Thursday, August 6, 2020

பரிசுத்த திரித்துவம் (The Holy Trinity ), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 2

மேல்நிலை வகுப்பு (SENIOR)
வயது: 14 - 15 வயது
வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம்- 2

பரிசுத்த திரித்துவம்

கிறிஸ்தவம் என்பது ஒரே இறைவனைப் பற்றிய நம்பிக்கையுடைய ஒரு ஏகத்துவ (One God) மதமாகும். கிறிஸ்தவத்தின் கோட்பாடு, “ஒரே இறை கோட்பாடு (Monotheism)” ஆகும். பரிசுத்த வேதாகமம் மாத்திரமே மனிதனின் சிருஷ்டிப்பு, வீழ்ச்சி, இரட்சிப்பு, நித்திய ஜீவன், உலகத்தின் முடிவு போன்றவற்றை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது என்பதை ஒருவராலும் மறுக்க இயலாது. அந்த பரிசுத்த வேதாகமத்தின் வெளிப்பாடுகள் மூலமாகவே நாம் ஆண்டவரைப் பற்றி தெரிந்துகொள்ளமுடியும். ஒன்றான மெய் தேவன் தம்மைப் பற்றி வெளிப்படுத்தினவைகளில் ஒரு தன்மை தான் தேவனுடைய “திரியேகம் அல்லது திரித்துவம் (Triune or Trinity)” என்பதாகும். “திரியேகம் அல்லது திரித்துவம்” என்னும் வார்த்தை பரிசுத்த வேதாகமத்தில் இடம் பெறாவிட்டாலும், தேவன் தம்மைப் பற்றி வெளிப்படுத்தினவைகளின் அடிப்படையில், தேவனுடைய இறைத்தன்மையை விளக்குவதற்கு உருவாக்கப்பட்ட சொல்லே “திரியேகம் அல்லது திரித்துவம்” என்பதாகும். 

தேவன் அல்லது இறைவனுடைய தோற்றம் (The Origin of God):

பரிசுத்த வேதாகமத்தில் தேவனுடைய தோற்றத்தையோ ஆரம்பத்தையோ பற்றி நமக்கு சொல்லப்படவில்லை. சங்கீதம் 90:2ல் “பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்” என்று கூறப்பட்டிருக்கிறது. எபிரெய மொழியில் “அநாதி” என்பதற்கான அர்த்தம் காலம் உருவாகுவதற்கு முன்னான காலம் என்பதாகும். முடிவில்லாத தேவனை, நம்முடைய மனிதமூளையினால் புரிந்து கொள்ள இயலாது என்கிற காரணத்தினால் அது கொடுக்கப்படாமல் இருக்கலாம். 

தேவனுடைய தன்மைகள் (The Attributes of God):

தேவனுடைய ஆரம்பம் கொடுக்கப்படாவிட்டாலும், அவருடைய தன்மைகளை பரிசுத்த வேதாகமம் மிகவும் தெளிவாக விளக்குகிறது.

நித்தியம் (Eternality): தேவன் நித்தியமானவர். காலத்தால் அளக்கமுடியாத அல்லது காலத்திற்கு அப்பாற்பட்ட நித்தியநித்தியமானவர் நம்முடைய ஆண்டவர்.

அன்பு (Love): தேவன் அன்பே உருவானவர். அன்பு என்றால் என்ன என்பதை தேவனுடைய வெளிப்படுத்தலுக்கு அப்பாற்பட்டு நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

நன்மை (Goodness): தேவன் நல்லவர். நன்மை என்றால் என்ன என்பதை நாம் தேவன் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

தயாபரர் (Graciousness): தேவன் தயை நிறைந்தவர்.

நீதி (Righteousness): தேவன் நீதிபரர்.

சத்தியம் (Veracity): தேவன் சத்தியம் நிறைந்தவர்.

பரிசுத்தம் (Holiness): தேவன் பரிசுத்தர். அவருடைய பரிசுத்தத்திற்கு இணையில்லை.

சர்வவல்லமை (Omnipotence): தேவன் சர்வவல்லவர். அவரால் எல்லாம் செய்யமுடியும். செய்யமுடியாத கடினமான காரியம் இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை.

எங்கும் நிறைந்தவர் (Omnipresence): சர்வவியாபி. தேவன் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் நிறைந்திருக்கும் தன்மை உடையவர்.

எல்லாம் அறிந்தவர் (Omniscience): தேவன் எல்லாம் அறிந்தவர். அண்ட சராசரங்களில் நடைபெறும் எல்லா காரியங்களையும் அவர் அறிந்திருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்(Transcendence): தேவன் நேரம், இடம் போன்றவற்றிற்கு அப்பாற்பட்டவர். நம்முடைய புத்திக்கும் அவர் அப்பாற்பட்டவர்.

இறையாண்மை (Sovereignty): எல்லாவற்றின் மேலும் ஆளுகை உடையவர். (1)

 

“திரியேகம்” அல்லது “திரித்துவம்” என்றால் என்ன?

ஒன்றான மெய்தேவன் தன்னை, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” ஆகிய மூன்று நபர்களாக பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருப்பதைத் தான் “திரியேகம்” அல்லது “திரித்துவம்” என்று அழைக்கிறோம். 

நபர்கள் (Persons): தேவனுடைய திரித்துவத்தை விளக்கப் பயன்படும் நபர்கள் என்கிற வார்த்தை, மனிதர்களைக் குறிக்கும் நபர்கள் என்கிற வார்த்தையை விட வித்தியாசமானதாகும். மனிதர்களைக் குறிக்கும் பொழுது இது மூன்று வித்தியாசமான ஆவி, ஆத்துமா, சரீரம் உள்ள நபர்களைக் குறிக்கும். ஆனால் தேவனுடைய திரித்துவத்திலோ இது ஒரே தேவனுடைய வெவ்வேறு ஆள்துவத்தையே குறிக்கும். தேவனுடைய ஆள்துவத்தை (Personhood) விளக்கக்கூடிய சரியான வார்த்தைகள் நம்முடைய மொழிகளில் இல்லாத காரணத்தினால், எல்லாரும் புரிந்து கொள்ளக்கூடிய “நபர்கள்” என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. 

பிதாவாகிய தேவன்:

நம்முடைய ஒன்றான மெய்தெய்வமாய் இருப்பவர் பிதாவாகிய தேவன்.  பிதாவாகிய தேவன் எல்லாவற்றிற்கும், எல்லாமுமாய் இருப்பவர். அவர் துவக்கமும், முடிவும் இல்லாதவர். எல்லாவற்றிற்கும் துவக்கமும், முடிவுமாய் இருப்பவர். இந்த பிரபஞ்சத்தில் நடைபெறுகிற ஒவ்வொரு காரியங்களும் பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியும், சித்தத்தின்படியும் நடைபெறுகிறது (எபேசியர் 3:13; வெளிப்படுத்தல் 4:11). சிருஷ்டிப்பு, இயேசுகிறிஸ்துவின் பிறப்பு, இரட்சிப்பு எல்லாம் பிதாவினுடைய தீர்மானத்தின்படியே நடைபெற்றது. இனிமேல் உலகத்தில் நடைபெறப்போகிற எல்லா சம்பவங்களும் அவருடைய தீர்மானத்தின்படியே நடைபெறும். இயேசுகிறிஸ்து தம்மை முழுவதுமாக, பிதாவினுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்ததை நம்மால்  வேதத்தில் பார்க்க முடியும் (யோவான் 6:38; மத்தேயு 24:36). 

குமாரனாகிய தேவன்:

திரித்துவத்தில் இரண்டாவது நபராக போற்றப்படுபவர் “குமாரனாகிய தேவன்”. இவர் உலகம் உண்டாகுவதற்கு முன்பே பிதாவாகிய தேவனோடு இருந்தவர். பிதாவினுடைய வாயிலிருந்து பிறக்கும் வார்த்தையாக பிதாவோடு ஒன்றாக இருந்தவர் தான் குமாரனாகிய இயேசுகிறிஸ்து. இதைப்பற்றி தெரிந்துகொள்ள யோவான் 1:1-14 வசனங்களை வாசிக்கவும். தேவனுடைய வார்த்தையாயிருந்த இயேசு கிறிஸ்துவைக் கொண்டே பிதாவானவர் நாம் காண்கின்ற எல்லாவற்றையும் உண்டாக்கினார். தேவன் ஒவ்வொன்றையும் “உண்டாகக்கடவது” என்று கூறினவுடனே எல்லாப்பொருட்களும், உயிரினங்களும் உருபெற்றன. இதைத் தான் வேதாகமத்திலே, “தேவன் தம்முடைய வார்த்தையினால் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார்” என்று நாம் வாசிக்கிறோம் (சங்கீதம் 33:6; எபிரெயர் 11:3; 2 பேதுரு 3:5). அதைப்போலவே பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்து மூலமாய் எல்லாவற்றையும் படைத்தார் என்றும் நாம் வேதாகமத்தில் பார்க்கலாம் (1 கொரிந்தியர் 8:6; கொலோசெயர் 1:16). அதனால் தான் இயேசுகிறிஸ்துவுக்கு “தேவனுடைய வார்த்தை” என்கிற பெயரும் உண்டு (1 யோவான் 1:1; 5:7; வெளிப்படுத்தல் 19:13). 

துவக்கம்முதலே பிதாவோடு வார்த்தைவடிவில் இருந்தவர் மனிதர்களை பாவத்தினின்று மீட்பதற்காக, ஏதேன் தோட்டத்திலே தேவன் உரைத்த ஸ்திரீயின் வித்தாக, ஒரு மனிதனாக இந்த உலகத்தில் பிறந்தபொழுது அவர் இயேசு கிறிஸ்து என்று பெயரிடப்பட்டார். அதனால் தான் அவருக்கு "மாம்சத்தில் அவதரித்த வார்த்தை (Incarnate Word of God)" என்கிற பெயரும் உண்டு. இது யோவான் 1:14 வசனத்தில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. 

இயேசு என்கிற பெயர் “யெஹோஷுவா (Jehoshua)” என்கிற எபிரெய பெயரின் மொழிபெயர்ப்பாகும். அதற்கு “யெகொவா இரட்சிப்பவர் (Jehovah Saves)” என்று அர்த்தம். “கிறிஸ்து” என்பதற்கு “மேசியா (Messiah)” அல்லது “அபிஷேகிக்கப்பட்டவர் (Anointed one)” என்று அர்த்தம். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து, சிலுவையில் அறையப்பட்டு மரித்து, உயித்தெழுந்து, பரலோகத்திற்கு ஏறி சென்றபின், பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து, நமக்காக வேண்டுதல் செய்கிறார் (அப்போஸ்தலர் 7:55; எபேசியர்1:20,21; I பேதுரு 3:22). பிதாவாகிய தேவன் தம்முடைய சித்தத்தின்படியே, இயேசுகிறிஸ்துவைக் கொண்டு எல்லாவற்றையும் செய்கிறார் என்று நாம் பார்த்தோம். 

பரிசுத்த ஆவியாகிய தேவன்:

பிதாவாகிய தேவனுடைய ஆவியானவரையே பரிசுத்த ஆவி என்று அழைக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் பிதாவாகிய தேவனிடத்திலிருந்து அருளப்படுபவர். இவரே தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவில் செயல்பட்டவர் (கலாத்தியர் 4:6). பிதாவாகிய தேவன் தம்முடைய சித்தத்தின்படி, இயேசு கிறிஸ்து மூலமாய் செய்கிற ஒவ்வொரு காரியங்களுக்கும் உயிரோட்டம் கொடுத்து நிறைவேற்றிமுடிப்பவர் பரிசுத்த ஆவியானவர். ஆதியிலே தேவன் ஆதாமைப் படைத்தபொழுது, தேவன் அவனுடைய நாசியிலே ஊதி அவனுக்கு ஜீவனைக் கொடுத்தார். தேவனிடத்திலிருந்து புறப்பட்டு மனிதனுக்கு உயிரைக் கொடுத்தது பரிசுத்த ஆவியே ஆகும் (ஆதியாகமம் 2:7; யோபு 33:4). 

நாம் தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறபொழுது, நம்முடைய வாழ்க்கையை புதுப்பித்து, இரட்சிப்பின் கிரியையை நடப்பித்து, நம்மை தேவனுடைய குமாரனுடைய சாயலில் மாற்றுவது பரிசுத்த ஆவியினுடைய வேலையே ஆகும். அதுபோல நாம் இரட்சிக்கப்பட்டு பிசாசின் ஆளுகையிலிருந்து விடுவிக்கப்பட்டு, தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளைகளாய் மாறும்பொழுது, நமக்கு ஒரு முத்திரை கொடுக்கப்படுகின்றது (எபேசியர் 1:14; 4:30). அது பரிசுத்த ஆவியின் முத்திரை (Seal of the Holy Spirit). 

பரிசுத்த ஆவியானவர் வெறும் காற்றோ, நெருப்போ, மூச்சோ அல்ல. அவர் ஆள்துவம் உடையவர். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தைவிட்டு போவதற்கு முன்பாக, துக்கத்துடன் காணப்பட்ட தம்முடைய சீடர்களைப் பார்த்து, “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன். நான் உங்களிடத்தில் வருவேன் (யோவான் 14:18)” என்று கூறினார். தான் போய்விட்டு அவர்களோடே கூட என்றென்றைக்கும் இருக்கும்படியாக பரிசுத்த ஆவியாகிய “தேற்றரவாளனை (Comforter)” அனுப்புவதாகவும் வாக்களித்தார். பரிசுத்த ஆவியானவர் அவர்களோடேகூட இருந்து, இயேசு கிறிஸ்து அவர்களோடேகூட இருக்கும்பொழுது என்னென்ன கிரியைகளை செய்தாரோ அவையெல்லாவற்றையும் பரிசுத்த ஆவியானவர் செய்வார் என்றும் அவர்களை ஆறுதல் படுத்தினார் (யோவான் 14:16-18, 26; 16:7,8). இந்த வாக்குத்தத்தம், பெந்தெகொஸ்தே தினத்தன்று, மேல்வீட்டறையில் கூடியிருந்த 120 பேர் மீது பரிசுத்த ஆவியானவர் வந்திறங்கினபொழுது நிறைவேறியது. 

ஒன்றான மெய் தெய்வமாகிய பிதாவாகிய தேவன்,  ஆதிமுதலாய் பிதாவினுடைய வார்த்தையாய் அவரோடே இருந்து மாம்சத்தில் அவதரித்த அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து, தேவன் தம்மிடத்திலிருந்து நமக்கு பகிர்ந்தளித்த பரிசுத்த ஆவியானவர் – இவர்களையே பரிசுத்த திரித்துவம் என்று அழைக்கிறோம். 

மனப்பாட வசனம்: 1 தீமோத்தேயு 3:16

ஆதார நூற்களின் பட்டியல்:

1.      The Attributes of God. (Retrieved 6th August 2020 from https://www.blueletterbible.org/faq/attributes.cfm)

( மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களிலிருந்து இந்த புஸ்தகத்தை ஆக்கியோர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது) 

பயிற்சி

கீழ்கண்ட கிரியைகளில் திரியேக தேவனுடைய செயல்பாடுகளை கொடுக்கப்பட்டுள்ள வசங்களின் அடிப்படையில் எழுதவும்

1.     சிருஷ்டிப்பு (ஆதியா 1:1 – 2:7; யோபு 33:4; கொலோ 1:16, யோவான் 1:3; எபி 1:2; 1 கொரி 8:6)

     பிதா                  :

     குமாரன்           :

     பரிசுத்த ஆவி :          

2. இயேசுகிறிஸ்துவின் பிறப்பு: (லூக்கா 1:27-35; பிலிப்பியர் 2:6,7; ஏசாயா 48:16)

     பிதா                  :

     குமாரன்           :

     பரிசுத்த ஆவி : 

3. இயேசுகிறிஸ்துவின் ஞானஸ்நானம்: (மத்தேயு 3:13-17)

     பிதா                  :

     குமாரன்           :

     பரிசுத்த ஆவி :

 

4. இயேசுகிறிஸ்துவின் ஊழியம் (லூக்கா 4:1-21; அப்போஸ்தலர் 10:38; யோவான் 17:4,6,8)

     பிதா                  :

     குமாரன்           :

     பரிசுத்த ஆவி :

5. இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் (பிலிப்பியர் 2:6-11; எபிரெயர் 2:10; 9:14)

     பிதா                  :

     குமாரன்           :

     பரிசுத்த ஆவி : 

6. இரட்சிப்பு (தீத்து 3:4-7; எபேசியர் 1:3-14; 2:12-22; ரோமர் 8:16; 1 யோவான் 3:24)

     பிதா                  :

     குமாரன்           :

     பரிசுத்த ஆவி : 

7. தற்காலத்தில் / சபைக் காலத்தில் (மத்தே 6:10; எபேசி1:20-23; ரோமர் 16:7-14)

     பிதா                  :

     குமாரன்           :

     பரிசுத்த ஆவி :

For Sunday School activities and stories in English

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    கிறிஸ்தவத்தின் கோட்பாடு, “………………………. கோட்பாடு” ஆகும்.

2.     இயேசுகிறிஸ்துவுக்கு “………………………………………………” என்கிற பெயரும் உண்டு

3.     கிறிஸ்து என்பதற்கு “……………………” அல்லது “…………………………………….” என்று அர்த்தம்.

4.    நாம் தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளைகளாய் மாறும்பொழுது, நமக்கு முத்திரை கொடுக்கப்படுவது ………………………………………… முத்திரை. 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  தேவனுடைய தோற்றத்தை பற்றி நாம் அறிந்திருப்பது என்ன?

 

2. பரிசுத்த திரித்துவம் என்றால் என்ன?

 

3. தேவன் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர் என்றால் என்ன என்பதை விளக்கவும்?

 

4.  நம்முடைய வாழ்வில் பரிசுத்த ஆவியானவருடைய வேலைகளில் சிலவற்றைக் கூறவும்? 

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  தேவனுடைய தன்மைகளைப் பற்றி எழுதவும்.

 

 


No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...