Saturday, August 15, 2020

தேவனுடைய நாமங்கள் (The Names of God ), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 4

மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது

வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

                                              பாடம்- 4

தேவனுடைய நாமங்கள்

“நாமம்” என்றால் பெயர் என்று அர்த்தம். பழைய ஏற்பாட்டு காலத்தில் பெயர் என்பது ஒரு மனிதனுடைய அடையாளமாக மாத்திரமல்ல, அது அந்த மனிதனுடைய தனித்துவத்தை விளக்கும் ஒன்றாகவே பார்க்கப்பட்டது. பல வேளைகளில், அந்த மனிதனுடைய பண்புகளை விளக்கும் வார்த்தைகள் அந்த பெயரோடு இணைக்கப்பட்டன. பரிசுத்த வேதாகமம் முழுவதும் தேவன் தம்மை பல்வேறு நாமங்களின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தேவன் தம்மை மோசேக்கு எரிகிற முட்செடியில் வெளிப்படுத்தின பொழுது “இருக்கிறவராக இருக்கிறேன்” என்கிற நாமத்தின் மூலமாக வெளிப்பட்டார் (யாத்திராகமம் 3;13,14). பின்பு தேவன், எகிப்தில் வாதைகளை அனுப்புவதற்கு முன் யேகோவா என்கிற நாமத்தில் தம்மை வெளிப்படுத்தினார். அப்பொழுது மோசேயிடம் தாம் அந்த நாமத்தில் இன்னும் அவர்களுக்கு வெளிப்படவில்லை என்று கூறினார் (யாத்திராகமம் 6:2). தேவனுடைய நாமங்கள் அவருடைய தன்மைகளையும், குணாதிசயங்களையும் வெளிப்படுத்துகிறது. தேவனுடைய நாமம் பரிசுத்தமானது. ஆகவே அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். 

எலோஹீம் (Elohim):

“எலோஹீம்” என்கிற நாமம் தான் பரிசுத்த வேதாகமத்தில் முதன்முதலாக தேவனைக் குறிப்பதற்காக ஆதியாகமம் 1:1ல் பயன்படுத்தப்பட்ட நாமமாகும். எபிரெய வேதாகமத்தில் “ஆதியிலே எலோஹீம் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்” என்றே கொடுக்கப்பட்டிருக்கிறது. எலோஹீம் (Elohim) என்பது எலோஹே (Elohay) என்கிற வார்த்தையின் பன்மை (Plural) வார்த்தையாகும். திரியேக தேவனுடைய தன்மையை விளக்குவதற்காகவே இந்த நாமம் பயன்படுத்தப் பட்டிருப்பதை நாம் அறிந்து கொள்ளமுடியும். இந்த நாமம் பழைய ஏற்பாட்டில் 2300 முறை கொடுக்கப்பட்டிருக்கிறது. எலோஹீம் என்கிற நாமம் எபிரெய மொழியில் “பலம்”, “வல்லமை” ஆகிய அர்த்தங்களுடைய வேர்சொற்களிலிருந்து உருவானதாகும். பரிசுத்த வேதாகமம் முழுவதும் இது வேறுபல தேவனுடைய தன்மைகளை குறிக்கும் வார்த்தைகளோடு இணைத்து பயன்படுத்தப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

எலோஹே மௌசி (Elohay Mauzi) – என்னுடைய அரணாகிய தேவன் (சங்கீதம் 43:2)

எலோஹே தெஹிலாட்டி (Elohay Tehilati) – நான் துதிக்கும் தேவன் (சங்கீதம் 109:1)

எலோஹே ஈஷீ (Elohay Yishi) – என் இரட்சிப்பின் தேவன் (சங்கீதம் 18:46)

எலோஹீம் கேதோஷீம் (Elohim Kedoshim) – பரிசுத்தமான தேவன் (லேவியராகமம் 19:2)

எலோஹீம் சாயீம் (Elohim Chaiyim) – ஜீவனுள்ள தேவன் (எரேமியா 10:10) (1)

ஏல் (EL):

“ஏல் (EL)” என்பதும் தேவனைக் குறிப்பதற்கு பரிசுத்த வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற நாமம். இது எலோஹீம் என்கிற வார்த்தையின் வேர்சொல் ஆகும். இது பழைய ஏற்பாட்டில் சுமார் 200 முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவும் தேவனுடைய தன்மைகளை விளக்கும் வேறு பல வார்த்தைகளோடு இணைத்து பல இடங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஏல் எலியோன் (El Elyon) – உன்னதமான தேவன் (ஆதியாகமம் 14:18)

ஏல் ஓலாம் (El Olam) – சதாகாலமுமுள்ள தேவன் (ஆதியாகமம் 21:33)

ஏல் ஏகாத் (El Echad) – ஒரே தேவன் (மல்கியா 2:10)

இம்மானு வேல் (Immanu El) – தேவன் நம்மோடு (ஏசாயா 7:14) (1) 

ஏலாஹ் (ELAH)

ஏலாஹ் (ELAH)” என்பதும் தேவனைக் குறிப்பதற்கு பயன்படுத்தப் பட்டிருக்கும் இன்னொரு நாமமாகும். இது பழைய ஏற்பாட்டில் சுமார் 70 முறை உபயோகிக்கப்பட்டிருக்கிறது. (1)

ஏலாஹ் எருசலேம் (Elah Yerush'lem) – எருசலேமின் தேவன் (எஸ்றா 7:19)

ஏலாஹ் இஸ்ரவேல் (Elah Yisrael) – இஸ்ரவேலின் தேவன் (எஸ்றா 5:1)

ஏலாஹ் ஷ்’மாயா வ்’ஆரா (Elah Sh'maya V'Arah) – பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும்

                                                                                                தேவனாயிருக்கிறவர் (எஸ்றா 5:11) 

கர்த்தர் (YHVH):

தமிழில் “கர்த்தர்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற வார்த்தை ஆங்கிலத்தில் “LORD” என்று முகப்பெழுத்தில் (Capital Letters) கொடுக்கப்பட்டிருக்கும். இந்த நாமம் எபிரெய மொழியில் ஒரு வித்தியாசமான வடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. “யோத் (Yod), ஹேய் (Hey), வாவ் (Vav) மற்றும் ஹேய் (Hey) என்கிற நான்கு வார்த்தைகள் உள்ளடக்குகிற நாமம் தான் தமிழில் கர்த்தர் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதைத் தான் சுருக்கமாக ஆங்கிலத்தில் சுருக்கமாக “YHVH” என்று குறிப்பிடுவார்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வார்த்தைகளின் முதல் எழுத்துகளை இணைத்தே இந்த வார்த்தை உருவாக்கப்பட்டது. ஆகவே இந்த நாமத்தை “நான்கு எழுத்துக்கள்” என்று அர்த்தங்கொள்ளும் “Tetragrammaton” என்றே அழைக்கிறார்கள். (2) யூத பாரம்பரியத்தின்படி இந்த நாமம் மனிதர்களால் உச்சரிக்கக்கூடாத ஒரு நாமமாகவே கருதப்பட்டது. “YHVH” என்ற நாமத்தை பிரதான ஆசாரியன் மாத்திரமே, வருடத்திற்கு ஒருமுறை பாவநிவிர்த்தி செய்யும் நாளின்போது, பலியிடப்பட்ட ஆட்டின் இரத்தத்தோடு மகா பரிசுத்த ஸ்தலத்தில் நுழையும்பொழுது மாத்திரமே இந்த நாமத்தை உச்சரிப்பான். (4)

இன்று பலரும் “YHVH” என்கிற நாமத்தை “யேகோவா (Jehovah) அல்லது யாவே (Yahweh) என்று அழைத்தாலும், அதன் சரியான உச்சரிப்பு யாருக்கும் தெரியாது என்பதே யாவரும் அறிந்திருக்க வேண்டிய உண்மையாகும். எபிரெய மொழியில் உயிர்எழுத்துக்களை (vowel markers) வார்த்தைகளோடு குறிப்பதில்லை அதுமட்டுமல்லாமல் யூதர்கள் இரண்டாம் தேவாலயம் இடிக்கப்பட்டபின் கிபி 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டிற்குபின் இந்த நாமத்தை உச்சரிப்பதற்கு பயந்து, இந்த நாமத்தை உச்சரிப்பதை நிறுத்தினதினிமித்தமாக அதின் சரியான உச்சரிப்பை யாரும் அறிய முடியாமற்போனது. 

யூதர்கள் வேதத்தில் இந்த நாமம் வரும் பொழுதெல்லாம் ஒன்றில் அமைதியாக இருப்பார்கள் அல்லது அதற்கு பதிலாக “அதோனாய்” என்று வாசிப்பார்கள். (3) “YHVH” என்கிற தேவனுடைய நாமத்தை உச்சரிப்பதற்கு வசதியாக வேதபண்டிதர்கள் “அதொனாய் (Adonai)” என்கிற தேவனுடைய நாமத்தில் உள்ள உயிரெழுத்துக்களை “YHVH” என்கிற நான்கு எழுத்துக்களின் நடுவே புகுத்தி “யேகோவா (Jehovah) அல்லது யாவே (Yahweh) என்கிற நாமத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது கிபி 5 முதல் கிபி 15ஆம் நூற்றாண்டுக்கு உட்பட்ட இடைகாலத்தில் (Medieval Period) உருவாக்கப்பட்ட ஒன்றாகும். 

தேவன் மனித புத்திக்கும், மொழிகளின் வருணனைக்கும் அப்பாற்பட்டவர், அவருடைய எல்லாத் தன்மைகளையும் மனிதர்களாகிய நம்மால் புரிந்து கொள்ளமுடியாது என்று உணர்த்துவதற்காகவே இந்த நாமம் இவ்வாறு கொடுக்கப்பட்டிருப்பதாக வேதபண்டிதர்கள் கருதுகின்றனர்.

யேகோவா யீரேகர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் (ஆதியாகமம் 22:14)

யேகோவா ரஃபா – பரிகாரியாகிய (சுகமாக்குகிற) கர்த்தர் (யாத்திராகமம் 15:26)

யேகோவா நிசிகர்த்தர் நாங்கள் உயர்த்துகிற கொடி (யாத்திராகமம் 17:15)

யேகோவா மக்காதேஷ் – பரிசுத்தமாக்குகிற கர்த்தர் (லேவியராகமம் 20:8)

யேகோவா ஷாலோம்கர்த்தர் எங்கள் சமாதானம் (நியாயாதிபதிகள் 6:24)

யேகோவா சித்கேனு – எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் (எரேமியா 33:16)

யேகோவா ரோஹிகர்த்தர் எங்கள் மேய்ப்பர் (சங்கீதம் 23:1)

யேகோவா ஷம்மா – கூடவே இருக்கிற கர்த்தர் (எசேக்கியேல் 48:35) (1)

அதொனாய் (Adonai):

எபிரெய மொழியில் “அதொனாய்” என்று அழைக்கப்படும் தேவனுடைய நாமத்தை ஆங்கில வேதாகமத்தில் “Lord” என்று தாழ்வெழுத்துக்களில் (Small Letters / Lower Case Letters) கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் இது “ஆண்டவர்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தேவனை மட்டும் அல்லாமல் ராஜாக்களையும், பிரபுக்களையும் குறிப்பதற்காகவும் சில வேளைகளில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. (2)

அதொன் (Adon) – (யோசுவா 3:11)

அதொனாய் (Adonai) – (ஏசாயா 6:1)

அதொனாய் ஹா’அதொனிம் (Adonai Ha’adonim) – (சங்கீதம் 136:3)

அதொன் அதொனாய் செவாவோட் (Adon Adonai Tseva’ot) – (ஏசாயா 1:24)

கர்த்தருடைய நாமம் பரிசுத்தமானது. ஆகவே அதை வீணாக பயன்படுத்தக்கூடாது. 

ஆதார நூற்களின் பட்டியல்:

1.      Names of God (Retrieved 13th August 2020 from https://www.allaboutgod.com/names-of-god.htm)

2.     Vine, W. E., Unger, M. F., White, W., & Vine, W. E. (1985). Vine's complete expository dictionary of Old and New Testament words. Nashville: Nelson.

3.     Orr, James, M.A., D.D. General Editor. "Entry for 'ADONAI'”. "International Standard Bible Encyclopedia". 1915. 

4.     Day of Atonement (Retrieved 13th August 2020 from https://www.biblegateway.com/resources/encyclopedia-of-the-bible/Day-Atonement)

(மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதார நூற்களிலிருந்து இந்த புஸ்தகத்தை ஆக்கியோர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது)

மனப்பாட வசனம்: (சங்கீதம் 113:1-3)

 

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    ……………………………. என்றால் “உன்னதமான தேவன்” என்று அர்த்தம்.

2.    ……………………………. என்பதற்கு “தேவன் நம்மோடு” என்று அர்த்தம்.

3.    “நான்கு வார்த்தைகள்” உள்ளடக்குகிற நாமம் தான் தமிழில் “…………………..” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

4.    “YHVH” என்ற நாமத்தை ……………………………… மாத்திரமே, வருடத்திற்கு ஒருமுறை உச்சரிப்பான். 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  ‘எலோஹீம் ’ என்கிற தேவனுடைய நாமத்தைப் பற்றி எழுதவும்? 


2.  “ஏல்” என்கிற தேவனுடைய நாமத்தைப் பற்றி எழுதவும்?

 

3.  யேகோவா அல்லது யாவே” என்கிற நாமம் எவ்வாறு உருவாக்கப்பட்டது? 


4.  “அதொனாய்” என்கிற தேவனுடைய நாமத்தைப் பற்றி எழுதவும்?  

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1. யூதர்களால் உச்சரிக்கக்கூடாது என்று கருதப்பட்ட “கர்த்தர்” என்ற நாமத்தை பற்றி எழுதவும்?

 

 


No comments:

Post a Comment

திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...