Showing posts with label பாடம் - 11. Show all posts
Showing posts with label பாடம் - 11. Show all posts

Sunday, August 22, 2021

பஸ்கா ஆட்டுக்குட்டி (The Passover Lamb), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 11

மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது

வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.


பாடம்- 11

பஸ்கா ஆட்டுக்குட்டி

இதற்கு முந்தின பாடத்திலே தேவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து விடுவிப்பதற்காக, எகிப்தியர் மேல் அனுப்பின பத்து வாதைகளை பற்றி பார்த்தோம். அதில் கடைசியாக அனுப்பப்பட்ட தலைப்பிள்ளை சங்காரம் என்ற கொடூர வாதைக்குப் பின்னரே பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே விட்டான் என்பதை நாம் அறிவோம். எகிப்தியரின் தலைப்பிள்ளைகள் சங்கரிக்கப்பட்ட அந்த இராத்திரியிலே, இஸ்ரவேலர் செலுத்தும்படி தேவன் கட்டளையிட்ட பலி தான் பஸ்கா ஆட்டுக்குட்டி. பஸ்கா என்பது எபிரெய மொழியின் “பெஸஹா (Pesacha)” என்ற வார்த்தையைக் குறிக்கும். இதற்கு “கடந்து போகுதல் (Passover)” என்று அர்த்தமாகும்.

Sweet Publishing/Freebibleimages.org

பஸ்கா ஆட்டுக்குட்டி

தேவன் இஸ்ரவேல் ஜனங்களை பஸ்காவை ஆசரிக்கக் கூறினபொழுது அதை எவ்வாறு ஆசரிக்க வேண்டும் என்கிற முறைமைகளையும் கற்றுக் கொடுத்தார். இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கென்று ஒரு ஆட்டுக்குட்டியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த ஆட்டுக்குட்டி ஆணும், ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். அதில் எந்த ஒரு ஊனமோ, பழுதோ இருக்கக் கூடாது. அந்த ஆட்டுக்குட்டியை நிசான் மாதம் பத்தாம் தேதியே தேர்ந்தெடுத்து வீட்டிற்கு கொண்டுவர வேண்டும். யூத நாட்காட்டியின் அடிப்படையில் நிசான் மாதம் யூதர்களின் முதலாம் மாதமாகும். வீட்டிலே அதை நான்கு நாட்கள் வைத்த பின்னர் குடும்பத்தலைவர்கள், அந்த ஆட்டுக்குட்டியை பதினான்காம் தேதி சாயங்காலத்திலே பலி செலுத்த வேண்டும். பலி செலுத்தும்பொழுது அந்த ஆட்டுக்குட்டியின் எந்த ஒரு எலும்பையும் முறிக்கக் கூடாது. அந்த பலியின் மாம்சத்தை வீட்டிலிருந்து வெளியே கொண்டு போகக் கூடாது (யாத்திராகமம் 12:46). 

பஸ்கா – “வாதை கடந்து போகுதல்”

பஸ்கா ஆட்டுக்குட்டியை பலியிட்டு முடித்தவுடன், அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை ஈசோப்புக் கொழுந்தின் கொத்தில் தோய்த்து, வீட்டுவாசலின் நிலைக்கால்களிலும், நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும். (ஈசோப்பு என்பது மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் ஒரு மூலிகைச் செடியாகும். இதற்கு மருத்துவ தன்மை, சுத்திகரிக்கும் தன்மை மற்றும் உணவிற்கு சுவையூட்டும் தன்மை இருப்பதாகக் கருதப்படுகிறது. வேதாகமக் காலத்தில் மக்களையும், வீடுகளையும் சுத்திகரிப்பு செய்வதற்கு இது பயன்படுத்தப்பட்டது). 

எபிரெய மொழியில் "ஈஸோவ்" என்று அழைக்கப்பட்ட ஈசோப்பு செடி

பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் வீட்டின் நிலைக்காலில் பூசப்பட்ட பின், மறுநாள் காலை வரைக்கும் இரத்தம் பூசப்பட்ட வீட்டை விட்டு வெளியே செல்லுவதற்கு ஒருவருக்கும் அனுமதி இல்லை. அந்த நாள் இராத்திரியிலே, சங்கரிக்கும் வாதை தேசத்திலே கடந்து செல்லும்பொழுது, வீட்டின் நிலைக்கால்களிலே இரத்தம் பூசப்பட்டிருக்கிறதைக் காணும்பொழுது தேவன் சங்காரக்காரனை அந்த வீடுகளில் வரவிடாமல் அந்த வீடுகளைக் கடந்து போவார். ஆட்டுக்குட்டியின் இரத்தம் நிலைக்கால்களில் பூசப்படாமல் இருக்கும் வீடுகளில் உள்ள தலைப்பிள்ளைகள் சங்கரிக்கப்படும். ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களிடம், பஸ்கா பலியை எகிப்திலிருந்து புறப்படும்பொழுது மாத்திரமல்ல, அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தேவன் தங்கள் வீடுகளை கடந்து போனதை நினைவு கூறும்படி அதை ஆசரிக்க வேண்டும் என்று கூறினார். 

பஸ்கா பண்டிகை / பஸ்கா விருந்து

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த இராத்திரியிலே ஆசரித்த விருந்து தான் பஸ்கா விருந்து. இஸ்ரவேல் ஜனங்கள் பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட வேண்டும். அதை புளிப்பில்லாத அப்பத்தோடும், கசப்பான கீரைகளோடும் சாப்பிட வேண்டும் என்று கூறினார். புளிப்பில்லாத அப்பம் என்றால் புளிப்பு முகவர் (Leavening agents like yeast) எதுவும் சேர்க்கப்படாமல் செய்யப்படும் அப்பமாகும். இஸ்ரவேலர் பஸ்கா உணவை சாப்பிடும்பொழுது தங்களுடைய ஆடையில் உள்ள கச்சைகளைக் (Belt) கட்டிக் கொண்டும், காலணிகளை அணிந்து கொண்டும், அவர்களுடைய தடிகளை (கைக்கோல்களை) பிடித்துக் கொண்டும் இருக்க வேண்டும். சற்று நேரத்தில் எகிப்திலிருந்து விடுதலையாகி நீண்ட பிரயாணம் செய்ய இருக்கிறோம் என்பதை குறிப்பதற்காகவே இவ்வாறு செய்தார்கள்.

பஸ்கா பண்டிகையின்போது உண்ணப்பட்ட, "மட்ஸோ" அல்லது "மட்ஸா" என்று அழைக்கப்பட்ட புளிப்பில்லாத அப்பம்

பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் பஸ்கா ஆட்டுக்குட்டி

பழைய ஏற்பாட்டிலே முன்னடையாளமாகவும், குறியீடாகவும் காட்டப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியின் நிஜமான மற்றும் முழுமையான வெளிப்பாடாக தேவ ஆட்டுக்குட்டியாக இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டு காலத்திலே வெளிப்பட்டார். இதனால் தான் இயேசு கிறிஸ்துவை, யோவான் ஸ்நானகன் “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) என்றும் அப்போஸ்தலனாகிய பேதுரு “ குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டி” (1 பேதுரு 1:19) என்றும் அழைத்தனர்.

Agnus Dei (The Lamb of God), தேவ ஆட்டுக்குட்டி என்று பொருள்படும் "ஆன்யூஸ் தே" என்கிற ஓவியம் பிரான்ஸிஸ்கோ டே ஸுர்பரான் என்பவரால் 1635 - 1640ல் வரையப்பட்டது, இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்குவதை விளக்குவதற்காக கால்கள் கட்டி கிடத்தப்பட்டிருக்கிற ஒரு ஆட்டிக்குட்டியை இந்த ஓவியம் சித்தரிக்கிறது, பொது வலைகளம்.

பஸ்கா ஆட்டுக்குட்டி, இயேசு கிறிஸ்து – ஒரு ஒப்பீடு

1)     பஸ்கா ஆட்டுக்குட்டி பழுதற்றதாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவும் குற்றமற்றவராகவும் மாசற்றவராகவும் இருந்தார் (1 பேதுரு 1:19; எபிரெயர் 4:15).

2)     பஸ்கா பண்டிகை ஆசரிக்கப்பட்ட சமயத்திலேயே இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் அறையப்பட்டார் (யோவான் 18:28)

3)     பஸ்கா ஆட்டுக்குட்டியின் எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படவில்லை, அதேபோலவே சிலுவையில் அறையப்பட்ட மற்றவர்களுடைய எலும்புகள் முறிக்கப்பட்ட போதிலும் இயேசுகிறிஸ்துவின் எலும்புகள் முறிக்கப்படவில்லை (யோவான் 19:31-36).

4)     பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் வீட்டுவாசலின் நிலைக்கால்களில் தெளிக்கப்பட்டது போல இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அவரை விசுவாசிக்கிறவர்களுடைய இருதயத்தில் தெளிக்கப்பட்டிருக்கிறது (எபிரெயர் 9:12,13).

5)     வாசல் நிலைக்கால்களில் தெளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தம் சங்காரக்காரனை கடந்து போகப் பண்ணினது போல, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தேவனுடைய நியாயத்தீர்ப்பை நம்மிலிருந்து கடந்து போகப் பண்ணியிருக்கிறது (ரோமர் 5:9)

6)     முதலாவது பலியிடப்பட்ட பஸ்கா இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டதை குறித்தது போல இயேசுகிறிஸ்துவின் மரணம் நாம் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டதைக் குறிக்கிறது (ரோமர் 6:18; 8:3).

7)     பஸ்கா விருந்தின் போது, பலியிடப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் புளிப்பில்லாத அப்பத்தோடு சாப்பிடப்பட்டது. பஸ்கா ஆசரிக்கப்படும்போது வீட்டில் உள்ள புளிப்பு முகவர்களை(Leavening agents like yeast) வீடுகளிலிருந்து அகற்றுவது வழக்கம். அதைப் போலவே இயேசு கிறிஸ்துவின் தியாக பலியை விசுவாசிக்கிற யாவரும் தங்கள் இருதயங்களிலிருந்து புளிப்பூட்டுகிற செயல்களாகிய துர்குணம், பொல்லாப்பு ஆகியவற்றை அகற்றி விட்டு, புளிப்பில்லாத அப்பமாகிய துப்புரவு, உண்மை ஆகியவற்றோடு கிறிஸ்தவ வாழ்க்கையை ஆசரிக்க வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (1 கொரிந்தியர் 5:7,8). 

பழைய ஏற்பாட்டின் பஸ்கா ஆட்டுக்குட்டி, புதிய ஏற்பாட்டின் நிஜமான மற்றும் முழுமையான தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்துவின் முன்னடையாளமாகவே கொடுக்கப்பட்டது. இயேசுகிறிஸ்து தன்னுடைய பரிகார பலியின் மூலமாக ஜனங்களை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, நித்திய ஜீவனைக் கொடுத்து பரம கானானை அடைவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

வேத பகுதி: யாத்திராகமம் 12: 21 – 23, 42 - 49

மனப்பாட பகுதி: ஏசாயா 53:10,11

பயிற்சி

பஸ்கா ஆட்டுக்குட்டி கிறிஸ்துவின் ஒரு முன்னடையாளம். இது போல பல “கிறிஸ்துவின் முன்னடையாளங்கள்” பழைய ஏற்பாட்டில் உள்ளன. கொடுக்கப்பட்டுள்ள வசன ஆதாரத்தின் அடிப்படையில் அவற்றைக் கண்டு பிடிக்கவும். 

1.    முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். (1 கொரிந்தியர் 15:47)

பதில்: ஆதாம் 

2.    ………………………… இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். (எபிரெயர் 12:24)

பதில்:     

3.    அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை (எபிரெயர் 5:4,5)

பதில்: 

4.    ……………………… மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். (யோவான் 3:14)

பதில்: 

5.    இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். (எபிரெயர் 7:3)

பதில்: 

6.    ………………………. தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். (எபிரெயர் 3:2)

பதில்: 

7.    பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷராலல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற …………………………….. நமக்கு உண்டு. (எபிரெயர் 8:2)

பதில்:  

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    அந்த ஆட்டுக்குட்டி ஆணும், ………………………. வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்.

2.    ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை ……………………….. கொழுந்தின் கொத்தில் தோய்த்து, தெளிக்க வேண்டும்.

3.    பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை புளிப்பில்லாத அப்பத்தோடும், ……………………………….. சாப்பிட வேண்டும்

4.    ஆட்டுக்குட்டியின் இரத்தம் நிலைக்கால்களில் பூசப்படாமல் இருக்கும் வீடுகளில் உள்ள ………………………………. சங்கரிக்கப்படும். 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும் 

1.  பஸ்கா ஆட்டுக்குட்டி என்றால் என்ன?

 

2.  பஸ்கா விருந்தை எவ்வாறு ஆசரிக்க வேண்டும்?

 

3.  “கடந்து போகுதல்” என்ற பெயர் எதனால் கொடுக்கப்பட்டது?

 

4.  தேவன் பஸ்காவை ஒவ்வொரு வருடமும் எதற்காக ஆசரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்? 

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  பஸ்கா ஆட்டுக்குட்டியையும் இயேசுகிறிஸ்துவையும் ஒப்பிட்டு விளக்கவும்.  

 

 

Thursday, August 12, 2021

பிலேயாம் - குறிசொல்லுகிறவனாய் மாறின தீர்க்கதரிசி (Balaam - From a Prophet to a Soothsayer),இடைநிலை வகுப்பு (Intermediate) , ஞாயிறு பள்ளி வேதபாடம் - 11

இடைநிலை வகுப்பு (INTERMEDIATE) 

வயது: 12 - 13 வயது
வகுப்பு: VII & VIII

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் –11

பிலேயாம் – குறி சொல்லுகிறவனாய் மாறின தீர்க்கதரிசி 

முந்தைய பாடத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் நாற்பது வருட வனாந்திர வாழ்க்கையைப் பற்றி பார்த்தோம். இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணம் செய்து கானான் தேசத்தின் அருகே வந்து விட்டார்கள். கானான் தேசத்தில் நுழைவதற்கு முன்பாக எரிகோ தேசத்திற்கு அருகில் இருந்த யோர்தான் ஆற்றின் கரையில் மோவாப் சமவெளியில் தங்கியிருந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தன்னுடைய தேசத்தின் அருகே கூடாரங்களை அமைத்து தங்கியிருப்பதைப் பார்த்த ‘பாலாக்’ என்கிற மோவாப் தேசத்தின் ராஜாவிற்கு இது மிகுந்த கலக்கத்தைக் கொடுத்தது. இஸ்ரவேல் ஜனங்களின் பலத்தை அறிந்திருந்த மோவாபிய ராஜா, யுத்தத்தின் மூலமாக அல்ல, இஸ்ரவேல் ஜனங்கள் மேல் சாபங்களை கூறுவதன் மூலமே அவர்களை பலவீனப்படுத்த முடியும் என்று எண்ணினான்.

தீர்க்கதரிசியாகிய பிலேயாம்

பிலேயாம் என்கிற ஒரு தீர்க்கதரிசி ஐபிராத்து ஆற்றின் (யூப்ரடீஸ் ஆறு) அருகே இருந்த பெத்தூர் என்கிற ஊரிலே வாழ்ந்து வந்தான். தேவன் தன்னிடம் கூறுகிற வார்த்தைகளைக் கேட்டு அதை அப்படியே மக்களிடம் எடுத்து கூறுபவன் தான் தீர்க்கதரிசி. மோவாப் தேசத்தின் ராஜாவாகிய பாலாக் பிலேயாமிடம் ஆட்களை அனுப்பி தனக்கு உதவி செய்யும்படியாக இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க வேண்டும் என்றும் அதற்கு கூலி கொடுப்பதாகவும்  கூறினான். பிலேயாம் தன்னிடம் அனுப்பப்பட்ட ஆட்களிடம், அதைப்பற்றி தான் சுயமாக முடிவெடுக்க முடியாதென்றும், தேவனிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறினான். பின்பு பிலேயாம் தேவனிடம் விசாரித்த போது அவர்களுடன் செல்ல வேண்டாம் என்றும் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க வேண்டாம் என்றும் கூறினார். அதனால் பாலாக் ராஜாவின் ஆட்களை பிலேயாம் திரும்ப அனுப்பி விட்டான்.

மோவாபிற்கு சென்ற பிலேயாம்

அதன்பின்னர், பாலாக் ராஜா மறுபடியும் மிகவும் மதிப்பிற்குரிய தன்னுடைய மந்திரிகளையும், மிகவும் விலை உயர்ந்த பரிசுப்பொருட்களையும் அனுப்பி பிலேயாமை அழைத்தான். பிலேயாம் அவர்களுடன் செல்ல வேண்டும் என்று மிகவும் விரும்பினான். அதனால் மறுபடியும் ஆண்டவரிடம் சென்று அவர்களுடன் போகலாமா என்று விசாரித்தான். ஆண்டவர் அவன் விருப்பப்பட்டபடி அவனை சென்று வரச் சொன்னார். ஆனால் பிலேயாம் மோவாபிற்கு செல்லுவது ஆண்டவருக்கு விருப்பமில்லாதிருந்தது.

பிலேயாமிடம் பேசின கழுதை

பிலேயாம் வழியில் செல்லும்போதே கர்த்தருடைய தூதன் அவனுக்கு எதிர்ப்பட்டார். பிலேயாம் ஏறியிருந்த கழுதைக்கு கர்த்தருடைய தூதன் உருவின வாளோடு வழியிலே நிற்பது கண்களுக்கு தெரிந்தது. அதனால் கழுதை தூதனிடமிருந்து பிலேயாமை காப்பாற்றுவதற்காக, மூன்று முறை வழியை விட்டு விலகி சென்றது. ஆனால் பிலேயாமின் கண்களுக்கோ அது தெரியவில்லை. அதனால் அவன் தன்னுடைய கழுதையை மூன்று முறை அடித்தான். ஆண்டவர் கழுதையின் வாயைத் திறந்தார். அது பிலேயாமிடம் பேசி, தன்னைக் காரணமில்லாமல் எதற்காக அடிக்க வேண்டும் என்று கேட்டது. அப்பொழுது பிலேயாமின் கண்கள் திறக்கப்பட்டு, அவன் தூதனைப் பார்த்தான். தூதன் பிலேயாமிடம், இஸ்ரவேல் ஜனங்களைப் பற்றி ஆண்டவர் என்ன உரைக்கிறாரோ அதை மட்டுமே கூற வேண்டும் என்று கூறினார்.

"பிலேயாமும் அவனுடைய கழுதையும்" என்கின்ற இந்த ஓவியம், புகழ்பெற்ற டச்சு ஓவியர் ரெம்ப்ராண்ட் என்பவரால் 1626ஆம் ஆண்டு வரையப்பட்டது (பொதுகளத்திலிருந்து எடுக்கப்பட்டது)

ஆசீர்வாதங்களை உரைத்த பிலேயாம்

பிலேயாம் மோவாப் தேசத்திற்கு வந்த பொழுது, பாலாக் ராஜா அவனுக்கு மிகவும் மரியாதை செலுத்தினான். அவர்கள் இருவரும் சேர்ந்து காளைகளையும், ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள். பின்னர் பாலாக் ராஜா பிலேயாமை, இஸ்ரவேல் ஜனங்களை நன்றாக பார்த்து சபிக்கக்கூடிய சிறந்த இடங்களுக்கு அழைத்து சென்றான். ஆனால் பிலேயாமோ, ஆண்டவர் தன்னிடம் கூறினபடியே, இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதித்தான். அதனால் பாலாக் ராஜா மிகவும் கோபமடைந்தான். பிலேயாமிற்கு கூலி கிடைக்காமல் போனது.

இஸ்ரவேல் ஜனங்களை இடறப்பண்ணின பிலேயாம்

பொருளாசையினால் நிரப்பப்பட்டிருந்த பிலேயாம், தன்னுடைய கூலியை எவ்விதத்திலாவது பெற்று விட வேண்டும் என்று எண்ணினான். தன்னால் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க முடியாது என்று அவன் அறிந்திருந்த படியால், இஸ்ரவேல் ஜனங்களை பாவம் செய்யும்படி செய்து, தங்களைத் தாங்களே தேவனுடைய சாபத்திற்குள்ளாக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். அதனால் இஸ்ரவேல் ஜனங்களுடைய பலத்தின் இரகசியத்தை அவன் மோவாப் ஜனங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுத்தான். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் யாருடனும் கலப்பதில்லை. அவர்கள் மற்ற ஜனங்களுடைய வழிகளைக் கற்றுக் கொண்டால் தேவனுடைய கோபம் அவர்கள் மேல் மூளும் என்பதை வெளிப்படுத்தினான். அதை அறிந்து கொண்ட மோவாபியர், இஸ்ரவேல் ஜனங்களை பாவம் செய்யப் பண்ணினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் மோவாபியரோடு கலந்து, அவர்கள் வழிகளைக் கற்றுக் கொண்டு மோவாபியருடைய தெய்வமாகிய பாகால்பேயோரை வழிபடத் தொடங்கினார்கள். அதனால் தேவனுடைய கோபம் இஸ்ரவேல் ஜனங்கள் மேல் வந்து, அவர்கள் தண்டிக்கப்பட்டு, 24,000 பேர் மரித்துப் போனார்கள்.


பேயோரின் குமாரனாகிய பிலேயாமைப் பற்றிய தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ள சுவற்றின் பகுதி, டெல் டேர் அல்லா என்கின்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, கிமு 9-8 நூற்றாண்டைச் சார்ந்தது, தற்போது ஜார்டன் நாட்டிலுள்ள அம்மான் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது (பொது களம்)

குறிசொல்லுகிறவனாய் மாறின பிலேயாம்

பரிசுத்த வேதாகமத்தில், எண்ணாகமம் 24ஆம் அதிகாரம் வரை பிலேயாம் ஒரு தீர்க்கதரிசியாகவே கருதப்பட்டான். அவன் தேவன் சொன்னதையே கூறினான். அவன் எப்பொழுது அநீதியின் கூலியை விரும்பி, தேவனுடைய ஜனங்களுக்கு எதிரான ஆலோசனையைக் கொடுத்தானோ, அப்பொழுதிலிருந்து அவன் குறிசொல்லுகிறவனாகக் கருதப்பட்டான் (யோசுவா 13:22). இஸ்ரவேல் ஜனங்கள் மீதியான் தேசத்தைக் கைப்பற்றினபொழுது, பிலேயாமையும் சேர்த்து கொன்றுபோட்டார்கள். அவன் தேவனுடைய தீர்க்கதரிசியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து குறி சொல்லுகிறவனாக தன்னுடைய வாழ்க்கையை முடித்தான். அதனால் கிறிஸ்தவ விசுவாசிகள் பின்பற்றக்கூடாத ஒரு கெட்டமாதிரியாகவே அவன் புதிய ஏற்பாட்டில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளான் (2 பேதுரு 2:15; வெளிப்படுத்தல் 2:14)

ஆவிகளை சோதித்தறிதல்

நாம் எல்லா ஆவிகளையும் தேவனுடைய பரிசுத்த ஆவி என்று எண்ணாமல் அவைகளை சோதித்தறிய வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது. தீர்க்கதரிசி என்பவன் தேவனால் ஏற்படுத்தப்படுபவன். தீர்க்கதரிசன வரம் என்பது தேவனால் கொடுப்படும் ஒரு வரமாகும். எந்த ஒரு மனிதனாலும் இன்னொருவரை தீர்க்கதரிசியாக ஏற்படுத்த முடியாது. தீர்க்கதரிசன வித்தையை எந்த ஒரு தீர்க்கதரிசன பள்ளியிலும் சென்று கற்றுக் கொள்ளவும் இயலாது. ஆகவே நாம் ஜாக்கிரதை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். சில வேளைகளில் நல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளாய் தங்களுடைய ஊழியத்தை ஆரம்பிப்பவர்களும், பின்னாட்களில் வழிமாறி பிலேயாமைப் போல குறிசொல்லுகிறவர்களாய் மாறுவதுண்டு. தேவனுடைய உண்மையான தீர்க்கதரிகள் தேவனுடைய ஜனங்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் கரிசனை உள்ளவர்களாய், அவர்களை நித்திய ஜீவனுக்கு நடத்துகிறவர்களாய் இருப்பார்கள்.  ஆனால் கள்ள தீர்க்கதரிசிகளோ ஜனங்களை மாம்ச இச்சையை நிறைவேற்றும்படியாக நடத்தி, இம்மைக்குரிய ஆசீர்வாதங்களையே மிகைப்படுத்தி பேசுவார்கள். ஆகவே நாம் ஏமாற்றப்படாதபடிக்கு பிலேயாமின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக அமைகிறது.

வேதபகுதி: எண்ணாகமம் 22 – 25

மனப்பாட வசனம்: மத்தேயு 7:15,16 

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/ 

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    பிலேயாம் வழியில் செல்லும்போது ………………………………. அவனுக்கு எதிர்ப்பட்டார்.

2.    கழுதை தூதனிடமிருந்து பிலேயாமை காப்பாற்றுவதற்காக, ……………….. முறை வழியை விட்டு விலகி சென்றது.

3.        இஸ்ரவேல் ஜனங்கள் மோவாபியருடைய தெய்வமாகிய ……………………………… வழிபடத் தொடங்கினார்கள்.

4.        பிலேயாம் தேவனுடைய தீர்க்கதரிசியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து ……………………………………………… தன்னுடைய வாழ்க்கையை முடித்தான்.

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.    பாலாக் ராஜா எதற்காக பிலேயாமை அழைத்தனுப்பினான்?

 

2.    பிலேயாமின் கழுதை ஏன் பேசினது?

 

3.      பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்களை ஏன் சபிக்கவில்லை?

 

4.      பிலேயாமிற்கு பாலாக்கிடத்தில் இருந்து குறிசொல்லுதலுக்கான கூலி கிடைத்ததா? ஏன்?

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  பிலேயாம் இஸ்ரவேலரை எவ்வாறு இடறப் பண்ணினான்?

 

 

  

Sunday, June 20, 2021

ஆசரிப்புக் கூடாரம் (The Tabernacle of God), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 11

இளநிலை வகுப்பு (JUNIOR) 
வயது: 10 - 11 வயது
வகுப்பு: V & VI

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 11
ஆசரிப்புக் கூடாரம்


Please click the followng link to visit the English Sunday School Lessons Blog

இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் வனாந்திரத்தில் இருந்தபொழுது, தம்மை எப்படி ஆராதிக்க வேண்டும் என்று ஆராதனை முறைமைகளை தேவன் கற்றுக் கொடுத்தார். அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஆராதிப்பதற்கு பயன்படுத்தும்படியாகவும், தேவனுடைய பிரசன்னம் இஸ்ரவேல் மக்களின் மத்தியில் தங்கியிருக்கும்படியாகவும் ஆசரிப்புக் கூடாரம் என்கிற ஒரு விசேஷமான இடத்தை ஆயத்தப்படுத்தும்படியாகக் கூறினார்.

ஆசரிப்புக் கூடாரத்தின் மாதிரி, http://www.kotipetripaavola.com/

 இந்த ஆசரிப்புக் கூடாரத்தை எப்படி கட்ட வேண்டும் என்று அதன் வடிவமைப்பையும், அதன் அளவுகளையும் தேவனே மோசேக்குக் கொடுத்தார். ஆசரிப்புக் கூடாரத்தை எப்படி செய்யவேண்டும் என்று ஒரு மாதிரியையும் தேவன் மோசேக்குக் காட்டிக் கொடுத்தார். ஆசரிப்புக் கூடாரம் செய்வதற்கு சுத்தமான பொன்னினால் மூடப்பட்ட சித்தீம் மரபலகைகள் பயன்படுத்தப்பட்டன.

 

 ஆசரிப்புக் கூடாரத்தில் வெளிப்பகுதி, உட்பகுதி என்று இரண்டு பகுதிகள் இருந்தது. ஆசரிப்புக் கூடாரத்தின் வெளிப்பகுதி பிரகாரம் (Courtyard) என்று அழைக்கப்பட்டது. உட்பகுதி பரிசுத்த ஸ்தலம் (Holy Place), மகா பரிசுத்த ஸ்தலம் (Most Holy Place) என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

 

 பிரகாரம் என்பது ஆசரிப்புக் கூடாரத்திற்கு வெளியே உள்ள இடமாகும். இங்கு ஆராதனைக்குப் பயன்படும் பலிபீடம் (Altar of burnt offerings) மற்றும் வெண்கலத் தொட்டி (bronze basin / Laver) ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. ஆராதனைக்காக கொண்டு வரப்பட்ட பலிப்பொருட்கள் எல்லாம் இந்த பலிபீடத்தில் தான் தகனிக்கப்பட்டது. ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கு செல்லுவதற்கு முன்பாக தங்களை கழுவிக் கொள்ளுவதற்காக தண்ணீர் நிரப்பப்பட்ட வெண்கலத்தொட்டி ஒன்றும் பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

வெண்கல பலிபீடத்தின் மாதிரி, favpng.com
வெண்கலத் தொட்டியின் மாதிரி வரைபடம்

 ஆசரிப்புக் கூடாரத்தின் உட்பகுதி பரிசுத்த ஸ்தலம் (Holy Place), மகா பரிசுத்த ஸ்தலம் (Most Holy Place) என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே (Holy Place) ஆராதனைக்குப் பயன்படும் மூன்று முக்கியமான பரிசுத்தமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை யாதென்றால்

1.    சமுகத்தப்பங்களை வைக்கும் மேஜை (Table of the bread of the presence)

2.    குத்து விளக்கு (Lampstand or the seven-branch candlestick)

3.    தூபபீடம் (Altar of incense) என்பவை ஆகும்.

                

                எருசலேமிலுள்ள டெம்பிள் இன்ஸ்டிட்யூட்டில் (Temple Institute) உருவாக்கப்பட்டுள்ள குத்து விளக்கின் மாதிரி

                                  தூபபீடத்தின் மாதிரி, Creative Commons License
                  சமுகத்தப்பத்து மேஜையின் மாதிரி, Bibleplaces.com

பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்த மேஜையில் ஆசாரியன் தினந்தோறும் புதிதாக சுடப்பட்ட பன்னிரண்டு அப்பங்களை கர்த்தருடைய சமுகத்தில் வரிசையாக அடுக்கி, தூபவர்க்கம் இட்டு வைக்க வேண்டும் (லேவியராகமம் 24:5-9). இந்த அப்பங்கள் சமுகத்தப்பங்கள் என்று அழைக்கப்பட்டன. பரிசுத்த ஸ்தலத்திலே ஆறு கிளைகள் உள்ள ஒரு குத்து விளக்கும் வைக்கப்பட்டிருந்தது. இந்த விளக்கு கர்த்தருடைய சந்நிதியில் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்படியாக இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. கடைசியாக பரிசுத்த ஸ்தலத்திலே வைக்கப்பட்டிருந்த பரிசுத்தப் பொருளின் பெயர் தூபபீடம் என்பதாகும். இதில் ஆசாரியர்கள் காலையிலும், மாலையிலும் தவறாமல் தூபம் காட்ட வேண்டும் என்று ஆண்டவர் கற்பித்தார். இந்த தூபபீடத்தில் தூபங்காட்டுவதற்காக ஒரு விசேஷமான பரிசுத்த தூபவர்க்கம் செய்யும் முறையையும் ஆண்டவர் கற்றுக் கொடுத்தார் (யாத்திராகமம் 30:34-38). 

ஆசரிப்புக் கூடாரத்தின் உட்பகுதியின் மாதிரி, பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் திரைச் சீலையினால் பிரிக்கப்பட்டிருக்கிறது

பரிசுத்த ஸ்தலத்திற்கு அடுத்தபடியாக ஆசரிப்புக் கூடாரத்தில் இருந்த பகுதியின் பெயர் மகா பரிசுத்த ஸ்தலம் என்பதாகும். இதில் தான் தேவனுடைய பிரசன்னம் தங்கின பரிசுத்தமான உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த உடன்படிக்கைப் பெட்டி என்பது சித்தீம் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பெட்டியாகும். இது முழுவதும் பசும் பொன்னினால் மூடப்பட்டது. 

                         கிருபாசனத்தால் மூடப்பட்டுள்ள உடன்படிக்கைப் பெட்டியின் மாதிரி,                                           Jeremy Park, Bible-Scenes.com

உடன்படிக்கைப் பெட்டிக்கு உள்ளாக பத்து கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் வைக்கப்பட்டிருந்தது (I இராஜாக்கள் 8:9; 2 நாளாகமம் 5:10; யாத்திராகமம் 40:20). மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம் சாட்சி சந்நிதியில் வைக்கப்பட்டிருந்தது (யாத்திராகமம் 16:33,34). ஆரோனுடைய துளிர்த்த கோல் சாட்சிபெட்டி அல்லது உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது (எண்ணாகமம் 17: 4,10,11). இதன் உள்ளே பத்து கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்த உடன்படிக்கைப் பெட்டிக்கு ஒரு விசேஷமான மூடி செய்யப்பட்டிருந்தது. அது கிருபாசனம் என்று அழைக்கப்பட்டது. அந்த மூடியில் இரு ஓரங்களிலும் ஒவ்வொரு கேரூபீன் அமர்ந்திருப்பது போல் செய்யப்பட்டிருந்தது. அந்த கிருபாசனத்தின் மீதுள்ள கேரூபீன்களின் நடுவில் இருந்து தான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தன்னுடைய கட்டளைகளை கற்பிப்பதாக தேவன் கூறினார். (உடன்படிக்கைப் பெட்டியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, இங்கு கிளிக் செய்யவும், மிகஇளநிலை பாடம் - 11, உடன்படிக்கைப் பெட்டி)

உடன்படிக்கைப் பெட்டிக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஆரோனுடைய துளிர்த்த கோல், மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம், Illustration by templeinstitute.org               

             இந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரதான ஆசாரியன் தவிர வேறு ஒருவரும் செல்லுவதற்கு அனுமதி இல்லை. பிரதான ஆசாரியன் கூட வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்ல முடியும். பரிசுத்த ஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிப்பதற்காக ஒரு திரைச்சீலை போடப்பட்டிருந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த பொழுது இந்த திரைசீலை மேலிருந்து கீழாக இரண்டாக கிழிந்து போனது. இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலமாக எல்லா மனிதர்களும், தேவனிடம் நேரடியாக தொடர்பு கொள்ளும்படியாக மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்ல முடியும் என்பதற்கு அது ஒரு அடையாளமாக அமைந்தது.

ஆசிரியர் குறிப்பு:

உடன்படிக்கைப் பெட்டிக்கு உள்ளே என்ன இருந்தது?

எபிரெயர் 9:4ஐ வாசிக்கும்பொழுது உடன்படிக்கைப்பெட்டிக்கு உள்ளே பத்து கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகள், ஆரோனுடைய துளிர்த்த கோல், மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம் ஆகியவை வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் I இராஜாக்கள் 8:9; 2நாளாகமம் 5:10 ஆகிய இடங்களில் உடன்படிக்கைப் பெட்டிக்கு உள்ளே பத்து கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் மட்டுமே வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு ஆரோனுடைய துளிர்த்த கோல், மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம் ஆகியவை பின்நாட்களில் உடன்படிக்கைப் பெட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டதாக சில விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றது. ஆனால் இவ்வகை விளக்கங்களுக்கு வேதாகமத்தில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

வேதாகமத்தை கூர்ந்து நோக்கினால் மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம் சாட்சி சந்நிதியில் வைக்கப்பட்டிருந்தது (யாத்திராகமம் 16:33,34). அதாவது சாட்சி பெட்டி என்று அழைக்கப்பட்ட உடன்படிக்கைப்பெட்டி வைக்கப்பட்ட சந்நிதானத்தில் வைக்கப்பட்டது. ஆரோனுடைய துளிர்த்த கோல் சாட்சிபெட்டி அல்லது உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது (எண்ணாகமம் 17: 4,10,11) என்று தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் எபிரெயர் 9:4ல் “உடன்படிக்கைப் பெட்டியில்” அதாவது உள்ளில் என்று அர்த்தங்கொள்ளும்படியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற கிரேக்க வார்த்தையாகிய “என் (en)” என்பது உள்ளில், அருகில், முன்பில், ஒரே இடத்தில் ஆகிய பல பொருள்படும். ஆகவே உடன்படிக்கைப் பெட்டியின் உள்ளாக இவை இருந்தன என்கிற அர்த்தத்தை நாம் எடுக்காமல், இவை எல்லாம் மகா பரிசுத்த ஸ்தலத்தின் சாட்சி சந்நிதியில் இருந்தன என்று புரிந்து கொள்ள வேண்டும். (1) உடன்படிக்கைப்பெட்டிக்கு உள்ளாக பத்து கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் இருந்தது (2)

ஆதார நூற்களின் பட்டியல்:

(1) Lyons, E. (March, 2010), Contents of the Ark of the Covenant, [On-line], URL: https://apologeticspress.org/contents-of-the-ark-of-the-covenant-2851/

(2) The Holy of Holies, [On-line], URL: https://templeinstitute.org/illustrated-tour-the-holy-of-holies/

(மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது)

வேத பகுதி: யாத்திராகமம் 25 - 30

மனப்பாட வசனம்: எபிரெயர் 10: 22



For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

 

                                                 பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    ஆசரிப்புக் கூடாரம் செய்வதற்கு சுத்தமான பொன்னினால் மூடப்பட்ட ………….. மரபலகைகள் பயன்படுத்தப்பட்டன.

2.    …………….. என்பது ஆசரிப்புக் கூடாரத்திற்கு வெளியே உள்ள இடமாகும்.

3.    குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும்படியாக இடித்துப் பிழிந்த தெளிவான ………………………………. பயன்படுத்தப்பட்டது.

4.    பரிசுத்த ஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிப்பதற்காக ஒரு ……………………….. போடப்பட்டிருந்தது. 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  ஆசரிப்புக் கூடாரம் என்றால் என்ன?


2.  வெண்கலத் தொட்டி எதற்காக வைக்கப்பட்டிருந்தது?


3.  உடன்படிக்கைப் பெட்டிக்குள் என்ன இருந்தது? 


4.  கிருபாசனம் எவ்வாறு செய்யப்பட்டிருந்தது?


கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  ‘மகா பரிசுத்த ஸ்தலம்’ என்றால் என்ன என்றும், அதன் சிறப்புகளைப் பற்றியும் எழுதவும்.






சாலொமோன் ராஜா கட்டின தேவாலயம் (King Solomon Builds the Temple of God), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

இளநிலை வகுப்பு (JUNIOR)  வயது :  10 - 11  வயது வகுப்பு :  V  & V I இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்...