Friday, September 25, 2020

முதல் பாவமும், தேவனுடைய இரட்சிப்பின் திட்டமும் (The First Sin & God's Redemption Plan), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 6

                                  மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது
வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose. 

பாடம்- 6

முதல் பாவமும், தேவனுடைய இரட்சிப்பின் திட்டமும்


முதல் பாவம்:

தேவன், முதல் மனிதர்களான ஆதாமையும், ஏவாளையும் படைத்தார். அவர்களிடம் பூமிடைக் கீழ்ப்படுத்தி, பூமியில் உள்ள மற்ற உயிரினங்களை ஆண்டு கொள்ளும்படி கூறினார். அவர்கள் தங்குவதற்காக “ஏதேன்” என்கிற அழகான ஒரு தோட்டத்தையும் கொடுத்தார். தேவன் மனிதனிடம் “நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் பழத்தை சாப்பிடக்கூடாது என்றும், அவன் அந்த பழத்தை சாப்பிடும் நாளிலே அவன் சாக நேரிடும் என்றும் கூறினார். சாத்தான் ஏவாளிடம் ஒரு சர்ப்பத்தின் (பாம்பின்) மூலமாக பேசினான். அந்த பழத்தை சாப்பிட்டால் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு தேவனைப் போல மாறிவிடுவார்கள் என்றும் கூறி ஏவாளின் ஆசையைத் தூண்டினான்.

ஏவாள் தேவனுடைய கட்டளையை மீறி அவர் சாப்பிடக்கூடாது என்று சொன்ன “நன்மை தீமை அறியத்தக்க மரத்தின்” பழத்தை சாப்பிட்டு, ஆதாமுக்கும் அதைக் கொடுத்தாள். உடனே இருவருடைய கண்களும் திறக்கப்பட்டு தாங்கள் ஆடை அணியாமலிருப்பதைக் கண்டு வெட்கமடைந்தார்கள். அதுவரைக்கும் குழந்தைகளைப் போல கள்ளங்கபடமற்று இருந்த அவர்கள், கண்கள் திறக்கப்பட்டவுடன் வெட்கமடைந்து அத்தி இலைகளைத் தைத்து தங்களுக்கென்று ஆடைகளை செய்து அணிந்து கொண்டார்கள்.

ஆதாமும், ஏவாளும் பழத்தை சாப்பிட்டவுடன் மரித்தார்களா?

தேவன் அவர்களிடம் அந்த பழத்தை சாப்பிட்டவுடன் மரிக்க நேரிடும் என்று கூறியிருந்தாலும், ஆதாமும் ஏவாளும் சரீரப்பிரகாரமாக மரிக்கவில்லை என்றும், அந்தப் பழத்தை சாப்பிட்ட பின்பும் பல ஆண்டுகள் உயிரோடு இருந்தார்கள் என்றும் வேதத்திலிருந்து நம்மால் அறிந்து கொள்ளமுடியும். ஆதாமும் ஏவாளும் அன்றையதினம் சரீரத்தில் மரிக்கவில்லை என்றாலும், அவர்கள் வேறு பல விதங்களில் மரித்திருந்தார்கள். பரிசுத்த வேதாகமம் 3 விதமான மரணங்களைப் பற்றி குறிப்பிடுகிறது

·  சரீர மரணம் – சரீரம் மரிக்கும்பொழுது நடப்பது

·  ஆவிக்குரிய மரணம் – மனிதனுடைய ஆத்துமாவில் தேவனைப் பற்றிய அறிவைக் கொடுக்கும் உள்ளான ஆவி மரிக்கும்பொழுது அல்லது இருளடையும்பொழுது, மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதைத்தான் ஆவிக்குரிய மரணம் என்று அழைக்கிறோம்.

·  நித்திய மரணம் – நித்திய மரணம் என்றால் நித்திய காலமாக தேவனை விட்டு பிரிக்கப்படுவது. இது இறுதியில் நியாயத்தீர்ப்புக்குப் பின் நடைபெறும் சம்பவம்.

 

ஆதாமும் ஏவாளும் பழத்தை சாப்பிட்டவுடன் மரித்தார்கள். ஆனால் அந்த மரணம் சரீரப் பிரகாரமான மரணம் அல்ல. அது ஒரு ஆவிக்குரிய மரணம். மரணம் என்றால் பிரிவு என்று அர்த்தம். ஆதாமும் ஏவாளும் பழத்தை சாப்பிட்டவுடன் நிகழ்ந்த மரணம் ஒரு ஆவிக்குரிய மரணம். அது மனிதனை தேவனிடத்திலிருந்து பிரித்து விட்டது. அது சரீரப்பிரகாரமான மரணத்திற்கும் வழிவகுத்துவிட்டது. ஒருவேளை சரீரமரணம் உடனே நிகழாவிட்டாலும், அவர்களுடைய கீழ்ப்படியாமையே அது நிகழ காரணமாய் அமைந்தது. மரணத்திற்கேதுவான எல்லா கிரியைகளும் மனிதனுடைய சரீரத்தில் அன்றே செயல்பட ஆரம்பித்து விட்டன.

 

பாவம் தேவனையும் மனிதனையும் பிரித்தது:

அதுவரைக்கும் பகலின் குளிர்ச்சியான வேளையிலே தேவனோடு மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த ஆதாமும், ஏவாளும் பழத்தை சாப்பிட்டபின் தேவனுடைய சத்தத்தைக் கேட்டவுடன் ஓடி ஒளிந்துகொண்டனர். தேவனுக்கு அவர்கள் பாவம் செய்தது தெரியும். நான் சாப்பிடக்கூடாது என்று சொன்ன பழத்தை சாப்பிட்டீர்களா என்று கேட்டார். ஆதாம், தேவன் தனக்கு துணையாகக் கொடுத்த ஸ்திரீயே அந்த பழத்தை தனக்கு சாப்பிடக் கொடுத்ததாகக் கூறினான். ஏவாளோ சர்ப்பம் (பாம்பு) தன்னை ஏமாற்றினதாகக் கூறினாள். அவர்கள் என்னதான் காரணம் கூறினாலும் அவர்கள் செய்த பாவத்தின் தண்டனையை அனுபவிக்க வேண்டியது இருந்தது. அவர்கள் தேவனுடைய கட்டளையை மீறினபடியால் தேவன் ஆதாமையும், ஏவாளையும், சர்ப்பத்தையும் சபித்தார்.

 

ஏவாளின் சாபம்:

ஏவாள் தேவனுடைய கட்டளையை மீறினதற்காக இரண்டுவிதமான சாபங்களைப் பெற்றாள். அவளுடைய முதல் சாபம், அவள் குழந்தை பெற்றெடுக்கும்பொழுது மிகுந்த வேதனையை அனுபவிக்க நேரிடும். அது அவளுக்கு மாத்திரமல்ல அவள் மூலமாய் இந்த உலகத்தில் தோன்றும் எல்லா பெண்களுக்கும் இது நேரிடும். அதுமட்டுமல்லாமல் அவள் அவளுடைய கணவனால் ஆண்டுகொள்ளப்படுவாள்.

 

ஆதாமின் சாபம்:

ஏவாளுடைய வார்த்தைகளைக் கேட்டு பழத்தை சாப்பிட்டதற்காக ஆதாமும் சாபங்களைப் பெற்றுக் கொண்டான். முதலாவது அவன் நிமித்தமாக பூமி சபிக்கப்பட்டிருக்கும். அது அவனுக்கு முட்களையும், பயனற்ற செடிகளையும் முளைப்பிக்கும். அவன் கடினமாக உழைக்க வேண்டியதாயிருக்கும். அதன்பின்னர் அவன் மரித்து தான் எந்த மண்ணிலிருந்து எடுக்கப்பட்டானோ அந்த மண்ணுக்கே திரும்புவான்.

 

சர்ப்பத்தின் (பாம்பின்) சாபம்:

சர்ப்பம் ஆதாமையும், ஏவாளையும் ஏமாற்றினபடியால், அது உயிரோடிருக்கும் நாளெல்லாம் தன் வயிற்றிலே ஊர்ந்து மண்ணைத் தின்ன வேண்டும். பின்னர் தேவன் சர்ப்பத்திடம் ஸ்திரீயின் வித்தாக தோன்றும் ஒருவர் அதன் தலையை நசுக்கி அதை ஜெயிக்கப்போவதாகவும் சபித்தார்.

 

இந்த சாபங்கள் ஆதாமையும், ஏவாளையும், சர்ப்பத்தையும் மட்டுமல்லாது சந்ததிசந்ததியாய் ஆதாம், ஏவாளுடைய பின் தலைமுறையினரையும் பிடித்துக் கொண்டது.

 

தேவனுடைய இரட்சிப்பின் திட்டம்:

ஆனால் தேவனோ தம்முடைய முன்னறிதலின்படி (பாடப் பின்குறிப்பைப் பார்க்கவும்), இவ்விதமான சம்பவங்கள் நடைபெறும் என்பதை அறிந்திருந்தபடியால், தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்பே ஒரு இரட்சிப்பின் திட்டத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார் (எபேசியர் 1:4-10; 1 பேதுரு 1:19,20). இந்த திட்டத்தை தான் தேவன் சாத்தானிடம், உன் வித்திற்கும், ஸ்திரீயின் வித்திற்கும் பகை உண்டாக்குவேன் என்று தேவன் கூறினார். ஏற்ற காலத்திலே இயேசு கிறிஸ்து ஸ்திரீயின் வித்தாக இந்த உலகத்திலே வந்து பிறந்தார். அவர் இந்த உலகத்திலே வந்து பிறந்தபொழுது அவருக்கு “இயேசு” என்று பெயரிடப்பட்டது. இயேசு என்றால் “யேகோவா நம்மை இரட்சிக்கிறவர்” என்று அர்த்தம். அவர் பாவமில்லாமல் இந்த உலகத்தில் வாழ்ந்து, சிலுவையில் மரித்து, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். அவர் தம்முடைய உயிரைக் கொடுத்தபொழுது மனிதர்களுடைய பாவத்திற்கான பரிகாரத்தை செய்து முடித்தார். மூன்றாம் நாளில் அவர் திரும்பவும் உயிரோடே எழுந்தபொழுது, அதுவரைக்கும் மரணத்தின் மூலமாக மனிதர்களை கீழ்ப்படுத்தி வைத்திருந்த சாத்தானையும் அவர் ஜெயித்தார். அதனால் தான் இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் ஒருபொழுதும் சாகமாட்டார்கள். அதாவது அவர்கள் மரித்தாலும், அவர்கள் மறுபடியும் உயிரோடே எழுந்து தேவனோடே கூட ஆளுகைசெய்வார்கள்.

 

பாடப் பின்குறிப்பு:

முன்னறிதல்:

தேவனுடைய தெய்வீக தன்மைகளில் முக்கியமான ஒன்று அவருடைய எல்லாம் அறியும் தன்மையாகும் (Omniscience). இனி நடக்கப் போகிற காரியங்களையும் தேவன் தம்முடைய முன்னறிதலின்படி முன்கூட்டியே அறிந்திருக்கிறார். பழைய ஏற்பாட்டில் தேவனுடைய முன்னறிதலைக் குறிப்பதற்கு “அறிதல்” என்று பொருள்படும் “யாடா” என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில், முன்கூட்டியே பார்ப்பது அல்லது முன்கூட்டியே அறிவது என்று பொருள்படும் “ப்ரோகினொஸ்கோ அல்லது ப்ரூரோ” ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. (1) தேவனுடைய முன்னறிதல் என்கிற தன்மையை நாம் பார்க்கும்பொழுது, நமக்குள்ளாக ஒரு கேள்வி எழலாம். தேவன் எல்லாவற்றையும் முன்னரே அறிந்திருந்தால், உலகில் நடக்கின்ற தீமையான செயல்களை தேவன் ஏன் தடுக்கவில்லை? என்று. இதை விளங்கிக் கொள்ளவேண்டும் என்றால், தேவனுடைய மற்ற மாறாத தெய்வீக தன்மைகளான “தேவனுடைய நீதி” போன்றவற்றை புரிந்து கொள்ள வேண்டும்.

 

தேவன் மனிதனை படைத்த பொழுது தானே எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் “சித்த சுயாதீனமுள்ளவனாகப்” (Self will) படைத்தார். மனிதன் அதை தவறாகப் பயன்படுத்தி பாவம் செய்தான். உலகத் தோற்றத்திற்கு முன்னரே மனிதனுடைய வீழ்ச்சியை தேவன் அறிந்து கொண்டார். தன்னுடைய சுய சித்தத்தினாலே பிசாசுக்கு அடிமையாகிப்போன மனிதனை வலுக்கட்டாயமாக பிசாசினிடமிருந்து பறிப்பது தேவனுடைய மாறாத தன்மையாகிய அவருடைய நீதிக்கு எதிரானதாகும். அதனால் தான் உலகத் தோற்றத்திற்கு முன்னரே தேவன் மனிதனுக்கு இரட்சகராக இயேசுகிறிஸ்துவை நியமித்தார். இதை 1 பேதுரு 1:20ன் மூலம் அறிந்து கொள்ளமுடியும். இரட்சகரைப் பற்றிய அறிவிப்பு மனிதன் பாவம் செய்த பின் கொடுக்கப்பட்டாலும் உலகத் தோற்றத்திற்கு முன்னே இயேசு கிறிஸ்து பாவபரிகார பலியாக நியமிக்கப்பட்டதை 1 பேதுரு 1:20; வெளிப்படுத்தல் 13:8ன் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

தேவனுடைய முன்னறிதலைப் பற்றி வேதகமத்தில் பல வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

 

சங்கீதம் 139:4 – என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.

சங்கீதம் 139:16 – என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.

1 பேதுரு 1:1,2 – இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, …………….. தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில், பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும்

1 பேதுரு 1:20 – அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.

அப்போஸ்தலர் 2:23 - அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, …………. சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

ஆதாரநூற்களின் பட்டியல்:

1.      Baker's Evangelical Dictionary of Biblical Theology. Edited by Walter A. Elwell Copyright © 1996 by Walter A. Elwell. Published by Baker Books, a division of Baker Book House Company, Grand Rapids, Michigan USA

(மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களிலிருந்து இந்த புஸ்தகத்தை ஆக்கியோர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது

வேதபகுதி: ஆதியாகமம் 3

மனப்பாட வசனம்: அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே (ரோமர் 5:17).

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    “…………………………..” என்றால் நித்திய காலமாக தேவனை விட்டு பிரிக்கப்படுவது.  .

2.    ஆதாமும் ஏவாளும் பழத்தை சாப்பிட்டவுடன் நிகழ்ந்த மரணம் ஒரு ………………………………….. மரணம்.

3.    ஆதாம் மரித்து தான் எந்த மண்ணிலிருந்து எடுக்கப்பட்டானோ அந்த …………………………………. திரும்புவான்.

4.    …………………………..என்றால் “யேகோவா நம்மை இரட்சிக்கிறவர்” என்று அர்த்தம்.

 

        ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  ஆதாமும் ஏவாளும் பழத்தை சாப்பிட்டால் என்ன நேரிடும் என்று தேவன் கூறினார்?

 

2.  ஆதாமும், ஏவாளும் பழத்தை சாப்பிட்டபொழுது நடந்தது என்ன?

 

3.  ஆதாமும் ஏவாளும் பழத்தை சாப்பிட்டபொழுது அவர்களுக்கு எவ்விதமான மரணம் சம்பவித்தது?

 

4.  தேவனுடைய “இரட்சிப்பின் திட்டம்” என்றால் என்ன?

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1. ஆதாம், ஏவாள் மற்றும் சர்ப்பம் தேவனிடத்திலிருந்து பெற்ற சாபங்களைப் பற்றி எழுதவும்?

 

 

 

 

 

No comments:

Post a Comment

திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...