Sunday, September 27, 2020

ஆபிரகாமுடன் தேவனுடைய உடன்படிக்கை (God's Covenant With Abraham), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 7

                                   மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது
வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose. 

பாடம்- 7

ஆபிரகாமுடன் தேவனுடைய உடன்படிக்கை


ஆபிரகாம் தேவனால் அழைக்கப்படுதல்:

ஆபிராம் தேராகின் மகன். ஆபிராம் தான் பின்னர் தேவனால் “ஆபிரகாம்” என்று அழைக்கப்பட்டான். ஆபிராம் தன்னுடைய மனைவியாகிய சாராயுடன், ஊர் என்கிற கல்தேயருடைய தேசத்தில் (தற்போதைய ஈராக்) குடியிருந்தான். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தேவன் ஆபிராமிடம், அவன் வசிக்கிற இடத்தைவிட்டு, தான் காண்பிக்கும் தேசத்திற்கு போகும்படியாகக் கூறினார். தேவன் ஆபிரகாமோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.

உடன்படிக்கை (Covenant):

உடன்படிக்கை என்பது இரு நபர்கள் தங்களுக்கிடையே ஒப்பந்தம் செய்வதற்கு ஈடாகும் எனலாம். (ஒப்பந்தம் என்ற வார்த்தை இந்த பாடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பற்றி மேலும் அறிய, இந்த பாடத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை பார்க்கவும்). இந்த உடன்படிக்கைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று நிபந்தனைகளுக்குட்பட்ட உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம், இன்னொன்று நிபந்தனைகளற்ற ஒப்பந்தம். நிபந்தனைகளற்ற உடன்படிக்கை என்றால், ஒரு மனிதன் தானே முன்னின்று எல்லாவற்றையும் நிறைவேற்றுவது, மற்ற மனிதனிடமிருந்து எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.

நிபந்தனைகளுக்குட்பட்ட உடன்படிக்கை என்றால், அந்த உடன்படிக்கை நிறைவேறுவதற்கு, உடன்படிக்கை செய்துகொண்ட இருவரும் நிறைவேற்றவேண்டிய சில கடமைகள் உண்டு, அந்த கடமைகளை ஒருவர் நிறைவேற்றாமற் போனாலும், அந்த உடன்படிக்கை முறிக்கப்பட்டு செல்லுபடியாகாமல் போய்விடும். இப்படி ஒரு உடன்படிக்கைக்கான எடுத்துகாட்டைத் தான் லாபானுக்கும், யாக்கோபுக்கும் இடையே நடைபெற்ற உடன்படிக்கையில் பார்க்கிறோம் (ஆதியாகமம் 31:44-54). பழைய காலங்களில் உடன்படிக்கை செய்யும்பொழுது செய்யப்பட்ட சில சடங்காச்சாரங்களை மேலே கொடுக்கப்பட்டுள்ள வேதபகுதியிலிருந்து பார்க்கலாம்.

Sweet Publishing / FreeBibleimages.org.

1.    ஒரு கற்தூண் நாட்டப்பட்டது (31:45)

2.    கற்களின் குவியல் வைக்கப்பட்டது (31:46 – 49), அதற்கு கண்காணிப்புக்கோபுரம் என்று அர்த்தம் கொள்ளும் மிஸ்பா என்றும் கலயெத் மற்றும் ஜெகர்சகதூதா என்றெல்லாம் பெயரிட்டார்கள்.

3.    அந்த உடன்படிக்கைக்கு சாட்சியாக மற்றும் உறுதிபடுத்துபவராக தேவனுடைய நாமம் அழைக்கப்பட்டது (31:49)

4.    யாக்கோபிடத்திலிருந்து, தன்னுடைய மகள்களை தவறாக நடத்தக்கூடாது என்கிற உறுதியை லாபான் பெற்றுக் கொண்டான்.

5.    சமாதான உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் செய்தல்(31:51-52)

6.    தேவனுடைய நாமத்தில் ஆணையிடுதல் (31:53)

7.    பலியிட்டு, போஜனம் செய்தல் - போஜனம் செய்தல் என்றால் விருந்து உண்ணுதல் என்று அர்த்தம் (31:54)

பரிசுத்த வேதாகமத்தில் இன்னும் பல இடங்களிலும் உடன்படிக்கை செய்துகொள்ளுவதைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. அவ்விடங்களில் இதற்கு இணையான படிகள் சுட்டிகாட்டப்பட்டிருக்கிறது.

ஆபிரகாமிய உடன்படிக்கை (Abrahamic Covenant):

John Paul Stanley / YoPlace.com.

தேவன் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கைத்தான் ஆபிரகாமிய உடன்படிக்கை என்று அழைக்கிறோம். தேவன் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கை ஆதியாகமம் 12:1-3, மற்றும் 15ஆம் அதிகாரத்தின் அடிப்படையில் நிபந்தனைகளற்றது என்று கருதப்பட்டாலும், ஆதியாகமம் 17ஆம் அதிகாரத்தில், உடன்படிக்கை நிறைவேறுவதற்கு தேவன் ஆபிரகாமிடத்தில் எதிர்பார்த்தவைகளை பார்க்கலாம். அதில் தேவன் ஆபிரகாமிடம் தனக்குமுன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிருக்கும்படி கூறினதைப் பார்க்கலாம். இந்த உடன்படிக்கையின் அடிப்படையிலே தேவன் விருத்தசேதனம் என்கிற சடங்காச்சாரத்தை ஏற்படுத்தினதையும் பார்க்கலாம்.

விருத்தசேதனம் (Rite of circumcision):

விருத்தசேதனம் என்பது தமிழில் சுன்னத்து செய்தல் என்று அழைக்கப்படுகின்றது. இந்த விருத்தசேதனம் ஆபிரகாமிய உடன்படிக்கையின் ஒரு பகுதியாகவே எற்படுத்தப்பட்டது (ஆதியாகமம் 17:9-14). ஆபிரகாமின் வம்சாவளியில் பிறந்த அனைத்து ஆண்மக்களும், தேவன் தங்களோடு ஏற்படுத்தின உடன்படிக்கையின் ஒரு அடையாளத்தை தங்கள் சரீரத்தில் தரித்திருக்கவேண்டும் என்பதற்காகவே விருத்தசேதனம் என்கிற அடையாளம்  கொடுக்கப்பட்டது. தங்கள் சரீரத்தில் விருத்தசேதனத்தை தரித்திருக்காத எவரும் ஆபிரகாமின் உடன்படிக்கைக்கு பங்கில்லாதவர்களாகவே கருதப்பட்டனர்.

ஆபிரகாமிய உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள்:

1.    தேசத்தைப் பற்றிய வாக்குறுதி – தேவன் ஆபிரகாமுக்கு ஒரு தேசத்தைக் கொடுக்கப்போவதாக வாக்குக்கொடுத்தார்

2.    சந்ததியாரைப் பற்றிய வாக்குறுதி – தேவன் ஆபிரகாமிடம் அவனை ஒரு ஒரு பெரிய இனமாக்கப்போவதாக வாக்குக் கொடுத்தார். ஆபிரகாம் 75 வயதாயிருந்து அவனுக்கு குழந்தைகள் எதுவும் இல்லாதபோது இந்த வாக்குக் கொடுக்கப்பட்டது. இந்த வாக்குறுதியை தேவன் பின்னும் பெரிதாக்கி, ஆதியாகமம் 17:6ல் ராஜாக்கள் அவனுடைய சந்ததியாரிலிருந்து உருவாகுவார்கள் என்று வாக்குக் கொடுத்தார்.

3.    ஆசீர்வதிக்கப்படுவதையும், ஆசீர்வாதமாயிருப்பதையும் பற்றிய வாக்குறுதி – தேவன் ஆபிரகாமிடம் தாம் அவனை ஆசீர்வதிப்பதாகவும், அவன் பல தேசங்களுக்கும், இனங்களுக்கும் ஆசீர்வாதமாக மாறப்போவதாகவும் வாக்கு கொடுத்தார் (ஆதியாகமம் 12:3).

ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்:

தேவன் ஆபிராமிடம் அவன் பல இனங்களுக்கு தந்தையாக மாறப்போவதால் அவனுடைய பெயரை “ஆபிரகாம்” என்று மாற்றினார். அவனுடைய மனைவியின் பெயரை இளவரசி என்று அர்த்தம் கொள்ளும் “சாராய்” என்கிற பெயரிலிருந்து “அநேக இனங்களின் தாய்” என்று அர்த்தம் கொள்ளும் “சாராள்” என்கிற பெயருக்கு மாற்றினார். தேவன் ஆபிரகாமுக்கோ, சாரளுக்கோ குழந்தைகள் எதுவும் இல்லாதபொழுதே அவர்களுடைய பெயரை மாற்றினார். ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றி எந்தவித சந்தேகமும் இல்லாமல் அதை விசுவாசித்தார். அதனால் தான் ஆபிரகாம் ஆண்டவருடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்டார்.

 தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுதல்:

தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தின் மகனாகிய ஈசாக்கை அவனுக்கு 100 வயதாயிருக்கும்பொழுதும், சாராளுக்கு 75 வயதாயிருக்கும்பொழுதும் கொடுத்தார். ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குறுதியின்படியே, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அநேக தேசங்களுல், இஸ்ரவேல் தேசமும் ஆபிரகாமின் மூலமாய் தோன்றின. உலகத்தின் இரட்சகரான “இயேசு கிறிஸ்துவும்” ஆபிரகாமின் சந்ததியில் தோன்றினவரே!

 புறஜாதிகளுக்கு ஆபிரகாமின் ஆசீர்வாதம்:

ஆபிரகாமுக்கும், வாக்குத்தத்தத்தின்படி அவனுடைய வம்சாவளியில் பிறந்தவர்களுக்கென்று பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட இந்த ஆசீர்வாதங்களை புறஜாதிகளும் சுதந்தரித்துக் கொள்ளமுடியும். ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தின்படி பிறந்த ஈசாக்கிற்கும், அவனுடைய சந்ததியில் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட யாக்கோபின் வம்சாவளியை சேராத அனைவருவே புறஜாதிகள் (Gentiles) என்றே அழைக்கப்பட்டனர். இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலமாக யூதர்களும், இஸ்ரவேலரும் ஒன்றாக்கப்பட்டனர். இயேசு கிறிஸ்துவின் மேல் யார்யாரெல்லாம் தங்கள் விசுவாசத்தை வைக்கிறார்களோ அவர்கள் எல்லாரும் ஆபிரகாமின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளமுடியும். கலாத்தியர் 3:29ல் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள், கிறிஸ்துவினுடையவர்களாயும், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளுபவர்களாகவும் இருக்கிறோம் என்று கூறுகிறது. ஆபிரகாமுக்கு தேவன் உடன்படிக்கையின் மூலமாய் கொடுத்த ஆசீர்வாதங்களை புறஜாதியாராகிய நாமும் விசுவாசத்தின் மூலமாய் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆசிரியர் குறிப்பு: இந்த பாடங்கள் ஞாயிறு பள்ளி குழந்தைகளுக்காக இயற்றப்பட்டவை. பரிசுத்த வேதாகமத்தில் உள்ள சில வார்த்தைகள் குழந்தைகள் புரிந்து கொள்ளுவதற்கு சிரமமாக இருப்பதால், அப்படிப்பட்ட வார்த்தைகளின் தொடர்புடைய வேறே வார்த்தைகளை பயன்படுத்தி புரிய வைக்க முயற்சிக்கிறோம். எடுத்துக்காட்டாக இந்த பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒப்பந்தம் என்ற வார்த்தைக்கு 'Contract" என்றும் உடன்படிக்கை என்ற வார்த்தைக்கு 'Covenant" என்றும் பொருள்படும் என்று நடைமுறை தமிழில் சொல்லப்பட்டாலும், தமிழில் இவை இரண்டும் இணையாக பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அகராதித் தமிழில் "ஒப்பந்தம், உடன்படிக்கை" ஆகிய இரண்டு வார்த்தைகளும் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருப்பதை விட வித்தியாசமான அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்துவதற்கு பரிசுத்த வேதாகமம் முழுவதும் சில விசேஷித்த சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையிலே பரிசுத்த வேதாகமத்திலே "உடன்படிக்கை" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்). 

வேதபகுதி: ஆதியாகமம் 12,15,17,21:1-8

மனப்பாட வசனம்: விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான் (எபிரெயர் 11:8,9).

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    “…………………………..” தான் பின்னர் தேவனால் “ஆபிரகாம்” என்று அழைக்கப்பட்டான்.

2.    ஆபிரகாமுக்கு 75 வயதாயிருந்து, குழந்தைகள் எதுவும் இல்லாதபோது ……………………… பற்றிய வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

3.    ………………………………. ஆபிரகாமிய உடன்படிக்கையின் ஒரு பகுதியாகவே எற்படுத்தப்பட்டது

4.    ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தின்படி பிறந்த ஈசாக்கின் வம்சாவளியை சேராத அனைவருவே ……………………………….. என்றே அழைக்கப்பட்டனர்.

 

        ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  உடன்படிக்கை என்றால் என்ன?

 

2.  விருத்தசேதனம் எதற்காக கொடுக்கப்பட்டது?

 

3.  தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தை ஆபிரகாமுக்கு எவ்வாறு நிறைவேற்றினார்?


4.  ஆபிரகாமுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள புறஜாதிகள் என்ன செய்யவேண்டும் ?


 கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1. ஆபிரகாமிய உடன்படிக்கையைப் பற்றியும் அதின் மூன்று முக்கிய அம்சங்களைப் பற்றியும் எழுதவும்?

 

No comments:

Post a Comment

திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...