இடைநிலை வகுப்பு (Intermediate)
12
- 13 வயது
ஞாயிறுபள்ளி பாடங்கள்
பாடம் – 3
ஆபிரகாமின் பயணம்
இந்த பாடத்தை புரிந்து கொள்ளும்படியாக, ஆதியாகமத்தின் சில முக்கிய நிகழ்வுகளை நினைவிற்கு கொண்டு வரலாம். தேவன் படைத்த முதல் மனிதர்களாகிய ஆதாமும், ஏவாளும் பாவம் செய்து நித்திய ஜீவனை இழந்தபொழுது. மனிதர்களை மீட்பதற்காக, ஸ்திரீயின் வித்தாக ஒரு இரட்சகரை வாக்குப்பண்ணி, தம்முடைய இரட்சிப்பின் திட்டத்தை வெளிப்படுத்தினார்.
தேவனுடைய திட்டமும்,
சாத்தானின் வஞ்சகமும்:
ஆனால் தேவனுடைய
இரட்சிப்பின் திட்டத்தை தடுக்க நினைத்த சாத்தானோ, மக்களை பாவத்திற்குள்ளாக விழ
வைத்து, அதன்மூலமாக தேவனுடைய கோபத்திற்கு மக்கள் ஆளாகி, தேவனாலே ஜனங்கள்
அழிக்கப்பட வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி செய்தான். சில வேளைகளில் சாத்தானுடைய
முயற்சிகள் வெற்றி பெற்றது போல தோன்றினாலும், தேவன் எல்லாத் தருணங்களிலும்
தன்னுடைய இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கேதுவான சில நபர்களை பாதுகாத்து வைத்திருந்தார்.
எடுத்துக்காட்டாக: நோவாவின் காலத்தில் பாவத்தினிமித்தம் பூமி முழுவதும் வெள்ளத்தால் அழிக்கப்பட்டபொழுதும், நோவாவையும், அவன் குடும்பத்தையும் தமக்கென்று பாதுகாத்து வைத்திருந்தார். அதன்மூலமாக தேவபக்தியுள்ள ஒரு சந்ததி தொடர்ந்தது. நோவாவுக்குப் பின்னான பத்தாம் தலைமுறை வந்தபொழுது, ஜனங்கள் மறுபடியும் தங்களைப் படைத்தவரை மறந்து தங்களுக்கென்று தெய்வங்களை உண்டுபண்ணி வழிபட்டார்கள். இந்த ஜனங்களின் நடுவில் தேவன் ஆபிரகாமை உண்மையுள்ளவனாகக் கண்டு, அவனுக்கு தம்மை வெளிப்படுத்தினார். அதைப் பற்றி இந்த பாடத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
கோத்திரப் பிதாக்கள்
(Patriarchs):
தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் பங்கு பெறுவதற்கு, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான நபர் தான் ஆபிரகாம். இவர் வேதாகம கோத்திரப் பிதாக்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். ஒரு கோத்திரமோ அல்லது இனமோ உருவாகுவதற்கு காரணமாயிருந்த நபரையே ‘கோத்திரப் பிதா’ என்று அழைக்கிறோம். அவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் உருவாகுவதற்கு காரணமாயிருந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களே “வேதாகம கோத்திரப் பிதாக்கள்(Biblical Patriarchs) ” என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வாழ்ந்த காலம் “கோத்திரப் பிதாக்களின் காலம் (Patriarchal Age) என்று அழைக்கப்படுகின்றது.
ஆபிரகாமின் அழைப்பு:
தேவன் ஆபிரகாமுக்கு தன்னை வெளிப்படுத்துமுன் ஆபிரகாம் “ஊர் (Ur)” என்கிற கல்தேயருடைய பட்டணத்திலே வாழ்ந்து வந்தார். அது தற்போதைய ஈராக் தேசத்தில் உள்ளது. தேவன் ஆபிரகாமுக்கு தரிசனமாகி, அவரைத் தன்னுடைய தேசத்தையும், இனத்தையும் விட்டுவிட்டு தான் காண்பிக்கும் தேசத்திற்கு போகும்படியாகக் கூறினார். தேவன் இவ்வாறு அழைத்ததன் நோக்கம் ஆபிரகாம் மூலமாக ஒரு பரிசுத்தமான, பாவமற்ற சந்ததியை உருவாக்கி அவர்கள் மூலமாக மேசியாவை (இரட்சகரை) இந்த உலகிற்கு கொடுப்பதுதான். அதனால் தான் தேவன் ஆபிரகாமின் சந்ததியாகிய இஸ்ரவேல் ஜனங்களை தெரிந்துகொண்டு அவர்களுக்கு பத்து கற்பனைகளையும், மற்ற பல சிறந்த சட்ட திட்டங்களையும் கொடுத்து பரிசுத்தமாக வாழுவதற்கான வழிகளை கற்றுக் கொடுத்தார். தேவன் ஆபிரகாமை அழைத்தவுடன் ஆபிரகாம் உடனே கீழ்ப்படிந்து தேவன் காட்டும் தேசத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தார். இது “ஆபிரகாமின் விசுவாசப் பயணம்” என்றே அழைக்கப்படுகின்றது.
ஆபிரகாம் செய்த பயணம் விசுவாசப் பயணம்
என்று அழைக்கப்படுவதன் காரணம் என்ன என்றால்
§ தன்னுடைய இனம், தேசம் தனக்கு
அறிமுகமாயிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு போக வேண்டியிருந்தது
§ தான் போகும் தேசம் இன்னதென்று
அறியாமல், அந்தவொரு தேச வரைபடமோ எந்தவொரு வழிகாட்டுதலோ இல்லாமல் தேவனுடைய வாக்கை
மட்டுமே நம்பி பிரயாணம் செய்தார்
§ தான் போகும் பாதை எப்படிப்பட்டது,
வனாந்திரமா, மலைப் பிரதேசமா, வறண்ட நிலமா, செழிப்பானதா, அங்கு ஆபத்துகள்
நிறைந்திருக்குமா எதையும் அறியாமல் புறப்பட்டு சென்றார்.
ஆபிரகாம் கானான் தேசத்திற்கு ஏறத்தாழ 950 மைல்கள் பிரயாணப்பட்டு செல்ல வேண்டியிருந்தது. தற்போதைய கால கட்டத்தைப் போல அல்லாது நவீன இயந்திரங்களோ, வாகன வசதிகளோ இல்லாத காலத்தில் ஆபிரகாம் இந்த பயணத்தை செய்தது மிகவும் ஆச்சரியமானதாகும். “விசுவாசம் என்றால் என்ன?” என்று எபிரெயர் 11:1 ல் கொடுக்கப்பட்டிருக்கிற விளக்கத்திற்கு ஆபிரகாமின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அதனால் தான் ஆபிரகாம் “விசுவாசிகளின் தகப்பன்” என்று அழைக்கப்படுகின்றார்.
ஆபிரகாமின் பயணம் – நிலக்குறிகள் (Landmarks):
ஆபிரகாம் ஊர் பட்டணத்திலிருந்து
கானான் செல்லும் வழியில் அவர் தங்கி சென்ற பல முக்கியமான இடங்கள் வேதாகமத்தில்
கொடுக்கப்பட்டிருக்கின்றது. அகழ்வாரய்ச்சியின் மூலமாக இந்த இடங்களைப் பற்றிய பல
தகவல்களை நாம் இன்றும் அறிய முடிகின்றது.
1. ஊர் (தற்பொழுது ஈராக்கில் உள்ளது) – இதுதான் ஆபிரகாமின் சொந்த ஊர். ஏறத்தாழ
கிமு 1900 வருடத்தில் அவர் இங்கிருந்து தன்னுடைய தகப்பன் தேராகு, மனைவி சாராய்,
மற்றும் சகோதரன் மகனாகிய லோத்து ஆகியோருடன் புறப்பட்டார்.
2. ஆரான் (மெசொபொத்தாமியா) – ஆபிரகாம் கானானுக்கு செல்லும் வழியில்
சிலகாலம் இங்கு தங்கியிருந்தார். ஆபிரகாமின் தகப்பன் தேராகு இந்த இடத்தில் தான்
மரித்தார்.
3. சீகேம் – ஆபிரகாம் கானானியரை முதன்முதலாக சந்தித்த
இடம். இந்த இடத்தில் வைத்து தேவன் ஆபிரகாமுக்கு மறுபடியும் வாக்குகுறுதிகளைக்
கொடுத்தார், ஆபிரகாம் தேவனுக்கென்று முதல் பலிபீடத்தை
இங்கு தான் கட்டினார்.
4. பெத்தேல் – ஆபிரகாம் தென்திசை நோக்கி பிரயாணம்
செய்து இந்த இடத்தை வந்தடைந்தார். இங்கு ஆண்டவருக்கு இரண்டாவது பலிபீடம் கட்டினார்.
எகிப்து:
ஆபிரகாம் கானான் தேசத்தில் இருக்கும்பொழுது அங்கு பஞ்சம்
வந்த காரணத்தினால், எகிப்து தேசத்திற்கு போனார். அங்கு அவர் சாராளை தன் சகோதரி
என்று சொன்னதினால் அங்கிருந்து துரத்தப்பட்டார். எகிப்தின் பெனி-ஹசன் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சித்திரம், கானானியர் எகிப்திற்கு வருவதை சித்தரிக்கிறது.
பின்பு
ஆபிரகாமும், லோத்தும் தாங்கள் வசித்த இடத்திற்கே திரும்பினர், ஆனால் அவர்களுடைய மேய்ப்பர்களுக்கிடையே
வாக்குவாதம் வந்தபடியால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டு பிரிந்தனர். தாண்: நான்கு ராஜாக்கள் லோத்துவிற்கு எதிராக படையெடுத்து வந்து, அவனை சிறையாக கொண்டு சென்றனர். ஆபிரகாம் தாண் வரைக்கும் சென்று லோத்துவை மீட்டார். தாண் என்று அழைக்கப்பட்ட லெஷேம் பட்டணத்தின் மண்ணினால் செய்யப்பட்ட நுழை வாயில், கிமு 18ஆம் நூற்றாண்டை சார்ந்தது. Photo credit: Bukvoed/wikimedia commons
சாலேம்: ஆபிரகாம் திரும்பி வருகின்ற வழியில் “மெல்கிசேதேக்கு” என்கிற சாலேமின் ராஜாவை சந்தித்தார். (ஆதியாகமம் 14:17-21). சாலேம் எபூசு என்கிற புறஜாதிகளின் பட்டண்மாயிருந்தது. பின்பு இஸ்ரவேலினால் கைப்பற்றப்பட்டு எருசலேம் என்று பெயர் மாற்றப்பட்டது. எபூசியர் காலத்தைச் சேர்ந்த எருசலேமின் "எபூசியர் சுவர்"
|
6. மோரியா: தேவன் ஆபிரகாமிடம், ஈசாக்கை பலியிட சொன்ன மலை இருந்த இடம் இதுதான். பின்னர் சாலமோன் இந்த இடத்தில் தான் தேவாலயத்தைக் கட்டினார்.
அதன்பின்னர் ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராள்
மரித்தாள். அவளை அடக்கம் பண்ணுவதற்காக ஆபிரகாம் மக்பேலா என்னப்பட்ட குகையை வாங்கினார்.
ஆபிரகாம் 175 வயதாயிருந்தபொழுது மரித்து, சாராளை அடக்கம் பண்ணின “மக்பேலா” என்கிற
அதே குகையில் அடக்கம் பண்ணப்பட்டார்.
வேதபகுதி: ஆதியாகமம் 11:26 – 25:9
மனப்பாட வசனம்: எபிரெயர் 11:8
பாடப்
பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1. ஆபிரகாம் கானான் தேசத்திற்கு ஏறத்தாழ
……………………. மைல்கள் பிரயாணப்பட்டு செல்ல வேண்டியிருந்தது.
2. ஆபிரகாம்
தேவனுக்கென்று
முதல் பலிபீடத்தை
கட்டின இடத்தின் பெயர் …………………………….
3. ஈசாக்கு என்ற பெயருக்கு, “……………………………………………….”
என்று அர்த்தம்.
4. ஆபிரகாம் 175 வயதாயிருந்தபொழுது மரித்து “……………………..” என்கிற குகையில் அடக்கம் பண்ணப்பட்டார்.
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. ஆபிரகாம் “விசுவாசிகளின் தகப்பன்” என்று ஏன் அழைக்கப்பட்டார்?
2. வேதாகம கோத்திரப்பிதாக்கள் யார்?
3. ஆபிரகாம் ஏன் எகிப்திலிருந்து வெளியேற்றப்பட்டார்?
4. மோரியா மலையின் சிறப்பு என்ன?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1. ஆபிரகாமின் பயணம் ஏன் விசுவாசப் பயணம் என்று அழைக்கப்படுகின்றது?
No comments:
Post a Comment