இடைநிலை வகுப்பு (INTERMEDIATE)
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
பாடம் – 6
பார்வோனுடைய
குமாரத்தியின் மகனான மோசே
யோசேப்புடைய காலத்திற்கு பின், புதிய
பார்வோன் ஒருவன் எகிப்தை ஆட்சி செய்தான். அவனுக்கு யோசேப்பு எகிப்து தேசத்திற்காக
செய்த எதுவும் தெரியவில்லை, அதனால் அவன் இஸ்ரவேல் ஜனங்கள் தன் தேசத்திலே
பெருகியிருப்பதைப் பார்த்து பயந்தான். எப்படியாவது இஸ்ரவேல் ஜனங்களை ஒடுக்க
வேண்டும் என்று நினைத்தான். அதனால் அவர்களை அடிமைகளாக்கி இரண்டு பண்டக சாலை
பட்டணங்களைக் கட்ட வைத்தான். ஆனால் அப்படி ஒடுக்கினபோதிலும் அவர்கள் பெருகிக்
கொண்டே இருந்தார்கள். அதனால் எரிச்சலடைந்த பார்வோன், எபிரெயருக்கு பிறக்கும் எல்லா
ஆண் குழந்தைகளையும் நைல் நதியிலே போட்டுவிட வேண்டும் என்று கூறினான். அந்த
சமயத்தில் தான் லேவி கோத்திரத்தை சேர்ந்த அம்ராம், யோகெபேத் என்பவர்களுக்கு ஒரு
ஆண்குழந்தை பிறந்தது. யோகெபேத் அந்த குழந்தையை மூன்று மாதம் பாதுகாத்தாள். ஆனால்
அதற்குபின் அந்த குழந்தையை பாதுகாக்க முடியாமல், அவள் ஒரு நாணற்பெட்டியை செய்து,
குழந்தையை அதில் வைத்து நைல் நதியோரமாய் வைத்தாள்.
நைல் நதியிலிருந்து எடுக்கப்பட்ட மோசே:
அந்த சமயத்தில் நைல் நதிக்கு
குளிப்பதற்காக வந்த பார்வோனுடைய மகள், அந்த நாணற்பெட்டியை கண்டு அதை எடுத்து
திறந்தாள். அப்பொழுது உள்ளே இருந்த குழந்தையைப் பார்த்து அதின்மேல் இரக்கமுற்று
அதை தன்னுடைய மகனாக வளர்க்க நினைத்தாள். அப்பொழுது குழந்தைக்கு என்ன நடக்கப்
போகிறது என்பதை பார்ப்பதற்காக அங்கு நின்று கொண்டிருந்த குழந்தையின் மூத்த சகோதரியான
மிரியாம், பார்வோனின் குமாரத்தியிடம் இந்த குழந்தையை வளர்ப்பதற்காக ஒரு எபிரெய
பெண்ணை அழைத்து வரட்டுமா என்று கேட்டாள். அவள் சம்மதித்தவுடன் குழந்தையின் தாயையே
அழைத்து கொண்டு வந்தாள். பார்வோனுடைய குமாரத்தி, அந்த குழந்தையை வளர்ப்பதற்கு
சம்பளம் கொடுப்பதாகக் கூறினாள்.
பார்வோனுடைய குமாரத்தியின் மகனான மோசே:
மோசே வளர்ந்தபின் பார்வோனுடைய
குமாரத்தியிடம் கொண்டு வந்து விடப்பட்டான். பார்வோனுடைய
குமாரத்தி, தண்ணீரிலிருந்து அவனை எடுத்தேன் என்று சொல்லி அவனுக்கு “மோசே” என்று
பெயரிட்டாள். அந்த காலத்தில் மற்ற எபிரெய குழந்தைகளுக்கு கிடைக்காத
வாய்ப்புகள் மோசேக்கு கொடுக்கப்பட்டது. அவன் எகிப்தின் அரண்மனையில் ஒரு இளவரசனாய்
வளர்க்கப்பட்டான். அவனுக்கு எகிப்தின் சகல சாஸ்திரங்களும் கற்றுக்
கொடுக்கப்பட்டது. அவன் வாக்கிலும், செய்கையிலும் வல்லவனாயிருந்தான்.
மீதியான் தேசத்தில் மோசே:
ஆனால் மோசேக்கு தான் ஒரு இஸ்ரவேலன்
என்றும், தன் மூலமாக இஸ்ரவேலர் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட போகிறார்கள்
என்றும் தெரியும் (ஒருவேளை அவன் தாய் அவனுக்கு சொல்லிக் கொடுத்திருப்பாள்). அதனால்
அவன் வளர்ந்தபோது தன்னுடைய சகோதரர்களான இஸ்ரவேலரைப் பார்ப்பதற்காக சென்றிருந்தான்.
அப்பொழுது அவர்கள் அடிமைகளாய் மிகவும் ஒடுக்கப்படுவதைப் பார்த்தான். எகிப்தியன்
ஒருவன் இஸ்ரவேலன் ஒருவனை அடிப்பதைப் பார்த்து மிகவும் கோபமடைந்து அவனைக் கொன்று
போட்டான். இது எகிப்தின் மன்னனான பார்வோனுக்கு தெரியவரவே அவன் மோசேயை
கொல்லுவதற்காகத் தேடினான். இதை அறிந்த மோசே எகிப்து தேசத்தை விட்டு மீதியான்
என்கிற தேசத்திற்கு ஓடிப் போனான். அங்கு மீதியான் தேசத்தின் ஆசாரியனாயிருந்த
ஒருவனை சந்தித்து, ஆடு மேய்ப்பவனாய் நாற்பது வருடங்கள் வாழ்ந்தான்.
மோசேயும் பற்றியெரிந்த முட்செடியும்:
மீதியான் தேசத்தில் மோசே ஆசாரியனுடைய
ஒரு மகளை திருமணம் செய்தான். ஒருநாள் அவன் தன்னுடைய
மாமனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டு ஒரேப் என்கிற மலையருகே வந்தான். அப்பொழுது
அங்கு பற்றி எரிகிற ஒரு முட்செடியைப் பார்த்தான். அது பற்றியெரிந்தும், அந்த
முட்செடி கருகவில்லை. அந்த காட்சியைப் பார்ப்பதற்காக அவன் அருகில் வந்த பொழுது,
அந்த முட்செடியின் நடுவிலிருந்து, தன்னுடைய பெயரை கூப்பிடுகிற ஒரு சத்தத்தைக்
கேட்டான். அதிலிருந்து ஆண்டவர் அவனோடே பேசி, தாம் எகிப்திலிருக்கிற தம்முடைய
ஜனங்களின் கஷ்டத்தைப் பார்த்ததாகவும், அவர்களை விடுவிக்கும்படியாக, மோசேயை
அனுப்பப்போவதாகவும் கூறினார். ஆனால் மோசேயோ தான் அதற்கு தகுதியானவன் அல்ல என்றும்,
தான் மந்த நாவுள்ளவன் என்றும் வேறு யாரையாவது அனுப்பும்படியாகவும் கூறினான்.
அப்பொழுது ஆண்டவர் மோசேயிடம் அவனுடைய சகோதரனாகிய ஆரோனை கூட அழைத்து
செல்லும்படியாகக் கூறினார்.
இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவித்த மோசே:
மோசேயும்,
ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களை விடுவிப்பதற்காக பார்வோனிடம் சென்றபொழுது மோசேக்கு
எண்பது வயது,
ஆரோனுக்கு எண்பத்து மூன்று வயது. மோசே பார்வோனிடம் இஸ்ரவேல் ஜனங்களை
எகிப்திலிருந்து வெளியே விடுமாறு கேட்டபொழுது அவன் விடமாட்டேன் என்று மறுத்து
விட்டான். அதுமட்டுமல்லாமல் அவர்களுடைய வேலையையும் கடினமாக்கினான். ஆண்டவர்
எகிப்தியர் மேல் பத்து வாதைகளை அனுப்பினார்.1. தண்ணீர் இரத்தமாக மாறுவது 2. தவளைகள்
3. பேன்கள் 4. வண்டுகள் 5. கொள்ளை நோய் 6. கொப்பளங்கள் 7. கல்மழை 8. வெட்டுகிளிகள்
9. இருள் 10. தலைப் பிள்ளை சங்காரம். ஆண்டவர் மோசேயிடம் தாம் கடைசி வாதையை
எகிப்தியருக்கு அனுப்புவதற்கு முன்பாக பஸ்காவை ஆசரிக்க சொன்னார். இஸ்ரவேலர்
ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து பஸ்காவை ஆசரித்ததினால்
பாதுகாக்கப்பட்டார்கள். அன்றைய தினமே பார்வோன் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து
புறப்படுவதற்கு அனுமதி கொடுத்தான்.
இஸ்ரவேலரை வழிநடத்தின மோசே:
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தபின் செங்கடலை
கடக்க வேண்டியிருந்தது. ஆண்டவர் அற்புதமாக செங்கடலை இரண்டாக பிளக்கப் பண்ணினார். அதன்
நடுவே வெட்டந்தரையிலே இஸ்ரவேலர் நடந்து சென்றார்கள். மோசே இஸ்ரவேல் மக்களை நாற்பது
வருடம் வனாந்திரம் வழியாக நடத்தி சென்றார். ஆண்டவர் அவர்களுக்கு உண்ணுவதற்காக அப்பத்தை
வானத்திலிருந்து பொழியப் பண்ணினார். அதுமட்டுமல்லாமல் அவர்கள் தாகத்தை தீர்ப்பதற்காக
கன்மலையிலிருந்து தண்ணீரை வரப் பண்ணினார். இன்னும் அநேக அற்புதங்களை செய்து இஸ்ரவேல்
மக்களுக்கு எந்த குறைவும் இல்லாமல் அதிசயமாக நடத்தினார்.
மோசே – இஸ்ரவேலின் மிகச்சிறந்த தலைவன்:
மோசே தான், எகிப்தின் இளவரசனாக, பார்வோனுடைய குமாரத்தியின்
மகனாக வளர்க்கப்பட்ட பொழுது அந்த மேன்மைகளை வெறுத்து, தேவனுடைய பிள்ளைகளோடே துன்பத்தை
அனுபவிப்பதையே தெரிந்து கொண்டான். அதனால் ஆண்டவர் பல மேன்மைகளை அவனுக்கு கொடுத்தார்.
தேவனை முகமுகமாய் கண்டு அவரோடே பேசின மோசேயைப் போல வேறு ஒரு தீர்க்கதரிசி எழும்பவில்லை
என்று வேதம் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் மோசே ஆண்டவரோடே ஒரு
நண்பன் பேசினதைப் போல பேசினதாகவும், சீனாய் மலையில் தேவனுடைய மகிமையை தரிசித்ததாகவும்
வேதம் கூறுகிறது. மேலும் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட பத்து கற்பனைகள் அடங்கிய கற்பலகைகளை
பெற்றுக் கொண்ட மேன்மை அவனுக்கு கிடைத்தது. மோசே 120 வயதில் மரணமடைந்தார். அவருடைய
சரீரத்தை ஆண்டவரே அடக்கம் செய்தார். அதனால் தான் மோசே இஸ்ரவேலுடைய மிகச் சிறந்த தலைவனாகக்
கருதப்படுகிறார்.
வேத பகுதி: யாத்திராகமம் 1–12 அதிகாரங்கள்; அப்போஸ்தலர் 7:18-36; எபிரெயர் 11: 23-29
மனப்பாட வசனம்: எபிரெயர் 11:24-26
பாடப்
பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1. பார்வோனுடைய குமாரத்தி,
தண்ணீரிலிருந்து அவனை எடுத்தேன் என்று சொல்லி அவனுக்கு “…………………….” என்று
பெயரிட்டாள்.
2.
மோசே
தன்னுடைய மாமனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டு …………………………….. என்கிற மலையருகே
வந்தான்.
3.
மோசே
இஸ்ரவேல் ஜனங்களை விடுவிப்பதற்காக பார்வோனிடம் சென்றபொழுது அவனுக்கு ……………………..
வயது
4.
மோசே ஆண்டவரோடே ஒரு
…………………………. பேசுவதைப் போல பேசினான்.
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1.
மோசே நைல் நதியிலிருந்து எவ்வாறு காப்பாற்றப்பட்டான்?
2.
பார்வோன் மோசேயை ஏன் கொல்ல முயற்சித்தான்?
3.
பற்றி எரிகிற முட்செடியிலிருந்து ஆண்டவர் மோசேயோடே
என்ன பேசினார் ?
4.
இஸ்ரவேலர் பஸ்காவை ஆசரித்ததினால் நடந்தது என்ன?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1.
மோசே, இஸ்ரவேலின் மிகச்சிறந்த தலைவராக ஏன்
கருதப்படுகிறார்?
No comments:
Post a Comment