பாடம்
– 7
பார்வோனின் கனவு
இதற்கு முந்தின பாடத்தில்
யாக்கோபு ஆரானிலே தங்கியிருந்ததைப் பற்றியும், தன்னுடைய தகப்பன் வீட்டிற்கு திரும்புவதற்காக
புறப்பட்டதையும் பார்த்தோம். யாக்கோபுக்கு
பன்னிரண்டு மகன்கள் இருந்தார்கள். யாக்கோபுக்கு பதினோறாவது மகனாகப் பிறந்தவன் தான்
யோசேப்பு. யோசேப்பினுடைய வாழ்க்கை அவனுடைய சிறு வயதிலிருந்தே சற்று வித்தியாசமானதாகவே
இருந்தது. யோசேப்பு இரண்டு கனவுகளைக் கண்டான். அந்தக் கனவில் அவனுடைய சகோதரர்கள்
அவனை வணங்குவது போலிருந்தது. அதனால் அவன் சகோதரர்கள் அவன் மேல் பொறாமை கொண்டு அவனை
கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினார்கள். அதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு
கிடைத்தது.
ஒருமுறை யோசேப்பின் சகோதரர்கள் ஆடு மேய்ப்பதற்காக தொலைவான ஒரு இடத்திற்கு
சென்றிருந்தார்கள். அப்பொழுது யோசேப்பின் தந்தை அவனை அவனுடைய சகோதரர்களிடம் நலம்
விசாரித்து வரும்படி அனுப்பினார். அவன் சகோதரர்களோ அவன் தூரத்தில் வரும்பொழுதே
அவனைக் கொலை செய்யும்படி திட்டமிட்டார்கள். யோசேப்பின் மூத்த சகோதரனாகிய ரூபன்
அவர்களைத் தடுத்தான். அதனால் அவர்கள் அவனைக் கொல்லாமல், எகிப்திற்கு
வியாபாரத்திற்காக சென்று கொண்டிருந்த மீதியானிய வியாபாரிகளிடம் அவனை விற்றுப்
போட்டார்கள்.
மீதியானியர் அவனை எகிப்தை ஆண்டு வந்த பார்வோனுடைய மந்திரிகளில் ஒருவனாகிய போத்திபார் என்பவனிடத்தில் அடிமையாக விற்றார்கள். போத்திபாரின் மனைவி யோசேப்பின் மேல் பொய்யான குற்றம் சாட்டினதினால் அவன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான். ஆனால் சிறைச்சாலையிலும் ஆண்டவர் யோசேப்போடே இருந்தார். சிறைச்சாலையில் பார்வோனுடைய பானபாத்திரக்காரன், சுயம்பாகி ஆகிய இரண்டு ஊழியக்காரர் அடைக்கப்பட்டிருந்தார்கள். “பானபாத்திரக்காரர்” என்றால் ராஜாவுக்கு நல்ல திராட்சரசத்தை அல்லது பழரசங்களை பிழிந்து சிறந்த முறையில் வழங்கும் பொறுப்பை உடையவர்கள். “சுயம்பாகி” என்றால் பார்வோனுக்கு உணவு தயாரித்து வழங்கும் பொறுப்பில் இருப்பவர். மத்திய கிழக்கு நாடுகளில் ரொட்டி அதிகமாக உண்ணப்படுவதால், ஆங்கிலத்தில் “ரொட்டி சுடுபவர் (Baker)” என்றே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் இரவு, பார்வோனுடைய பானபாத்திரக்காரனும், சுயம்பாகியும் கனவு
கண்டார்கள். அதனால் மிகவும் பயமடைந்தார்கள். யோசேப்பு அவர்களுடைய கனவின்
அர்த்தத்தை அவர்களுக்கு சொன்னான். அவன் சொன்னபடியே அவர்களுக்கு பலித்தது.
பானபாத்திரக்காரனை பார்வோன் திரும்பவும் அவனுடைய வேலையில் சேர்த்துக் கொண்டார். ஆனால் அவனோ யோசேப்பை பற்றி மறந்து போனான்.
அதே சமயத்தில் எகிப்தின் ராஜாவான பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான் (பார்வோன்
என்பது எகிப்து தேசத்து ராஜாக்களுக்கு கொடுக்கப்படும் பட்டமேயன்றி அது அவர்களுடைய பெயர்
அல்ல, இந்திய தேசத்து மன்னர்களை “மகாராஜா” என்று அழைப்பதைப் போன்று). பார்வோனுடைய
கனவில் அவன் நைல் நதியின் /ஆற்றின்* (கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் குறிப்பை பார்க்கவும்)
கரையில் நின்று கொண்டிருந்தான். அப்பொழுது நதியிலிருந்து ஏழு கொழுத்த பசுக்கள் ஏறி
வந்து புல் மேய்ந்தது. அவன் பார்த்து கொண்டிருக்கும்பொழுதே மெலிந்த உருவத்துடன்
மிகவும் அலங்கோலமாய் காணப்பட்ட ஏழு பசுக்கள் நைல்
நதியிலிருந்து ஏறி வந்து நதி ஓரத்தில் கொழுத்த பசுக்களின் பக்கத்தில் நின்றது. அந்த
மெலிந்த பசுக்கள் கொழுத்த பசுக்களை தின்றுபோட்டது, ஆனாலும் அவைகள் முன்போலவே
மெலிந்து அவலட்சணமாகக் காணப்பட்டது. இதைப் பார்த்தவுடன் பார்வோன் உறக்கத்திலிருந்து
விழித்துக் கொண்டான்.
பின்னர் மறுபடியும் உறங்க சென்றான். அப்பொழுது இன்னொரு கனவையும் பார்வோன் கண்டான். அதில் நல்ல நிறைந்த தானியங்களுள்ள ஏழு கதிர்கள் ஒரே காம்பிலிருந்து முளைத்தது. பின்பு கீழ்காற்றினால் காய்ந்து சுருங்கிப் போய் பதராயிருந்த ஏழு கதிர்கள் முளைத்தது. காய்ந்த பதர்கள் நல்ல நிறைந்த தானியங்களாயிருந்த கதிர்களை விழுங்கினதாகவும் கண்டான்.
மறுநாள் காலமே பார்வோனுடைய மனம் கலங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது அவன் எகிப்திலுள்ள மந்திரவாதிகளையும், ஞானிகளையும் அழைத்து தன்னுடைய கனவைக் கூறி, அதன் விளக்கத்தைக் கேட்டான். ஆனால் அவனுடைய ஞானிகள், மந்திரவாதிகள் யாராலும் அவனுடைய கனவின் அர்த்தத்தை சொல்ல முடியவில்லை. அப்பொழுதுதான், பானபாத்திரக்காரனுக்கு யோசேப்பைப் பற்றிய நினைவு வந்தது. பானபாத்திரக்காரன் பார்வோனிடம் யோசேப்பைப் பற்றி கூறினான். யோசேப்பு பார்வோனுக்கு முன்பாக கொண்டுவரப்பட்டான். பார்வோன் யோசேப்பிடம் கனவுகளின் அர்த்தத்தை வெளிப்படுத்தக் கூடிய திறமை அவனுக்கு இருப்பதால் தன்னுடைய கனவின் அர்த்தத்தை அவன் சொல்ல வேண்டும் என்று கூறினான். ஆனால் யோசேப்போ தான் அல்ல, தேவனே அதன் அர்த்தத்தை சொல்லிக் கொடுப்பவர் என்று கூறினான்.
பார்வோன் தான் கண்ட கனவை யோசேப்பிடம் கூறினான். யோசேப்பு பார்வோனிடம், அவன் கண்ட இரண்டு கனவுகளின் அர்த்தமும் ஒன்று தான். தேவன் தாம் செய்யப் போகிறதை பார்வோனுக்கு காண்பித்திருப்பதாகவும் கூறினான். பார்வோனுடைய கனவுகளின் அர்த்தம் என்னவென்றால் கொழுத்த ஏழு பசுக்களும், நிறைந்த ஏழு கதிர்களும் ஏழு வளமான வருடங்களாம். அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மிகவும் அதிகமான விளைச்சலைக் கொடுக்கும் செழிப்பான ஏழு வருடங்கள் உண்டாயிருக்கும். மெலிந்த ஏழு பசுக்களும், தீய்ந்த ஏழு கதிர்களும் பஞ்சமுள்ள ஏழு வருடங்களாம். அந்த கொடுமையான பஞ்ச வருடங்களில் எகிப்தில் முந்தின ஏழு வருடங்களில் இருந்த செழிப்பு எல்லாம் மறக்கப்பட்டு போகும் என்று கனவின் அர்த்தத்தை கூறினான். இந்த காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதை வலியுறுத்துவதற்காகவே இரண்டு விதமான கனவுகளில் அது காட்டப்பட்டிருப்பதாகவும் அவன் கூறினான்.
அதுமட்டுமல்லாமல் பஞ்சத்திலிருந்து எகிப்து தேசத்தை காப்பாற்றும் தீர்வையும் யோசேப்பே சொல்லிக் கொடுத்தான். அதன்படி எகிப்து தேசமெங்கும் தானியங்களை சேர்த்து வைக்கும் தானியக்கிடங்குகளை உண்டாக்கி அதில் செழிப்பான வருடங்களில் விளையும் தானியங்களில் ஐந்தில் ஒரு பங்கை சேமித்து வைக்க வேண்டும் என்று கூறினான். பார்வோனுக்கு இந்த ஆலோசனை மிகவும் நன்றாய் இருந்ததினால் அவன் யோசேப்பை கனப்படுத்தி எகிப்து தேசத்திலே பார்வோனுக்கு அடுத்த இரண்டாவது இடத்தை அவனுக்கு கொடுத்தான். பார்வோன் அவனுடைய பெயரை “சாப்நாத்பன்னேயா” என்று மாற்றி அவனுக்கு அதிகாரமும் கொடுத்தான்.
யோசேப்பு செழிப்பான வருடங்களில் விளைந்த தானியங்களை பட்டணங்களிலே கட்டி வைத்து, பஞ்ச காலத்திலே எகிப்தியரின் உயிரை காப்பாற்றினான். அதுமட்டுமல்லாமல் யோசேப்பின் சகோதரர்களும் தானியங்களை வாங்குவதற்காக எகிப்து தேசத்திற்கு வந்து, அவன் சிறு வயதில் கண்ட கனவின்படியே அவனை விழுந்து வணங்கினார்கள். இந்த சம்பவத்தின் மூலம் தேவன் நம்முடைய வாழ்க்கையில் வைத்திருக்கும் திட்டங்கள் நிச்சயமானவைகள், அதை எந்த ஒரு நபராலோ, சூழ்நிலைகளாலோ மாற்ற முடியாது என்பதை நாம் அறிகிறோம்.
ஆசிரியர் குறிப்பு:
செப்துவாஜிந்த் (Septuagint) கொய்னே கிரேக்க மொழிபெயர்ப்பில் நைல் நதி என்று குறிப்பிடப்படாவிட்டாலும், எபிரெய பழைய ஏற்பாட்டில் நைல் நதி என்று குறிப்படப்பட்டுள்ளது.
வேத
பகுதி:
ஆதியாகமம் 40, 41
மனப்பாட
வசனம்: யோசேப்பு
அவர்களை நோக்கி:……………………… அதை நன்மையாக முடியப்பண்ணினார். (ஆதியாகமம் 50:19,20)
பாடப் பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1. ……………………………………….
யோசேப்பை பற்றி மறந்து போனான்.
2. யோசேப்போ தான் அல்ல,
……………………….. கனவின் அர்த்தத்தை சொல்லிக் கொடுப்பவர் என்று கூறினான்.
3. அலங்கோலமாய் காணப்பட்ட ஏழு பசுக்கள் ……………………….. நதியிலிருந்து ஏறி
வந்ததாக பார்வோன் கண்டான்.
4. பார்வோன் யோசேப்பினுடைய பெயரை “…………………………………” என்று மாற்றினான்.
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1.
யோசேப்போடு சிறைசாலையில் அடைக்கப்பட்டிருந்தது
யார்?
2.
யோசேப்பு
பானப்பாத்திரக்காரனின் கனவின் அர்த்தத்தை விளக்கினபின், பானபாத்திரக்காரனுக்கு
நடந்தது என்ன?
3.
யோசேப்பு ஏன்
பார்வோனின் முன் கொண்டு வரப்பட்டான்?
4. பஞ்சத்திலிருந்து
எகிப்தை தப்புவிக்க யோசேப்பு கொடுத்த ஆலோசனை என்ன?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1. பார்வோன்
கண்ட கனவுகளையும், அவைகளின் அர்த்தத்தையும் சுருக்கமாக எழுதவும்.
No comments:
Post a Comment