பாடம் – 2
பஞ்சாகமங்கள்
பரிசுத்த வேதாகமத்தின் முதல் ஐந்து புஸ்தகங்களான ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகிய புஸ்தகங்களை “பஞ்சாகமங்கள்” என்று அழைக்கிறோம். பஞ்சாகமங்கள் என்கிற தமிழ் வார்த்தை, “பென்டாட்யூக்” என்கிற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும். அதற்கு “ஐந்து சுருள்களின் பெட்டி” என்று அர்த்தம். (1) இவற்றை நியாயப்பிரமாண புஸ்தகங்கள் என்றும் அழைக்கிறோம். பஞ்சாகமங்களின் எபிரெயப் பெயர் “தோரா” என்பதாகும். தோரா என்பதற்கு “நியாயப்பிரமாணம்” என்று அர்த்தம். இவை “மோசேயின் நியாயப்பிரமாணம் அல்லது மோசேயின் ஐந்து புஸ்தகங்கள்” என்றும் அழைக்கப்படுகின்றன. உலகத்தின் வரலாறு மற்றும் தேவன் இஸ்ரவேலருக்கு கொடுத்த வெவ்வேறு சட்டங்கள் ஆகியவை அடங்கிய ஐந்து புஸ்தகங்களின் தொகுப்பே பஞ்சாகமம்.
ஆக்கியோன்:
பஞ்சாகமத்தை எழுதினது மோசே என்று எல்லாராலும் அங்கீகரிக்கப்படுகிறது. இந்த புஸ்தகங்களை எழுதினது மோசே என்று இந்த புஸ்தகங்களில் தெரியப்படுத்தப்படாவிட்டாலும், வேதத்தின் பல பகுதிகளில் அதற்கான ஆதாரத்தை நம்மால் பார்க்கமுடியும். (2)
1. பஞ்சாகமங்களிலிருந்து கிடைக்கக்கூடிய ஆதாரம்: தேவன் தனக்கு கற்றுக் கொடுத்தவைகளை மோசே எழுதிவைத்தார் என்று நாம் பார்க்கமுடியும் (யாத்திராகமம் 24:4; உபாகமம் 31:9).
2. பழைய ஏற்பாட்டின் மற்ற புஸ்தகங்களிலிருந்து கிடைக்கக்கூடிய ஆதாரம்: பழைய ஏற்பாட்டின் மற்ற புஸ்தகங்கள் மோசே நியாயப்பிரமாணத்தை எழுதினதாகக் கூறுகின்றன (யோசுவா 8:32; II நாளாகமம் 35:6)
3. புதிய ஏற்பாட்டிலிருந்து, இயேசு கிறிஸ்துவின் வாக்குகளிலிருந்தும் கிடைக்கக்கூடிய ஆதாரம் (மத்தேயு 19:7, 8; லூக்கா 24:27, 44; யோவான் 5:46, 47)
பஞ்சாகமப் புஸ்தகப் பெயர்களின் அர்த்தங்கள்:
ஆதியாகமம்: ஆதி + ஆகமம். ஆதி என்றால் ஆரம்பம் அல்லது துவக்கம் என்று அர்த்தம். இந்த உலகத்தின் எல்லா நிகழ்வுகளின் துவக்கமும் இந்த புஸ்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால் இதை ஆதியாகமம் என்று அழைக்கிறோம். இந்த புஸ்தகத்தில் உலகத்தின் துவக்கம், முதல் மனிதன் உருவாக்கப்பட்டது, முதல் பாவம், மொழிகளின் தோற்றம், இனங்கள் மற்றும் நாடுகளின் தொடக்கம் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.
யாத்திராகமம்: யாத்திரை + ஆகமம். ஆங்கிலத்தில் இதன் பெயர் “எக்ஸோடஸ் (Exodus)” என்பதாகும். “எக்ஸோடஸ்” என்கிற வார்த்தை “எக்ஸோடோஸ் (exodos)” என்கிற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததாகும். அதற்கு “வெளியே புறப்படுதல்” என்று அர்த்தம். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கானான் தேசத்தை நோக்கி செய்த பயணத்தை விளக்குவதால் இதை யாத்திராகமம் என்று அழைக்கிறோம்.
லேவியராகமம்: லேவியர் + ஆகமம். தேவனுக்கு முன்பாக பலி செலுத்துவதற்கும், தூபம் காட்டுவதற்கும் தேவன் ஆரோனின் சந்ததியாரைத் தெரிந்தெடுத்தார். அவர்கள் “ஆசாரியர்” என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உதவியாக ஆசரிப்புக் கூடாரத்தின் பொருட்களை சுமப்பது, காவல் காப்பது போன்ற உதவி ஊழியங்களை செய்வதற்கு தனியாகப் பிரித்தெடுக்கப்பட்ட கோத்திரம் தான் லேவி கோத்திரம். இவர்களை லேவியர் என்று அழைக்கிறோம். அவர்களுக்குரிய சட்டதிட்டங்கள் இந்த புஸ்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால், இதை லேவியராகமம் என்று அழைக்கிறோம்.
எண்ணாகமம்: எண் + ஆகமம். இஸ்ரவேல் கோத்திரங்களின் ஜனத்தொகை எடுக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறபடியால் இது எண்ணாகமம் என்று அழைக்கப்படுகிறது.
உபாகமம்: உப + ஆகமம். இந்த புஸ்தகத்தின் ஆங்கிலப் பெயர் “ட்யூட்ரானமி (Deuteronomy)” என்பது ட்யூட்டராஸ் (Deuteros) மற்றும் நோமோஸ் (Nomos) ஆகிய இரண்டு கிரேக்க வார்த்தைகளின் அடிப்படையில் உருவானதாகும். இதற்கு அர்த்தம் “இரண்டாம் சட்டம் (Second Law) “ என்பதாகும். மோசே மரணமடையுமுன்பாக முதல் நான்கு புஸ்தகங்களில் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் ஒரு சுருக்கமான உரையாக மறுபடியும் எடுத்து கூறினபடியால். இதை “உப” ஆகமம் என்று அழைக்கிறோம். அதாவது மறுபடியும் கூடுதலாகக் கொடுக்கப்பட்ட சட்டம் என்று அர்த்தம் ஆகும். (3)
பஞ்சாகமத்தின் பொருளடக்கம்:
பஞ்சாகமப் புஸ்தகங்கள் உலக சிருஷ்டிப்பு (படைப்பு) முதல் மோசேயின் மரணம் (யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கானான் தேசத்திற்கு அழைத்து செல்லுவதற்கு சில நாட்கள் முன், கி.மு. 1406) வரை உள்ள சம்பவங்களை விளக்குகின்றன. மொத்தமாக 2760 வருட சரித்திரம் வேதாகமத்தின் முதல் ஐந்து புஸ்தகங்களில் விளக்கப்பட்டிருக்கிறது.
ஆதியாகமம் | உலக சிருஷ்டிப்பு முதல் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திற்கு குடிபெயர்ந்த யோசேப்பின் காலம் வரை |
யாத்திராகமம்1 அதிகாரம் முதல் 12:40,41 வரை | இஸ்ரவேல் ஜனங்களின் 430 வருட எகிப்திய அடிமைத்தனத்தைப் பற்றியும் அதிலிருந்து வெளியே வருவதைப் பற்றியும் |
யாத்திராகமம்12:40,41 முதல் எண்ணாகமம்14:34 வரை | இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து கானான் நோக்கி செய்த ஒரு வருட பயணத்தைப் பற்றி கொடுக்கப்பட்டிருக்கிறது |
எண்ணாகமம்14:34 முதல் கடைசி அதிகாரம் வரை | இஸ்ரவேல் ஜனங்களின் 40 வருட வனாந்திர பயணம் |
உபாகமம் | மோசே மரிப்பதற்கு முன் கொடுத்த இறுதி உரை. இதை உரைப்பதற்கு ஒன்று இரண்டு வாரங்கள் மட்டுமே எடுத்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர் |
நியாயப்பிரமாணம் – இனி வெளிப்படப்போகிறவைகளின் நிழல்
நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறது என்று புதிய ஏற்பாட்டில் கொலோசெயர் 2:17 மற்றும் எபிரெயர் 10:1ல் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், அதன் அர்த்தம் என்ன? நாம் ஒரு நிழலைப் பார்க்கும் பொழுது, அந்த நிழலை ஏற்படுத்துகின்ற ஒரு நிஜமான பொருள் அருகில் எங்கோ இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அதைப் போலவே நியாயப்பிரமாணம் ஒரு நிழல் அதின் நிஜமான பொருள் இயேசு கிறிஸ்துவே. இதை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம்.
பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்கா பண்டிகையின் பொழுது ஒரு பஸ்கா ஆட்டுக்குட்டியை பலியிட்டார்கள். அந்த பஸ்கா ஆட்டுக்குட்டி, புதிய ஏற்பாட்டில் உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும் (1 கொரிந்தியர் 5:7). பழைய ஏற்பாட்டை கவனமாய் வாசிப்பதன் மூலமாக நம்மால் புதிய ஏற்பாட்டை நன்றாக விளங்க முடியும்.
மனப்பாட வசனம்: ரோமர் 7:6,7
ஆதார நூற்களின் பட்டியல்:
2. About the first five books. (Retrieved 5th August 2020 from https://whataboutjesus.com/study-bible/book-by-book/bible-introduction/about-the-first-five-books/)
3. Fleming, D. Entry for 'Deuteronomy'. Bridgeway Bible Dictionary. https://www.studylight.org/dictionaries/bbd/d/deuteronomy.html. 2004.
(மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களிலிருந்து, இந்த புஸ்தகத்தை ஆக்கியோர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது)
பாடப் பயிற்சிகள்
கோடிட்ட இடத்தை நிரப்பவும்
1. பஞ்சாகமங்களின் எபிரெயப் பெயர் “……………………….”
2. “இரண்டாம் சட்டம்” என்று அர்த்தமுடைய புஸ்தகத்தின் பெயர் ………………………………
3. மொத்தமாக …………………….. வருட சரித்திரம் வேதகமத்தின் முதல் ஐந்து புஸ்தகங்களில் விளக்கப்பட்டிருக்கிறது.
4. …………………… ஆட்டுக்குட்டி, உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும்.
ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. “பஞ்சாகமம்” என்கிற பெயரின் அர்த்தம் என்ன?
2. பஞ்சாகமத்தை எழுதினது யார்?
3. உபாகமத்தில் என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது?
4. “நியாயப்பிரமாணம் இனி வரப்போகிறவைகளின் நிழல்” என்பதன் அர்த்தம் என்ன?
கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்
1. பஞ்சாகமப் புஸ்தகங்களின் பெயர்களை விளக்கவும்?
No comments:
Post a Comment