Showing posts with label பாடம் - 3. Show all posts
Showing posts with label பாடம் - 3. Show all posts

Sunday, August 9, 2020

பரிசுத்த திரித்துவத்தைப் பற்றிய தவறான உபதேசங்களும்,, கிறிஸ்தவ விசுவாசப்பிரமாணங்களும் (Trinity Heresies & The Christian Creeds), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 3

மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது

வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம்- 3

பரிசுத்த திரித்துவத்தைப் பற்றிய

தவறான உபதேசங்களும், 

கிறிஸ்தவ விசுவாசப்பிரமாணங்களும்

“திரித்துவம்” அல்லது “திரியேகத்திற்கு” பரிசுத்த வேதாகமத்தில் ஆதாரம் உண்டா?

பரிசுத்த வேதாகமத்தை கற்றறியாத பலர் திரித்துவம் என்பது மூன்று கடவுள்களை வணங்குவது என்று தவறாகப் போதிக்கின்றனர். ஒருவராய் சாவாமையுள்ளவர், அதரிசனமானவர், நித்தியானந்த ஏக சக்கராதிபதி என்றெல்லாம் சர்வ வல்லமையுள்ள தேவனை பரிசுத்த வேதாகமம் விவரிக்கிறது. அவரைப் பற்றி பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்துவதை வைத்தே அவரைப்பற்றி நாம் அறிந்துகொள்ளமுடியும். நம்முடைய சொற்பமான மூளையினால் அல்லது சொந்த அறிவினால் (Finite mind and understanding) ஒன்றை விளங்குவதற்கு கடினமாக இருக்கிறது என்கிற காரணத்தினால் அதை நிராகரிப்பது ஏற்புடையதல்ல, அது நமக்கே பாதகமாய் அமையும். நம்முடைய நித்தியமான வாழ்க்கையை இழப்பதற்கு கூட அது காரணமாய் அமைந்துவிடலாம். 

பிதாவுக்கும், குமாரனுக்கும் உள்ள தொடர்பை அங்கீகரிப்பது கிறிஸ்தவத்துக்கு ஒரு அடிப்படையாகும். ஏனென்றால் பரிசுத்த வேதாகமம் மிகவும் தெளிவாக சொல்லுகிறது, “இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து” (1 யோவான் 2:22; 4:2,3). கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்திலும், ஆதிசபைப் பிதாக்களின் காலத்திலும் பிதாவையும் குமாரனையும் மறுதலிப்பவர்களையும், திரித்துவத்தை மறுப்பவர்களையும் கிறிஸ்தவர்களாய் ஏற்றுக்கொண்டதேயில்லை, அவர்கள் துர்உபதேச கூட்டங்கள் அல்லது வேதபுரட்டர்கள் (Cult Groups or Heretics) என்றே அழைக்கப்பட்டனர் என்பதை நாம் சபை வரலாற்றிலிருந்து அறிந்துகொள்ளமுடியும். (அந்த காலத்தில் கிரேக்க தத்துவ ஞானங்களின் அடிப்படையில் திரித்துவத்தைப் பற்றி பல துர்உபதேசங்கள் பரவி வந்ததை நாம் அறிந்திருக்க வேண்டும்). 

அதுமட்டுமல்லாமல் திரித்துவம் என்பது 3ஆம் அல்லது 5ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை என்பதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் பரிசுத்த வேதாகமம் முழுவதும் பழைய ஏற்பாட்டிலிருந்தே, திரியேக தேவனைப் பற்றிய வெளிப்படுத்தல்களை நம்மால் பார்க்கமுடியும் (சங்கீதம் 2:12; நீதிமொழிகள் 8:22–31;30:4; ஏசாயா 53; மத்தேயு 28:19; 2 கொரிந்தியர் 13:14; 1 யோவான் 5:7). மனிதனை உருவாக்கினபொழுதுகூட தேவன் தம்மைப் பன்மையிலேயே வெளிப்படுத்தினார் (உண்டாக்குவோமாக, ஆதியாகமம் 1:26). இவ்வாறு திரித்துவத்தைப் பற்றி வேதாகமத்தின் ஆரம்பம் முதலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதை நாம் பார்க்கலாம். 

திரித்துவத்தைப் பற்றிய துர்உபதேசங்கள் / வேத புரட்டுகள் / திரிபுகொள்கைகள் :

வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டு, அப்போஸ்தலரால் கற்பிக்கப்பட்டு, மரபுவழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திரித்துவ சத்தியங்களுக்கு எதிராக போதிக்கப்படுகிறவைகளை திரித்துவ வேதபுரட்டுகள் அல்லது திரிபு கொள்கைகள் (Trinity Heresies) என்று அழைக்கிறோம். அவற்றில் சிலவற்றை இந்தப் பாடத்தில் பார்ப்போம். 

முறைக் கொள்கை (Modalism): இந்த கொள்கை, தேவன் “சிருஷ்டிப்பின்போதும் நியாயப்பிரமாணத்தை கொடுத்தபோதும் பிதாவாக வெளிப்பட்டார், பிறகு இயேசு கிறிஸ்துவில் குமாரனாக வெளிப்பட்டார், கிறிஸ்து பரலோகத்திற்கு சென்ற பிறகு பரிசுத்த ஆவியாக வெளிப்பட்டார்” என வாதிடுகிறது. வேதாகமத்தில் இந்த கொள்கைக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதை நாம் எளிதில் கண்டு கொள்ளலாம். இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றபொழுது பிதா சாட்சி கொடுத்தது, சிலுவையில் இயேசு கிறிஸ்து பிதாவிடம் விண்ணப்பித்தது, இயேசு கிறிஸ்து நான் போய் பரிசுத்த ஆவியாகிய வேறோரு தேற்றரவாளனை அனுப்புவேன் என்று கூறினது எல்லாமே திரித்துவத்தை நிரூபிக்கும் நிகழ்வுகளாகும். முறைக்கொள்கைகளை நம்புபவர்கள் “ஒருமைவாத கொள்கைகளை (Unitarian Beliefs) நம்புபவர்கள்” என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

எடுத்துக்காட்டு: இந்த கொள்கைகளை நம்புகிற சில சபைகளுக்கான எடுத்துக்காட்டு  கிறிஸ்துவின் சபையார் (Church of Christ), Jesus Only, Oneness Pentecostals.

மூன்று கடவுள் / முக்கடவுள் / மூவிறை கொள்கை (Tritheism): இந்த கொள்கையின்படி பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இம்மூவறும் மூன்று வித்தியாசமான தன்மைகளையுடைய மூன்று கடவுள்கள் என்று போதிக்கிறது. இது பரிசுத்த வேதாகமத்திற்கு எதிரான மிகவும் தவறான ஒரு கொள்கையாகும். கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையையோ, பரிசுத்த வேதாகமத்தையோ, தேவன் தம்மைப் பற்றி வெளிப்படுத்தினவைகளையோ ஏற்க மறுப்பவர்கள் கிறிஸ்தவ மதத்தினர் மூன்று கடவுள்களை வணங்குகிறார்கள் என்று தவறான கருத்துக்களைப் பரப்புகிறார்கள். (திரித்துவத்தை சரியாக புரிந்து கொள்ள முந்தின பாடத்தை, பாடம் - 2 வாசிக்கவும்) 

ஆரியனிசக் கொள்கை" (Arianism): இயேசு கிறிஸ்து துவக்கத்திலிருந்தே இறைத்தன்மை கொண்டவர் அல்லவென்றும், அவரைப் பிதாவாகிய தேவன் படைத்தார் என்றும், அவர் பிதாவுக்கு சமநிலையில் இல்லை என்றும் போதித்தது. ஆனால் யோவான் 1:1-14, இது உண்மை அல்ல என்று நிரூபிக்கிறது. 

தத்துக் கொள்கை (Adoptionism): இயேசு கிறித்து நித்திய காலத்திலிருந்தே குமாரனாய் இருந்தார் என்பதை மறுத்து, இயேசு தமது ஞானஸ்நானம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் ஆகிய ஏதோ ஒரு நிகழ்வின்போது பிதாவாகிய தேவனால் "குமாரனாக" தத்தெடுக்கப்பட்டார் என்று கூறுகிறது. (1) 

கீழ்நிலைக் கொள்கை (Subordinationism): இறைத்தன்மையில் குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய இருவரும் பிதாவாகிய தேவனை விட கீழ்நிலையில் உள்ளவர்கள் என்று போதிக்கிறது. இது, மனிதனாக அவதரித்த இயேசு கிறிஸ்துவுக்கு திரித்துவத்தில் இருந்த பங்கை தவறாக புரிந்து கொள்ளுவதினால் வருகிற கூற்றாகும். 

நிசேயா முதலாம் கிறிஸ்தவப் பொதுசங்கம்:

கிறிஸ்து பரமேறி சென்றபின், கிறிஸ்துவின் சபை துவங்கின காலத்திலிருந்தே கிறிஸ்துவின் உபதேசங்களையும், அப்போஸ்தலருடைய போதனைகளையும், அவர்களுடைய எழுத்துக்களையும் எந்தவொரு மாறுதலும் இல்லாமல் பாதுகாக்க வேண்டுமென்பதில் ஆதி அப்போஸ்தலர்களும், சபைப்பிதாக்களும் மிகவும் கவனமாயிருந்தனர். அப்படி ஏதேனும் ஒரு மாற்று கொள்கை சபைகளுக்குள் நுழைந்தால் அதைத் தடுப்பதற்கு அவர்கள் ஜாக்கிரதையாயிருந்தனர். இப்படி கிறிஸ்தவக் கொள்கைகளை எந்த ஒரு பிழையும் இல்லாமல் பாதுகாப்பதற்காகவும், கிறிஸ்தவத்தின் பல்வேறு காரியங்களை விவாதித்து முடிவெடுப்பதற்காகவும் பல்வேறு கிறிஸ்தவப் பொதுசங்கங்கள் கூட்டப்பட்டன. 

இவ்வாறு கூட்டப்பட்ட முதலாவது பொதுசங்கம் தான் “நிசேயா கிறிஸ்தவப் பொதுசங்கம்”. தற்போதைய துருக்கி தேசத்தில் இருக்கிற நிசேயா என்கிற பட்டணத்தில் இந்த பொது சங்கம் கி.பி. 325 ஆம் ஆண்டு, ரோம அரசனாகிய கான்ஸ்டன்டைன் மன்னனால் கூட்டப்பட்டது. இதில் பங்கேற்பதற்கு, அந்த காலத்தில் கிறிஸ்தவ பேராயர்களாக இருந்த 1800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 1000 பேர் கிழக்கு தேசங்களிலிருந்தும், 800 பேர் மேற்கத்திய தேசங்களிலிருந்தும் அழைக்கப்பட்டனர். 

உலகத்திலே தலைசிறந்த வரலாற்றாசிரியர்களான ஜெரோம், தியோனீசியுஸ் ஆகியோர் 300க்கும் அதிகமான பேராயர்கள் நிசேயா பொதுசங்கத்தில் பங்கேற்றதாக எழுதியுள்ளனர். இந்தியா -பெர்சியா தேசங்களின் பேராயராக இருந்த பேராயர் ஜான் இந்த முதல் பொதுசங்கத்தில் கலந்து கொண்டதாகவும் வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். ரோம பேராயராக இருந்த ஹோசியஸ் இதற்கு தலைமை தாங்கினதாகவும் அறிய முடிகிறது. இந்த பொது சங்கத்தில் பங்கேற்ற பேராயர்களுக்கு பயணச் செலவுகள், தங்கும் வசதிகள் போன்றவை செய்து கொடுக்கப்பட்டதாக வரலாற்று சுவடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 

இந்த பொது சங்கத்தில் கிறிஸ்துவின் தெய்வீக தன்மையை மறுதலித்த ஆரியனிச (Arianism) கொள்கை வேதப் புரட்டாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள திரியேக தேவனுடைய தெய்வீகத் தன்மைகளை விசுவாசப் பிரமாணமாக வடிவமைத்து கொடுத்தனர். இதை நிசேயா விசுவாச பிரமாணம் என்று அழைக்கிறோம். இந்த விசுவாசப் பிரமாணங்களை உருவாக்கினவர்கள் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் உபதேசிக்கப்பட்டு, ஆதி திருச்சபையை உருவாக்கி நடத்தின ஆதி சபைப்பிதாக்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். (2) 

மனப்பாட வசனம்: தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். ……………… ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர். (1 யோவான் 5:4-6). 

நிசேயா விசுவாசப் பிரமாணம்

வானத்தையும் பூமியையும் காணப்படுகிறதும் காணப்படாததுமான எல்லாவற்றையும் படைத்தவராயிருக்கிற சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய ஒரே தேவனை விசுவாசிக்கிறேன். 

ஒரே கர்த்தருமாய், தேவனுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்; அவர் சகல உலகங்களும் உண்டாவதற்கு முன்னே தமது பிதாவினாலே ஜெனிப்பிக்கப்பட்டவர்; தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், மெய்த்தேவனில் மெய்த்தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெனிப்பிக்கப்பட்டவர், பிதாவோடே ஒரே தன்மையுடையவர், சகலத்தையும் உண்டாக்கினவர்; மனிதராகிய நமக்காகவும் நமக்கு இரட்சிப்பு உண்டாகவும் பரமண்டலத்திலிருந்து இறங்கி, பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் அவதரித்து மனிதனானார்; நமக்காக பொந்தியுபிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, அடக்கம் பண்ணப்பட்டார்; வேத வாக்கியங்களின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை. 

கர்த்தருமாய் ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும்கூட தொழுது தோத்தரிக்கப்படுகிறவருமாய், தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். 

ஒரே பரிசுத்த பொதுவான அப்போஸ்தல திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன். பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஒரே ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும் மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமென். 

அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம்

(உலகத்தின் பழமையான கிறிஸ்தவ விசுவாசப் பிரமாணம் இது. முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களால் அறிக்கையிடப்பட்ட விசுவாசப் பிரமாணம் இதுவே ஆகும்)

வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்.

அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசுகிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, பாதாளத்தில் இறங்கினார்: மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார்: பரமண்டலத்துக்கேறி, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்; அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார்.

பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன், பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும்; பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும்; பாவ மன்னிப்பும்; சரீரம் உயிர்த்தெழுதலும்; நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன். ஆமென்.

 ஆதார நூற்களின் பட்டியல்:

1.      HaNaviy A. B. (2019 December 7).  Exploring the Shema (Paper Two): YHVH and Yeshua. (Retrieved 9th August 2020 from http://www.tetzetorah.com/exploring-the-shema)

2.     First council of Nicaea (Retrieved 9th August 2020 from

https://www.newworldencyclopedia.org/entry/First_Council_of_Nicaea)

        (மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களிலிருந்து இந்த புஸ்தகத்தை ஆக்கியோர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது

3. நிசேயா விசுவாசப் பிரமாணம், அப்போஸ்தல பிரமாணம் ஆகியவை, மூல

 பாஷையாகிய கிரேக்க மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, 

பாரம்பரியமாக தமிழ் கிறிஸ்தவ சபைகளில் அறிக்கையிடப்படும் விசுவாசப் 

பிரமாணங்கள்.

பாடப் பயிற்சிகள் 

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1)     முறைக்கொள்கைகளை நம்புபவர்கள், “…………………………. கொள்கை”களை நம்புபவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.  

2)     பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே ………………………………..

3)     நிசேயா முதலாம் கிறிஸ்தவப் பொதுசங்கம் ………………………………… மன்னனால் கூட்டப்பட்டது.

4)     நிசேயா முதலாம் கிறிஸ்தவப் பொதுசங்கத்தில் பங்கேற்ற இந்தியா -பெர்சியா தேசங்களின் பேராயரின் பெயர் ………………………………. 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1)     வேதப்புரட்டுகள் அல்லது திரிபுகொள்கைகள் என்றால் என்ன?

 

2)     முறைக் கொள்கையை விளக்கவும்?

 

3)     முக்கடவுள் அல்லது மூவிறை கோட்பாடு என்றால் என்ன?

 

4)     “கீழ்நிலைக் கொள்கை” என்றால் என்ன? 

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1)     நிசேயா கிறிஸ்தவ பொது சங்கம் எங்கு, எப்பொழுது, எதற்காக கூட்டப்பட்டது என்பதைப் பற்றியும், அங்கு நடந்த சம்பவங்களைப் பற்றியும் எழுதவும்.

 

 

ஆபிரகாமின் பயணம் (Abraham's Journey), இடைநிலை வகுப்பு (Intermediate), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 3

இடைநிலை வகுப்பு (Intermediate)

12 - 13 வயது

ஞாயிறுபள்ளி பாடங்கள்

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 3
ஆபிரகாமின் பயணம்

 

இந்த பாடத்தை புரிந்து கொள்ளும்படியாக, ஆதியாகமத்தின் சில முக்கிய நிகழ்வுகளை நினைவிற்கு கொண்டு வரலாம். தேவன் படைத்த முதல் மனிதர்களாகிய ஆதாமும், ஏவாளும் பாவம் செய்து நித்திய ஜீவனை இழந்தபொழுது. மனிதர்களை மீட்பதற்காக,  ஸ்திரீயின் வித்தாக ஒரு இரட்சகரை வாக்குப்பண்ணி, தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தை வெளிப்படுத்தினார். 

தேவனுடைய திட்டமும், சாத்தானின் வஞ்சகமும்:

ஆனால் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை தடுக்க நினைத்த சாத்தானோ, மக்களை பாவத்திற்குள்ளாக விழ வைத்து, அதன்மூலமாக தேவனுடைய கோபத்திற்கு மக்கள் ஆளாகி, தேவனாலே ஜனங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி செய்தான். சில வேளைகளில் சாத்தானுடைய முயற்சிகள் வெற்றி பெற்றது போல தோன்றினாலும், தேவன் எல்லாத் தருணங்களிலும் தன்னுடைய இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கேதுவான சில நபர்களை பாதுகாத்து வைத்திருந்தார்.

எடுத்துக்காட்டாக: நோவாவின் காலத்தில் பாவத்தினிமித்தம் பூமி முழுவதும் வெள்ளத்தால் அழிக்கப்பட்டபொழுதும், நோவாவையும், அவன் குடும்பத்தையும் தமக்கென்று பாதுகாத்து வைத்திருந்தார். அதன்மூலமாக தேவபக்தியுள்ள ஒரு சந்ததி தொடர்ந்தது.  நோவாவுக்குப்  பின்னான பத்தாம் தலைமுறை வந்தபொழுது, ஜனங்கள் மறுபடியும் தங்களைப் படைத்தவரை மறந்து தங்களுக்கென்று தெய்வங்களை உண்டுபண்ணி வழிபட்டார்கள். இந்த ஜனங்களின் நடுவில் தேவன் ஆபிரகாமை உண்மையுள்ளவனாகக் கண்டு, அவனுக்கு தம்மை வெளிப்படுத்தினார். அதைப் பற்றி இந்த பாடத்தில் விரிவாகப் பார்க்கலாம். 

கோத்திரப் பிதாக்கள் (Patriarchs):

தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் பங்கு பெறுவதற்கு, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான நபர் தான் ஆபிரகாம். இவர் வேதாகம கோத்திரப் பிதாக்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். ஒரு கோத்திரமோ அல்லது இனமோ உருவாகுவதற்கு காரணமாயிருந்த நபரையே ‘கோத்திரப் பிதா’ என்று அழைக்கிறோம். அவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் உருவாகுவதற்கு காரணமாயிருந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களே “வேதாகம கோத்திரப் பிதாக்கள்(Biblical Patriarchs) ” என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வாழ்ந்த காலம் “கோத்திரப் பிதாக்களின் காலம் (Patriarchal Age) என்று அழைக்கப்படுகின்றது. 

ஆபிரகாமின் அழைப்பு:

தேவன் ஆபிரகாமுக்கு தன்னை வெளிப்படுத்துமுன் ஆபிரகாம் “ஊர் (Ur)” என்கிற கல்தேயருடைய பட்டணத்திலே வாழ்ந்து வந்தார். அது தற்போதைய ஈராக் தேசத்தில் உள்ளது. தேவன் ஆபிரகாமுக்கு தரிசனமாகி, அவரைத் தன்னுடைய தேசத்தையும், இனத்தையும் விட்டுவிட்டு தான் காண்பிக்கும் தேசத்திற்கு போகும்படியாகக் கூறினார். தேவன் இவ்வாறு அழைத்ததன் நோக்கம் ஆபிரகாம் மூலமாக ஒரு பரிசுத்தமான, பாவமற்ற சந்ததியை உருவாக்கி அவர்கள் மூலமாக மேசியாவை (இரட்சகரை) இந்த உலகிற்கு கொடுப்பதுதான். அதனால் தான் தேவன் ஆபிரகாமின் சந்ததியாகிய இஸ்ரவேல் ஜனங்களை தெரிந்துகொண்டு அவர்களுக்கு பத்து கற்பனைகளையும், மற்ற பல சிறந்த சட்ட திட்டங்களையும் கொடுத்து பரிசுத்தமாக வாழுவதற்கான வழிகளை கற்றுக் கொடுத்தார். தேவன் ஆபிரகாமை அழைத்தவுடன் ஆபிரகாம் உடனே கீழ்ப்படிந்து தேவன் காட்டும் தேசத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தார். இது “ஆபிரகாமின் விசுவாசப் பயணம்” என்றே அழைக்கப்படுகின்றது. 

விசுவாசத்தின் தகப்பனான ஆபிரகாம்:

ஆபிரகாம் செய்த பயணம் விசுவாசப் பயணம் என்று அழைக்கப்படுவதன் காரணம் என்ன என்றால்

§  தன்னுடைய இனம், தேசம் தனக்கு அறிமுகமாயிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு போக வேண்டியிருந்தது

§  தான் போகும் தேசம் இன்னதென்று அறியாமல், அந்தவொரு தேச வரைபடமோ எந்தவொரு வழிகாட்டுதலோ இல்லாமல் தேவனுடைய வாக்கை மட்டுமே நம்பி பிரயாணம் செய்தார்

§  தான் போகும் பாதை எப்படிப்பட்டது, வனாந்திரமா, மலைப் பிரதேசமா, வறண்ட நிலமா, செழிப்பானதா, அங்கு ஆபத்துகள் நிறைந்திருக்குமா எதையும் அறியாமல் புறப்பட்டு சென்றார்.

ஆபிரகாம் கானான் தேசத்திற்கு ஏறத்தாழ 950 மைல்கள் பிரயாணப்பட்டு செல்ல வேண்டியிருந்தது. தற்போதைய கால கட்டத்தைப் போல அல்லாது நவீன இயந்திரங்களோ, வாகன வசதிகளோ இல்லாத காலத்தில் ஆபிரகாம் இந்த பயணத்தை செய்தது மிகவும் ஆச்சரியமானதாகும். “விசுவாசம் என்றால் என்ன?” என்று எபிரெயர் 11:1 ல் கொடுக்கப்பட்டிருக்கிற விளக்கத்திற்கு ஆபிரகாமின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அதனால் தான் ஆபிரகாம் “விசுவாசிகளின் தகப்பன்” என்று அழைக்கப்படுகின்றார். 

ஆபிரகாமின் பயணம் – நிலக்குறிகள் (Landmarks):

ஆபிரகாம் ஊர் பட்டணத்திலிருந்து கானான் செல்லும் வழியில் அவர் தங்கி சென்ற பல முக்கியமான இடங்கள் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அகழ்வாரய்ச்சியின் மூலமாக இந்த இடங்களைப் பற்றிய பல தகவல்களை நாம் இன்றும் அறிய முடிகின்றது.

1.    ஊர் (தற்பொழுது ஈராக்கில் உள்ளது) – இதுதான் ஆபிரகாமின் சொந்த ஊர். ஏறத்தாழ கிமு 1900 வருடத்தில் அவர் இங்கிருந்து தன்னுடைய தகப்பன் தேராகு, மனைவி சாராய், மற்றும் சகோதரன் மகனாகிய லோத்து ஆகியோருடன் புறப்பட்டார்.

ஆபிரகாமின் சொந்த தேசமாகிய "ஊர் கஸ்திம் என்று அழைக்கப்படும் ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தில்" காணப்படும் சிதைவுகள். தற்போது ஈராக் தேசத்தில் உள்ளது.

2.    ஆரான் (மெசொபொத்தாமியா) – ஆபிரகாம் கானானுக்கு செல்லும் வழியில் சிலகாலம் இங்கு தங்கியிருந்தார். ஆபிரகாமின் தகப்பன் தேராகு இந்த இடத்தில் தான் மரித்தார்.

தற்போது ஹரான் (Harran) என்று அழைக்கப்படும் ஆரான் பட்டணம், துருக்கி தேசத்தில் உள்ளது

3.    சீகேம் – ஆபிரகாம் கானானியரை முதன்முதலாக சந்தித்த இடம். இந்த இடத்தில் வைத்து தேவன் ஆபிரகாமுக்கு மறுபடியும் வாக்குகுறுதிகளைக் கொடுத்தார், ஆபிரகாம் தேவனுக்கென்று முதல் பலிபீடத்தை இங்கு தான் கட்டினார்.

சீகேம் பட்டணம் - பழைய இடிபாடுகளுக்கிடையே எழுப்பப்பட்டுள்ள புதிய சீகேம்.
Photo credit: Leon Mauldin

4.    பெத்தேல் – ஆபிரகாம் தென்திசை நோக்கி பிரயாணம் செய்து இந்த இடத்தை வந்தடைந்தார். இங்கு ஆண்டவருக்கு இரண்டாவது பலிபீடம் கட்டினார்.

தற்போது பெய்த் -யின் என்று அழைக்கப்படும் பெத்தேல்

எகிப்து: ஆபிரகாம் கானான் தேசத்தில் இருக்கும்பொழுது அங்கு பஞ்சம் வந்த காரணத்தினால், எகிப்து தேசத்திற்கு போனார். அங்கு அவர் சாராளை தன் சகோதரி என்று சொன்னதினால் அங்கிருந்து துரத்தப்பட்டார்.

எகிப்தின் பெனி-ஹசன் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சித்திரம், கானானியர் எகிப்திற்கு வருவதை சித்தரிக்கிறது.

பின்பு ஆபிரகாமும், லோத்தும் தாங்கள் வசித்த இடத்திற்கே திரும்பினர், ஆனால் அவர்களுடைய மேய்ப்பர்களுக்கிடையே வாக்குவாதம் வந்தபடியால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டு பிரிந்தனர்.

தாண்: நான்கு ராஜாக்கள் லோத்துவிற்கு எதிராக படையெடுத்து வந்து, அவனை சிறையாக கொண்டு சென்றனர். ஆபிரகாம் தாண் வரைக்கும் சென்று லோத்துவை மீட்டார்.

தாண் என்று அழைக்கப்பட்ட லெஷேம் பட்டணத்தின் மண்ணினால் செய்யப்பட்ட நுழை வாயில், கிமு 18ஆம் நூற்றாண்டை சார்ந்தது.
Photo credit: Bukvoed/wikimedia commons

சாலேம்: ஆபிரகாம் திரும்பி வருகின்ற வழியில் “மெல்கிசேதேக்கு” என்கிற சாலேமின் ராஜாவை சந்தித்தார். (ஆதியாகமம் 14:17-21). சாலேம் எபூசு என்கிற புறஜாதிகளின் பட்டண்மாயிருந்தது. பின்பு இஸ்ரவேலினால் கைப்பற்றப்பட்டு எருசலேம் என்று பெயர் மாற்றப்பட்டது.

எபூசியர் காலத்தைச் சேர்ந்த எருசலேமின் "எபூசியர் சுவர்"

5. கேரார்: ஆபிரகாம் எபிரோனை விட்டு சிலகாலம் பெலிஸ்தியருடைய தேசத்திற்கு போய் கேரார் என்கிற இடத்திலே தங்கியிருந்தார். இங்கும் சாராளை தன்னுடைய சகோதரி என்று சொன்னதினால் திரும்ப அனுப்பப்பட்டார்.

தற்போது நஹால் கெரார் என்று அழைக்கப்படும் கெரார் பாட்டணம், நெகேவ் பாலைவனத்தில் உள்ளது.

        எபிரோன்: லோத்து நீர்வளம் நிறைந்த சோதோம் தேசத்தை தெரிந்தெடுத்து அங்கு சென்ற பின் ஆபிரகாம் எபிரோன் என்கிற இடத்தில் உள்ள மம்ரே என்ற இடத்திற்கு வந்தார். அங்கு வைத்து தேவன், ஆபிராம் என்று அவனுக்கு முன்னிருந்த பெயரை ஆபிரகாம் என்று மாற்றினார். இங்கு வைத்து தான் இஸ்மவேல் பிறந்தான்.

எபிரோனின் பழைய பட்டணம், எருசலேமிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ளது.


      பெயர்செபா: ஆபிரகாம் கேராரிலிருந்து திரும்பி வந்து பெயர்செபா என்கிற இடத்திலே தங்கியிருந்தார். இங்கு வைத்து தான் ஆபிரகாம் நூறு வயதாயிருக்கும்பொழுது வாக்குத்தத்தத்து மகனாகிய ஈசாக்கு பிறந்தான். ஈசாக்கு என்ற பெயருக்கு, “நகைப்பு அல்லது சிரிப்பு” என்று அர்த்தம். அதன்பின்னர் ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராள் மரித்தாள். அவளை அடக்கம் பண்ணுவதற்காக ஆபிரகாம் மக்பேலா என்னப்பட்ட குகையை வாங்கினார். ஆபிரகாம் 175 வயதாயிருந்தபொழுது மரித்து, சாராளை அடக்கம் பண்ணின “மக்பேலா” என்கிற அதே குகையில் அடக்கம் பண்ணப்பட்டார்.

                     
                                            பெயர்செபா பட்டணம் (பழையதும், புதியதும்)

6. மோரியா: தேவன் ஆபிரகாமிடம், ஈசாக்கை பலியிட சொன்ன மலை இருந்த இடம் இதுதான். பின்னர் சாலமோன் இந்த இடத்தில் தான் தேவாலயத்தைக் கட்டினார்.

மோரியா மலையில் எருசலேம் தேவாலயம் கட்டப்பட்ட இடம், தற்போது இந்த தேவாலயம் இடிக்கப்பட்டு இதில் ஒருபக்க சுவர் மட்டுமே எஞ்சியுள்ளது. 

அதன்பின்னர் ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராள் மரித்தாள். அவளை அடக்கம் பண்ணுவதற்காக ஆபிரகாம் மக்பேலா என்னப்பட்ட குகையை வாங்கினார். ஆபிரகாம் 175 வயதாயிருந்தபொழுது மரித்து, சாராளை அடக்கம் பண்ணின “மக்பேலா” என்கிற அதே குகையில் அடக்கம் பண்ணப்பட்டார்.

மக்பேலாவில் உள்ள கோத்திரப்பிதாக்களின் குகை. இன்கே தான் ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, ரெபெக்காள், யாக்கோபு, லேயாள் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

வேதபகுதி: ஆதியாகமம் 11:26 – 25:9

மனப்பாட வசனம்: எபிரெயர் 11:8


பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    ஆபிரகாம் கானான் தேசத்திற்கு ஏறத்தாழ ……………………. மைல்கள் பிரயாணப்பட்டு செல்ல வேண்டியிருந்தது.

2.     ஆபிரகாம் தேவனுக்கென்று முதல் பலிபீடத்தை கட்டின இடத்தின் பெயர் …………………………….

3.    ஈசாக்கு என்ற பெயருக்கு, “……………………………………………….” என்று அர்த்தம்.

4.     ஆபிரகாம் 175 வயதாயிருந்தபொழுது மரித்து “……………………..” என்கிற குகையில் அடக்கம் பண்ணப்பட்டார். 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.    ஆபிரகாம் “விசுவாசிகளின் தகப்பன்” என்று ஏன் அழைக்கப்பட்டார்?

 

2.    வேதாகம கோத்திரப்பிதாக்கள் யார்?

 

3.     ஆபிரகாம் ஏன் எகிப்திலிருந்து வெளியேற்றப்பட்டார்? 

4.     மோரியா மலையின் சிறப்பு என்ன? 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.    ஆபிரகாமின் பயணம் ஏன் விசுவாசப் பயணம் என்று அழைக்கப்படுகின்றது?

 

 

  

சாலொமோன் ராஜா கட்டின தேவாலயம் (King Solomon Builds the Temple of God), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

இளநிலை வகுப்பு (JUNIOR)  வயது :  10 - 11  வயது வகுப்பு :  V  & V I இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்...