Wednesday, September 2, 2020

தேவதூதர்கள், சாத்தான், சாத்தானின் திரித்துவம் (Angels, Satan & Satanic Trinity), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 5

                            மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது
வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose. 

பாடம்- 5

தேவதூதர்கள், சாத்தான், சாத்தானின் திரித்துவம்

தேவதூதர்கள் (Angels):

தேவதூதர்கள் தேவனால் படைக்கப்பட்டவர்கள். தேவதூதர்கள் என்பதற்கு எபிரெய மொழியில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தை “மலாக் (mal’ak)”, கிரேக்க மொழியில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தை “ஏஞ்சலோஸ் (Angelos)” என்பதாகும். அதற்கு “தூதுவர்கள் அல்லது செய்தியை கொண்டு வருபவர்கள் (Messengers)” என்று அர்த்தம். ஆதியாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள சிருஷ்டிப்பின் வரலாற்றில் தேவதூதர்கள் படைக்கப்படுவதை பற்றி எதுவும் கொடுக்கப்படாவிட்டாலும், ஆண்டவர் பூமியை அஸ்திபாரமிடும்பொழுது தூதர்கள் கெம்பீரித்துப் பாடினதாக யோபு 38: 4-7 ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் தேவதூதர்கள் பூமியைப் படைப்பதற்கு முன்னரே படைக்கப்பட்டார்கள் என்று கருதப்படுகின்றது. தேவதூதர்கள் மனிதர்களை விடவும் வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டிருக்கிறார்கள். மனிதர்கள் மரித்தபின் தேவதூதர்களாக மாறுவார்கள் என்று சொல்லப்படுவதற்கு வேதாகமத்தில் எந்தவொரு ஆதாரமும் இல்லை. 

தேவனுடைய மற்ற எல்லாப் படைப்புகளையும் போல தேவதூதர்களும் தேவனுடைய சித்தத்திற்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள். தேவதூதர்கள் தேவனுடைய பிள்ளைகளுக்கு “உதவி செய்கிற ஆவிகள்” என்று வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது (எபிரெயர் 1:14). தேவதூதர்கள் தேவனை ஆராதித்துக் கொண்டிருப்பதாகவும் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வேதாகமத்தில் பலவிதமான தேவதூதர்களை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

1.    பிரதான தூதன்(1 தெசலோனிக்கேயர் 4:16; கொலோசெயர் 1:16,17)

2.    பணிவிடை தூதர்கள் (Ministering Angels) - எபிரெயர் 1:14

3.    கேரூபீன்கள் (Cherub) - சங்கீதம் 18:10

4.    சேராபீன்கள் (Seraph) - ஏசாயா 6:3

பிரதான தூதன் (Archangel):

தேவதூதர்களில் மிகவும் முக்கியமாக வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருப்பது “பிரதான தூதன்” ஆகும். வேதாகமத்தில் பிரதான தூதன் என்று குறிப்பிட்டு சொல்லப்பட்டிருப்பது “மிகாவேல் (Michael)” மாத்திரம் தான். ஆனால் பல வேத பண்டிதர்கள் காபிரியேலையும் பிரதான தூதனாக கருதுகின்றனர். 

கேரூபீன்கள் (Cherubim):

பரிசுத்த வேதாகமத்தில் கேரூபீன்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிற இடங்களிலெல்லாம், பரிசுத்த பொருட்களையும், இடங்களையும் (ஜீவ விருட்சம், ஆசரிப்புக்கூடாரம்) பாதுகாக்கிற ஜீவன்களாகவே அவைகள் காட்டப்பட்டுள்ளன. கேரூபீன்களுக்கு நான்கு முகங்கள் (மனிதன், எருது, சிங்கம், கழுகு) உண்டு. அவைகளுக்கு நான்கு சிறகுகள் இருந்தன. அவைகள் முழுவதும் கண்களால் மூடப்பட்டிருக்கும். அவைகளுடைய உடலமைப்பு சிங்கத்தைப் போலவும், கால்கள் எருதைப் போலவும் இருக்கும். இவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆதியாகமம் 3:24; யாத்திராகமம் 25:17 – 22; 2 நாளாகமம் 3:7–14; எசேக்கியேல்10:12–14, 28:14–16; 1 ராஜாக்கள் 6:23–28 ஆகிய வேதபகுதிகளை வாசிக்கவும்.

(குழந்தைகள் பார்க்கின்ற கார்ட்டூன் படங்களில் கேரூப் என்கின்ற பெயரில் நாம் பார்க்கின்ற பொம்மைகள் கேரூப் அல்ல. அவைகள் ஐரோப்பா தேசங்களில் குழந்தைகள் வடிவில் உள்ள புட்டி (Putti) என்கின்ற ஒரு கிராமப்புறத்துகதைகளின் கதாப்பாத்திரமாகும்) 

சேராபீன்கள் (Seraphim):

சேராபீன்கள் (ஒருமையில் “சேராப்”) என்கிற பெயர்களின் அர்த்தமே “எரிகின்றவைகள் (Burning ones)” என்பதாகும் . சேராப் என்கிற வார்த்தை எபிரெய மொழியில் “சர்ப்பத்தை” குறிப்பதற்குகே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏசாயா 6:1-8 வசனங்களில் ஆறு சிறகுகளையுடைய ஜீவன்களாக சொல்லப்பட்டுள்ளன. அவைகள் இரண்டு சிறகுகளால் தங்கள் முகங்களை மூடி, இரண்டு சிறகுகளால் தங்கள் கால்களை மூடி, இரண்டு சிறகுகளால் பறந்து, ஒருவரையொருவர் பார்த்து “ சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” என்று கூறின. 

விழுந்துபோன தூதர்கள்:

லூசிபர் என்பவன் தேவனால் படைக்கப்பட்டு காப்பாற்றுவதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேரூப். “லூசிபர்” என்பது “அதிகாலையின் மகன் (morning star)” என்று தமிழில் ஏசாயா 14:12ல் கொடுக்கப்பட்டதற்கான லத்தீன் வார்த்தையாகும். லூசிபர் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தான். மற்ற சில தூதர்களும் அவனோடே கூட சேர்ந்துகொண்டார்கள். அதனால் லூசிபரும் அவனோடே சேர்ந்த தூதர்களும் கீழே தள்ளப்பட்டுபோனார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்ட மேன்மையை காத்துக் கொள்ளாமல், தாங்கள் இருக்க வேண்டிய ஸ்தானத்தை விட்டுவிட்டு, தேவனுடைய ஸ்தானத்திற்கு ஏற முயன்றதால் தேவன் அவர்களை கீழே தள்ளி, நியாயத்தீர்ப்பின் நாளுக்கென்று, நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருப்பதாக வேதாகமம் கூறுகிறது. 

ஒரே மனிதனாகிய ஆதாம் செய்த பாவத்தினால் எல்லா மனிதர்களும் பாவத்திற்கு உள்ளாக்கப்பட்டது போல் அல்லாது, தேவ தூதர்கள் ஒவ்வொருவரும் அவரவருடைய மீறுதலினாலேயே தள்ளப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நரகம் என்பது பிசாசிற்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தமாக்கப்பட்ட ஒன்றாகும் (மத்தேயு 25:41). பொதுவாக விழுந்து போன லூசிபரே பிசாசாக மாறினான் என்று கூறப்பட்டாலும் வேதத்தில் வெளிப்படையாக அவ்வாறு எங்கும் கூறப்படவில்லை. 

சாத்தான்:

சாத்தானுடைய ஆரம்பத்தைப்பற்றி பரிசுத்த வேதாகமத்தில் எதுவும் கொடுக்கப்படவில்லை. சாத்தானுக்கு பழைய பாம்பு, பிசாசு, குற்றஞ்சாட்டுபவன், உபாதிக்கிறவன் என்றெல்லாம் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தேவனுடைய தன்மை எவ்வாறு வெளிச்சமாய் இருக்கிறதோ, அதுபோல பிசாசின் தன்மை என்பது இருள் ஆகும். பலர் தேவனுக்கு சமமான எதிர்மறை தன்மை (Dualistic Opposite) கொண்டவனே சாத்தான் என்று கருதுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. சாத்தான் சர்வவல்லவன் அல்ல. அவனுக்கு சில வல்லமைகள் இருந்தாலும், எல்லாவற்றையும் செய்து நிறைவேற்றும் திறன் அவனுக்கு கிடையாது. அது போல எல்லாவற்றையும் அறியும் திறனும் அவனுக்கு கிடையாது. அவன் தேவனுக்கு எள்ளளவும் சமமானவன் அல்ல. அவனுக்கு சொந்தமாய் சிந்தித்து படைக்கும் திறன் மிகவும் சொற்பமே, அதனாலே தான் அவன் தேவன் செய்யும் எல்லா கிரியைகளையும் போலியாய் செய்து ஜனங்களை வஞ்சிக்கிறான். 

சாத்தானுக்கு “இப்பிரபஞ்சத்தின் தேவன்” என்கிற இன்னொரு பெயரும் உண்டு. ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமையினாலே சாத்தானுக்கு அடிமைப்பட்டபொழுது, இந்த உலகம் சாத்தானுக்கு அடிமைப்பட்டது. இந்த உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. தேவனுடைய ராஜ்யத்தைப் போலவே பிசாசும் ஒரு போலியான ராஜ்யத்தை ஆளுகிறான். நாம் வாழும் இந்த உலகத்தின் எல்லா அதிகாரங்களும் அவனுக்கு கொடுக்கப்படவில்லை. தானியேல் 4:32ல் “உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் முடிவற்றவர், அவருக்கு ஆரம்பமோ முடிவோ இல்லை. ஆனால் சாத்தானுக்கு முடிவு உண்டு. அவனுடைய ஆரம்பத்தைப் பற்றி நமக்கு தெளிவாக தெரியாவிட்டாலும், அவனுடைய முடிவைப் பற்றி வேதாகமத்தில் விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

சாத்தானின் திரித்துவம்:

தேவனுடைய திரித்துவம் என்பது தேவனுடைய எல்லா பரிபூரணத்தையும் குறிக்கிறது. அதுபோலவே சாத்தான் ஒரு போலியான திரித்துவத்தோடு செயல்படுவதை நாம் வேதாகமத்தில் பார்க்கமுடியும். இதை தேவனுடைய பரிசுத்த திரித்துவத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இதை “சாத்தானின் திரித்துவம்” என்று அழைக்கிறோம். தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு எவ்வாறு அனுப்புகிறாரோ அவ்வண்ணமே பிசாசும் தன்னுடைய அந்திகிறிஸ்துவை அனுப்புகிறான்.

                தேவனுக்கு எதிர்மறை                   – சாத்தான் (வலுசர்ப்பம்)

                இயேசு கிறிஸ்துவின் எதிர்மறை – அந்திகிறிஸ்து (மிருகம்)

                பரிசுத்த ஆவிக்கு எதிர்மறை          -  கள்ள தீர்க்கதரிசி (1)

 

பரிசுத்த திரித்துவம்

சாத்தானின் திரித்துவம்

பிதாவாகிய தேவன்

சாத்தான் / வலுசர்ப்பம்

குமாரனாகிய தேவன்

அந்திகிறிஸ்து (மிருகம்)

பரிசுத்த ஆவியாகிய தேவன்

கள்ள தீர்க்கதரிசி

தேவனுடைய சிங்காசனம் (வெளி 22:1)

சாத்தானிடைய சிங்காசனம் (வெளி 2:13)

கிறிஸ்துவின் சபை

சாத்தானுடைய கூட்டம் (வெளி 2:9; 3:9)

சபை -கிறிஸ்துவின் மணவாட்டி (எபேசி 5:25-27).

வேசிமார்க்க சபை – அந்திகிறிஸ்துவின் மணவாட்டி (வெளி 17:1-16).

கிறிஸ்துவின் உபதேசம்

பிசாசின் உபதேசம் (I தீமோத் 4:1)

கிறிஸ்துவின் பாத்திரம்கர்த்தருடைய பந்தி (I கொரிந் 10:16; 11:25)

பிசாசுகளின் பாத்திரம் (I கொரிந் 10:21).

தேவபக்தியின் இரகசியம் (I தீமோத் 3:16)

அக்கிரமத்தின் இரகசியம் (II தெசலோ 2:7)


சாத்தானுடைய திரித்துவத்தின் முடிவு, உபத்திரவ கால முடிவுக்குப்பின் இருக்கும். அப்பொழுது வலுசர்ப்பம், மிருகம், கள்ள தீர்க்கதரிசி அனைவரும் அக்கினியும், கந்தகமுமான கடலிலே தள்ளப்படுவார்கள் (வெளிப்படுத்தின விசேஷம் 20:10).

மனப்பாட வசனம்: பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். 

ஆதார நூற்களின் பட்டியல்:

1.    Larkin, Clarence. Dispensational Truth. Philadelphia: Rev. Clarence Larkin Est., 1920. 176 pp.

 

(மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதார நூலிலிருந்து இந்த புஸ்தகத்தை ஆக்கியோர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது)

 

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    தேவதூதர்களைக் குறிப்பதற்கு எபிரெய மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை “……………………” என்பதாகும்.

2.    பரிசுத்தவேதாகமத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே பிரதானதூதன் …………………………. ஆகும்.

3.    “………………………..” என்பது தமிழில் “அதிகாலையின் மகன்” என்று கொடுக்கப்பட்டுள்ளதன் லத்தீன் மொழிபெயர்ப்பாகும்.

4.    …………………………..அந்திகிறிஸ்துவின் மணவாட்டி ஆகும்.

 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  சேராபீன்கள் தேவனை எவ்வாறு ஆராதிக்கிறார்கள்?

 

2.  கேரூப் என்பது யார்?

 

3.  லூசிபர் ஏன் கீழே தள்ளப்பட்டான்?

 

4.  சாத்தான் ஏன் “இப்பிரபஞ்சத்தின் தேவன்” என்று அழைக்கப்படுகிறான்?

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1. தேவதூதர்களைப் பற்றியும் அவர்களின் வெவ்வேறு பிரிவுகளைப் பற்றியும் சொல்லவும்?

  

 

 

 

No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...