Friday, September 25, 2020

லாபானும் யாக்கோபும் ( Laban & Jacob), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 6

                                         இளநிலை வகுப்பு (JUNIOR) 

பாடம் – 6
லாபானும் யாக்கோபும்

ஆபிரகாமுடைய மகனாகிய ஈசாக்குக்கும், அவனுடைய மனைவியாகிய ரெபெக்காளுக்கும் ஏசா, யாக்கோபு என்கிற இரட்டை பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் பிறக்கும்பொழுது ஒரு வித்தியாசமான நிகழ்வு நடந்தது. ஏசா முதலாவது பிறந்தான். பின்பு அவன் தம்பியாகிய யாக்கோபு பிறந்தான். யாக்கோபு ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக் கொண்டு பிறந்தான். இதனால் தான் அவனுக்கு “யாக்கோபு” என்று பெயரிடப்பட்டது. யாக்கோபு என்றால் “குதிங்காலைப் பிடிப்பவன் அல்லது மற்றவர்களை ஏமாற்றி எடுத்துக் கொள்ளுபவன்” என்று அர்த்தம்.

ஏசாவும், யாக்கோபும் வளர்ந்தபோது ஏசா வேட்டையாடுவதில் சிறந்து விளங்கினான். ஆனால் யாக்கோபோ தன் கூடாரத்தில் தங்கி வேலைகளை செய்வதையே விரும்பினான். ஏசா, ஈசாக்குக்கு முதல் பிறந்தவனானபடியால் அவனுக்கு “சேஷ்ட புத்திரபாகம்” என்கிற ஒரு சிறப்பான உரிமை கொடுக்கப்பட்டது. ஏசா ஒரு நாள் பசியாய் கூடாரத்திற்கு வந்தபொழுது பயற்றங்கூழைக் கொடுத்து அதற்கு பதிலாக சேஷ்ட புத்திரபாகத்தை யாக்கோபு தனக்கென்று எடுத்துக்கொண்டான். பின்பு தன் தகப்பனை ஏமாற்றி, ஏசாவிற்கு வர வேண்டிய ஆசீர்வதங்களையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான்.

இதனால் கோபமடைந்த ஏசா தன் சகோதரனை கொல்ல முயன்றான். பயந்து போன யாக்கோபு, ஆரான் என்கிற ஊரில் இருந்த தன் தாயாரின் சகோதரனாகிய லாபான் என்கிற தன்னுடைய மாமனிடத்திற்கு ஓடிப் போனான்.

 

லாபானுக்கு லேயாள், ராகேல் என்கிற இரண்டு மகள்கள் இருந்தார்கள். யாக்கோபு லாபானிடம் அவனுடைய இளைய மகளாகிய ராகேலை திருமணம் செய்வதற்கு அனுமதித்தால், அதற்கு பதிலாக ஏழு வருடம் வேலை செய்வதாகக் கூறினான். லாபான் அதற்கு சம்மதித்தான். ஏழு வருடம் முடித்தபின், ராகேலை தான் திருமணம் செய்வதற்கு தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டான். லாபானோ யாக்கோபை ஏமாற்றி தன்னுடைய மூத்த மகளாகிய லேயாளை திருமணம் செய்து வைத்தான்.


யாக்கோபுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தபொழுது, லாபான் அவனை நோக்கி, “மூத்த மகள் இருக்கும்பொழுது இளைய மகளை திருமணம் செய்து வைப்பது இந்த ஊரின் வழக்கம் அல்ல, ஏழு நாள் கழித்து இளைய மகளாகிய ராகேலையும் திருமணம் செய்து தருகிறேன். அதன் பின்னர் அவளுக்காக இன்னொரு ஏழு வருடம் என்னிடத்தில் வேலை செய்ய வேண்டும்” என்றான். யாக்கோபு ராகேலையும் திருமணம் செய்தான். இந்த சம்பவம் பல பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் இருந்த பழங்காலத்தில் நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மற்றவர்களை ஏமாற்றுகிறவன் இப்பொழுது தானே ஏமாற்றப்பட்டு போனான்.

st-takla.org

பின்னர் யாக்கோபுடைய குடும்பம் வளர ஆரம்பித்தது. அவனுக்கு அநேகம் பிள்ளைகள் பிறந்தார்கள். அதனால் அவனுடைய குடும்பத்திற்காக வருமானம் ஈட்ட வேண்டிய நேரம் வந்தது. லாபான் அவனுக்கு சம்பளம் தர ஒப்புக் கொண்டான். யாக்கோபு அவனிடம் புள்ளியும், வரியும் கருப்புமுள்ள செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் சம்பளமாக தரும்படி கேட்டுக் கொண்டான். லாபான் அதை அவனுக்கு கொடுத்தான். கொஞ்சம் நாட்கள் கழித்து, லாபான் தன்னுடைய மந்தையில் உள்ள ஆடுகளெல்லாம் புள்ளியும், வரியுமுள்ள குட்டிகளை போடுவதைப் பார்த்தான். அதனால் லாபான் யாக்கோபுடைய சம்பளத்தை மாற்றினான். ஆனாலும் யாக்கோபுக்கு திரளான செல்வம் சேர்ந்தது.

Sweet Publishing / FreeBibleimages.org. 

யாக்கோபு லாபானுக்காக இருபது வருடம் கடினமாக உழைத்தபின் அவன் தன் தகப்பன் வீட்டிற்கு திரும்பி செல்லும்படி தீர்மானித்தான். லாபானுடைய மகன்கள் யாக்கோபினுடைய செல்வங்களைப் பார்த்து பொறாமை கொண்டார்கள். தங்கள் தகப்பனுடைய பொருட்களினாலே யாக்கோபு இந்த செல்வங்களை அடைந்தான் என்று அவர்கள் கூறுவதை யாக்கோபு கேட்டான். ஒருமுறை லாபான் தன் ஆடுகளின் ரோமத்தை வெட்டுவதற்காக போனான்.

 

பழங்காலங்களில் அவர்களுக்கு இருந்த ஆடு மாடுகள் அவர்களுடைய செல்வங்களாக கருதப்பட்டன. ஆடுகளிலிருந்து கிடைக்கும் ரோமத்தை அவர்கள் குளிர்காலத்திற்கான உடைகளை தயாரிப்பது, கூடாரங்களை நெய்வது, பண்டமாற்று முறைக்காக பயன்படுத்துவது போன்றவற்றிற்காக உபயோகப்படுத்தினார்கள். ஆயிரக்கணக்கான ஆடுகளுக்கு ரோமம் கத்தரிப்பதற்கு பல நாட்களோ, வாரங்களோ எடுக்கும். அதனால் அவர்கள் அந்த இடத்திலேயே தங்கி அதை செய்வது வழக்கம். அதுமட்டுமல்லாமல் ரோமம் வெட்டுவது முடிந்தவுடன் ஆடல், பாடல் விருந்துடன் அதை கொண்டாடுவார்கள்.

ஆட்டு ரோமம் கத்தரிக்கப்படுதல்

லாபான் இவ்வாறு தன் ஆடுகளின் ரோமத்தை வெட்டுவதற்காக போயிருந்தபொழுது தான் யாக்கோபு தன் குடும்பத்தையும், தான் சம்பாதித்த எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு தன் மாமனாகிய லாபானை விட்டு தன் தந்தையாகிய ஈசாக்கினிடத்திற்கு போக புறப்பட்டான். ராகேல் தன் தகப்பன் வணங்கி வந்த தெய்வங்களுடைய சிலைகளை திருடிக் கொண்டாள். 

கோத்திரப்பிதாக்களின் காலத்தில் வணங்கப்பட்டு வந்த தெய்வங்களின் சிலைகள், ராகேல் லாபானிடமிருந்த திருடின சிலைகள் இது போன்று தான் இருந்திருக்கும், The Bible Lands Museum, Israel

சில நாட்கள் கழித்து, லாபானுக்கு இது தெரிய வந்தது. அப்பொழுது யாக்கோபோடு சண்டையிட்டு அவனுக்கு தீங்கிழைக்க லாபான் வேகமாகப் புறப்பட்டான். அவர்கள் இருவருக்கும் இடையில் ஏழு நாட்கள் பிரயாண தூரம் இருந்தது. யாக்கோபை சந்திக்கும் நாளுக்கு முந்தின நாள் இரவிலே ஆண்டவர் லாபானுக்கு கனவில் தோன்றி, “நீ யாக்கோபோடே நன்மையையே பேச வேண்டும், தீமை ஒன்றும் பேச கூடாது” என்று எச்சரித்தார். லாபான் மிக வேகமாக பிரயாணப்பட்டுவந்து யோக்கோபை சென்றடைந்தான். லாபான் யாக்கோபிடம் நீ ஏன் என் தெய்வங்களை திருடிக்கொண்டு போகிறாய் என்று கேட்டான். ராகேல் தன் தகப்பனுடைய தெய்வங்களை திருடியிருந்ததை அறியாமலிருந்தான். அதனால் யாக்கோபு லாபானிடம் நீர் எல்லா கூடாரத்திலும் சோதித்துப் பார்த்து யாருடைய கூடாரத்தில் அதைக் கண்டு பிடிக்கிறீரோ அவர்களைக் கொன்றுபோடும் என்று கூறினான். லாபான் எல்லா கூடாரங்களிலும் சோதனையிட்டான். ராகேல் தன் தகப்பனுடைய தெய்வங்களை ஒரு ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து அதின்மேல் உட்கார்ந்து அதை மறைத்துவிட்டாள். அதனால் லாபானால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.

st-takla.org 

லாபானும் யாக்கோபும் ஒருவருக்கொருவர் தீமை விளைவிப்பதில்லையென்று முடிவெடுத்து, ஆண்டவருக்கு பலி செலுத்தி சமாதான உடன்படிக்கை (ஒப்பந்தம்) செய்து கொண்டு அவரவர் வழியே சென்றார்கள். அவர்கள் உடன்படிக்கை செய்த இடம் “மிஸ்பா” என்று அழைக்கப்பட்டது. பின்நாட்களில் யாக்கோபு பெத்தேல் என்ற இடத்தில் தேவனுக்கு பலிபீடம் கட்ட செல்லும்பொழுது, ராகேல் லாபானிடத்தில் இருந்து எடுத்துக் கொண்டுவந்த அந்நியதெய்வங்களை ஒரு கர்வாலிமரத்தின் கீழ் புதைத்து, அதை தங்களை விட்டு விலக்கினான் (ஆதியாகமம் 35:1-5).

யாக்கோபு ஆரானுக்கு வருவதற்கு முன்பு உண்மையானவனாகவும், நேர்மையானவனாகவும் காணப்படவில்லை. ஆனால் ஆரானிலே லாபானால் பலமுறை ஏமாற்றப்பட்டு, உழைப்பிற்கு தக்க ஊதியம் கொடுக்கப்படாமல், பலமுறை அலைக்கழிக்கப்பட்டான். இவ்வாறு தேவன் லாபானை பயன்படுத்தி யாக்கோபுடைய சுபாவங்களை மாற்றினார். ஆரான் தேசத்திலே யாக்கோபு பல துன்பங்களை  அனுபவித்தது போல தோன்றினாலும், தேவன் யாக்கோபின் வாழ்வை மாற்றி அவனுக்கு பல ஆசீர்வாதங்களைக் கொடுத்தார். யாக்கோபு வெறுங்கையாக ஆரானுக்கு வந்தான் ஆனால் திரும்பி செல்லும்பொழுது, ஒரு பெரிய கூட்டமாக, இஸ்ரவேலிலே 12 கோத்திரங்களை உருவாக்கப்போகும் தன்னுடைய குழந்தைகளோடும், மிகுந்த செல்வத்தோடும் திரும்ப சென்றான். அதுமட்டுமல்லாமல் அவனுடைய சகோதரன் ஏசாவோடும் அவனுக்கு சமாதானம் உண்டானது.

 

வேதபகுதி: ஆதியாகமம்: 29 - 31

மனப்பாட வசனம்: மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் …………………………… நித்தியஜீவனை அறுப்பான். (கலாத்தியர் 6:7,8)

 

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    யாக்கோபு, ……………………….. என்கிற ஊரில் இருந்த தன் தாயின் சகோதரனாகிய லாபானிடத்திற்கு ஓடிப் போனான்.

2.    லாபானோ யாக்கோபை ஏமாற்றி தன்னுடைய மூத்த மகளாகிய …………………………… திருமணம் செய்து வைத்தான்.

3.    லாபானுக்கும் யாக்கோபுக்கும் இடையில் ………………. நாட்கள் பிரயாண தூரம் இருந்தது.

4.    லாபானும் யாக்கோபும் உடன்படிக்கை செய்த இடம் “……………….” என்று அழைக்கப்பட்டது

 ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  “யாக்கோபு” என்று அவனுக்கு ஏன் பெயரிடப்பட்டது


2.  யாக்கோபு லாபானிடம் ஏழு வருடங்கள் எதற்காக வேலை செய்தான்?

 

3.  முதலாவதாக லாபான் யாக்கோபுக்கு கொடுத்த சம்பளம் என்ன?

 4.  ஆண்டவர் லாபானுக்கு கனவில் தோன்றி எச்சரித்தது என்ன?


கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.   யாக்கோபு லாபானிடம் இருபது வருடங்கள் கடினமாக உழைத்த பின் என்ன தீர்மானித்தான்? அதன்பின் நடந்தது என்ன?

 

 

No comments:

Post a Comment

திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...