Friday, September 25, 2020

மீதியான் தேசத்தில் மோசே (Moses at Midian), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 6

                     மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

பாடம் – 6

மீதியான் தேசத்தில் மோசே

                          நைல் நதியில் போடப்பட்டு, எகிப்து நாட்டின் இளவரசியால் வளர்க்கப்பட்ட எபிரெய சிறுவன் தான் மோசே.  அவன் எகிப்திய அரண்மனையில் எல்லாக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தான். ஆனால் மோசேக்கோ தான் ஒரு எபிரெயன் என்றும் தன்னுடைய ஜனங்கள் எகிப்தில் அடிமைகளாக இருக்கிறார்கள் என்றும் தெரியும். மோசே பெரியவனான பொழுது தன்னுடைய ஜனங்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்று நினைத்தான்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                      அப்பொழுது அவன் தன்னுடைய எபிரெய ஜனங்கள் அடிமைகளாக மிகவும் கொடூரமாக நடத்தப்படுவதை பார்த்தான். எகிப்தியன் ஒருவன் எபிரெயன் ஒருவனை அடிப்பதைப் பார்த்து கோபமடைந்தான். அதனால் அந்த எகிப்தியனைக் கொன்றான்.

Sweet Publishing / FreeBibleimages.org.
                    மறுநாள் மோசே வெளியே சென்றபொழுது, இரண்டு எபிரெயர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து, “நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள், எதற்காக சண்டையிடுகிறீர்கள்?” என்று கேட்டான். அப்பொழுது பிறனுக்கு அநியாயம் செய்தவன் மோசேயைப் பார்த்து, “நேற்று அந்த எகிப்தியனைக் கொன்றது போல என்னைக் கொல்லலாம் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டான்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                        மோசே தான் செய்த காரியம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டதென்று நினைத்து பயந்தான். பார்வோன் இதைக் கேள்விப்பட்டு, மோசேயைக் கொலை செய்யும்படியாகத் தேடினான். மோசே அதற்குள்ளாக தப்பி மீதியான் என்கிற தேசத்திற்கு ஓடிப்போனான். தற்காலத்தைப் போலல்லாது நவீன வாகனங்கள் இல்லாத காலத்தில் மோசேயின் பிரயாணம் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? மீதியான் தேசத்திலே மோசே ஒரு தண்ணீர் துரவின் அண்டையிலே போய் உட்கார்ந்தான். துரவு என்றால் மிகவும் ஆழம் இல்லாத கிணறு போன்றதாகும். பழங்காலங்களில் ஆடு மாடுகள் தண்ணீர்  குடிப்பதற்கு இங்கு தான் கொண்டு செல்வார்கள்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                      மோசே தண்ணீர் துரவண்டையிலே இருக்கும்பொழுது மீதியான் பட்டணத்து ஆசாரியனாகிய ரெகுவேல் என்பவனுடைய ஏழு மகள்கள், தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக அங்கு வந்தார்கள். அப்பொழுது அங்கு இருந்த வேறு மேய்ப்பர்கள் அவர்களை விரட்டினார்கள். மோசே இதைப் பார்த்து அந்த ஏழு சகோதரிகளுக்கும் துணை நின்று அவர்களுடைய ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான். அந்த சகோதரிகள் வீடு திரும்பியவுடன் அவர்களுடைய தகப்பன் அவர்கள் சீக்கிரமாய் வந்திருப்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டார். அப்பொழுது அவர்கள் ஒரு எகிப்தியன் தங்களுக்கு உதவி செய்ததாகக் கூறினார்கள்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                         அப்பொழுது மோசேயை வீட்டிற்கு அழைத்து வரும்படி கூறினார். மோசே அவர்களுடைய வீட்டில் தங்கினான். மோசே தன்னுடைய சூழ்நிலையின் காரணமாக அறிப்படாத ஒரு தேசத்திற்கு கடந்துசெல்ல நேரிட்ட பொழுதும் அங்கும் அவனை பராமரிப்பதற்காக தேவன் ஒரு குடும்பத்தை ஆயத்தம் செய்து வைத்திருந்தார்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                    மோசே நாற்பது வருடங்கள் ஒரு ஆடு மேய்ப்பவனாக மீதியான் தேசத்தில் வாழ்ந்து வந்தான். ஆனால் அவை வீணான நாட்கள் அல்ல. மோசே செய்யப் போகிற ஒரு பெரிய வேலைக்காக அவன் அறியாமலே தேவன் அந்த வனாந்திரத்திலே அவனை பயிற்றுவித்துக் கொண்டிருந்தார்.

Sweet Publishing / FreeBibleimages.org.

வேத பகுதி: யாத்திராகமம் 2

மனப்பாட வசனம்:உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யாரென்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார். (அப்போஸ்தலர் 7:35)


பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்  

 

1.    எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்தது யார்?   ………………………………………

2.    மோசே எதற்காக எகிப்தியனைக் கொன்றான்?  .………………………………………

3.    மீதியான் பட்டணத்து ஆசாரியனுடைய பெயர் என்ன?

……………………………………….

4.    ஆசாரியனுடைய ஏழு மகள்களை துரத்தினது யார்?

……………………………………….

5.    மோசே மீதியான் தேசத்தில் எத்தனை ஆண்டுகள் மேய்ப்பனாக வாழ்ந்தான்? ……………………………………….

 கோடிட்ட இடத்தை நிரப்பவும்:

 1.    எகிப்து நாட்டின் இளவரசியால் வளர்க்கப்பட்ட எபிரெய சிறுவனின் பெயர் …………………………... 

2.    மோசே பார்வோனுக்கு தப்பி ……………………….. என்கிற தேசத்திற்கு ஓடிப்போனான்.

3.    மீதியான் தேசத்திலே மோசே ஒரு ………………………… அண்டையிலே போய் உட்கார்ந்தான்.

4.    ………………………  ஏழு சகோதரிகளுக்கும் துணை நின்று அவர்களுடைய ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான்.

5.    மோசே நாற்பது வருடங்கள் ஒரு ………………………….. அங்கு வாழ்ந்து வந்தான்.


No comments:

Post a Comment

திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...