மேல்நிலை வகுப்பு (SENIOR)
வயது: 14 - 15 வயது
வகுப்பு: IX & X
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for
free distribution among Sunday School children.
No part of this document can be
modified, sold or used for any commercial purpose.
பாடம்- 11
பஸ்கா ஆட்டுக்குட்டி
இதற்கு
முந்தின பாடத்திலே தேவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து விடுவிப்பதற்காக, எகிப்தியர்
மேல் அனுப்பின பத்து வாதைகளை பற்றி பார்த்தோம். அதில் கடைசியாக அனுப்பப்பட்ட தலைப்பிள்ளை
சங்காரம் என்ற கொடூர வாதைக்குப் பின்னரே பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து
வெளியே விட்டான் என்பதை நாம் அறிவோம். எகிப்தியரின் தலைப்பிள்ளைகள் சங்கரிக்கப்பட்ட
அந்த இராத்திரியிலே, இஸ்ரவேலர் செலுத்தும்படி தேவன் கட்டளையிட்ட பலி தான் பஸ்கா ஆட்டுக்குட்டி.
பஸ்கா என்பது எபிரெய மொழியின் “பெஸஹா (Pesacha)” என்ற வார்த்தையைக் குறிக்கும். இதற்கு
“கடந்து போகுதல் (Passover)” என்று அர்த்தமாகும்.
பஸ்கா
ஆட்டுக்குட்டி
தேவன் இஸ்ரவேல் ஜனங்களை பஸ்காவை ஆசரிக்கக் கூறினபொழுது அதை எவ்வாறு ஆசரிக்க வேண்டும் என்கிற முறைமைகளையும் கற்றுக் கொடுத்தார். இஸ்ரவேலில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கென்று ஒரு ஆட்டுக்குட்டியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த ஆட்டுக்குட்டி ஆணும், ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். அதில் எந்த ஒரு ஊனமோ, பழுதோ இருக்கக் கூடாது. அந்த ஆட்டுக்குட்டியை நிசான் மாதம் பத்தாம் தேதியே தேர்ந்தெடுத்து வீட்டிற்கு கொண்டுவர வேண்டும். யூத நாட்காட்டியின் அடிப்படையில் நிசான் மாதம் யூதர்களின் முதலாம் மாதமாகும். வீட்டிலே அதை நான்கு நாட்கள் வைத்த பின்னர் குடும்பத்தலைவர்கள், அந்த ஆட்டுக்குட்டியை பதினான்காம் தேதி சாயங்காலத்திலே பலி செலுத்த வேண்டும். பலி செலுத்தும்பொழுது அந்த ஆட்டுக்குட்டியின் எந்த ஒரு எலும்பையும் முறிக்கக் கூடாது. அந்த பலியின் மாம்சத்தை வீட்டிலிருந்து வெளியே கொண்டு போகக் கூடாது (யாத்திராகமம் 12:46).
பஸ்கா
– “வாதை கடந்து போகுதல்”
பஸ்கா
ஆட்டுக்குட்டியை பலியிட்டு முடித்தவுடன், அந்த ஆட்டுக்குட்டியின்
இரத்தத்தை ஈசோப்புக் கொழுந்தின் கொத்தில் தோய்த்து, வீட்டுவாசலின் நிலைக்கால்களிலும்,
நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும். (ஈசோப்பு என்பது மத்திய கிழக்கு நாடுகளில்
காணப்படும் ஒரு மூலிகைச் செடியாகும். இதற்கு மருத்துவ தன்மை, சுத்திகரிக்கும் தன்மை
மற்றும் உணவிற்கு சுவையூட்டும் தன்மை இருப்பதாகக் கருதப்படுகிறது. வேதாகமக் காலத்தில்
மக்களையும், வீடுகளையும் சுத்திகரிப்பு செய்வதற்கு இது பயன்படுத்தப்பட்டது).
பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் வீட்டின் நிலைக்காலில் பூசப்பட்ட பின், மறுநாள் காலை வரைக்கும் இரத்தம் பூசப்பட்ட வீட்டை விட்டு வெளியே செல்லுவதற்கு ஒருவருக்கும் அனுமதி இல்லை. அந்த நாள் இராத்திரியிலே, சங்கரிக்கும் வாதை தேசத்திலே கடந்து செல்லும்பொழுது, வீட்டின் நிலைக்கால்களிலே இரத்தம் பூசப்பட்டிருக்கிறதைக் காணும்பொழுது தேவன் சங்காரக்காரனை அந்த வீடுகளில் வரவிடாமல் அந்த வீடுகளைக் கடந்து போவார். ஆட்டுக்குட்டியின் இரத்தம் நிலைக்கால்களில் பூசப்படாமல் இருக்கும் வீடுகளில் உள்ள தலைப்பிள்ளைகள் சங்கரிக்கப்படும். ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களிடம், பஸ்கா பலியை எகிப்திலிருந்து புறப்படும்பொழுது மாத்திரமல்ல, அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தேவன் தங்கள் வீடுகளை கடந்து போனதை நினைவு கூறும்படி அதை ஆசரிக்க வேண்டும் என்று கூறினார்.
பஸ்கா
பண்டிகை / பஸ்கா விருந்து
இஸ்ரவேல்
ஜனங்கள் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த இராத்திரியிலே ஆசரித்த விருந்து தான்
பஸ்கா விருந்து. இஸ்ரவேல் ஜனங்கள் பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை நெருப்பில்
சுட்டு சாப்பிட வேண்டும். அதை புளிப்பில்லாத அப்பத்தோடும், கசப்பான கீரைகளோடும் சாப்பிட
வேண்டும் என்று கூறினார். புளிப்பில்லாத அப்பம் என்றால் புளிப்பு முகவர்
(Leavening agents like yeast) எதுவும் சேர்க்கப்படாமல் செய்யப்படும் அப்பமாகும். இஸ்ரவேலர்
பஸ்கா உணவை சாப்பிடும்பொழுது தங்களுடைய ஆடையில் உள்ள கச்சைகளைக் (Belt) கட்டிக் கொண்டும்,
காலணிகளை அணிந்து கொண்டும், அவர்களுடைய தடிகளை (கைக்கோல்களை) பிடித்துக் கொண்டும் இருக்க
வேண்டும். சற்று நேரத்தில் எகிப்திலிருந்து விடுதலையாகி நீண்ட பிரயாணம் செய்ய இருக்கிறோம்
என்பதை குறிப்பதற்காகவே இவ்வாறு செய்தார்கள்.
பழைய
மற்றும் புதிய ஏற்பாடுகளில் பஸ்கா ஆட்டுக்குட்டி
பழைய
ஏற்பாட்டிலே முன்னடையாளமாகவும், குறியீடாகவும் காட்டப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியின்
நிஜமான மற்றும் முழுமையான வெளிப்பாடாக தேவ ஆட்டுக்குட்டியாக இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டு
காலத்திலே வெளிப்பட்டார். இதனால் தான் இயேசு கிறிஸ்துவை, யோவான் ஸ்நானகன் “உலகத்தின்
பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) என்றும் அப்போஸ்தலனாகிய
பேதுரு “ குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டி” (1 பேதுரு 1:19) என்றும் அழைத்தனர்.
Agnus Dei (The Lamb of God), தேவ ஆட்டுக்குட்டி என்று பொருள்படும் "ஆன்யூஸ் தே" என்கிற ஓவியம் பிரான்ஸிஸ்கோ டே ஸுர்பரான் என்பவரால் 1635 - 1640ல் வரையப்பட்டது, இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்குவதை விளக்குவதற்காக கால்கள் கட்டி கிடத்தப்பட்டிருக்கிற ஒரு ஆட்டிக்குட்டியை இந்த ஓவியம் சித்தரிக்கிறது, பொது வலைகளம்.
பஸ்கா ஆட்டுக்குட்டி, இயேசு கிறிஸ்து –
ஒரு ஒப்பீடு
1) பஸ்கா
ஆட்டுக்குட்டி பழுதற்றதாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவும் குற்றமற்றவராகவும் மாசற்றவராகவும்
இருந்தார் (1 பேதுரு 1:19; எபிரெயர் 4:15).
2) பஸ்கா
பண்டிகை ஆசரிக்கப்பட்ட சமயத்திலேயே இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் அறையப்பட்டார் (யோவான்
18:28)
3) பஸ்கா
ஆட்டுக்குட்டியின் எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படவில்லை, அதேபோலவே சிலுவையில் அறையப்பட்ட
மற்றவர்களுடைய எலும்புகள் முறிக்கப்பட்ட போதிலும் இயேசுகிறிஸ்துவின் எலும்புகள் முறிக்கப்படவில்லை
(யோவான் 19:31-36).
4) பஸ்கா
ஆட்டுக்குட்டியின் இரத்தம் வீட்டுவாசலின் நிலைக்கால்களில் தெளிக்கப்பட்டது போல இயேசு
கிறிஸ்துவின் இரத்தம் அவரை விசுவாசிக்கிறவர்களுடைய இருதயத்தில் தெளிக்கப்பட்டிருக்கிறது
(எபிரெயர் 9:12,13).
5) வாசல்
நிலைக்கால்களில் தெளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தம் சங்காரக்காரனை கடந்து போகப்
பண்ணினது போல, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தேவனுடைய நியாயத்தீர்ப்பை நம்மிலிருந்து
கடந்து போகப் பண்ணியிருக்கிறது (ரோமர் 5:9)
6) முதலாவது
பலியிடப்பட்ட பஸ்கா இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டதை
குறித்தது போல இயேசுகிறிஸ்துவின் மரணம் நாம் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டதைக்
குறிக்கிறது (ரோமர் 6:18; 8:3).
7) பஸ்கா விருந்தின் போது, பலியிடப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் புளிப்பில்லாத அப்பத்தோடு சாப்பிடப்பட்டது. பஸ்கா ஆசரிக்கப்படும்போது வீட்டில் உள்ள புளிப்பு முகவர்களை(Leavening agents like yeast) வீடுகளிலிருந்து அகற்றுவது வழக்கம். அதைப் போலவே இயேசு கிறிஸ்துவின் தியாக பலியை விசுவாசிக்கிற யாவரும் தங்கள் இருதயங்களிலிருந்து புளிப்பூட்டுகிற செயல்களாகிய துர்குணம், பொல்லாப்பு ஆகியவற்றை அகற்றி விட்டு, புளிப்பில்லாத அப்பமாகிய துப்புரவு, உண்மை ஆகியவற்றோடு கிறிஸ்தவ வாழ்க்கையை ஆசரிக்க வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (1 கொரிந்தியர் 5:7,8).
பழைய ஏற்பாட்டின் பஸ்கா ஆட்டுக்குட்டி, புதிய
ஏற்பாட்டின் நிஜமான மற்றும் முழுமையான தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்துவின் முன்னடையாளமாகவே
கொடுக்கப்பட்டது. இயேசுகிறிஸ்து தன்னுடைய பரிகார பலியின் மூலமாக ஜனங்களை பாவத்தின்
அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, நித்திய ஜீவனைக் கொடுத்து பரம கானானை அடைவதற்கான வழியை
ஏற்படுத்திக் கொடுத்தார்.
வேத பகுதி:
யாத்திராகமம் 12: 21 – 23, 42 - 49
மனப்பாட பகுதி:
ஏசாயா 53:10,11
பயிற்சி
பஸ்கா ஆட்டுக்குட்டி கிறிஸ்துவின் ஒரு முன்னடையாளம். இது போல பல “கிறிஸ்துவின் முன்னடையாளங்கள்” பழைய ஏற்பாட்டில் உள்ளன. கொடுக்கப்பட்டுள்ள வசன ஆதாரத்தின் அடிப்படையில் அவற்றைக் கண்டு பிடிக்கவும்.
1. முந்தின
மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
(1 கொரிந்தியர் 15:47)
பதில்: ஆதாம்
2. …………………………
இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும்
இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். (எபிரெயர் 12:24)
பதில்:
3. அந்தப்படியே
கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை (எபிரெயர்
5:4,5)
பதில்:
4. ………………………
மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன்
எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். (யோவான்
3:14)
பதில்:
5. இவன் தகப்பனும்
தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல்,
தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.
(எபிரெயர் 7:3)
பதில்:
6. ……………………….
தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு
உண்மையுள்ளவராயிருக்கிறார். (எபிரெயர் 3:2)
பதில்:
7. பரிசுத்த
ஸ்தலத்திலும், மனுஷராலல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய
ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற …………………………….. நமக்கு உண்டு. (எபிரெயர் 8:2)
பதில்:
Click this link to learn how to organize VBS / Retreats
Click this link to get Sunday School Guidelines (Part - 1) - Division of Sunday School Classes
Click this link to learn how to help kids memorize Bible Verses
For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/
Click this link and visit devotions blog to read Christian articles
பாடப்
பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1. அந்த ஆட்டுக்குட்டி
ஆணும், ………………………. வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்.
2. ஆட்டுக்குட்டியின்
இரத்தத்தை ……………………….. கொழுந்தின் கொத்தில் தோய்த்து, தெளிக்க
வேண்டும்.
3. பலியிடப்பட்ட
ஆட்டுக்குட்டியின் மாம்சத்தை புளிப்பில்லாத அப்பத்தோடும், ……………………………….. சாப்பிட வேண்டும்
4.
ஆட்டுக்குட்டியின் இரத்தம் நிலைக்கால்களில் பூசப்படாமல்
இருக்கும் வீடுகளில் உள்ள ………………………………. சங்கரிக்கப்படும்.
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. பஸ்கா ஆட்டுக்குட்டி என்றால் என்ன?
2. பஸ்கா விருந்தை எவ்வாறு ஆசரிக்க வேண்டும்?
3. “கடந்து போகுதல்” என்ற பெயர் எதனால் கொடுக்கப்பட்டது?
4. தேவன் பஸ்காவை ஒவ்வொரு வருடமும் எதற்காக ஆசரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1. பஸ்கா ஆட்டுக்குட்டியையும் இயேசுகிறிஸ்துவையும்
ஒப்பிட்டு விளக்கவும்.
No comments:
Post a Comment