பாடம் – 2
நோவா காலத்து வெள்ளம்
தேவன் முதலாவதாக படைத்த ஆதாமுக்கும், ஏவாளுக்கும் அநேகம் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களில் மூன்று பிள்ளைகளின் பெயர்கள் (காயீன், ஆபேல், சேத்) மட்டுமே வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் மூலமாய் ஜனங்களின் எண்ணிக்கை பூமியில் அதிகரிக்க ஆரம்பித்தது. நாம் முதலாவது பாடத்தில் பார்த்தது போல ஆதாமும், ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் முதலாவது பாவத்தில் விழுந்தார்கள். அவர்களுக்கு ஸ்திரீயின் வித்தாக ஒரு இரட்சகரைத் தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார். சாத்தான் இரட்சகரைப் பிறக்கவிடாமல் தடுப்பதற்காக வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பாவத்தை புகுத்தி அதன்மூலமாக தேவனுடைய கோபத்தினால் மனிதர்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அவன் நினைத்தான்.
ஆதாமுக்கு பத்தாம் தலைமுறையான நோவாவின் காலத்தில் பூமியில் பாவம் பெருகினது. பூமியில் மனிதனை படைத்ததற்காக தேவன் மனம் வருந்தும் அளவிற்கு பாவம் பெருகினது. தாம் உண்டு பண்ணின மனிதர்களையும், பூமியில் வாழ்ந்த எல்லா உயிரினங்களையும் அழிக்க வேண்டும் என்று தேவன் எண்ணினார். ஆனால் பூமியில் வாழ்ந்த ஒரு மனிதனுக்கு ஆண்டவரிடத்தில் இரக்கம் கிடைத்தது. அவன் பெயர் நோவா. நோவா தேவனுக்குப் பயந்து நீதியாய் நடந்தான். நோவாவுக்கு சேம், காம், யாப்பேத் என்கிற மூன்று மகன்கள் இருந்தார்கள்.
ஆண்டவர் நோவாவிடம் தாம் இந்த பூமியையும் அதில் வாழும் எல்லா உயிரினங்களையும் அழிக்கப் போவதாகவும், அவன் தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுவதற்காக ஒரு பேழையை (பெரிய கப்பலை) உண்டு பண்ணும்படியாகவும் கூறினார். அந்த பேழையை கொப்பேர் என்கிற மரத்தினால் செய்து, தண்ணீர் புகாதபடிக்கு உள்ளேயும், வெளியேயும் கீல் பூசும்படியாக சொன்னார். அந்த பேழை எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் என்கிற அளவுகளையும் ஆண்டவரே கொடுத்தார். அந்த பேழையை மூன்று அடுக்குகள் (மாடிகள்) உள்ளதாய் செய்ய வேண்டும், அதில் ஜன்னல், கதவுகளை எங்கு அமைக்க வேண்டும் எல்லாவற்றையும் அவரே காட்டிக் கொடுத்தார்.
பூமியில் வாழ்ந்த எல்லா மிருக ஜீவன்களையும் பேழைக்குள் கொண்டு போகும்படியாகக் கூறினார். சுத்தமான மிருகங்களில் ஆணும், பெண்ணுமாக ஏழு ஜோடி மிருகங்களும், சுத்தமல்லாத மிருகங்களில் ஒரு ஜோடியும் தெரிந்தெடுக்கும்படியாகக் கூறினார். அவைகளுக்கான உணவுப் பொருள்களையும் சேகரித்து வைக்கும்படியாகவும் கூறினார். நோவா ஆண்டவர் தன்னிடம் சொன்ன எல்லாவற்றையும் செய்து முடித்தார்.
எல்லாம் ஆயத்தமானவுடன் ஆண்டவர் நோவாவையும் அவன் குடும்பத்தையும் பேழைக்குள் போகும்படியாகக் கூறினார். நோவாவும், அவன் மனைவியும், நோவாவின் மூன்று மகன்களும், அவர்கள் மனைவிகளும் வரப்போகும் பேராபத்திலிருந்து தப்பும்படியாக பேழைக்குள் போனார்கள். அவர்கள் பேழைக்குள் போனவுடன் ஆண்டவரே பேழையின் கதவை அடைத்தார்.
அதன்பின்னர், பூமியின்மேல் மழை பெய்யத் தொடங்கினது. இரவும் பகலும் நாற்பது நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. பூமிக்கு அடியில் ஆழத்தில் உள்ள ஊற்றுகளும் திறக்கப்பட்டது. வானத்தின் மதகுகள் திறக்கப்பட்டது போல வெள்ளம் வானத்திலிருந்து ஊற்றினது. நோவாவுக்கு அப்பொழுது 600 வயது. தண்ணீர் அதிகரித்து, பேழையை மேலெழும்பப் பண்ணி அதை மிதக்கப் பண்ணினது. உயர்ந்த மலைகளும் தண்ணீரால் மூடப்பட்டது. பேழைக்கு வெளியே இருந்த எல்லா உயிரினங்களும் வெள்ளத்தால் அழிக்கப்பட்டது. தண்ணீர் நூற்றைம்பது நாட்கள் வரைக்கும் புரண்டோடிக் கொண்டிருந்தது.
ஆண்டவர் நோவாவை நினைத்து காற்றை வீசப் பண்ணினார். அப்பொழுது தண்ணீர் அமர்ந்தது. பேழை அரராத் என்கிற மலையிலே வந்து தங்கினது. தண்ணீர் குறைந்து போயிற்றா என்று அறியும் படியாக நோவா ஒரு புறாவை வெளியே விட்டான். புறா தன் காலை வைப்பதற்கேற்ற காய்ந்த இடம் இல்லாதபடியால் திரும்பவும் பேழைக்கே வந்து விட்டது. ஏழு நாட்கள் கழித்து நோவா மறுபடியும் புறாவை வெளியே விட்டார். அப்பொழுது அது ஒரு ஒலிவமரத்தின் இலையைக் கொத்தி கொண்டு வந்திருந்தது. ஏழுநாள் கழித்து அவன் புறாவை மறுபடியும் வெளியே விட்டான் அப்பொழுது அது அவனிடத்திற்கு திரும்ப வரவில்லை.
அவர்கள் பேழைக்குள் சென்ற நாளிலிருந்து, ஒரு வருடம் முடிவடையும் போது, ஆண்டவர் அவர்களை வெளியே வரும்படியாகக் கூறினார். ஆண்டவர் நோவாவையும், அவன் குடும்பத்தையும், எல்லா மிருக ஜீவன்களையும் ஆசீர்வதித்து, மிகவும் திரளாகப் பெருகி பூமியை நிரப்பக்கடவர்கள் என்றும் ஆசீர்வதித்தார். நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான மிருகங்களிலும், பறவைகளிலும் சிலவற்றை பலி செலுத்தினான். ஆண்டவர் நோவாவின் பலியை ஏற்றுக் கொண்டு தாம் மனிதன் நிமித்தமாக இனி பூமியை அழிப்பதில்லை என்று வாக்குக் கொடுத்தார். வெள்ளத்தால் இனி பூமி அழிக்கப்படாதபடிக்கு மனிதனோடு தாம் ஏற்படுத்தும் உடன்படிக்கைக்கு (ஒப்பந்தத்திற்கு) அடையாளமாக “வானவில்லை” வானத்தில் அடையாளமாக வைப்பதாகவும் கூறினார்.
வேத
பகுதி: ஆதியாகமம் 6 – 9:1-17
மனப்பாட வசனம்: விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான். (எபிரெயர்11:7)
பாடப் பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1. தேவன் நோவாவிடம் பேழையை ………………………….. என்கிற மரத்தினால்
செய்யசொன்னார்.
2. தண்ணீர்
………………………….. நாட்கள் வரைக்கும் புரண்டோடிக் கொண்டிருந்தது.
3. பேழை
………………………….. என்கிற மலையிலே வந்து தங்கினது.
4.
வெள்ளத்தால் இனி பூமி அழிக்கப்படாதபடிக்கு தேவன்
மனிதனோடு ஏற்படுத்தின உடன்படிக்கைக்கு அடையாளமாக “………………………………” வைத்தார்.
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. நோவாவுடன்
எந்த மிருகங்களை பேழைக்குள் கொண்டு போகும்படியாகத் தேவன் கூறினார்?
2. பூமியில் வெள்ளம் உயருவதற்கு எவையெல்லாம்
காரணமாயிருந்தன?
3. பூமியில் தண்ணீர் குறைந்திருக்கிறதா என்று அறிவதற்கு
நோவா செய்து என்ன?
4. பேழையிலிருந்து வெளியே வந்தவுடன் நோவா செய்தது என்ன?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1. நோவா செய்த பேழையின் சிறப்புகளைப் பற்றி எழுதவும்?
No comments:
Post a Comment