Thursday, August 13, 2020

தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஈசாக்கு (Isaac Blessed by the Lord), இடைநிலை வகுப்பு (Intermediate), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 4

இடைநிலை வகுப்பு (INTERMEDIATE) 

வயது: 12 - 13 வயது
வகுப்பு: VII & VIII

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 4

தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஈசாக்கு 

தேவன் ஆபிரகாமிடம், அவர் பல ஜாதிகளுக்கும், நாடுகளுக்கும் தகப்பனாகப் போவதாக வாக்குத்தத்தம் செய்திருந்தார். ஆபிரகாமுக்கு நூறு வயதாயிருக்கும்பொழுது, வாக்குத்தத்தத்தின் மகனாக பிறந்தவன் தான் ஈசாக்கு. அவன் வளர்ந்தபொழுது, ஆபிரகாம் அவனுடைய திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய விரும்பினார். தன்னுடைய வீட்டின் மூத்த வீட்டு விசாரணைக்காரனான ஒரு ஊழியரை அழைத்து, தன்னுடைய மகனுக்கு தன்னுடைய சொந்த ஊருக்கே சென்று ஒரு பெண்பார்க்கும்படி கூறினார். பழங்காலங்களில் செல்வந்தரான மனிதர்கள் தங்களுடைய வீட்டு காரியங்களை நிர்வாகிப்பதற்காக நம்பிக்கைக்குரியவர்களான மனிதர்களை வீட்டு விசாரணைக்காரராக நியமிப்பது வழக்கம். 

ஆபிரகாமின் ஊழியக்காரனின் பிரயாணம்:

ஆபிரகாமின் ஊழியக்காரன், ஆபிரகாமின் இனஜனங்கள் வாழ்ந்த மெசொப்பொத்தாமியா தேசத்திற்கு போகப் புறப்பட்டார். தன்னுடன் ஆபிரகாமின் ஒட்டகங்களில் பத்தையும், பல விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்து சென்றார். அவர் மெசொப்பொத்தாமியா தேசத்தை சென்றடைந்து, ஊருக்கு வெளியே உள்ள ஒரு தண்ணீர் துரவண்டையிலே (கிணற்றண்டையிலே) நின்று கொண்டு தன்னுடைய மனதிலே ஒரு விண்ணப்பம் செய்தார். இந்த ஊர் பெண்கள் தண்ணீர் எடுக்க வரும்பொழுது, நான் குடிக்க தண்ணீர் கேட்பேன். அப்பொழுது உமக்கும் தண்ணீர் கொடுத்து, உம்முடைய ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன் என்று சொல்லும் பெண்ணே ஈசாக்குக்கு நியமிக்கப்பட்ட பெண்ணாய் இருக்கட்டும் என்று விண்ணப்பித்தார். 

தண்ணீர் எடுக்க வந்த ரெபெக்காள்:

அவர் அப்படி சொல்லி முடிக்கும் முன்பே, ஆபிரகாமுடைய சகோதரனுடைய பேத்தியாகிய, ரெபெக்காள் என்கிற ஒரு பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். ஆபிரகாமின் ஊழியக்காரன் அவளிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அப்பொழுது அவள் அவரிடம், “குடியும் என் ஆண்டவனே” என்று சொல்லி தன்னுடைய குடத்தை இறக்கி அவருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள். அதுமட்டுமல்லாமல், அவருடைய ஒட்டகங்களுக்கும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். 

ரெபெக்காளும் ஈசாக்கும்:

ஆபிரகாமின் ஊழியக்காரன் ரெபெக்காளுக்கு பொன்னால் செய்த காதணிகளையும், வளையல்களையும் கொடுத்து, அவள் யாரென்று விசாரித்தார். ரெபெக்காள் தன்னுடைய வீட்டிற்கு சென்று எல்லாவற்றையும் கூறினாள். அப்பொழுது ரெபெக்காளுடைய சகோதரனான லாபான், தன்னுடைய தந்தையாகிய பெத்துவேலை சந்திப்பதற்காக ஆபிரகாமின் ஊழியக்காரனை அழைத்து சென்றார். ஆபிரகாமின் ஊழியக்காரர் பெத்துவேலிடம் நடந்த சம்பவங்களை கூறினார். அப்பொழுது அவர்கள் ரெபெக்காளை, ஈசாக்கை திருமணம் செய்வதற்காக ஆபிரகாமின் ஊழியக்காரனோடே அனுப்ப சம்மதித்தார்கள். ஆபிரகாமின் ஊழியக்காரன், தன் சொந்த ஊருக்கு திரும்ப வந்து ஈசாக்கிடம் நடந்த யாவற்றையும் கூறினார். ஈசாக்கு ரெபெக்காளை மனைவியாக ஏற்றுக் கொண்டார். 

பெலிஸ்திய தேசத்திற்கு சென்ற ஈசாக்கு:

ஈசாக்குக்கும், ரெபெக்காளுக்கும் அநேக நாட்களாக பிள்ளைகள் இல்லை. ஈசாக்கு ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்தார். ரெபெக்காளுக்கு இருபது வருடங்கள் கழித்து இரட்டைப்பிள்ளைகள் பிறந்தது. பல வருடங்கள் கழிந்தது, ஏசாவும் யாக்கோபும் வளர்ந்தார்கள். அப்பொழுது அவர்கள் வசித்து வந்த கானான் தேசத்திலே பஞ்சம் உண்டானது. அதனால் அவர்கள் கேரார் என்கிற ஊருக்கு, அபிமெலேக்கு என்கிற பெலிஸ்தியருடைய ராஜாவினிடத்திற்கு சென்றார்கள். ஈசாக்கினுடைய தகப்பனாகிய ஆபிரகாம் இதே இடத்தில் இதற்கு முன்பாக தங்கியிருந்தார். அப்பொழுது அங்கே அநேக கிணறுகள் வெட்டியிருந்தார். 

ஈசாக்கு நூறு மடங்கு ஆசீர்வதிக்கப்படுதல்:

ஆண்டவர் ஈசாக்கிற்கு தரிசனமாகி எகிப்திற்கு போக வேண்டாம் என்றும் இந்த இடத்திலே இருக்க வேண்டும் என்றும், தாம் ஆபிரகாமோடு பண்ணின உடன்படிக்கையை காப்பாற்றுவதாகவும் கூறினார். ஈசாக்கு ஆண்டவருடைய வாக்குக்கு கீழ்ப்படிந்து, பெலிஸ்தியருடைய தேசத்திலே குடியிருந்தார். ஈசாக்கு அந்த தேசத்திலே விதை விதைத்தார். மத்திய கிழக்கு நாடுகள், வனாந்திர பகுதிகளாய் இருப்பதால், கிணறு வெட்டி, தண்ணீர் கண்டுபிடித்து அதை பயன்படுத்துவது, உயிர்வாழ்வதற்கு இன்றியமையாததாகும். கர்த்தர் ஈசாக்கை ஆசீர்வதித்ததினால் அந்த வருடத்திலேயே நூறு மடங்கு அவனுக்கு விளைச்சல் கிடைத்தது. 

பெலிஸ்தியர் பொறாமை கொள்ளுதல்:

ஈசாக்குக்கு பெருந்திரளான செல்வங்கள் சேர ஆரம்பித்தது. அதனால் அவர் மிகவும் செல்வந்தராய் மாறினார். அதைப் பார்த்த பெலிஸ்தர் அவர் மேல் பொறாமை கொண்டார்கள். அதனால் அவர் வெட்டின கிணறுகளை மண்களால் நிரப்பி, உபயோகிக்கமுடியாதபடி செய்துவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல், பெலிஸ்தியருடைய ராஜாவாகிய அபிமெலேக்கு, ஈசாக்கைப் பார்த்து, நீ எங்களைப் பார்க்கிலும் பெரியவனாய் மாறிவிட்டாய், அதனால் எங்கள் தேசத்திலிருந்து போய் விடு என்றும் கூறினான். 

ஈசாக்கு கிணறு வெட்டுதல்:

ஈசாக்கு அவர்களோடு சண்டையிடாமல், அந்த இடத்திலிருந்து புறப்பட்டு கேரார் பட்டணத்துக்கு அருகே இருந்த பள்ளத்தாக்கான ஒரு இடத்திலே போய் குடியிருந்தார். பின்பு தன் தகப்பன் வெட்டியிருந்த பழைய கிணறுகளை மறுபடியும் வெட்டி சுத்தம் செய்தார். தன் தகப்பன் அவைகளுக்கு கொடுத்திருந்த பெயரையே அவைகளுக்கு மறுபடியும் சூட்டினார்.

 ஏசேக்கு - ஈசாக்கின் வேலைக்காரர் கிணறு வெட்டி, தண்ணீர் கண்டுபிடித்தார்கள், ஆனால் கேரார் ஊர் மேய்ப்பர் அந்த தண்ணீர் தங்களுடையது என்று வாக்குவாதம் பண்ணினார்கள். அதனால் அதற்கு “ஏசேக்கு” என்று பெயரிட்டார்.

சித்னா – ஈசாக்கின் வேலைக்காரர் மறுபடியும் கிணறு வெட்டினார்கள். அதைக்குறித்தும் கேரார் ஊர் மேய்ப்பர் சண்டையிட்டார்கள். அதனால் அதற்கு “சித்னா” என்று பெயரிடப்பட்டது.

ரெகொபோத் – திரும்பவும் ஈசாக்கின் வேலைக்காரர் கிணறு வெட்டினார்கள். அப்பொழுது அதைக் குறித்து யாரும் சண்டையிடவில்லை. அதனால் ஈசாக்கு, தேவன் தேசத்திலே நாம் பெருகும்படியாக நமக்கு இடம் கொடுத்திருக்கிறார் என்று சொல்லி அதற்கு “ரெகொபோத்” என்று பெயரிட்டார். 

அங்கேயிருந்து ஈசாக்கு பெயர்செபா என்கிற ஊருக்கு போனார். ஆண்டவர் ஈசாக்குக்கு மறுபடியும் தரிசனமாகி, ஆபிரகாமோடே இருந்தது போல அவனோடும் இருப்பதாக வாக்குக் கொடுத்தார். அங்கே ஈசாக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி ஆண்டவருடைய நாமத்தை தொழுது கொண்டார். 

சமாதான ஆணை:

ஈசாக்கு அங்கே தங்கியிருக்கும்பொழுது அபிமெலேக்கும், அவனுடைய நண்பர்கள் சிலரும் ஈசாக்கைக் காண வந்தார்கள். அவர்கள் ஈசாக்கிடம், ஆண்டவர் ஈசாக்கோடே இருக்கிறார் என்று தாங்கள் நிச்சயமாய் அறிந்து கொண்டதாகவும், அதனால் அவரோடே ஒரு சமாதான ஆணை செய்து கொள்ளுவதற்காக, அவரைக் காண வந்ததாகவும் கூறினார்கள். அதன்படி அவர்கள் ஒருவருக்கொருவர் தீங்கு இழைப்பதில்லையென்று ஆணை இட்டுக் கொண்டார்கள். 

பெயெர்செபா:

அன்றைய தினத்திலே ஈசாக்கின் வேலைக்காரர், கிணறு வெட்டின பொழுது அவர்களுக்கு தண்ணீர் கிடைத்தது. அதற்கு ஈசாக்கு, “சேபா” என்று பெயரிட்டார். அதனால் அந்த ஊறுக்கு பெயெர்செபா என்று பெயர் வந்தது. ஈசாக்கின் வாழ்க்கையில் ஆண்டவர் அவரோடிருந்ததால், அவர் ஆசீர்வதிக்கப்பட்டார். 

வேதபகுதி: ஆதியாகமம் 24, 26

மனப்பாட வசனம்: மத்தேயு 5:16

  

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.     ஆபிரகாமின் ஊழியக்காரன், ஆபிரகாமின் இனஜனங்கள் வாழ்ந்த ………………………………………. தேசத்திற்கு போகப் புறப்பட்டார்.

2.    கர்த்தர் ஈசாக்கை ஆசீர்வதித்ததினால் அந்த வருடத்திலேயே ……………………….. மடங்கு விளைச்சல் கிடைத்தது.

3.     தேவன் தேசத்திலே நாம் பெருகும்படியாக நமக்கு இடம் கொடுத்திருக்கிறார் என்று சொல்லி அதற்கு “…………………………….” என்று பெயரிட்டார்.

4.       அபிமெலேக்கும், அவனுடைய நண்பர்கள் சிலரும் ஈசாக்கோடே …………………………… ஆணை செய்து கொள்ள வந்தார்கள். 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.    ஆபிரகாமின் ஊழியக்காரர் தண்ணீர் கேட்டபொழுது ரெபெக்காள் செய்தது என்ன?

 

2.    ஈசாக்கு ஏன் எகிப்திற்கு செல்லாமல் கேரார் ஊர் சென்றார்?

 

3.      அபிமெலேக்கு ஏன் ஈசாக்கைப் பார்க்க கேரார் பள்ளத்தாக்குக்கு வந்தார்?

 

4.      பெயர்செபா பட்டணத்துக்கு ஏன் அந்த பெயர் கொடுக்கப்பட்டது?

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1. ஈசாக்கு கேரார் பள்ளத்தாக்கிலே வெட்டின கிணறுகளை பற்றி எழுதவும்?

 

 

No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...