ஆரம்பநிலை வகுப்பு(PRIMARY )
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
பாடம்
– 4
ஈசாக்கும் அபிமெலேக்கும்
ஈசாக்கு ஆபிரகாமுடைய மகன். தேவன் ஈசாக்கை ஆசீர்வதித்ததினால் அவன் மிகுதியான ஆடு, மாடுகள் உடைய செல்வந்தனான மனிதனாய் இருந்தான். அப்பொழுது அவன் பெலிஸ்தியர் என்று சொல்லப்படுகின்ற மக்களுடைய தேசத்திலே வாழ்ந்து வந்தான். பெலிஸ்தியரை ஆண்டு வந்த ராஜாவினுடைய பெயர் அபிமெலேக்கு. அவன் ஈசாக்கினுடைய செல்வங்களைப் பார்த்து அவன் மேல் பொறாமை கொண்டான்.
பழைய காலங்களில் இப்பொழுது இருக்கின்ற தொழில்கள் பல கிடையாது. அவர்கள் இயற்கையோடு இணைந்த பல தொழிகளையே செய்து வந்தார்கள். பழங்காலங்களில் வாழ்ந்த ஜனங்களுக்கு ஆடு, மாடு, ஒட்டகங்கள் போன்றவை பெரும் செல்வங்களாகக் கருதப்பட்டன. அவைகளை மேய்த்து, வளர்க்கும் தொழில்களை அவர்கள் பெரும்பாலும் செய்து வந்தார்கள். ஈசாக்குக்கும் அதுபோலவே அநேக மிருகஜீவன்கள் இருந்தன.
ஈசாக்கின் வேலைக்காரர் தங்களுடைய மிருகஜீவன்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக நிலத்தைத் தோண்டி கிணறு அமைத்திருந்தனர். இவர்கள் தோண்டும் கிணறுகளை பெலிஸ்தர் மண்ணினால் நிரப்பி தண்ணீர் எடுக்க முடியாதபடி செய்து விட்டனர். பல மணி நேரம் கஷ்டப்பட்டு செய்த வேலைகளை சிறிது நேரத்திற்குள்ளாகவே பெலிஸ்தர் அழித்து விட்டனர்.
பெலிஸ்தரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஈசாக்கினிடத்தில் வந்து, இந்த தேசத்தினுடைய சொந்த ஜனங்களைப் பார்க்கிலும் நீ பலத்து விட்டாய். ஆகையால் நீ எங்களை விட்டு வேறே எங்கேயாவது போய் விடு என்று கூறினான். ஈசாக்கு அபிமெலேக்குடன் சண்டையிடாமல், தன்னுடைய குடும்பத்தார், வேலைக்காரர், மிருக ஜீவன்கள் எல்லாவற்றையும் அழைத்துக் கொண்டு வேறே இடத்தைத் தேடி சென்றான். அவன் கேரார் என்கிற இடத்திற்கு போய் அங்கே குடியேறினான்.
அங்கேயும் தேவன் ஈசாக்கோடே இருந்து அவனை ஆசீர்வதித்தார். ஆண்டவர் ஈசாக்கோடே இருப்பதினால் தான் அவன் ஆசீர்வதிக்கப்படுகின்றான் என்பதை பெலிஸ்தரின் ராஜாவாகிய அபிமெலேக்கு புரிந்து கொண்டான். அதனால் ஈசாக்கைப் பகைக்காமல் அவனோடே சமாதானம் செய்ய வேண்டும் என்று அவன் எண்ணினான். அதனால் ஈசாக்கை சந்திப்பதற்காக புறப்பட்டு சென்றான். ஈசாக்கு அபிமெலேக்கைப் பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியத்தோடெ அவனைப் பார்த்து நீ என்னைப் பகைத்து என்னை உன்னிடத்தில் இராதபடிக்கு துரத்திவிட்டாயே இப்பொழுது ஏன் என்னை தேடி வந்திருக்கிறாய் என்று கேட்டான்.
அதற்கு அபிமெலேக்கு, “நிச்சயமாகவே ஆண்டவர் உன்னோடு இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன், அதனால் நாம் ஒருவரையொருவர் பகைக்காமல் சமாதானமாய் வாழுவதற்கான தீர்மானம் எடுப்போம்” என்று கூறினான். அதன்படி இருவரும் சமாதானத்துடன் வாழுவதற்கான தீர்மானம் செய்து கொண்டனர். ஈசாக்கு தன்னைப் பகைத்தவர்களுடன் சண்டையிடாமல் இருந்ததால் அவர்கள் அவனைத் தேடி வந்து சமாதானம் செய்யும்படி தேவன் செய்தார்.
வேத பகுதி:
ஆதியாகமம் 26: 12 – 17, 26 – 31
மனப்பாட வசனம்: ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். (நீதிமொழிகள் 16:7)
பாடப்
பயிற்சிகள்
கேள்வி பதில்
1.
ஈசாக்கு யாருடைய மகன்?
……………………………………
2.
பெலிஸ்தருடைய ராஜாவின் பெயர் என்ன?
……………………………………
3.
ஈசாக்கின் வேலைக்காரர் தோண்டிய
கிணறுகளை அழித்தது யார்?
……………………………………
4.
ஈசாக்கு மறுபடியும் போய் குடியேறிய
இடத்தின் பெயர் என்ன?
…………………………………..
5.
ஈசாக்கைத் தேடி வந்தது யார்?
……………………………………
சரியா / தவறா:
1.
பெலிஸ்தருடைய ராஜாவின் பெயர் ஆபிரகாம்.
( சரி / தவறு )
2.
ஈசாக்கினுடைய செல்வங்களைப் பார்த்து
பெலிஸ்தர் பொறாமை கொண்டனர். ( சரி / தவறு )
3.
பெலிஸ்தர் கிணறு தோண்டுவதற்கு
ஈசாக்கிற்கு உதவி செய்தனர். ( சரி / தவறு )
4.
ஆண்டவர் ஈசாக்கோடே இருந்தார் (சரி
/ தவறு )
5.
அபிமெலேக்கும், ஈசாக்கும் இறுதியில்
சமாதானம் செய்து கொண்டனர் ( சரி / தவறு )
No comments:
Post a Comment