்னுடைய ஆடுகளை காட்டு மிருகங்கள் பிடித்துக்கொண்டு செல்லுவதற்கு ஒருபொழுதும் அனுமதிக்கவில்லை. ஒருமுறை சிங்கமும், இன்னொருமுறை கரடியும் அவனுடைய ஆட்டை பிடித்தபொழுது, அவன் அவைகளை துரத்திச் சென்று அடித்து, தன்னுடைய ஆடுகளை அவைகளின் வாயிலிருந்து காப்பாற்றினான்.

தாவீது சுரமண்டலம் என்கிற இசைக்கருவியை நன்கு வாசிக்க பழகியிருந்தான். அவன் எப்பொழுதும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தான். அவன் எழுதிய பாடல்களை பரிசுத்த வேதாகமத்தில் உள்ள சங்கீதம் என்ற புஸ்தகத்தில் வாசிக்கலாம். தாவீது தன்னைப் பாதுகாக்க தனக்கும் ஒரு மேய்ப்பர் இருக்கிறார் என்று அறிந்திருந்தான்.

ஒருமுறை கோலியாத் என்கிற அரக்கன் இஸ்ரவேலரை பயமுறுத்தினான். அவனை தாவீது ஒரு கவண்கல்லினால் வீழ்த்தினான். தாவீது ஆண்டவருக்கு விருப்பமானதை எப்பொழுதும் செய்தான். 

சிலமுறை அவன் தவறுகள் செய்தபொழுதும் ஆண்டவரிடம் உடனடியாக மன்னிப்பு கேட்டான். அவன் வளர்ந்து பெரியவனானபொழுது ஆடு மேய்த்த சிறுவனான தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக ஆண்டவர் மாற்றினார்.

வேதபகுதி: I சாமுவேல், 2 சாமுவேல்

மனப்பாட வசனம்: கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன் (சங்கீதம் 89:1a)

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/


Thursday, May 30, 2024

தாவீது: தேவனுடைய இதயத்திற்கு ஏற்றவன் (David - A man after God's own Heart), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 16

மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது

வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம்- 16

தாவீது: தேவனுடைய இதயத்திற்கு ஏற்றவன்

Click this link to get this lesson in English Language

மேல்நிலை வகுப்பின் மற்ற பாடங்களைப் பெற்றுக்கொள்ள இந்த இணைப்பை தொடரவும்

ஆட்டு இடையச் சிறுவனான தாவீது

தாவீது யூதா கோத்திரத்தைச் சார்ந்த ஈசாய் என்பவருடைய இளையமகன். இவன் கிமு 1000 வருட காலகட்டத்தில் வாழ்ந்தவன். ஈசாய் பெத்லெகேம் என்ற பட்டணத்தில் வாழ்ந்து வந்தார். தாவீது என்று தமிழ் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் எபிரெய மொழியில் “பிரியமானவன்” என்று அர்த்தங்கொள்ளும் தாவூது என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகும். அவன் சிவந்தநிறமும், அழகிய கண்களும், நல்ல ரூபமுள்ளவனாயிருந்தான் என்று வேதாகமம் அவனை வருணிக்கிறது. தாவீது பெத்லெகேம் பட்டணத்தைச் சூழ்ந்துள்ள மலைபிரதேசங்களில் தன்னுடைய தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துவந்தான். 

தாவீது தைரியமும், வீரமும் மிக்கவனாயிருந்தான். காடுகளில் ஆடுகளை மேய்க்கும்பொழுது ஆடுகளை பிடித்துக்கொள்ளும்படி வந்த காட்டுமிருகங்களுக்கு அவன் பயப்படவில்லை. அவனை எதிர்த்து வந்த சிங்கத்தையும், கரடியையும் அவன் எளிதாக கொன்றுபோட்டான். தாவீது சுரமண்டலம் (Harp) என்ற இசைகருவியை வாசிப்பதில் கைதேர்ந்தவனாயிருந்தான். அவனது வீட்டின் அருகில் இருந்தவர்கள் அவன் தைரியசாலி, யுத்தவீரன், காரியங்களை சாதிக்கும் திறன்படைத்தவன் என்று அவனை அடையாளங்கண்டு கொண்டார்கள் (1 சாமுவேல் 16:18). அந்த நாட்களில் இஸ்ரவேல் தேசத்தின் முதல் ராஜாவாகிய சவுல் தேசத்தை ஆளுகை செய்துவந்தார்.

  
         பெத்லெகேம் பட்டணம் (தற்காலத்தில்)      பெத்லெகேமிய ஆட்டு இடையனும் ஆடுகளும்

சாமுவேல் தீர்க்கதரிசியால் அபிஷேகிக்கப்பட்ட தாவீது

சவுல் ராஜா அரசாளத் தொடங்கினபொழுது பணிவுடன் நடந்துகொண்டார். ஆனால் நாட்கள் செல்லசெல்ல ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமல் ஆண்டவருடைய கட்டளைகளை மீறி நடந்தார். அதனால் ஆண்டவர் சவுல்ராஜாவின் மேல் கோபமடைந்து, சவுலை ராஜாவாக இராதபடிக்கு புறக்கணித்தார். சவுல் ராஜாவுக்கு பதிலாக இன்னொரு நபரை இஸ்ரவேலின் ராஜாவாக தெரிந்தெடுக்க விரும்பினார். ஆண்டவர் சாமுவேல் தீர்க்கதரிசியை பெத்லெகேம் என்ற பட்டணத்துக்குப் போய் அங்கு வாழும் ஈசாய் என்ற நபரின் மகன்களில் ஒருவனை ராஜாவாக அபிஷேகிக்கும்படியாகக் கூறினார். ஈசாய் பெத்லெகேம் பட்டணத்தில் மதிப்பிற்குரிய நபர்களில் ஒருவராக இருந்தார். ஈசாய்க்கு எட்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களில் கடைசியானவன் தான் தாவீது. சாமுவேல் தீர்க்கதரிசி ஈசாயிடம் அவருடைய மகன்களை பலி செலுத்துவதற்காக அழைத்து வரும்படி கூறினபொழுது, ஈசாய் தன்னுடைய கடைசி மகனாகிய தாவீதை விட்டுவிட்டு மற்ற தன்னுடைய ஏழு மகன்களையும் அழைத்து வந்தார். ஆனால் ஆண்டவர் அவர்களில் ஒருவரையும் தெரிந்து கொள்ளவில்லை. 

சாமுவேல் தீர்க்கதரிசி ஈசாயிடம் அவருக்கு வேறு மகன்கள் உண்டா என்று கேட்டபொழுது தான் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீதை அழைத்து வரும்படி ஆட்களை அனுப்பினார். சாமுவேல் தீர்க்கதரிசி ஈசாயின் வீட்டிற்கு வந்தபொழுது பலி செலுத்தி விருந்து கொண்டாடப்பட்டது. வீட்டில் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தாவீது அதற்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருந்தான். தாவீது சாமுவேல் தீர்க்கதரிசிக்கு முன்பாக கொண்டுவரப்பட்டபோது, ஆண்டவர் கூறின வாக்கின்படி அவன் இஸ்ரவேல் தேசத்தின் அடுத்த ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டான். அதன்பின்னர் சாமுவேல் தீர்க்கதரிசி தன்னுடைய இடத்திற்கு திரும்பிவிட்டார். தாவீதும் ஆடுகளை மேய்க்கும் தன்னுடைய வேலைக்கு திரும்பிசென்றான். இஸ்ரவேல் தேசத்தை ஆளுகை செய்துகொண்டிருந்த சவுல் ராஜாவின் ஆளுகை காலம் முடியும் வரைக்கும் தாவீது பொறுத்திருந்தான். தாவீது வனாந்திரத்திலே ஆடுகளை மேய்த்த காலத்தின் அனுபவங்களை தான் எழுதிய பல சங்கீதங்களில் குறித்திருப்பதை நாம் பார்க்க முடியும்.  உலகமெங்கும் உள்ள மக்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக வாசித்து பயன்பெறும் சங்கீதம் – 23 ம் அதில் ஒன்றாகும்.  

சவுல் ராஜாவிற்காக சுரமண்டலம் வாசித்த தாவீது

சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதை ராஜாவாக அபிஷேகித்தபின், கர்த்தருடைய ஆவியானவர் தாவிதின் மேல் தங்கியிருந்தார். அதேநேரத்தில் கர்த்தருடைய ஆவியானவர் சவுல் ராஜாவை விட்டு விலகினார். அதனால் சவுல்ராஜா அசுத்த ஆவியினால் தாக்கப்பட்டு வேதனைக்குள்ளானார். அவருடைய அமைச்சர்கள் அவருக்கு ஒரு தீர்வைத் தேடினார்கள். நன்றாக சுரமண்டலம் வாசிக்கக்கூடிய ஒரு மனிதனைக் கொண்டு வந்து இசை வாசிக்க வைத்தால் சவுல் ராஜாவிற்கு சுகம் உண்டாகும் என்று எண்ணினார்கள். சவுல் ராஜாவின் வேலைக்காரர்களில் ஒருவன் தாவீதின் இசைத்திறமையைப் பற்றி கூறினபொழுது, அவர்கள் தாவீதை சவுல் ராஜாவிடம் அழைத்து வந்தார்கள். எபிரெயமொழியில் “கின்னார்” (கின்னரம்) என்று அழைக்கப்படும் சுரமண்டலம் என்னும் இசைவாத்தியம் லாமேக்கின் மகனாகிய யூபால் என்னும் ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டதாகும் (ஆதியாகமம் 4:21). சவுல் ராஜா அசுத்தஆவியால் தாக்கப்படும் பொழுதெல்லாம் தாவீது சரமண்டலம் வாசிப்பான், உடனே சவுல் ராஜா நலமடைந்து இயல்பாக மாறிவிடுவார்.

தாவீதும் கோலியாத்தும்

தாவீது சவுல் ராஜாவுக்காக சுரமண்டலம் வாசிப்பதும் பின்னர் பெத்லெகேமுக்குச் சென்று தன்னுடைய தகப்பனுடைய ஆடுகளை மேய்ப்பதுமாக இருந்து வந்தான். அந்த நேரத்தில் பெலிஸ்தியர்களுக்கும், இஸ்ரவேலர்களுக்கும் யுத்தம் நடந்து வந்தது. தாவீதின் மூன்று மூத்த சகோதரர்கள் சவுல் ராஜாவின் படையில் இருந்தார்கள். அவர்கள் பெலிஸ்தருடன் யுத்தம் செய்வதற்காக சென்றிருந்தார்கள். தாவீதின் தகப்பனார் அவனை அழைத்து, சகோதரர்களிடம் சென்று நலம் விசாரித்து வரும்படியாகக் கூறினார். தாவீது அங்கு சென்றபொழுது இராட்சதவடிவான ஒரு பெலிஸ்தன் வந்து நின்று இஸ்ரவேலையும், இஸ்ரவேலின் தேவனையும் இழிவாகப் பேசுவதை தாவீது கேட்டான். அந்த இராட்சதனுடைய பெயர் கோலியாத். அவன் இஸ்ரவேல் மனிதர்களில் ஒருவன் தன்னிடம் வந்து யுத்தம் செய்து தன்னை ஜெயிக்குமாறு சவால் விட்டான். இஸ்ரவேலர்கள் அவனைக் கண்டு பயந்து ஒளிந்து கொண்டார்கள்.

ஆனால் தாவீது அவனுக்கு பயப்படவில்லை. தாவீது அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அங்கு நடப்பவைகளைக் கேட்டு அறிந்து கொண்டான். அதைக் கண்ட அவனுடைய மூத்தசகோதரன் அவனிடம் மிகுந்த கோபம் கொண்டார். சிலநாட்களுக்கு முன் சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதை இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக அபிஷேகம் செய்வதை அவனுடைய சகோதர்கள் கண்டிருந்தும், அவனைப் பற்றிய தங்களுடைய தவறான எண்ணங்களை அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை. தாவீதிற்குள் இருந்த விசேஷித்த ஆவியை அவனுடைய குடும்பத்தினர்களும், சகோதரர்களும் அங்கீகரிக்காமற் போயிருந்தார்கள்.  தாவீது அதைப் பற்றி கவலைப்படவில்லை. கோலியாத்தோடு தனித்து யுத்தம் செய்வதற்காக ஆயத்தம் ஆனான். தாவீது தன்னுடைய கவணையும், ஐந்து கூழாங்கற்களையும் எடுத்துக் கொண்டு கோலியாத்திற்கு முன்பாக சென்று நின்றான். கோலியாத் சிறுவனான தாவீதை ஏளனமாகப் பார்த்தான். தாவீது ஒரு கூழாங்கல்லை எடுத்து அதை கவணிலே வைத்து சுற்றி எறிந்தான். அந்தக் கல் குறி தவறாமல் கோலியாத்தில் நெற்றியில் பட்டது. கோலியாத் சுருண்டு கீழே விழுந்தான். தங்கள் தலைவனுடைய நிலையைக் கண்ட பெலிஸ்தர்கள் ஓடி ஒளிந்துகொண்டார்கள்.

தாவீது கோலியாத்தை வீழ்த்திய ஏலா பள்ளத்தாக்கு (தற்காலத்தில்)
Photo credit:Dennis Jarvis

தாவீதின்மேல் பொறாமை கொண்ட சவுல்ராஜா

சவுல்ராஜா யுத்தத்திற்காக தாவீதை பல இடங்களுக்கும் அனுப்பினார். தாவீது போகிற இடங்களிலெல்லாம் வெற்றிபெற்று திரும்பி வந்தான். தாவீதின் வெற்றியைக் கண்டு சவுல்ராஜா அவன் மேல் பொறாமைக் கொண்டார். ஒருமுறை யுத்தத்திலிருந்து திரும்பி வரும்பொழுது அவர்களை வரவேற்பதற்காக எதிர்கொண்டு வந்த பெண்கள், “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” என்று பாடினார்கள். சவுல்ராஜா அதைக் கேட்டு மிகவும் கோபங்கொண்டார். தாவீதை தன்னைவிட உயர்வாக மக்கள் எண்ணுவதை அவர் விரும்பவில்லை. மறுபடியும் அசுத்தஆவி அவரை துன்புறுத்த ஆரம்பித்தது. தாவீது சுரமண்டலத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். சவுல்ராஜாவின் கையில் ஒரு ஈட்டி இருந்தது. அதை தாவீதிற்கு நேராக எறிந்தார். அதைக் கண்ட தாவீது விரைவாக ஈட்டிக்கு விலகி தன்னை தப்புவித்துக் கொண்டார். தேவன் தாவீதோடு இருக்கிறார் என்று சவுல்ராஜா அறிந்துகொண்டார், அதனால் தாவீதைக் கண்டு பயந்தார். தாவீதை தனக்கு சேவகம் பண்ணுவதிலிருந்து விலக்கி ஆயிரம் படைவீரர்களுக்கு தலைவனாக நியமித்தார். தாவீது, சவுல்ராஜா தன்னை அனுப்புகிற இடங்களுக்கெல்லாம் சென்று மிகவும் புத்திசாலியாய் நடந்து காரியங்களை நடப்பித்ததினால் மக்கள் அவனை பெரிதும் விரும்பினார்கள். சவுல்ராஜாவோ தாவீதை மேன்மேலும் வெறுத்தார்.

சவுல்ராஜாவுக்கு தப்பியோடின தாவீது

சவுல்ராஜாவினால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது என்பதை அறிந்த தாவீது, சவுல் ராஜாவிடத்திலிருந்து தப்பியோடத் தீர்மானித்தான். தாவீதின் மேல் அளவற்ற பொறாமைகொண்ட சவுல்ராஜா தேசத்தை ஆளுகை செய்வதை விட்டுவிட்டு தாவீதை பின்தொடர்ந்து சென்று, பிடித்து அழிக்கவேண்டும் என்பதிலேயே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினார். அதனால் தாவீது சவுல்ராஜாவுக்குத் தப்பி ஒவ்வொரு ஊர்ஊராக மாறிமாறி செல்ல வேண்டியிருந்தது. தாவீதை பிடித்துக் கொண்டுவர சவுல் அவனுடைய வீட்டிற்கு ஆட்களை அனுப்பினபொழுது பாடின பாடல் தான் சங்கீதம் 59 (1 சாமுவேல் 19:11-17). தாவீது தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி வெவ்வேறு பாதுகாப்பான இடங்களைத் தேடி சென்றான். அவ்வாறு அவன் சென்று தஞ்சமடைந்த இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • Ø  சாமுவேல் தீர்க்கதரிசி: சவுலுக்குத் தப்பியோடின தாவீது முதன்முதலாக அடைக்கலம் தேடிச்சென்றது ராமா என்ற இடத்தில் இருந்த சாமுவேல் தீர்க்கதரிசியிடத்தில் தான். அவன் அங்கு சென்று சவுல்ராஜாவினால் தனக்கு ஏற்பட்டு இருக்கும் ஆபத்தைப் பற்றி கூறினான். அவர்கள் இருவரும் நாயோத் என்கிற இடத்திலே போய்த் தங்கினார்கள். சவுல்ராஜா அதைக் கேள்விட்டு தாவீதைப் பிடித்துக் கொண்டுவர ஆட்களை அனுப்பினான். அந்த ஆட்கள் சாமுவேலையும் தீர்க்கதரிசனம் சொல்லுகிற கூட்டத்தையும் கண்டு அவர்களும் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களால் தாவீதைப் பிடிக்க முடியாமல் போனது (1 சாமுவேல் 19:18-24). சாமுவேல் தீர்க்கதரிசி வயது முதிர்ந்தவராயிருந்தார். சவுல்ராஜா சாமுவேல் தீர்க்கதரிசியின் வார்த்தைகளை மதிக்கவில்லை. நாயோத்தில் தொடர்ந்து இருப்பது ஆபத்து என்பதை அறிந்த தாவீது தன்னுடைய நண்பனும் சவுல்ராஜாவின் மகனுமான யோனத்தானை தேடிச் சென்றான். அவனை சந்தித்தபின் ஆசாரியனிடத்திற்கு செல்ல தீர்மானித்தான்.
  • Ø  நோப்பில் இருந்த ஆசாரியனாகிய அகிமெலேக்கு: ஆசரிப்புக்கூடாரம் இருந்த நோப் என்ற இடத்தில் இருந்த அகிமெலேக்கு என்ற ஆசாரியனை தேடி சென்றான். தாவீது. ஆசாரியனிடத்தில் தனக்கும் தன்னோடிருந்தவர்களுக்கும் உணவு கேட்டான். ஆசாரியனிடத்தில் ஆசரிப்புக்கூடாரத்தில் படைக்கப்படும் பரிசுத்தஅப்பம் மாத்திரம் இருந்தது (லேவியராகமம் 24:5-9). தாவீதும் அவனுடைய ஆட்களும் தீட்டுப்படுத்தும் எதையும் செய்யவில்லை என்பதைக் கேட்டறிந்த ஆசாரியன், அந்த பரிசுத்தஅப்பங்களை உண்பதற்காகக் கொடுத்தார். சவுலிடமிருந்து தப்பி சென்று கொண்டிருந்த தாவீதின் கையில் எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல் இருந்தது. அவன் ஆசாரியனிடத்தில் தனக்கு ஏதாவது ஒரு ஆயுதத்தை கொடுக்கும்படிக் கேட்டான். பல வருடங்களுக்குமுன் தாவீது கோலியாத்தை வெட்டுவதற்கு பயன்படுத்தின கோலியாத்தின் வாள் (பட்டயம்) அங்கு இருந்தது. அதை ஆசாரியன் தாவீதுக்குக் கொடுத்தார். தாவீதுக்கு அங்கு ஒரு ஆபத்து காத்திருந்தது. சவுல்ராஜாவுடைய வேலைக்காரனான தோவேக்கு என்னும் ஒருவன் அன்று நோப்பிலிருக்கிற ஆசரிப்புக்கூடாரத்தில் இருந்தான். அவன் சவுல்ராஜாவிடம் தன்னை காட்டிக்கொடுப்பான் என்று பயந்த தாவீது அவ்விடத்தை விட்டு வேகமாக வெளியேறினான். தாவீது நினைத்தபடியே தோவேக்கு சவுல் ராஜாவிடம் சென்று தாவீது நோப்புக்கு வந்த செய்தியை அறிவித்தான். அதனால் சவுல்ராஜா அங்கிருந்த ஆசாரியர்கள் மேல் கோபமடைந்தான் (1 சாமுவேல் 22:8-23). இந்த சூழ்நிலையில் தாவீது எழுதிய பாடல் தான் சங்கீதம் 52.
  • Ø காத்தின் ராஜாவாகிய ஆகீஸ்: தாவீது நோப்பிலிருந்து தப்பியோடி பெலிஸ்தியருடைய பட்டணங்களில் ஒன்றான காத்திற்கு சென்றார். காத் பட்டணத்தின் ராஜாவாகிய ஆகீஸ் தாவீதை அடையாளங்கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவனுடைய அமைச்சர்கள் தாவீதை அடையாளங்கண்டு கோலியாத்தைக் கொன்றவன் இவன்தான் என்று கூறினார்கள். தாவீது அந்நேரத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவனைப் போல வேடமிட்டு அங்கிருந்து தப்பினான் (1 சாமுவேல் 21:10-15). சங்கீதம் 34 மற்றும் சங்கீதம் 56 காத் பட்டணத்தில் தாவீது எழுதின பாடல்கள். சங்கீதம் 34ன் தலைப்பில் பெலிஸ்திய ராஜாவின் பெயர் அபிமெலேக்கு என்று கொடுக்கப்பட்டிருக்கிறதைப் பார்க்க முடியும். எகிப்தின் மன்னர்களுடைய பட்டப்பெயரான பார்வோனைப் போல பெலிஸ்திய ராஜாக்களின் பட்டப்பெயர்தான் அபிமெலேக்கு.
டெல் சாஃபித் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் காத் பட்டணத்தின் சிதைவுகள்
  • Ø அதுல்லாம் குகை: தாவீது காத் ஊரிலிருந்து தப்பித்து அதுல்லாம் என்ற குகைக்குப் போனான். அவன் அங்கே இருக்கிறதைக் கேள்விப்பட்டு அவனுடைய குடும்பத்தார் அவனைத் தேடி அங்கே சென்றார்கள். அதுமட்டுமல்லாமல் தேசத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள் போன்றோர் அவனோடு வந்து சேர்ந்தார்கள். இவ்வாறு ஏறக்குறைய நானூறுபேர் அவனோடு இணைந்தார்கள். அத்தனைபேரும் மறைந்திருப்பதற்கு அந்த குகைகள் போதுமானதாக இல்லாததால் அவர்கள் வேறே இடத்திற்கு மாற வேண்டியிருந்தது (1 சாமுவேல் 22:1,2). தாவீது இந்த குகையில் வைத்து தான் சங்கீதம் 57ஐ எழுதினான் என்று கருதப்படுகிறது.
அதுல்லாம் குகை, இஸ்ரேல்
  • Ø மோவாப் தேசத்தைச் சேர்ந்த மிஸ்பே: தாவீது தன்னுடைய குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு அதுல்லாம் குகையிலிருந்து மோவாப் தேசத்திலுள்ள மிஸ்பேக்கு சென்றான். அவன் தன்னுடைய வயதான தகப்பனையும் தாயையும் மோவாப் தேசத்தின் ராஜாவுடைய பராமரிப்பிலே ஓப்படைத்தான். தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் பாட்டியாகிய ரூத் மோவாப் தேசத்தை சேர்ந்தவர். தாவீது அங்கிருக்கும்பொழுது காத் என்ற தீர்க்கதரிசி, அவனைப் பார்த்து பாதுகாப்பான அந்த இடத்திலிருந்து புறப்பட்டு யூதா தேசத்திற்கு போகும்படியாகக் கூறினார் (1 சாமுவேல் 22:1-5).
  • Ø ஆரேத் காடு: தாவீது காத் தீர்க்கதரிசியின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து யூதா தேசத்திற்குப் புறப்பட்டு சென்றான். அங்கு ஆரேத் என்ற காட்டிலே தங்கியிருந்தான். அங்கு இருக்கும்பொழுது பெலிஸ்தர் கேகிலா என்ற பட்டணத்தின் மேல் யுத்தம் பண்ண வருகிறார்கள் என்று கேள்விப்பட்டான். சவுல்ராஜாவால் துரத்தப்பட்டுக் கொண்டிருந்த நேரத்திலும், தாவீது, தான் இஸ்ரவேலின் படைத்தளபதி என்பதையோ, தன்னுடைய பொறுப்புகளையோ ஒருபோதும் மறந்துபோகவில்லை. அவன் ஆண்டவரிடம் தான் கேகிலாவிற்குப் போய் பெலிஸ்தருக்கு எதிராக யுத்தம் பண்ணலாமா என்று விசாரித்தான். ஆண்டவர் அவனுக்கு அனுமதி கொடுத்து அவன் பெலிஸ்தியர் மேல் வெற்றிபெறுவான் என்று வாக்கும் கொடுத்தார்.
  • Ø கேகிலா பட்டணம்: தாவீதும் அவனுடைய ஆட்களும் புறப்பட்டு கேகிலாவிற்கு வந்தார்கள். அவர்கள் பெலிஸ்தியருக்கு எதிராக யுத்தம் செய்து, அவர்களை தோற்கடித்து கேகிலா பட்டணத்தை விடுவித்தார்கள். ஆனால் கேகிலா பட்டணத்து மனிதர்களோ சவுல் ராஜாவிடம் நற்பெயர் வாங்க விரும்பி, தாவீதை சவுல்ராஜாவிடம் பிடித்துக் கொடுக்க விரும்பினார்கள். அதை ஆண்டவர் அவனுக்கு தெரியப்படுத்தினார். தாவீதும் அவனுடைய ஆட்களும் அங்கிருந்து தப்பி சென்றார்கள் (1 சாமுவேல் 23:1-13).
கேகிலா பட்டணத்தின் சிதைவுகள் (தற்காலத்தில்)
  • Ø சீப் வனாந்திரம்: தாவீது சவுல் ராஜாவுக்குத் தப்பி சீப் என்ற வனாந்தரத்திரத்திலிருந்த ஒரு மலையில் தங்கியிருந்தான். சீப் ஊரைச் சேர்ந்த மனிதர்கள் சவுல் ராஜாவிடம் சென்று தாவீது ஆகிலா என்னும் மலைக்காட்டில் ஒளிந்துகொண்டிருக்கிறான் என்று அறிவித்தார்கள். சீப் ஊராரின் வஞ்சகத்தை தாவீது அறிந்தபோது பாடியது தான் சங்கீதம் 54. சவுல் தினந்தோறும் தாவீதைத் தேடி அலைந்தும், தேவன் தாவீதை சவுலின் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை (1 சாமுவேல் 23:14-23).
சீப் வனாந்திரம், இஸ்ரேல்
  • Ø மாகோன் வனாந்திரம்: தாவீது மறுபடியும் தப்பியோடி மாகோன் என்ற வனாந்திரத்தை அடைந்தான். சவுல்ராஜா எப்படியாவது தாவீதைப் பிடிக்கவேண்டும் என்பதில் குறியாயிருந்தார். சவுல் தன்னைப் பிடிக்க வருகிறார் என்று கேள்விப்பட்டு தாவீது மலையிலிருந்து இறங்கினான். தாவீது மலையின் ஒருபக்கமாகவும், சவுல்ராஜாவும் அவருடைய ஆட்களும் இன்னொரு பக்கமாகவும் நடந்தார்கள். தாவீது தப்பிப்போக விரைந்தபோது சவுல்ராஜாவும் அவருடைய ஆட்களும் தாவீதை வளைந்துகொண்டார்கள். அந்த நேரத்தில் ஒரு மனிதன் சவுல்ராஜாவிடத்தில் வந்து பெலிஸ்தர்கள் இஸ்ரவேல் தேசத்தின்மேல் யுத்தத்திற்கு வந்திருப்பதை அறிவித்தான். அதனால் சவுல்ராஜா தாவீதை பிடிப்பதை விட்டுவிட்டு தேசத்திற்கு திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது (1 சாமுவேல் 23:24-29).
மாகோன் வனாந்திரம், இஸ்ரேல்
  • Ø என்கேதி வனாந்திரம்: தாவீதிற்கு சவுல்ராஜாவை மிகவும் எளிதாக வீழ்த்துவதற்கு இரண்டு தருணங்கள் கிடைத்தது. அதில் முதல் தருணம் என்கேதி வனாந்திரத்திலிருக்கிற ஒரு குகையில் இருக்கும்போது கிடைத்தது. ஆனால் தாவீது சவுல்ராஜாவைக் கொல்லாமல், அவர் அறியாமல் அவருடைய சால்வைத் தொங்கலின் ஒரு பகுதியை கிழித்து எடுத்துக் கொண்டான். சவுல்ராஜா ஆண்டவருடைய வார்த்தையின்படி ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டிருந்ததால் அவருக்குத் தீங்கிழைக்க தாவீது பயப்பட்டான் (1 சாமுவேல் 24). தாவீது குகையில் இருக்கும்போது எழுதின சங்கீதம் 142 இங்கிருக்கும்போது எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.
 
                                 என்கேதி வனாந்திரம்
  • Ø சீப் வனாந்திரம்: தாவீது சவுல்ராஜாவுக்குத் தப்பி மறுபடியும் சீப் வனாந்திரத்திற்கு சென்றான். இங்கிருக்கும்போது தான் சவுல் ராஜாவைக் கொல்லுவதற்கான இரண்டாவது தருணம் தாவீதிற்குக் கிடைத்தது. தாவீதை பிடிப்பதற்காக பின்தொடர்ந்து வந்த சவுல்ராஜாவும் அவருடைய ஆட்களும் எந்த ஒரு பாதுகாப்புமின்றி உறங்குவதை தாவீது அவருடைய ஆட்களும் கண்டார்கள். தாவீதின் ஆட்கள் உடனே சவுல்ராஜாவைக் கொல்ல விரும்பினார்கள். ஆனால் தாவீதோ அதற்கு அனுமதி அளிக்கவில்லை. சவுல்ராஜாவின் அருகில் சென்று அவருடைய ஈட்டியையும், தண்ணீர்செம்பையும் எடுத்துக் கொண்டுபோனார்கள். பின்னர் மறுநாள் தாவீது தொலைவில் ஒரு மலை உச்சியில் ஏறிநின்று சவுல் ராஜாவும் அவருடைய ஆட்களும் கேட்க, சவுல்ராஜா தனக்கு பதிலாக படைத் தளபதியாய் ஏற்படுத்தியிருந்த அப்னேர் சவுல்ராஜாவை பாதுகாக்காமற்போனதைக் கூறி, அவரிடமிருந்து தான் எடுத்த பொருட்களையும் காட்டினான். பின்னர் அந்த பொருட்களை திரும்பக் கொடுத்தான். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த சவுல்ராஜா, தான் தாவீதைப் பின்தொடர்வது மதியற்ற காரியம் என்று ஒப்புக்கொண்டார். தாவீதும் சவுல்ராஜாவும் சந்தித்துக் கொண்டது அதுதான் கடைசிமுறை. இந்த சமாதானமான சந்திப்பிற்குப் பின்னரும் சவுல்ராஜா தாவீதை அழிக்கும் நோக்கத்தோடு பின்தொடர்வதை விடவில்லை. ஒரு நபருக்குள் பொறாமையான எண்ணங்கள் தூண்டப்பட்டு, கசப்பின் வேர் முளைக்கும்பொழுது எவ்வாறு நடந்துகொள்ளுவார்கள் என்பதற்கு சவுல்ராஜா ஒரு நல்ல எடுத்துக்காட்டு (எபிரெயர் 12:15). சவுல்ராஜா தேவனுடைய கிருபையை இழந்து போவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம் (2 சாமுவேல் 7:15).
  • Ø பெலிஸ்திய ராஜாவாகிய ஆகீசிடம் அடைக்கலம்: சவுலினால் மறுபடியும் துரத்தப்பட்ட தாவீது, திரும்பவும் பெலிஸ்தரின் தேசத்திற்கு சென்றான். இம்முறை அவன் சென்றபோது பெலிஸ்தியரின் ராஜாவாகிய ஆகீசோடு நல்ல உறவு இருப்பதைப் பார்க்க முடியும். தாவீது தங்குவதற்காக ஆகீஸ்ராஜா சிக்லாக் என்ற பட்டணத்தைக் கொடுத்தான். தாவீது சிறந்த வீரன் என்று அறிந்த ஆகீஸ் ராஜா அவனைத் தனக்கு மெய்க்காவலனாக வைக்கவும் எண்ணினான். அச்சமயத்தில் ஆகீஸ்ராஜாவின் படைகள் சவுல் ராஜாவுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கு ஆயத்தம் ஆனார்கள். தாவீதும் தன்னோடு வரவேண்டும் என்று ஆகீஸ் விரும்பினான். ஆனால் ஆகீசின் அமைச்சர்கள் அவனைத் திரும்ப அனுப்பும்படி வற்புறுத்தினதினால் தாவீது திரும்ப அனுப்பப்பட்டான். இந்த யுத்தத்தின்போது தான் சவுல்ராஜாவின் வாழ்க்கை முடிவடைந்தது. தாவீது சிக்லாகிற்கு திரும்பினபொழுது அமலேக்கியர் அந்த பட்டணத்தைக் கொள்ளையிட்டு பெண்களையும், குழந்தைகளையும் சிறைபிடித்து சென்றிருந்தார்கள். தாவீது அமலேக்கியரை பின்தொடர்ந்து சென்று கொள்ளையடிக்கப்பட்ட எல்லாவற்றையும் மீட்டுக்கொண்டு வந்தான் (1 சாமுவேல் 27 – 30).
சிக்லாக் பட்டணத்தில் அகழ்வாராய்ச்சிகள்

தாவீதின் வாழ்க்கையில் ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலைகளை தெரிந்து கொள்ளும்போது மட்டுமே தாவீதின் சங்கீதங்களில் காணப்படும் பல்வேறு ஆழ்ந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை புரிந்துகொள்ள முடியும். தாவீதின் வாழ்க்கையில் அவன் எதிர்கொண்ட அனுபவங்களும், சூழ்ச்சிகளும், வீழ்ச்சிகளும் அதிலிருந்து தேவன் அவனை விடுவித்த விதங்களுமே தேவனுக்கு மிகச்சிறந்த துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கும் சங்கீதங்களாக வெளிப்பட்டன. தன்னுடைய எல்லா எதிரிகளிடமிருந்தும், சவுல்ராஜாவிடமிருந்தும் தன்னை விடுவித்தபோது தேவனைத் துதித்து பாடினதுதான் சங்கீதம் -18.

ராஜாவாக பதவியேற்ற தாவீது

தேவன் சவுலை ராஜாக இராதபடிக்கு அங்கீகரிக்காதபோதிலும், சவுலுடைய வாழ்நாள் முழுவதும் அவர் ராஜாவாகத் தொடர்ந்தார். அவர் இறந்துபோன பின் தாவீது இஸ்ரவேல் தேசத்திற்கு திரும்பி வந்து எபிரோன் என்ற பட்டணத்தில் தங்கியிருந்தார். அங்கு வைத்து தான் தாவீதின் கோத்திரமாகிய யூதா கோத்திரத்துக்கு ராஜாவாக அவர் பதவியேற்றார். முதலாவதாக அவர் இஸ்ரவேலின் தென்பகுதியில் இருந்த யூதாவைச் சேர்ந்த பகுதிகளையே ஆளுகை செய்தார். சவுலின் மகனாகிய இஸ்போசேத் இஸ்ரவேலின் வடபகுதிக்கு ராஜாவாக ஏற்படுத்தப்பட்டார். ஆனால் சில நாட்களுக்குள்ளாகவே இஸ்போசேத்தின் சில வேலையாட்கள் அவரைக் கொன்றுபோட்டார்கள். தாவீதுக்கு சவுல்ராஜா இழைத்த அநீதிக்காகவே அவரைக் கொன்றதாக அந்த வேலையாட்கள் கூறினபொழுதும் தாவீது அதை ஏற்றுக்கொள்ளாமல் அந்த இரண்டு வேலைக்காரர்களையும் தண்டித்தார். அவருடைய நீதியான செயலைக் கண்ட இஸ்ரவேலின் தலைவர்கள் அவரை 12 கோத்திரங்களும் உட்பட்ட இஸ்ரவேல் தேசம் முழுமைக்கும் இராஜாவாகத் தெரிந்தெடுத்தார்கள். அவர் ஒன்றிணைந்த இஸ்ரவேல் தேசத்தின் இராஜாவாக அபிஷேகிக்கப்பட்டு 33 வருடங்கள் அரசாண்டார். அவர் எபூசியர் என்ற அண்டைய நாட்டாரிடமிருந்து எருசலேம் என்ற பட்டணத்தைக் கைப்பற்றி அதற்கு சீயோன் (Zion) என்று பெயரிட்டு அதைத் தலைநகராக வைத்து அரசாண்டார். ஆகவே எருசலேம் (Jerusalem) தாவீதின் நகரம் (City of David) என்றும் அழைக்கப்பட்டது.

  
                                                                                              எருசலேம் பட்டணம் (தற்காலத்தில்)

உடன்படிக்கைப்பெட்டியைத் திரும்பக் கொண்டுவந்த தாவீதுராஜா

இஸ்ரவேல் மக்கள் தேவனை ஆராதிப்பதற்காக சென்ற ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வைக்கப்பட்டிருந்த உடன்படிக்கைப்பெட்டி ஒருமுறை யுத்தத்தின்போது பெலிஸ்தர்களால் எடுத்துக்கொண்டு போகப்பட்டு, பின்னர் திரும்பி அனுப்பப்பட்டது. ஆனால் அது ஆசரிப்புக்கூடாரத்திற்கு கொண்டுவரப்படாமல் அபினதாபின் வீட்டில் வைக்கப்பட்டது. அதை எருசலேம் பட்டணத்திற்கு திரும்பக் கொண்டுவருவது தாவீது ராஜாவின் மிகப்பெரிய விருப்பமாயிருந்தது. தாவீது ராஜாவாக பதவி ஏற்றபின் மூன்று நாட்கள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அப்பொழுது இஸ்ரவேல் தேசத்து தலைவர்களுடன் ஆலோசித்து உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமிற்கு எடுத்து வருவதற்கு ஆயத்தங்கள் செய்தார். உடன்படிக்கைப் பெட்டியை மாடுகள் இழுத்து வரும் ஒரு புதிய வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது திடீரென்று மாடுகள் இடறினதினால், உடன்படிக்கைப் பெட்டியைப் பிடிப்பதற்காக ஊசா என்பவர் தன் கையை நீட்டினார். அங்கு நடைபெற்ற சம்பவங்கள் தேவனுடைய விதிமுறைகளுக்கு மாறாக இருந்ததால் ஊசா தண்டிக்கப்பட்டார். அதனால் தாவீதுராஜா பயந்து உடன்படிக்கைப்பெட்டியை ஓபேத் ஏதோம் என்பவருடைய வீட்டில் கொண்டுபோய் வைத்தார்.

உடன்படிக்கைப் பெட்டி ஓபேத் ஏதோம் என்பவருடைய வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தது. அப்பொழுது ஓபேத் ஏதோமின் வீடு ஆசீர்வதிக்கப்பட்டது. அதைக் கேள்விப்பட்ட தாவீது ராஜா மறுபடியும் உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமிற்கு எடுத்து வருவதற்கு ஆயத்தங்கள் செய்தார். ஆனால் இம்முறை ஆசாரியர்களிடம் ஆலோசித்து, பெட்டியை சுமந்து வருவதற்காக லேவியரை ஏற்படுத்தினார். அவர்கள் உடன்படிக்கைப் பெட்டியை சுமந்து கொண்டு எருசலேமிற்கு கொண்டுவந்தார்கள். தாவீது ராஜா சணற்நூல் ஏபோத்தை அணிந்துகொண்டு நடனமாடினார். உடன்படிக்கைப் பெட்டி எருசலேம் பட்டணத்திற்குள் கொண்டு வரப்பட்டு தாவீது ராஜா ஏற்படுத்தியிருந்த கூடாரத்திற்குள் வைக்கப்பட்டது.

தாவீதுராஜா செய்த இரண்டு முக்கிய தவறுகள்

தாவீதுராஜா தான் இஸ்ரவேல் தேசத்தின் மிகச்சிறந்த மன்னர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது ஆட்சியின்போது அவர் செய்த இரு தவறுகள் அவரது வாழ்க்கையில் கறைகளாக அமைந்தது. ஒருமுறை தாவீதுராஜா தன்னுடைய அரண்மனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது பத்சேபாள் என்ற அழகான ஒரு பெண்ணைக் கண்டு அவளை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் அவளுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தது. தாவீதுராஜாவின் படைகள் அம்மோனியருக்கு எதிராக யுத்தத்திற்கு போய் இருந்தார்கள். தாவீதுராஜா பத்சேபாளின் கணவனான உரியாவை யுத்தத்தில் ஆபத்தான ஒரு இடத்தில் நிறுத்தினார். அதனால் உரியா யுத்தத்தில் உயிரிழந்தார். பின்னர் தாவீது பத்சேபாளை திருமணம் செய்தார். ஆண்டவர் தாவீதுராஜா செய்ததை ஏற்றுக்கொள்ளாமல், அவருடைய தவறை கண்டித்து, அதற்கான தண்டனையையும் அறிவிக்கும்படியாக நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பினார். நாத்தான் தீர்க்கதரிசி ஆண்டவர் கொடுத்த செய்தியை தாவீது ராஜாவிடம் கூறினபொழுது, தாவீதுராஜா தன் தவறை ஒப்புக்கொண்டார். அவர் ஆண்டவரிடம் மன்னிப்பிற்காகவும், இரக்கங்களுக்காகவும் ஏறெடுத்த விண்ணப்பம் தான் சங்கீதம் – 51.

 

தாவீதுராஜா செய்த அடுத்த மிகப்பெரிய தவறு இஸ்ரவேல் மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தியது தான். அவருடைய படைத்தளபதியான யோவாப் அதைத் தடுப்பதற்கு முயற்சித்தார். ஆனால் தாவீது ராஜாவைத் தடுக்க அவரால் இயலவில்லை. கணக்கெடுப்பு நடத்தி முடித்தபின் தான் ஏதோ ஒரு தவறு செய்திருப்பதை அவர் உணர்ந்தார். தன்னை மன்னித்துவிடும்படி ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்தார். ஆனால் ஆண்டவர் காத் என்கிற ஞானதிருஷ்டிக்காரனை அனுப்பி அவர் செய்த தவறுக்கான தண்டனையை தெரிந்துகொள்ளும்படி கூறினார். அவருக்கு முன்பாக மூன்று தண்டனைகள் வைக்கப்பட்டன. ஏழு வருட பஞ்சம், மூன்று மாதங்கள் எதிரிகளால் துரத்தப்படுதல் அல்லது மூன்றுநாட்கள் தொற்றுநோய்களின் தாக்குதல். தாவீதுராஜா காத் தீர்க்கதரிசியிடம் தனக்கு மனிதனின் பங்கேற்பு உள்ள எந்த தண்டனையும் வேண்டாம் என்றும் ஆண்டவரிடமிருந்த நேரடியாகக் கிடைக்கும் தண்டனையை தான் ஏற்றுக் கொள்ளுவதாகவும் கூறினார். மனிதர்களிடம் கிடைக்காத இரக்கங்களை ஆண்டவரிடம் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் எண்ணினார். அதன்படி தேசத்தில் மூன்று நாட்கள் தொற்றுநோய் ஏற்பட்டது. ஆனாலும் தாவீதுராஜாவின் தேவன் மேல் வைத்த நம்பிக்கையின்படியே தொற்றுநோய் மூன்று நாள் முழுவதும் பரவாமல் பாதியிலேயே தடுத்து நிறுத்தினார். 

தாவீதுராஜா எடுத்த தவறான முடிவிற்காக தேசத்து ஜனங்கள் தண்டிக்கப்படுவது ஏன் என்று குழப்பமடைவதுண்டு., இஸ்ரவேல் தேசத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படும்பொழுது, அதில் உட்படுகிற ஒவ்வொருவரும் அரைச்சேக்கல் பாவநிவிர்த்தி காணிக்கை கொடுக்கவேண்டும் (யாத்திராகமம் 30:11-16). இதை செலுத்தாவிட்டால் அவர்களுக்குள்ளே வாதைநோய் வரும் என்பது அவர்களுக்கு ஏற்கெனவே நியாயப்பிரமாணத்தில் எழுதிக்கொடுக்கப்பட்டிருந்தது.

தாவீதின் வீரதீரமிக்க கூட்டாளிகள்  

தாவீது சவுல்ராஜாவிற்கு மறைந்து வாழ்ந்த காலத்தில் ஒருசிறு படையை நடத்தும் தளபதியாகவே இருந்தார். தாவீதுராஜாவோடு இணைந்து செயலாற்றிய நபர்களில் பலர் வீரதீரமிக்க செயல்களைக் செய்த புகழ்மிக்க யுத்தவீரர்களாக மாறினார்கள். இவர்கள் செய்த வீரதீர செயல்களையும், இவர்களைப் பற்றிய தகவல்களையும் 2 சாமுவேல் 23 மற்றும் 1 நாளாகமம் 11 ஆகிய அதிகாரங்களில் வாசிக்கலாம். இவர்களில் பலரும் வீரர்களாக தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கவில்லை. கடன்பட்டவர்கள், அதிருப்தியடைந்தவர்கள் பல்வேறு பிரச்சனைகளைக் கொண்டவர்களே தாவீது சவுல்ராஜாவிற்கு மறைந்து வாழ்ந்த காலத்தில் அவரோடு இணைந்தார்கள். ஆனால் தேவனால் யுத்தத்திற்குப் பயிற்றுவிக்கப்பட்ட தாவீதுராஜாவினால்  பயிற்றுவிக்கப்பட்ட இவர்கள் பின்நாட்களில் புகழ்மிக்க யுத்தவீரர்களாக மாறினார்கள்(சங்கீதம் 18:29-47).

எருசலேம் தேவாலயத்தைக் கட்ட விரும்பின தாவீதுராஜா

இஸ்ரவேல் மக்கள் மிகவும் புனிதமாகக் கருதின உடன்படிக்கைப் பெட்டி, ஆசரிப்புக்கூடாரம் என்கிற கூடாரத்திற்குள் வைக்கப்பட்டிருந்தது. தாவீதுராஜாவிற்கு உடன்படிக்கைப்பெட்டியை நிரந்தரமாக இஸ்ரவேல் தேசத்தின் மத்தியில் வைப்பதற்காக ஒரு தேவாலயத்தைக் கட்ட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் ஆண்டவர் நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பி தேவாலயத்தை தாவீதுராஜா கட்டப்போவதில்லை என்றும், அவருடைய மகனாகிய சாலொமோனே அதைக் கட்டுவார் என்றும் கூறினார். தாவீதுராஜா அந்த செய்தியைக் கேட்டு மனமடிவாகவில்லை. தேவனுக்கென்று பிரமாண்டமான ஒரு ஆலயத்தை தன்னுடைய மகனுடைய ஆளுகையின் போது கட்டுவதற்காக ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தார். மிகவும் விலை உயர்ந்த ஒப்பீரின் தங்கம் மூவாயிரம் தாலந்தும், சுத்த வெள்ளி ஏழாயிரம் தாலந்தும் கொடுத்தார். (ஒரு தாலந்து தற்காலத்தில் 34 கிலோகிராம் எடைக்கு ஈடாகும்). அதுமட்டுமல்லாமல் ஆலய வேலைக்காக விலை உயர்ந்த பலவிதமான இரத்தினக் கற்களையும் அவர் கொடுத்தார். தேவனுடைய பிரசன்னம் தங்கும் உடன்படிக்கைப் பெட்டியை இஸ்ரவேல் மக்கள் மத்தியில் தங்க வைக்க வேண்டும் என்ற தாவீதுராஜாவின் விருப்பம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின்போது முழுமை அடைந்தது. இயேசு கிறிஸ்து தேவகுமாரனாக ‘தேவன் நம்மோடு” என்ற அர்த்தம் கொள்ளும் இம்மானுவேல் என்ற பெயரில் இந்த பூமியில் வெளிப்பட்டார். தாவீதுராஜா தேவனுக்கென்று ஆலயத்தைக் கட்ட முடியாமற்போனாலும், அவருடைய இருதயத்திலுள்ள விருப்பம் தேவனால் அங்கீகரிக்கப்பட்டது. அதனால் தாவீதுக்கு நிரந்தரமான ஒரு வீடும், ராஜ்யமும் உண்டாயிருக்கும் என்று தேவன் அவரோடு வாக்கு பண்னினார் (2 சாமுவேல் 7: 1 -16).

தாவீதுராஜாவின் சங்கீதங்கள்

பரிசுத்த வேதாகமத்தின் 66 புத்தகங்களில் ஒன்றான சங்கீதப்புஸ்தகத்தில் 73 சங்கீதங்கள் தாவீதுராஜாவினால் எழுதப்பட்டவை. இந்த சங்கீதங்கள் பலவற்றில் அவை எழுதப்பட்ட சூழ்நிலைகளும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின தாவீது” என்றே அவர் வருணிக்கப்படுகிறார் (2 சாமுவேல் 23:1).

தேவனுடைய நியாயப்பிரமாணத்தை விரும்பின தாவீதுராஜா

தாவீதுராஜா தேவனுடைய நியாயப்பிரமாணத்தையும், கட்டளைகளையும் அதிகமாக விரும்பினார். அதினால் தான் பாடின சங்கீதங்கள் அதிகமானவற்றில் அவைகளின் சிறப்புகளை எடுத்துக் கூறியுள்ளார். அவை தேனைப் பார்க்கிலும் இனிமையாக இருப்பதாகவும், தான் செல்லும் பாதைக்கு வெளிச்சம் கொடுக்கும் தீபமாக இருப்பதாகவும் பாடியிருக்கிறார். தாவீது ராஜா வாழ்ந்த நாட்களில் முழு வேதாகமம் இல்லை. தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுத்த கட்டளைகள் அடங்கிய வேதாகமத்தின் முதல் ஐந்து நியாயப்பிரமாண புஸ்தகங்களே (ஆதியாகமம் முதல் உபாகமம் வரை) இருந்தன. இஸ்ரவேல் மக்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்கு செல்லும்பொழுது இவை வாசிக்கப்படும். தாவீதுராஜா சிறுவயதிலிருந்தே இது வாசிக்கப்படுவதைக் கேட்டு இருக்கலாம். தாவீதுராஜாவிற்கு நியாயப்பிரமாணத்தின் சிறப்புகள் பற்றியும், அதைக் கொடுத்த தேவனுடைய தன்மைகளைப் பற்றிய வெளிப்பாடு இருந்ததையும் அவருடைய சங்கீதங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

தாவீதுராஜாவைப் பற்றிய அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள்

கிமு 9 ஆம் நூற்றாண்டில் கானானியரால் பொறிக்கப்பட்ட டெல்டான் நடுகல்லில் (Tel Dan Stele) தாவீதின் வீடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தாவீதைப் பற்றிய மிகவும் பழமையான வரலாற்று சான்று இதுவாகும். அரேபிய பெடுஇன் பழங்குடி மக்களால் கண்டுபிடிக்கப்பட்ட மேஷா நடுகல்லிலும் (Mesha Stele) தாவீதின் வீட்டைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

                                                      டெல் டான் நடுக்கல் (Tel Dan Stele), Photo credit: Biblicalarchaeology.org


                                        மேஷா நடுக்கல் (Mesha Stele), Photo credit: Public Domain

தாவீது – தேவனுடைய இதயத்திற்கு ஏற்றவர்

தாவீதுராஜாவைப் பற்றி முதன்முதலாக ரூத் புஸ்தகத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கமுடியும். பரிசுத்த வேதாகமத்தில் அதிகமான அதிகாரங்கள் (66 அதிகாரங்கள்) தாவீதுராஜாவின் வாழ்க்கை வரலாற்றிற்காக ஒதுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கமுடியும். புதியஏற்பாட்டில் தாவீதுராஜா 59 முறை மேற்கோள் காட்டப்பட்டிருப்பதைப் பார்க்கமுடியும். இயேசுகிறிஸ்து “தாவீதின் குமாரன்” என்று அழைக்கப்பட்டார். பரிசுத்த வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள தேவமனிதர்களின் வித்தியாசமான சிறந்த குணங்கள் அவர்களை அடையாளப்படுத்துவதை நாம் பார்க்க முடியும். அவ்வகையில் தாவீதுராஜா தேவனுடைய இதயத்திற்கு ஏற்ற மனிதன் என்கிற நற்சாட்சியையும், அங்கீகாரத்தையும் பெற்றார்.

தாவீது ராஜா தேவனை எவ்விடத்திலும், எந்நேரத்திலும் ஆராதிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவருடைய ஆராதனை பல நிலைகளில் புதியஏற்பாட்டு ஆராதனைக்கு ஒத்தாகவே இருந்தது. தாவீதுராஜா வனாந்தரமானாலும், ஆசரிப்புக்கூடாரமானாலும் ஒரே விதமாக தேவனை ஆராதித்தார். சடங்குகளும் ஆச்சாரங்களும் நிறைந்திருந்த பழையஏற்பாட்டு காலத்தில் தேவன் விரும்பின ஆராதனைகளையும், பலிகளையும் பற்றிய வெளிப்பாடுகளைப் பெற்றிருந்தார் தாவீது (சங்கீதம் 51:15-17). தாவீது தன்னுடைய வாழ்க்கையில் செய்த தவறுகளுக்காக, தண்டனைகளையும், பின்விளைவுகளையும் உடனே சந்திக்க வேண்டியிருந்தது. ஆனாலும் தேவனுடைய கிருபையை இழந்த சவுல்ராஜாவைப் போல அல்லாமல், தேவனுடைய கிருபை தன்னைவிட்டு விலகாமல் காத்துக்கொண்டார். இதையே தாவீதுராஜாவின் பின்சந்ததிகளுக்கும் வாக்குத்தத்தமாகத் தேவன் கொடுத்தார் (அப்போஸ்தலர் 13:34, 2 சாமுவேல் 7:14-15).

வேதபகுதி: 1 & 2 சாமுவேல், 1 இராஜாக்கள் 1-2:1-11, 1 நாளாகமம்

மனப்பாட வசனம்: சங்கீதம் 89:20-24

Click this link to learn how to organize VBS / Retreats

Click this link to get Sunday School Guidelines (Part - 1) - Division of Sunday School Classes 

  Click this link to get Sunday School Guidelines (Part - 2) - Effective & Creative Teaching methods for Sunday School 

Click this link to learn how to help kids memorize Bible Verses

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

Click this link and visit devotions blog to read Christian articles  

 

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.  ஆசாரியனாகிய அகிமெலேக்கு தாவீதிடம் ………………….. வாளைக் கொடுத்தார்.

2.  தாவீது தங்குவதற்காக ஆகீஸ்ராஜா …………….. என்ற பட்டணத்தைக் கொடுத்தான்.

3.  ஆண்டவர் ………………. தீர்க்கதரிசியை அனுப்பி தேவாலயத்தை தாவீதுராஜா கட்டப்போவதில்லை என்று அறிவித்தார்.

4.  தாவீதுராஜாவைப் பற்றி முதன்முதலாக பரிசுத்த வேதாகமத்தில் ……………… புஸ்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  தாவீது சவுல்ராஜாவிற்காக சுரமண்டலம் ஏன் வாசித்தார்?

 

2.  தாவீதிற்கு சவுல்ராஜாவை அழிப்பதற்கான முதல் தருணம் எங்குவைத்து எப்படி கிடைத்தது?

 

3.  தாவீதுராஜா எருசலேம் தேவாலயத்தைக் கட்டுவதற்காக எதையெல்லாம் கொடுத்தார்?

 

4.  தாவீது ராஜாவின் ஏதாவது மூன்று சிறப்புகளைப் பற்றி எழுதவும்? 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  தாவீது சவுல்ராஜாவிற்கு தப்பியோடி, ஒளிந்து வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும், அந்த காலகட்டத்தில் அவர் எழுதின சங்கீதங்களைப் பற்றியும் விளக்கவும்.





தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...