பாடம்
– 3
பாபேல் கோபுரம்
உங்களுடைய தாய்மொழி, அல்லது நீங்கள் அறிந்த மொழிகளைத் தவிர வேறு மொழிகளில் யாராவது பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா? பாஷை என்கிற வார்த்தைக்கும் “மொழி” என்று தான் அர்த்தம். இந்த உலகத்தில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. இவை எல்லாம் எங்கிருந்து வந்தன என்று தெரியுமா? அதைப் பற்றி இந்த பாடத்தில் பார்ப்போம்!
நோவாவின் காலத்து வெள்ளத்துக்குப் பின் தேவன் நோவாவிடமும், அவனுடைய சந்ததியினரிடமும் அவர்கள் அநேகராய்ப் பெருகி இந்த பூமி முழுவதையும் நிரப்ப வேண்டும் என்று கட்டளையிட்டார். நோவாவுடன் கூட பேழைக்குள் சென்று வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட அவனுடைய மூன்று மகன்களுக்கும், அதன் பின்னர் அநேகம் பிள்ளைகள் பிறந்தது. பின்னர் ஒவ்வொரு சந்ததியாக உருவாக ஆரம்பித்தபொழுது, பூமியில் ஜனத்தொகை பெருக ஆரம்பித்தது.
அந்த காலத்தில் பூமியில் வாழ்ந்த எல்லாரைக் காட்டிலும் “நிம்ரோத்” என்னும் ஒருவன் பராக்கிரமசாலியாய் இருந்தான். பராக்கிரமசாலி என்றால் “வீரம் மிகுந்தவன்” என்று அர்த்தம். ஆகையால் “கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனான நிம்ரோத்தைப் போல” என்கிற பழமொழி அந்த காலத்திலே வழங்கப்பட்டு வந்தது. அதற்கான அர்த்தம் என்னவென்றால், நிம்ரோத் கர்த்தருக்கு எதிரான காரியங்களை செய்து, தேவனுக்கு எதிராக கலகம் செய்து தன்னைப் பெரியவனாக காட்டிக்கொள்ள எப்பொழுதும் முயற்சி செய்துகொண்டிருந்தான் என்று வேத பண்டிதர்கள் விளக்குகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவன் அநேகம் பட்டணங்களைக் கட்டி, பல ராஜ்யங்களை ஆண்டு வந்ததாகவும் பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
அந்த காலத்தில் பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்து வந்தது. அதனால் இந்த உலகத்தில் வாழ்ந்து வந்த எல்லா ஜனங்களும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளமுடிந்தது. ஜனத்தொகை பெருக ஆரம்பித்தபொழுது அவர்கள் வாழுவதற்கான இடத்தைத் தேடி கிழக்கேயிருந்து நகர ஆரம்பித்தார்கள். அப்பொழுது அவர்கள் சிநேயார் என்கிற தேசத்திற்கு வந்தபொழுது அங்கே இருந்த சமபூமியைக் கண்டு அங்கே குடியேறினார்கள். அப்பொழுது அவர்களுக்குள் தாங்கள் பூமியெங்கும் சிதறிப் போகாதபடிக்கு எல்லாரும் சேர்ந்து ஒரே தேசத்தில் குடியிருக்கவேண்டும் என்கிற எண்ணம் உண்டானது. ஆனால் தேவனோ நோவாவின் சந்ததி பெருகி பூமியை முழுவதும் நிரப்ப வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்.
ஆனால் ஜனங்களோ ஒரே இடத்தில் சேர்ந்து இருக்க வேண்டும் என்கிற தங்களுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு நகரத்தையும், வானம் வரைக்கும் எட்டும் உயரமான ஒரு பெரிய கோபுரத்தையும் கட்டி நமக்கு பெருமை சேர்த்துக் கொள்ளுவோம் என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள். அந்த நகரத்தை எவ்வாறு கட்ட வேண்டும் என்றும் திட்டமிட்டார்கள். செங்கலை அறுத்து, அதை நன்றாக சுட்டு பட்டணத்தைக் கட்ட வேண்டும் என்று எண்ணினார்கள். அதனால் அந்த நகரம் நல்ல உறுதியாக யாராலும் அழிக்க முடியாதபடிக்கு இருக்கும் என்றும் நினைத்தார்கள். அவர்களுக்கு கல்லுக்கு பதிலாக செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் இருந்தது.
தேவனுடைய கட்டளைக்கு
விரோதமாக இந்த காரியங்களை செய்யும்படிக்கு இவர்களைத் தூண்டினது யார் என்று
சொல்லப்படாவிட்டாலும், வேதப் பண்டிதர்கள் இவர்களுடைய தலைவன் நிம்ரோத் தான் என்று
எண்ணுகிறார்கள் அதற்கு காரணம் என்னவென்றால், நிம்ரோத் தன்னுடைய பராக்கிரமத்தை
அல்லது வீரத்தை நிரூபிப்பதற்காக தேவனுக்கு எதிரான காரியங்களை செய்து வந்ததாலும்,
இந்த சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் நிம்ரோத் சிநேயார் தேசத்தை ஆண்டு வந்ததாலும்
இவ்வாறு கருதுகிறார்கள் (ஆதியாகமம் 10:8-10).
இவர்கள் கட்டுகிற பட்டணத்தைப் பார்ப்பதற்கு ஆண்டவர் இறங்கினார் என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்பொழுது ஜனங்கள் ஒரே கூட்டமாய்க் கூடி, அவர்களுக்கு ஒரே பாஷையும், ஒரே எண்ணமும் இருந்தபடியால் அவர்கள் தங்களுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எந்த தடையும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தபொழுது, தேவன் அவர்களுடைய பாஷையை (மொழியை) தாறுமாறாக்கினார். அதனால் ஒருவர் பேசுவதை இன்னொருவரால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
இவ்வாறு தேவன் அவர்கள் பாஷைகளை (மொழிகளை) குழம்பப் பண்ணினபடியால், அவர்களால் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளமுடியவில்லை, இதனால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்து, வெவ்வேறு தேசங்களுக்கு சிதறிப் போனார்கள். அதனால் நகரத்தையும், கோபுரத்தையும் கட்டுகிற திட்டத்தையும் கைவிட்டார்கள். இவ்வாறு பூமியெங்கும் உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஒரே பாஷையை (மொழியை) தேவன் அவ்விடத்திலே தாறுமாறாக்கி, பாஷைகளைப் பிரியப் பண்ணி, ஜனங்களை அந்த இடத்திலிருந்து சிதறி பூமியெங்கும் போகப்பண்ணினபடியால் அந்த இடத்திற்கு “பாபேல்” என்கிற பெயர் உண்டானது.
வேதபகுதி: ஆதியாகமம் 10:1 -10; 11
மனப்பாடவசனம்: எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும். (சங்கீதம் 115:1).
பாடப்
பயிற்சிகள்
கோடிட்ட இடத்தை நிரப்பவும்
1. பூமியில் வாழ்ந்த
எல்லாரைக் காட்டிலும் “……………………” என்பவன் பராக்கிரமசாலியாய் இருந்தான்.
2. ஜனங்கள் …………………… என்கிற
தேசத்திற்கு வந்தபொழுது அங்கே இருந்த சமபூமியைக் கண்டு அங்கே குடியேறினார்கள்.
3.
………………………. அறுத்து, அதை நன்றாக சுட்டு பட்டணத்தைக் கட்ட வேண்டும்
என்று எண்ணினார்கள்.
4.
ஜனங்கள் கட்டுகிற பட்டணத்தைப் பார்ப்பதற்கு …………………….. இறங்கினார்.
ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. நிம்ரோத் என்பவன் யார்?
2. மக்கள் எதற்காக பட்டணத்தைக் கட்டினார்கள்?
3. ஜனங்கள் பட்டணத்தை எந்த பொருட்களை வைத்து கட்ட
திட்டமிட்டார்கள் ?
4. பாபேல் என்கிற பெயர் எதினால் உண்டானது?
கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்
1. தேவன் எதை பார்ப்பதற்காக இறங்கினார்?
No comments:
Post a Comment