இடைநிலை வகுப்பு (INTERMEDIATE)
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
பாடம் –11
பிலேயாம் – குறி சொல்லுகிறவனாய் மாறின தீர்க்கதரிசி
முந்தைய பாடத்தில் இஸ்ரவேல் ஜனங்களின்
நாற்பது வருட வனாந்திர வாழ்க்கையைப் பற்றி பார்த்தோம். இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணம் செய்து
கானான் தேசத்தின் அருகே வந்து விட்டார்கள். கானான் தேசத்தில் நுழைவதற்கு முன்பாக எரிகோ
தேசத்திற்கு அருகில் இருந்த யோர்தான் ஆற்றின் கரையில் மோவாப் சமவெளியில் தங்கியிருந்தார்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் தன்னுடைய தேசத்தின் அருகே கூடாரங்களை அமைத்து தங்கியிருப்பதைப் பார்த்த
‘பாலாக்’ என்கிற மோவாப் தேசத்தின் ராஜாவிற்கு இது மிகுந்த கலக்கத்தைக் கொடுத்தது.
இஸ்ரவேல் ஜனங்களின் பலத்தை அறிந்திருந்த மோவாபிய ராஜா, யுத்தத்தின் மூலமாக அல்ல, இஸ்ரவேல்
ஜனங்கள் மேல் சாபங்களை கூறுவதன் மூலமே அவர்களை பலவீனப்படுத்த முடியும் என்று எண்ணினான்.
தீர்க்கதரிசியாகிய பிலேயாம்
பிலேயாம் என்கிற ஒரு தீர்க்கதரிசி ஐபிராத்து
ஆற்றின் (யூப்ரடீஸ் ஆறு) அருகே இருந்த பெத்தூர் என்கிற ஊரிலே வாழ்ந்து வந்தான்.
தேவன் தன்னிடம் கூறுகிற வார்த்தைகளைக் கேட்டு அதை அப்படியே மக்களிடம் எடுத்து கூறுபவன்
தான் தீர்க்கதரிசி. மோவாப் தேசத்தின் ராஜாவாகிய பாலாக் பிலேயாமிடம் ஆட்களை அனுப்பி
தனக்கு உதவி செய்யும்படியாக இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க வேண்டும் என்றும் அதற்கு கூலி
கொடுப்பதாகவும் கூறினான். பிலேயாம் தன்னிடம்
அனுப்பப்பட்ட ஆட்களிடம், அதைப்பற்றி தான் சுயமாக முடிவெடுக்க முடியாதென்றும், தேவனிடம்
விசாரிக்க வேண்டும் என்றும் கூறினான். பின்பு பிலேயாம் தேவனிடம் விசாரித்த போது அவர்களுடன்
செல்ல வேண்டாம் என்றும் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க வேண்டாம் என்றும் கூறினார். அதனால்
பாலாக் ராஜாவின் ஆட்களை பிலேயாம் திரும்ப அனுப்பி விட்டான்.
மோவாபிற்கு சென்ற பிலேயாம்
அதன்பின்னர், பாலாக் ராஜா மறுபடியும் மிகவும்
மதிப்பிற்குரிய தன்னுடைய மந்திரிகளையும், மிகவும் விலை உயர்ந்த பரிசுப்பொருட்களையும்
அனுப்பி பிலேயாமை அழைத்தான். பிலேயாம் அவர்களுடன் செல்ல வேண்டும் என்று மிகவும் விரும்பினான்.
அதனால் மறுபடியும் ஆண்டவரிடம் சென்று அவர்களுடன் போகலாமா என்று விசாரித்தான். ஆண்டவர்
அவன் விருப்பப்பட்டபடி அவனை சென்று வரச் சொன்னார். ஆனால் பிலேயாம் மோவாபிற்கு செல்லுவது
ஆண்டவருக்கு விருப்பமில்லாதிருந்தது.
பிலேயாமிடம் பேசின கழுதை
பிலேயாம் வழியில் செல்லும்போதே கர்த்தருடைய
தூதன் அவனுக்கு எதிர்ப்பட்டார். பிலேயாம் ஏறியிருந்த கழுதைக்கு கர்த்தருடைய தூதன்
உருவின வாளோடு வழியிலே நிற்பது கண்களுக்கு தெரிந்தது. அதனால் கழுதை தூதனிடமிருந்து
பிலேயாமை காப்பாற்றுவதற்காக, மூன்று முறை வழியை விட்டு விலகி சென்றது. ஆனால் பிலேயாமின்
கண்களுக்கோ அது தெரியவில்லை. அதனால் அவன் தன்னுடைய கழுதையை மூன்று முறை அடித்தான்.
ஆண்டவர் கழுதையின் வாயைத் திறந்தார். அது பிலேயாமிடம் பேசி, தன்னைக் காரணமில்லாமல்
எதற்காக அடிக்க வேண்டும் என்று கேட்டது. அப்பொழுது பிலேயாமின் கண்கள் திறக்கப்பட்டு,
அவன் தூதனைப் பார்த்தான். தூதன் பிலேயாமிடம், இஸ்ரவேல் ஜனங்களைப் பற்றி ஆண்டவர்
என்ன உரைக்கிறாரோ அதை மட்டுமே கூற வேண்டும் என்று கூறினார்.
"பிலேயாமும் அவனுடைய கழுதையும்" என்கின்ற இந்த ஓவியம், புகழ்பெற்ற டச்சு ஓவியர் ரெம்ப்ராண்ட் என்பவரால் 1626ஆம் ஆண்டு வரையப்பட்டது (பொதுகளத்திலிருந்து எடுக்கப்பட்டது)
ஆசீர்வாதங்களை உரைத்த பிலேயாம்
பிலேயாம் மோவாப் தேசத்திற்கு வந்த பொழுது,
பாலாக் ராஜா அவனுக்கு மிகவும் மரியாதை செலுத்தினான். அவர்கள் இருவரும் சேர்ந்து காளைகளையும்,
ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள். பின்னர் பாலாக் ராஜா பிலேயாமை, இஸ்ரவேல் ஜனங்களை
நன்றாக பார்த்து சபிக்கக்கூடிய சிறந்த இடங்களுக்கு அழைத்து சென்றான். ஆனால் பிலேயாமோ,
ஆண்டவர் தன்னிடம் கூறினபடியே, இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதித்தான். அதனால் பாலாக் ராஜா
மிகவும் கோபமடைந்தான். பிலேயாமிற்கு கூலி கிடைக்காமல் போனது.
இஸ்ரவேல் ஜனங்களை இடறப்பண்ணின பிலேயாம்
பொருளாசையினால் நிரப்பப்பட்டிருந்த பிலேயாம்,
தன்னுடைய கூலியை எவ்விதத்திலாவது பெற்று விட வேண்டும் என்று எண்ணினான். தன்னால்
இஸ்ரவேல் ஜனங்களை சபிக்க முடியாது என்று அவன் அறிந்திருந்த படியால், இஸ்ரவேல் ஜனங்களை
பாவம் செய்யும்படி செய்து, தங்களைத் தாங்களே தேவனுடைய சாபத்திற்குள்ளாக்க வேண்டும்
என்று அவன் எண்ணினான். அதனால் இஸ்ரவேல் ஜனங்களுடைய பலத்தின் இரகசியத்தை அவன் மோவாப்
ஜனங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுத்தான். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டவர்கள்.
அவர்கள் யாருடனும் கலப்பதில்லை. அவர்கள் மற்ற ஜனங்களுடைய வழிகளைக் கற்றுக் கொண்டால்
தேவனுடைய கோபம் அவர்கள் மேல் மூளும் என்பதை வெளிப்படுத்தினான். அதை அறிந்து கொண்ட மோவாபியர்,
இஸ்ரவேல் ஜனங்களை பாவம் செய்யப் பண்ணினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் மோவாபியரோடு கலந்து,
அவர்கள் வழிகளைக் கற்றுக் கொண்டு மோவாபியருடைய தெய்வமாகிய பாகால்பேயோரை வழிபடத் தொடங்கினார்கள்.
அதனால் தேவனுடைய கோபம் இஸ்ரவேல் ஜனங்கள் மேல் வந்து, அவர்கள் தண்டிக்கப்பட்டு,
24,000 பேர் மரித்துப் போனார்கள்.
குறிசொல்லுகிறவனாய் மாறின பிலேயாம்
பரிசுத்த வேதாகமத்தில், எண்ணாகமம் 24ஆம்
அதிகாரம் வரை பிலேயாம் ஒரு தீர்க்கதரிசியாகவே கருதப்பட்டான். அவன் தேவன் சொன்னதையே
கூறினான். அவன் எப்பொழுது அநீதியின் கூலியை விரும்பி, தேவனுடைய ஜனங்களுக்கு எதிரான
ஆலோசனையைக் கொடுத்தானோ, அப்பொழுதிலிருந்து அவன் குறிசொல்லுகிறவனாகக் கருதப்பட்டான்
(யோசுவா 13:22). இஸ்ரவேல் ஜனங்கள் மீதியான் தேசத்தைக் கைப்பற்றினபொழுது, பிலேயாமையும்
சேர்த்து கொன்றுபோட்டார்கள். அவன் தேவனுடைய தீர்க்கதரிசியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து
குறி சொல்லுகிறவனாக தன்னுடைய வாழ்க்கையை முடித்தான். அதனால் கிறிஸ்தவ விசுவாசிகள் பின்பற்றக்கூடாத
ஒரு கெட்டமாதிரியாகவே அவன் புதிய ஏற்பாட்டில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளான் (2 பேதுரு
2:15; வெளிப்படுத்தல் 2:14)
ஆவிகளை சோதித்தறிதல்
நாம் எல்லா ஆவிகளையும் தேவனுடைய பரிசுத்த
ஆவி என்று எண்ணாமல் அவைகளை சோதித்தறிய வேண்டும் என்று பரிசுத்த வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது.
தீர்க்கதரிசி என்பவன் தேவனால் ஏற்படுத்தப்படுபவன். தீர்க்கதரிசன வரம் என்பது தேவனால்
கொடுப்படும் ஒரு வரமாகும். எந்த ஒரு மனிதனாலும் இன்னொருவரை தீர்க்கதரிசியாக ஏற்படுத்த
முடியாது. தீர்க்கதரிசன வித்தையை எந்த ஒரு தீர்க்கதரிசன பள்ளியிலும் சென்று கற்றுக்
கொள்ளவும் இயலாது. ஆகவே நாம் ஜாக்கிரதை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். சில வேளைகளில்
நல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளாய் தங்களுடைய ஊழியத்தை ஆரம்பிப்பவர்களும், பின்னாட்களில்
வழிமாறி பிலேயாமைப் போல குறிசொல்லுகிறவர்களாய் மாறுவதுண்டு. தேவனுடைய உண்மையான தீர்க்கதரிகள்
தேவனுடைய ஜனங்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் கரிசனை உள்ளவர்களாய், அவர்களை நித்திய
ஜீவனுக்கு நடத்துகிறவர்களாய் இருப்பார்கள். ஆனால் கள்ள தீர்க்கதரிசிகளோ ஜனங்களை மாம்ச இச்சையை
நிறைவேற்றும்படியாக நடத்தி, இம்மைக்குரிய ஆசீர்வாதங்களையே மிகைப்படுத்தி பேசுவார்கள்.
ஆகவே நாம் ஏமாற்றப்படாதபடிக்கு பிலேயாமின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக அமைகிறது.
வேதபகுதி: எண்ணாகமம் 22 – 25
மனப்பாட வசனம்: மத்தேயு 7:15,16
For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/
பாடப்
பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1. பிலேயாம் வழியில் செல்லும்போது ……………………………….
அவனுக்கு எதிர்ப்பட்டார்.
2. கழுதை தூதனிடமிருந்து பிலேயாமை காப்பாற்றுவதற்காக,
……………….. முறை வழியை விட்டு விலகி சென்றது.
3. இஸ்ரவேல் ஜனங்கள் மோவாபியருடைய தெய்வமாகிய ……………………………… வழிபடத் தொடங்கினார்கள்.
4.
பிலேயாம்
தேவனுடைய தீர்க்கதரிசியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து ……………………………………………… தன்னுடைய வாழ்க்கையை
முடித்தான்.
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1.
பாலாக் ராஜா எதற்காக பிலேயாமை அழைத்தனுப்பினான்?
2.
பிலேயாமின் கழுதை ஏன் பேசினது?
3.
பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்களை ஏன் சபிக்கவில்லை?
4.
பிலேயாமிற்கு பாலாக்கிடத்தில் இருந்து குறிசொல்லுதலுக்கான
கூலி கிடைத்ததா? ஏன்?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1.
பிலேயாம் இஸ்ரவேலரை எவ்வாறு இடறப் பண்ணினான்?
No comments:
Post a Comment