Thursday, August 13, 2020

பத்து நீதிமான்கள் காணப்பட்டாலோ? (Abraham Prays For Sodom and Gomorrah), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 4

இளநிலை வகுப்பு (JUNIOR) 

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose. 

பாடம் – 4
பத்து நீதிமான்கள் காணப்பட்டாலோ?

நோவாவினுடைய வம்சாவளியில், தேராகு என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் தான் ஆபிராம். இவரது பெயரே பின்னர் “ஆபிரகாம்” என்று மாற்றப்பட்டது. இவர் “ஊர்” என்கிற பட்டணத்திலே வசித்து வந்தார். அது தற்போதைய ஈராக் தேசத்தில் உள்ளது. பூமியில் பாவம் பெருகி இருந்தபொழுது நோவாவின் காலத்தில் தேவன் ஏற்கெனவே ஒரு தடவை பூமியை அழித்திருந்தாலும், ஜனங்கள் எந்த ஒரு உணர்வுமின்றி மறுபடியும் பாவம் செய்யத் தொடங்கினார்கள். நோவாவிற்கு பத்தாம் தலைமுறையான ஆபிராமின் தலைமுறையை எட்டினபொழுது, ஜனங்கள் தங்களைப் படைத்த தெய்வத்தை மறந்து, தங்களுக்கென்று தெய்வங்களை உண்டு பண்ணி வணங்கத் தொடங்கினார்கள்.

 

அப்பொழுது ஆண்டவர் அந்த காலக் கட்டத்திலே வாழ்ந்த ஜனங்களுக்குள்ளே, ஆபிராமை உண்மையுள்ளவராய்க் கண்டார். அதனால் அவரைத் தெரிந்துகொண்டு அவருக்கு தம்மை வெளிப்படுத்த விருப்பமானார். நாம் முந்தின பாடங்களில் பார்த்ததுபோல சாத்தானை அழிப்பதற்காக ஸ்திரீயின் வித்தாக ஒரு இரட்சகரை பிறக்கப் பண்ணுவதற்கு ஒரு பரிசுத்தமான ஜனத்தை தேவன் தேடி பாதுகாத்துக் கொண்டே வந்தார். பரிசுத்தம் என்றால் பாவத்திற்கு விலகி, தேவன் நமக்கு கொடுத்திருக்கிற கட்டளைகளை பாதுகாத்து நடப்பது.

 

தேவன் ஆபிராமிடம் அவர் வசித்து வந்த தேசத்தையும், அவருடைய இனத்தாரையும் விட்டுவிட்டு தான் காண்பிக்கும் தேசத்திற்கு போகும்படியாகக் கூறினார். ஆபிராம் உடனே கீழ்ப்படிந்து ஆண்டவர் காண்பிக்கும் தேசத்திற்கு போகப் புறப்பட்டார். ஆபிராமுடன் அவருடைய மனைவியாகிய சாராயும், தகப்பனாகிய தேராகும், அவருடைய சகோதரனுடைய மகனாகிய லோத்துவும் புறப்பட்டார்கள். அவர் தேவன் காட்டுகிற தேசத்திற்கு நேராக பிரயாணம் செய்கிறபொழுது “மம்ரே” என்கிற சமபூமியில் தன்னுடைய கூடாரத்தை இட்டு தங்கியிருந்தார்.

 ஒருநாள் பகல் வேளையிலே, வெப்பம் அதிகமாயிருந்த பொழுது ஆபிரகாம் தன்னுடைய கூடாரத்தின் வாசலிலே அமர்ந்திருந்தார். அப்பொழுது தன்னுடைய கூடாரத்திற்கு எதிரே மூன்று மனிதர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். பரிசுத்த வேதாகமத்தில் ஆபிரகாம் தேவனை தரிசித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆபிரகாம் அவர்களைப் பார்த்தவுடன் ஓடி சென்று அவர்களை வரவேற்று தான் அவர்களுடைய பாதங்களைக் கழுவுவதற்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து, பின்னர் அவர்களது பசியை ஆற்றுவதற்கு கொஞ்சம் உணவு கொண்டு வரும் வரை அவர்கள் அங்கிருந்து செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

பழங்காலங்களில், இப்பொழுது இருப்பது போல வாகனங்களோ, நவீன போக்குவரத்து வசதிகளோ கிடையாது. அதுபோல வழிப்போக்கர் தங்குவதற்கு விடுதிகளும் இல்லை. அதனால் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு செல்லுகிற யாராவது ஒரு ஊருக்கு வந்தால், ஊரில் உள்ள ஜனங்கள் அவர்களை வரவேற்று அவர்களுக்கு உணவும், தங்கும் இடமும் அளிப்பது வழக்கம். அவ்வாறே ஆபிரகாமும் தன்னுடைய கூடாரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த விருந்தினரைக் கண்டபொழுது அவர்களை உபசரிக்க விரைந்தார்.

 ஆபிரகாம் அவர்களுக்கு அப்பமும், சமைத்த கன்றும், வெண்ணெயையும், பாலையும் அளித்தார். அவர்கள் சாப்பிடும் பொழுது ஆபிரகாம் அவர்கள் அருகே நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த மூன்று மனிதரில் ஒருவர் ஆபிரகாமைப் பார்த்து, அவருடைய மனைவியாகிய சாராள் விரைவில் ஒரு மகனைப் பெற்றெடுக்க போவதாகக் கூறினார். பின்னர் அந்த மனிதர் எழுந்து சோதோம் என்கிற பட்டணத்திற்கு நேராகப் பிரயாணப்பட்டார்கள். அப்பொழுது ஆண்டவர் சோதோம் பட்டணத்திற்கு தாம் செய்ய நினைத்த காரியத்தை ஆபிரகாமிடமிருந்து மறைக்கக் கூடாது என்று எண்ணினார்.

 

ஆண்டவர் ஆபிரகாமிடம் சோதோமில் மிகவும் மோசமான பாவசெயல்கள் நடந்து கொண்டிருப்பதாலும், அவர்களுடைய தீயவழியின் கூக்குரல் தம்மிடத்திற்கு வந்தெட்டியிருப்பதாகவும், அவர்களை பார்ப்பதற்காக தாம் வந்திருப்பதாகக் கூறினார். அப்பொழுது அந்த மூன்று மனிதரில் இரண்டு பேர் சோதோம் பட்டணத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தார்கள். ஆபிரகாமோ தன்னுடன் பேசிக்கொண்டிருந்த ஆண்டவருடன் தன்னுடைய உரையாடலைத் தொடர்ந்தார். ஆபிரகாமுக்கு ஆண்டவர் சோதோமை அழிக்கப் போகிறார் என்பது புரிந்து போனது. ஆபிரகாமுடைய சகோதரனுடைய மகனாகிய லோத்து அங்கு தான் வாழ்ந்து கொண்டிருந்தார்.

 ஆபிரகாம் சோதோம் பட்டணம் தப்புவிக்கப்படும்படி ஆண்டவரிடம் மன்றாடும்படி தீர்மானித்தார். ஆபிரகாம் ஆண்டவரிடம், “அந்தப் பட்டணத்திலே ஐம்பது நீதிமான்கள் இருந்தால் அந்தப் பட்டணத்தை அழிப்பீரோ?” என்று கேட்டார். அப்பொழுது ஆண்டவர் அழிப்பதில்லை என்றார். ஆபிரகாமுக்கு அந்தப் பட்டணத்திலே ஐம்பது நீதிமாகள் இருப்பார்கள் என்கிற நம்பிக்கை இல்லை. அதனால் 45 நீதிமான்கள் இருந்தாலோ என்று கேட்டார். அதற்கும் ஆண்டவர் அழிப்பதில்லை என்றார். பின்பு ஆபிரகாம் ஆண்டவரிடம் நாற்பது நீதிமான்கள், முப்பது நீதிமான்கள், இருபது நீதிமான்கள் என்று கொஞ்சம், கொஞ்சமாக பேரம் பேசினார். கடைசியாக “பட்டணத்திலே பத்து நீதிமான்கள் இருந்தாலோ?” என்று கேட்டார். ஆண்டவர் அழிப்பதில்லை என்றார். ஆனால் சோதோம் பட்டணத்திலே லோத்துவைத் தவிர வேறு ஒரு நீதிமானும் இல்லை. 

ஆண்டவர் அதனால் சோதோம் பட்டணத்தை அழிப்பதற்கு ஆயத்தமானார். தூதர்கள் லோத்துவையும், அவனுடைய குடும்பத்தாரையும் சோதோம் பட்டணத்தை விட்டு வெளியேறுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் தாமதித்துக் கொண்டேயிருந்தபொழுது, ஆண்டவர் ஆபிரகாமை நினைத்து, லோத்தின் குடும்பத்தின்மீது வைத்த இரக்கத்தினாலே, தூதர்கள் அவர்கள் கையைப் பிடித்து சோதோம் பட்டணத்துக்கு வெளியே கொண்டு வந்து விட்டார்கள். பின்னர் ஆண்டவர்  வானத்திலிருந்து நெருப்பையும், கந்தகத்தையும் பொழியப்பண்ணி சோதோம் பட்டணத்தை அழித்தார். லோத்தின் மனைவியோ தான் விட்டு வந்த பட்டணத்தைத் திரும்பி பார்த்து உப்புதூணாக மாறினாள். 
 சவக்கடல் அருகே உள்ள சோதோம் மலையில் லோத்தின் மனைவியின் உப்புத்தூண். Picture credit: Creative commons License

வேத பகுதி: ஆதியாகமம் 18,19

மனப்பாட வசனம்: நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. (யாக்கோபு 5:16)

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    ஆபிரகாம் “………………….” என்கிற பட்டணத்திலே வசித்து வந்தார்.

2.     ஆபிரகாம் “……………………….” என்கிற சமபூமியில் தன்னுடைய கூடாரத்தை இட்டு தங்கியிருந்தார்.

3.    ஆபிரகாமுடைய சகோதரனுடைய மகனாகிய ……………………. சோதோமில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

4.    சோதோம் பட்டணத்திலே ……………………… தவிர வேறு ஒரு நீதிமானும் இல்லை.

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  ஆபிரகாமுடன் கூட யாரெல்லாம் புறப்பட்டார்கள்?

 

2.  ஆபிரகாம் விருந்தினருக்கு என்ன உணவளித்தார் ?


 

3.  ஆண்டவர் சோதோமைப் பார்க்கும்படி எதற்காக வந்தார்?

 

4.  ஆண்டவர் ஏன் சோதோமை அழித்தார்?


கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1. ஆபிரகாம் தேவனிடம் சோதோமிற்காக எவ்வாறு விண்ணப்பம் பண்ணினார்?

 

 

 

No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...