Sunday, September 27, 2020

அடிக்கப்பட்ட கன்மலை (Water From the Rock), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 7

                    மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

பாடம் – 7

அடிக்கப்பட்ட கன்மலை

                       மோசே மீதியான் தேசத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபொழுது, ஆண்டவர் முட்செடியில் அவருக்கு தரிசனமாகி, இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்து, அவர்களுக்கு கொடுப்பேன் என்று ஆண்டவர் வாக்கு பண்ணின தேசமாகிய கானான் தேசத்திற்கு அழைத்து கொண்டு போகும்படி சொன்னார். அதன்படி அவர்கள் கானான் தேசத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர். கானான் சென்றடைவதற்கு ஒரு பெரிய பாலைவனத்தை கடக்க வேண்டியதாயிருந்தது.

Sweet Publishing / FreeBibleimages.org.

                      இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்தைக் கடக்கும் பொழுது அவர்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் அவர்கள் மோசேயின் மேல் கோபம் கொண்டார்கள். நாங்கள் சாகும்படியா எங்களை பாலவனத்திற்கு அழைத்து கொண்டு வந்தீர்? எங்களுக்கு எகிப்து தேசத்திலேயே நல்ல உணவு கிடைத்ததே என்று முறுமுறுக்க தொடங்கினார்கள். அவர்கள் எகிப்தில் அனுபவித்த கொடுமைகளையெல்லாம் சீக்கிரமே மறந்து போனார்கள்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                     மோசே ஆண்டவரிடம் உணவிற்காக விண்ணப்பம் செய்தார். ஆண்டவர் விண்ணப்பத்தைக் கேட்டு அவர்களுக்கு வானத்திலிருந்து அப்பம் மழை போல பெய்யப் பண்ணினார். மறுநாள் காலமே இஸ்ரவேல் ஜனங்கள் தரையில் பார்க்கும்பொழுது, பனி போன்ற ஒரு சிறிய பொருள் தரையில் கிடப்பதைப் பார்த்தார்கள். அது கொத்தமல்லி அளவாயும், தேனிட்ட பணியாரம் போன்ற ருசி உடையதாகவும் இருந்தது. அதை இஸ்ரவேல் ஜனங்கள் “மன்னா” என்று அழைத்தார்கள்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                   அதன் பின்னர் அவர்கள் பிரயாணம் பண்ணிக் கொண்டு போகும்பொழுது ரெவிதீம் என்கிற இடத்தை அடைந்தார்கள். அங்கே அவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. அப்பொழுதும் ஜனங்கள் மோசேயின் மேல் கோபம் கொண்டார்கள். தாகத்தால் தாங்களும், தங்கள் பிள்ளைகளும், மிருக ஜீவன்களும் சாகப் போவதாக கூறி மோசேயிடம் வாதாடினார்கள். அதுமட்டுமல்லாமல், எங்களை எகிப்து தேசத்திலிருந்து எதற்காக அழைத்து வந்தாய் என்று சொல்லி, மோசேயின் மேல் கல்லெறியப் பார்த்தார்கள்.  

Sweet Publishing / FreeBibleimages.org.

                   மோசே ஆண்டவரிடம் விண்ணப்பம் பண்ணினார். ஆண்டவர் மோசேயிடம், “இஸ்ரவேல் மூப்பரில் சிலரை அழைத்துக் கொண்டுபோய் ஜனங்களுக்கு முன்பாக நடந்து போ. நான் ஓரேப் என்கிற இடத்திலே கன்மலையில் நிற்பேன். உன்னுடைய கோலால் கன்மலையை அடி, அப்பொழுது கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்பட்டு வரும்” என்று கூறினார். (மூப்பர் என்றால் இஸ்ரவேல் மக்களில் வயது முதிர்ந்தவர்கள், இஸ்ரவேலில் தலைவர்களாக தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்)

Sweet Publishing / FreeBibleimages.org.

                   மோசே ஆண்டவர் சொன்னபடியே செய்தார். அப்பொழுது கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்பட்டு வந்தது. எல்லாரும் குடித்து தாகம் தீர்த்துக் கொண்டார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயிடம் சண்டையிட்டதினிமித்தமும், ஆண்டவர் தங்கள் மத்தியில் இருக்கிறாரா  என்று அவர்கள் பரிட்சை பார்த்ததினிமித்தமும், மோசே அந்த இடத்திற்கு “மாசா” என்றும் “மேரிபா” என்றும் பெயரிட்டார்.

Sweet Publishing / FreeBibleimages.org.

வேத பகுதி: யாத்திராகமம் 17

மனப்பாட வசனம்: கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று. (சங்கீதம் 105:41)

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்

1.    இஸ்ரவேலர் வானத்திலிருந்து பெய்த அப்பத்திற்கு என்ன பெயர் கொடுத்தார்கள்?   ………………………………………

2.    மோசேயுடனே கன்மலையை அடிக்க கூடசென்றவர்கள் யார்? .………………………………………

3.    கன்மலையில் நின்றது யார்?

……………………………………….

4.    தண்ணீர் எதிலிருந்து வந்தது?

…………………………………………..

5.    மோசே அந்த இடத்திற்கு என்ன பெயரிட்டார்?

…………………………………………..

சரியான பதிலைத் தெரிந்தெடுக்கவும்:

1.    இஸ்ரவேலர் தாங்கள் எங்கு மரித்திருந்தால் நலமாயிருக்கும் என்று கூறினார்கள்

அ. எகிப்து              ஆ. கானான்             இ. மீதியான்

2.    இஸ்ரவேலருக்கு குடிப்பதற்கு எங்கு தண்ணீர் கிடைக்கவில்லை

அ. ஆரான்              ஆ. எகிப்து                 இ. ரெவிதீம்

3.    ஓரேபில் கன்மலையில் நின்றது யார்?

அ. ஆசாரியன்      ஆ. ஆண்டவர்           இ. ஆரோன்

4.    மோசே எதினால் கன்மலையை அடித்தார்?

அ. மிலாறு                ஆ. கல்                       இ. கோல்

5.    இஸ்ரவேலர் யாருடன் சண்டையிட்டார்கள்?

அ. மிரியாம்              ஆ. மோசே               இ. பார்வோன்

 

No comments:

Post a Comment

திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...