பாடம் – 5
என்னைக் காண்பவரை கண்டேன்
ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்கு (இவளுடைய பெயர் பின்னர் சாராள் என்று மாற்றப்பட்டது) ஆகார் என்ற பெயருடைய ஒரு அடிமைப்பெண் இருந்தாள். பழங்காலங்களில் தங்களுடைய வீட்டு வேலைகளில் உதவி செய்வதற்காக பணிப்பெண்களாக அடிமைகளை வைத்திருப்பது வழக்கம். தேவன் ஆபிராமிடம் அவனுடைய சந்ததி வானத்து நட்சத்திரங்களைப் போல திரளாயிருக்கும் என்று வாக்கு கொடுத்திருந்தார். ஆனால் சாராய்க்கு பிள்ளை இல்லாதிருந்தது. அதனால் அவள் தன்னுடைய அடிமைப் பெண்ணின் மூலமாவது தங்களுக்கு ஒரு சந்ததி கிடைக்க வேண்டும் என்று எண்ணி அதை ஆபிராமிடம் கூறினாள். ஆபிரகாமும் அதை ஏற்றுக் கொண்டார்.
ஆனால் ஆகாருக்கு குழந்தை பிறக்கும் நேரம் வந்த பொழுதோ, அது மிகவும் துயரமான ஒன்றாக இருந்தது. ஆகார் சாராயுடைய அடிமைப் பெண்ணாய் இருந்த பொழுதும் தன்னால் ஆபிரகாமுக்கும், சாராய்க்கும் ஒரு சந்ததி வரப் போகிறது என்கிற காரணத்தினால், அவள் தன் எஜமாட்டியாகிய சாராளை அற்பமாக எண்ணினாள். இதனால் சாராள் ஆகாரை மிகவும் கடினமாக நடத்தத் தொடங்கினாள். ஆகவே ஆகார் தன்னுடைய எஜமாட்டியினுடைய வீட்டைவிட்டு ஓடிப் போனாள்.
ஆகார் வனாந்திரமான ஒரு இடத்தை வந்தடைந்து தனிமையாய் அலைந்து கொண்டிருந்தாள். ஆகார் தனிமையாய் இருந்தபொழுதிலும் கர்த்தர் அவளை கவனித்துக் கொண்டே இருந்தார். கர்த்தருடைய தூதனானவர் அவளை ஒரு நீர் ஊற்றின் அருகில் கண்டு “ஆகாரே நீ எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார். ஆகார் உண்மையைக் கூறி, தான் தன் எஜமாட்டியாகிய சாராளை விட்டு ஓடிப் போவதாகக் கூறினாள்.
அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் ஆகாரிடம், சாராளிடத்திற்கே திரும்பப் போய் அவளுக்கு கீழ்ப்படிந்து அடங்கி இருக்கும்படியாகக் கூறினார். அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு “இஸ்மவேல்” என்று பெயர் வைக்கும்படியாகக் கூறினார். இஸ்மவேலுக்கும் அவனைச் சுற்றி இருக்கிற ஜனங்களுக்கும் எப்பொழுது பிரச்சனைகள் எழுந்து கொண்டே இருக்கும் என்றும் கூறினார். ஆகார் கர்த்தருடைய தூதன் சொன்னதை ஏற்றுக்கொண்டு சாராளிடம் திரும்பிப் போனாள்.
யாரும் தன்னைக் காணாத இடத்திலும் தன்னைக் கண்டு தேடி வந்த தேவனுக்கு ஆகார் “நீர் என்னைக் காண்கிற தேவன்” (எபிரெய பாஷையிலே “எல் ரோயி”) என்று பெயரிட்டாள். எனவே தேவனுடைய தூதன் அவளைக் கண்டு சந்தித்த நீர் ஊற்று “லகாய்ரோயீ” என்று அழைக்கப்படுகின்றது. பின்னர் ஆகாருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஆகார் “இஸ்மவேல்” என்று பெயரிட்டாள். ஆபிரகாமுக்கு அப்பொழுது வயது எண்பத்தாறு.
ஆபிரகாம் இஸ்மவேல் மூலமாக தனக்கு ஒரு சந்ததி கிடைத்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, தேவன் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி சாராள் மூலமாக ஆபிரகாமுக்கு ஒரு வாக்குத்தத்ததின் மகன் நிச்சயமாகப் பிறப்பான் என்றும் அவனுக்கு “ஈசாக்கு” என்று பெயர் வைக்கும்படிக்கும் கூறினார். தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தில் ஈசாக்கு நிறைவேற்றவேண்டிய பங்கு இருந்தது. ஈசாக்கின் வம்சாவளியில் தான் இயேசுகிறிஸ்து மேசியாவாக உலகத்திற்கு வெளிப்பட்டார்.
ஆபிரகாம் இஸ்மவேலுக்காகவும் தேவனிடம் வேண்டிக்கொண்டார். தேவன் ஆபிரகாமுடைய வேண்டுதலை ஏற்றுக் கொண்டு இஸ்மவேல் ஒரு பெரிய ஜாதியாகப் பெருகுவான் அவனிடமிருந்து பன்னிரண்டு பிரபுக்கள் தோன்றுவார்கள் என்று வாக்குக் கொடுத்தார்.
ஆபிரகாம் நூறு வயதாயிருக்கும்பொழுது, தேவனுடைய வாக்குத்தத்ததின்படி சாராள் மூலமாக அவனுக்கு ஈசாக்கு என்னும் மகன் பிறந்தான். அதன் பிறகு ஒரு நாள் இஸ்மவேல் ஈசாக்கை கேலி செய்வதை சாராள் பார்த்து ஆகாரையம் அவளுடைய மகனாகிய இஸ்மவேலையும் தன்னைவிட்டு வெளியேற்ற தீர்மானித்தாள்.
அதை ஆபிரகாமுக்கு அவள் சொன்னபொழுது அவனுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. ஆனால் சாராள் சொன்னபடி செய்யும்படியாக தேவன் ஆபிரகாமிடம் கூறினார். அதனால் ஆபிரகாம் ஆகாருக்கு அப்பத்தையும், ஒரு தோல் துருத்தியிலே தண்ணீரையும் கொடுத்து, அவளை தன்னைவிட்டு அனுப்பி விட்டான்.
ஆகாரும் இஸ்மவேலும் பெயர்செபா என்ற இடத்திலுள்ள வனாந்திரத்திலே அலைந்து கொண்டிருந்தார்கள். அவளிடத்திலிருந்த தண்ணீர் தீர்ந்து போனது. அப்பொழுது ஆகார் தன்னுடைய மகனாகிய இஸ்மவேல் தாகத்தினால் சாகிறதை தான் பார்க்கபோவதில்லை என்று கூறி அவனை ஒரு செடியின் கீழே வைத்து விட்டு, சற்று தூரம் தள்ளிப் போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். தாகத்தினால் அவர்கள் அழுகிற சத்தத்தை தேவன் கேட்டார்.
அப்பொழுது ஆகார் வானத்திலிருந்து பேசுகிற ஓர் தேவ தூதனுடைய சத்தத்தைக் கேட்டாள். தேவதூதன் அவளைப் பார்த்து இஸ்மவேல் சாவதில்லை என்றும், அவன் வளர்ந்து ஒரு பெரிய ஜாதியாகப் பெருகுவான் என்றும் கூறினார். தேவன் ஆகாருடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது அவள் அங்கே இருந்த ஒரு நீர் ஊற்றைக் கண்டாள். அவள் அதிலிருந்து தண்ணீர் எடுத்து இஸ்மவேலுக்குக் கொடுத்தாள். இவ்வாறு ஆகாரையும் இஸ்மவேலையும் தேவன் உயிரோடே காப்பாற்றினார். பின்னர் இஸ்மவேல் வளர்ந்து வில்வித்தையிலே வல்லவனாயிருந்தான். அவர்கள் பாரான் என்கிற வனாந்திரத்திலே தங்கியிருந்தார்கள். இஸ்மவேலுடைய வம்சாவளியில் ஆண்டவருடைய வாக்குத்தத்ததின்படியே பன்னிரண்டு பிரபுக்கள் தோன்றினார்கள்.
வேத பகுதி: ஆதியாகமம் 16, 21
மனப்பாட வசனம்: ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். (1 பேதுரு 5:6,7)
பாடப் பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1. ஆகார் ………………………………. ஒரு
இடத்தை வந்தடைந்து தனிமையாய் அலைந்து கொண்டிருந்தாள்.
2. இஸ்மவேலிடமிருந்து …………………………..
பிரபுக்கள் தோன்றுவார்கள் என்று ஆண்டவர் வாக்குக் கொடுத்தார்.
3. ஆபிரகாம் …………………………, ஒரு
தோல் துருத்தியிலே ………………………. கொடுத்து, ஆகாரை அனுப்பி விட்டான்.
4.
இஸ்மவேல் வளர்ந்து ………………………………… வல்லவனாயிருந்தான்.
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1.
ஆகார் தன் எஜமாட்டியினுடைய வீட்டை விட்டு ஏன்
ஓடிப்போனாள்?
2.
ஆகார் நீர்
ஊற்றிற்கு “லகாய் ரோயீ” என்று பெயரிட காரணம் என்ன?
3. ஆண்டவர் இஸ்மவேலுக்காக ஆபிரகாம் செய்த விண்ணப்பத்தைக் கேட்டு என்ன வாக்கு கொடுத்தார்?
4. சாராள் ஏன் ஆகாரையும், இஸ்மவேலையும் வெளியேற்றத் தீர்மானித்தாள்?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1. ஆபிரகாம் ஆகாரை அனுப்பின பின்பு ஆகார் எங்கு சென்றாள்?
அதன்பின்பு என்ன நடந்தது?
No comments:
Post a Comment