Tuesday, September 1, 2020

யோசேப்பு சகோதரர்களை சோதித்தல் (Joseph Tests His Brothers), இடைநிலை வகுப்பு (Intermediate), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 5

                       இடைநிலை வகுப்பு (INTERMEDIATE) 

வயது: 12 - 13 வயது
வகுப்பு: VII & VIII

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 5

யோசேப்பு சகோதரர்களை சோதித்தல்

யோசேப்பு ஈசாக்கின் பேரன், யாக்கோபுடைய மகன். அவனுக்கு பத்து மூத்த சகோதரர்களும், ஒரு மூத்த சகோதரியும், ஒரு இளைய சகோதரனும் இருந்தார்கள். யோசேப்பின் தாயார் அவனுடைய இளைய சகோதரன் பிறக்கும்பொழுது மரித்து விட்டார்கள். அவனுடைய தகப்பனார் அவனிடம் மிகவும் அன்பு செலுத்தினார். அவனுக்கு மிகவும் சிறப்பான பல வருணங்களுள்ள ஒரு அங்கியை செய்து கொடுத்தார். அதனால் அவனுடைய சகோதரர்கள் அவன்மேல் பொறாமை கொண்டார்கள். 

யோசேப்பின் கனவுகள்:

யோசேப்பு இரண்டு கனவுகளைப் பார்த்து அதை தன் சகோதர்களிடம் சொன்னான். ஒரு கனவில், அவன் தானியங்களை கட்டிக் கொண்டிருந்ததாகவும், அப்பொழுது அவனுடைய தானியக்கட்டு நிமிர்ந்து நின்றதாகவும், அவனுடைய சகோதரர்களுடைய தானியக்கட்டுகள் அவனுடைய தானியக்கட்டை சுற்றி வணங்கி நின்றதாகவும் கண்டான். நீ எங்களை ஆளுகை செய்யப் போகிறாயோ என்று கூறி அவனைப் பகைத்தார்கள். அவன் இன்னொரு கனவையும் கண்டான். அதில் சூரியனும், சந்திரனும், பதினொரு நட்சத்திரங்களும் அவனை வணங்கினதாகக் கண்டான். இந்த சொப்பனத்தை அவன் தந்தை கேட்டபொழுது அவருக்கும் கூட அதிர்ச்சியாக இருந்தது. நீ என்ன கனவு காண்கிறாய், நானும் உன் தாயாரும் உன்னை வணங்க வருவோமோ? என்று அவன் மேல் கோபங்கொண்டார். 

யோசேப்பின் பொறாமை கொண்ட சகோதரர்கள்:

ஒருநாள் யோசேப்பின் சகோதரர்கள் ஆடு மேய்க்க சென்றிருந்தபொழுது, அவனுடைய தகப்பன் அவனை அவனுடைய சகோதரர்களை நலம் விசாரித்து வரும்படி அனுப்பினார்.  அவனுடைய சகோதரர்கள் அவன் தூரத்தில் வருவதைப் பார்த்தவுடனேயே அவனைக் கொலை செய்யும்படி திட்டம் தீட்டினார்கள். ஆனால் அவனுடைய மூத்த சகோதரனான ரூபன் அவன் மேல் இரக்கமுற்று, அவர்கள் கையிலிருந்து அவனை காப்பாற்றினான். அதனால் அவனுடைய மற்ற சகோதரர்கள் சேர்ந்து அவனைக் கொல்லாமல், அந்த வழியே சென்ற மீதியானிய வியாபாரிகளிடம் இருபது வெள்ளிக் காசுக்கு விற்றுப் போட்டார்கள். பின்பு அவர்கள் ஒரு ஆட்டைக் கொன்று யோசேப்பினுடைய பலவருண அங்கியை அதில் நனைத்து, அவனுடைய தகப்பனிடத்தில் காட்டி ஏதோ ஒரு காட்டு மிருகம் யோசேப்பைக் கொன்று போட்டதாகக் கூறினார்கள். 

எகிப்தில் இரண்டாம் முக்கிய நபராக உயர்ந்த யோசேப்பு:

யோசேப்பை எகிப்திற்கு கொண்டு சென்ற மீதியானிய வியாபாரிகள் அவனை போத்திபார் என்கிற பார்வோனுடைய ஒரு அதிகாரியிடம் விற்றார்கள். ஒரு நாள் போத்திபாரின் மனைவி யோசேப்பின் மேல் ஒரு பொய்யான குற்றச்சாட்டை கூறினாள். அதனால் யோசேப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான். ஆனால் சிறைச்சாலையிலும் ஆண்டவர் யோசேப்பை கைவிடவில்லை. எகிப்தின் மன்னனான பார்வோன் ஒரு நாள் ஒரு கனவு கண்டான். அந்த கனவின் அர்த்தத்தை யாராலும் சொல்லமுடியவில்லை. யோசேப்புக்கு அந்த கனவின் அர்த்தத்தை அறிந்து கொள்ள ஆண்டவர் உதவி செய்தார். பார்வோனுடைய கனவின் மூலம் எகிப்து தேசத்தில் ஏழு வருடம் பஞ்சம் வரப் போகிறது என்றும், அதற்குமுன் ஏழு வருடம் செழிப்பான வருடங்கள் இருக்கும் என்றும் தெரிந்து கொண்டார்கள். அதனால் தேவையான உணவு பொருட்களை சேர்த்து வைத்துக் கொண்டார்கள். 

உணவிற்காக எகிப்து தேசத்திற்கு வந்த யோசேப்பின் சகோதரர்கள்:

யோசேப்பின் சகோதரர்கள் வாழ்ந்த கானான் தேசத்திலும் பஞ்சம் வந்தது. யோசேப்பினுடைய மூத்த சகோதரர்கள் எகிப்து தேசத்தில் உணவு கிடைக்கிறது என்று கேள்விப்பட்டு உணவு வாங்குவதற்காக எகிப்திற்கு போனார்கள். அப்பொழுது எகிப்தில் அதிகாரியாயிருந்த யோசேப்பிடத்திலிருந்து அவர்கள் தானியம் வாங்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு தானியத்தை விற்றுக்கொண்டிருந்தது தங்கள் சகோதரனான யோசேப்பு என்பது தெரியவில்லை. யோசேப்புக்கோ தன்னுடைய சகோதரரை அடையாளம் தெரிந்து விட்டது. ஆனால் அவன் தன்னுடைய சகோதரர்கள் இன்னும் பழைய குணங்களோடு தான் இருக்கிறார்களா அல்லது மாறி விட்டார்களா என்று அறிந்து கொள்ள விரும்பினான். அதனால் அவர்களுக்கு சில பரீட்சைகளை வைத்தான்.

யோசேப்பு தன் சகோதரர்களை கடினமாக நடத்துதல்:

யோசேப்பு முதலாவது தன் சகோதரர்களிடம் தான் அவர்களை நம்பாதது போல காண்பித்தான். அவன் அவர்களை உளவாளிகள் என்றும் எகிப்து தேசம் எங்கு திறந்திருக்கிறது என்று பார்க்க வந்திருப்பதாகவும் குற்றஞ் சாட்டினான். அவர்களோ தாங்கள் உண்மையிலேயே தானியம் வாங்க வந்திருப்பதாகவும், அவர்களுக்கு வயதான தகப்பனும், ஒரு இளைய சகோதரனும் இருக்கிறார்கள் என்றும் கூறினார்கள். அப்பொழுது யோசேப்பு அங்கு வந்தவர்களிலே இளையவனான சிமியோன் என்கிற தன்னுடைய சகோதரனை சிறையில் அடைத்துவிட்டு, தன்னுடைய மற்ற சகோதரர்களிடம் நீங்கள் தானியம் கொண்டு போய் உங்கள் குடும்பத்திடம் கொடுத்துவிட்டு, திரும்ப வரும்பொழுது உங்களுடைய கடைசி சகோதரனான பென்யமீனை அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்றும், அப்பொழுது சிமியோனை விடுவிப்பதாகவும் கூறினான். யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் தகப்பனிடம் இதைக் கூறினபொழுது அவர் மிகவும் வேதனைக்குள்ளானார். ஆனால் வேறு வழியின்றி பஞ்சத்தின் காரணமாக தன்னுடைய இளைய மகனான பென்யமீனையும் அனுப்பி வைத்தார். 

சகோதரர்களை சோதித்த யோசேப்பு:

யோசேப்பின் சகோதரர்கள் தங்களுடைய இளைய சகோதரனான பென்யமீனைக் கூட்டிக் கொண்டுவந்து, யோசேப்புக்கு முன்பாக குனிந்து வணங்கினார்கள். யோசேப்புக்கு தன்னுடைய இளைய சகோரனான பென்யமீனைக் கண்டவுடன் அவனால் தன்னை அடக்கிக் கொள்ள இயலவில்லை. ஆனாலும் தன்னுடைய சகோதரர்களை பரிசோதிக்க அவன் விரும்பினான். அதனால் தன்னுடைய வேலைக்காரனை அழைத்து, எல்லருடைய சாக்கு பைகளிலும் தானியங்களை நிரப்பி, தன்னுடைய இளைய சகோதரனான பென்யமீனுடைய சாக்கில் தன்னுடைய வெள்ளிப் பாத்திரத்தையும் வைக்க கூறினான். பின்பு அவர்களை தங்களுடைய ஊருக்குப் போக திரும்பி அனுப்பினான். கொஞ்ச நேரம் கழித்து அவன் தன்னுடைய வேலைக்காரனை அவர்கள் பின்னாக அனுப்பி, தன்னுடைய வெள்ளிப் பாத்திரத்தை அவர்கள் திருடி சென்றுவிட்டதாக குற்றஞ்சாட்டினான். 

யோசேப்பை பணிந்து கொண்ட சகோதரர்கள்:

யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் சாக்குகளை தேடி பார்க்கும்படி கூறினார்கள். அவ்வாறு அவர்கள் தேடி பார்த்தபொழுது, அந்த வெள்ளிப் பாத்திரத்தை பென்யமீனுடைய சாக்கில் கண்டு பிடித்தார்கள். வேலைக்காரர் பென்யமீனை தண்டிக்கும்படி அவன் தங்களோடுகூட வர வேண்டும் என்று கூறினார்கள். யோசேப்பின் மற்ற சகோதரர்களும் கூடவே எகிப்திற்கு சென்றார்கள். அவர்கள் யோசேப்பிற்கு முன்பாக பணிந்து கொண்டார்கள். யோசேப்பினுடைய சகோதரர்கள் தங்கள் இளைய சகோதரனை எகிப்திலே விட்டுவிட்டு தங்கள் தேசத்திற்கு திரும்பி செல்லுவதற்கு ஆயத்தமாயில்லை. யூதா என்கிற ஒரு சகோதரன் தான் பென்யமீனிற்கு பதிலாக தண்டனையை ஏற்றுக் கொள்ளுவதாகக் கூறினான். அப்பொழுது யோசேப்பிற்கு தன்னுடைய சகோதரர்கள் முன்போல் அல்லாது மாறிவிட்டது புரிந்தது. 

தன்னை அறிமுகப்படுத்தின யோசேப்பு:

யோசேப்பிற்கு தன்னுடைய சகோதரர்களுக்கு முன்பாக தன்னை அடக்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களிடம் தான் யோசேப்பு என்றும் தான் எகிப்திற்கு அதிபதியாயிருப்பதாகவும் கூறினான். அதுமட்டுமல்லாமல் தங்களுடைய தகப்பனை அழைத்து வந்து எகிப்து தேசத்தில் வாழும்படியாகவும் கூறினான். அதன்படியே யோசேப்பினுடைய தகப்பனும் அவனுடைய சகோதரர்களும் எகிப்திற்கு வந்து கோசேன் என்கிற இடத்திலே குடியேறினார்கள். யோசேப்பு தன்னுடைய சகோதரர்களிடம் தான் அவர்களை மன்னித்து விட்டதாகவும், அவர்கள் யோசேப்புக்குத் தீமை செய்ய நினைத்த பொழுதிலும், அவர்கள் எல்லாருடைய உயிரையும் காப்பாற்றுவதற்காகவே தேவன் அவனை எகிப்திற்கு அனுப்பனதாகவும் கூறி அவர்களோடு சமாதானமாக வாழ்ந்தான். 

வேதபகுதி: ஆதியாகமம் 37, 39-45

மனப்பாட வசனம்: ஆதியாகமம் 50;19,20  

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    யோசேப்பு சூரியனும், சந்திரனும், பதினொரு ……………………………… தன்னை வணங்கினதாகக் கனவு கண்டான்.

2.    யோசேப்பின் சகோதரர்கள் அவனை மீதியானிய வியாபாரிகளிடம் …………………………. வெள்ளிக் காசுக்கு விற்றுப் போட்டார்கள்.

3.        யோசேப்பு தன்னுடைய இளைய சகோதரனான பென்யமீனுடைய சாக்கில் தன்னுடைய ……………………………………….. வைக்க கூறினான்

4.        யோசேப்பினுடைய தகப்பனும் அவனுடைய சகோதரர்களும் எகிப்திற்கு வந்து …………………………….. என்கிற இடத்திலே குடியேறினார்கள். 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.    யோசேப்பின் கனவை கேட்டு அவனுடைய தகப்பனார் என்ன செய்தார்?

 

2.    யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பு மரித்து விட்டதாக அவர்கள் தகப்பனை எவ்வாறு நம்ப வைத்தார்கள்?

 

3.      யோசேப்பின் சகோதரர்கள் ஏன் எகிப்திற்கு வந்தார்கள்?

 

4.      யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்கு தன்னை வெளிப்படுத்தினவுடன் அவர்களிடம் என்ன கூறினான்?

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  யோசேப்பு தன்னுடைய சகோதரர்களை எவ்வாறு சோதித்தான்?

 

No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...