இடைநிலை வகுப்பு (INTERMEDIATE)
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
பாடம் – 7
ஆரோன்
– இஸ்ரவேலின் முதல் பிரதானஆசாரியன்
மோசேயின்
மூத்த சகோதரன் தான் ஆரோன். ஆண்டவர் முட்செடியில் மோசேக்கு தரிசனமாகி இஸ்ரவேல்
மக்களை விடுவிப்பதற்காக எகிப்து தேசத்திற்கு போகும்படி சொன்னபொழுது மோசே தயங்கினார். அதனால் மோசேயோடுகூட போகும்படியாக தேவன் ஆரோனை அனுப்பினார். அப்பொழுது மோசேக்கு எண்பது வயது, ஆரோனுக்கு
எண்பத்து மூன்று வயது. ஆண்டவர் எகிப்திலே பல அற்புதங்களை செய்து தன்னுடைய வல்லமையை
பார்வோனுக்கு முன் காட்டிய பின் அவன் இஸ்ரவேல் ஜனங்களை போகவிட்டான். மோசேயுடன் கூட
ஆரோனும் இஸ்ரவேல் மக்களை வழிநடத்துவதில் உறுதுணையாக இருந்தார்.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து
கானான் நோக்கி பிரயாணம் செய்தபொழுது, அவர்கள் ரெவிதீம் என்கிற இடத்திலே
தங்கியிருந்தார்கள். அப்பொழுது பக்கத்தில் இருந்த அமலேக்கியர் என்கிற ஜனங்கள்
இஸ்ரவேலரைத் தாக்கினார்கள். அதனால் மோசேயின் உதவியாளராயிருந்த யோசுவா, இஸ்ரவேல்
மக்களை அமலேக்கியருக்கு எதிரான ஒரு யுத்தத்தில் தலைமை தாங்கி நடத்தி சென்றார்.
அப்பொழுது மோசே அருகில் இருந்த ஒரு மலையில் நின்று கொண்டு, தன்னுடைய கோலை கையில்
பிடித்துக் கொண்டு, நடந்த யுத்தங்களை கவனித்துக் கொண்டே இருந்தார். மோசே தன்னுடைய
கையை உயர்த்தி வைத்திருந்தபொழுது, இஸ்ரவேலர் அமலேக்கியரை வீழ்த்தினார்கள். நேரம்
ஆகஆக மோசேக்கு சோர்வு ஏற்பட்டது. அதனால் மோசேயினுடைய சகோதரனான ஆரோனும், இன்னொரு
தலைவனான ஊரும் ஒரு கல்லைக் கொண்டுவந்து அதில் மோசேயை உட்கார வைத்து, இருவரும் இரு
கரங்களையும் தாங்கிக் கொண்டார்கள். அப்பொழுது இஸ்ரவேலர் அமலேக்கியரை வெற்றிக்
கொண்டார்கள்.
சிறிது நாட்கள் கழித்து, இஸ்ரவேல்
ஜனங்கள் பிரயாணம் செய்து சீனாய் வனாந்திரத்திலே தங்கியிருந்தார்கள். அப்பொழுது
பத்து கற்பனைகளை கொடுக்கும்படியாக ஆண்டவர் மோசேயை சீனாய் மலையிலே ஏறி வரும்படியாகக்
கூறினார். மோசே சீனாய் மலையில் ஏறி நாற்பது நாட்கள் தங்கியிருந்தார். மோசே சீனாய்
மலையின் மேல் ஏறி போன பொழுது, இஸ்ரவேல் மக்களை ஆரோன், ஊர் என்பவர்களின் பொறுப்பிலே
விட்டுவிட்டு சென்றிருந்தார். மோசே திரும்பி வருவதற்குள்ளாக இஸ்ரவேல் ஜனங்கள்
ஆரோனைப் பார்த்து, எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்த மோசேக்கு என்ன நடந்தது
என்று தெரியவில்லை, ஆகையால் எங்களை வழி நடத்தக்கூடிய தெய்வங்களை எங்களுக்கு
உருவாக்கிக்கொடும் என்று கூறினார்கள். ஆகவே ஆரோன் இஸ்ரவேல் மக்களிடம் அவர்களுடைய
பொன் காதணிகளை கொண்டுவரும்படி கூறினார். அவர்கள் அதைக் கொண்டு வந்தபொழுது,
இஸ்ரவேல் மக்கள் வழிபடுவதற்காக அவர் ஒரு பொன் கன்றுகுட்டியை செய்து கொடுத்தார்.
மோசே மலையிலிருந்து திரும்பி வந்தபொழுது, அதைப் பார்த்து மிகவும் கோபங்கொண்டார்.
ஆண்டவரும் இஸ்ரவேல் மக்களை அழிக்க வேண்டும் என்று இருந்தார். மோசே ஆண்டவரிடம்
மன்றாடினபடியால் இஸ்ரவேல் மக்கள் தப்புவிக்கப்பட்டார்கள்.
பிரதான ஆசாரியனாக அபிஷேகிக்கப்பட்ட ஆரோன்:
ஆரோன் மிகப்பெரிய ஒரு தவறை
செய்திருந்தபொழுதிலும் ஆண்டவர் அவனை மன்னித்து, மோசேயிடம் ஆரோனை பிரதான ஆசாரியனாக
அபிஷேகிக்க சொன்னார். இஸ்ரவேலில் அபிஷேகிக்கப்பட்ட முதல்
பிரதான ஆசாரியன் ஆரோன். ஆரோனும் அவனுடைய வம்சாவளியில் பிறந்தவர்களும் ஆசாரிய
ஊழியத்திற்கென்று தனியே பிரித்தெடுக்கப்பட்டனர். ஆரோன் ஆசாரியனாக
அபிஷேகிக்கப்படுவதற்கு முன் இஸ்ரவேலில் ஆசாரியர்கள் என்று யாரும் இல்லை. ஒவ்வொரு
குடும்பத்தின் தலைவர்களும் ஆசாரியர்கள் போல செயல்பட்டனர். அவர்கள் பலிபீடத்தைக்
கட்டி, பலிகளை செலுத்தி தேவனை தொழுதுகொண்டனர். பிரதான ஆசாரியனாக அபிஷேகிக்கப்பட்ட
ஆரோனுக்கு அவன் செய்யவேண்டிய பல பிரதான ஆசாரியனுக்குரிய கடமைகள் இருந்தன.
பிரதான ஆசாரியன் என்பவன் யார்?
பிரதான ஆசாரியன் என்பவன் அவனுடைய
மக்களுக்கடுத்த காரியங்களை தேவனிடம் கொண்டுசென்று அதற்கான தீர்வுகளை பெற்றுத்
தருபவன். தேவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஒரு மத்தியஸ்தன் போல செயல்படுபவன்.
அவனுடைய முக்கியமான வேலைகளில் ஒன்று மக்களுக்காக பாவநிவிர்த்தி செய்வது. ஒவ்வொரு
ஏழாம் மாதத்தின் பத்தாம் நாளும், விசேஷமான பாவ நிவிர்த்தி நாளாக ஆசரிக்கப்பட்டது.
அந்த நாளில் மட்டும் பிரதான ஆசாரியன் ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள மகாபரிசுத்த
ஸ்தலத்தில் நுழைவதற்கு அனுமதி உண்டு. அங்கு உள்ளே போவதற்கு முன்பாக அவன் ஒரு பலி
செலுத்தி, அந்த பலியின் இரத்தத்தை எடுத்துக் கொண்டு போய், அந்த இரத்தத்தை
கிருபாசனத்திலே தெளித்து, ஜனங்களுக்காக பாவ நிவிர்த்தி செய்வான். இது அவனுடைய
முக்கியமான ஒரு கடமையாகும். பிரதான
ஆசாரியனுக்கென்று சிறப்பாக தயாரிக்கப்பட்ட ஒரு அலங்காரமான ஆசாரிய வஸ்திரமும் இருந்தது. அதை அணிந்து கொண்டு தான் அவன் ஆசாரிய
ஊழியத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஆரோனுடைய மகன்கள் தண்டிக்கப்படுதல்:
ஆண்டவர் மோசேயிடம் சொன்னபடியே,
ஆரோனும் அவனுடைய மகன்களும் ஆசாரியர்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அவர்கள்
அபிஷேகிக்கப்பட்ட மறுநாளிலே, ஆரோனின் இரண்டு மகன்களாகிய நாதாபும்,
அபியூவும் அவர்களுடைய தூபகலசத்தை எடுத்துக் கொண்டுவந்து, அதிலே நெருப்பையும்,
தூபத்தையும் போட்டு, ஆண்டவர் கட்டளையிடாத வேறுவிதமான அந்நிய அக்கினியை தேவ சமூகத்தில்
கொண்டுவந்தார்கள். அதனால் ஆண்டவர் அவர்கள் மேல் கோபமடைந்தார். அதனால் அவர்கள்
ஆண்டவருடைய பிரசன்னத்திலிருந்து வந்த நெருப்பினால் அழிக்கப்பட்டார்கள்.
ஆரோனுடைய மரணமும், எலெயாசாரின் அபிஷேகமும்:
ஒருவிசை இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில்
இருக்கும்பொழுது, தங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்று முறுமுறுத்தார்கள்.
அப்பொழுது ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் பார்த்து, மோசேயின் கோலை எடுத்துக்
கொண்டுபோய், இஸ்ரவேல் மக்களையும் வரவழைத்து, அவர்களுக்கு முன் இருந்த கன்மலையைப்
பார்த்து பேசும்படியாகக் கூறினார். மோசேயும், ஆரோனும் ஜனங்களைக் கூட்டினார்கள். ஆனால்
மோசேயோ இஸ்ரவேல் மக்கள் தன்னை மிகவும் கோபப்படுத்தினபடியால், தன்னுடைய கோலை
எடுத்து கன்மலையை அடித்தார். அப்பொழுது கன்மலையிலிருந்து தண்ணீர் புரண்டு வந்தது.
ஆனால் ஆண்டவர் மோசேயின் மீதும், ஆரோனின் மீதும் கோபங்கொண்டார். அவர்கள்
கன்மலையிடம் பேசாமல், கன்மலையை அடித்து, தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனதினால்
அவர்கள் கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதில்லை என்று கூறினார். யோசுவாவே இஸ்ரவேல்
மக்களை கானானுக்குள் நடத்தி செல்வான் என்றும் கூறினார். அதன்படி ஆரோன் ஓர் என்கிற
மலையிலே வைத்து தன்னுடைய 123ஆவது வயதில் மரணமடைந்தார். அவருக்குப்
பின் அவருடைய மகனான எலெயாசார் பிரதான ஆசாரியனாக அபிஷேகிக்கப்பட்டார்.
மனப்பாட வசனம்: எபிரெயர் 5:1-4
பாடப்
பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1. ஆரோன் இஸ்ரவேல் மக்கள் வழிபடுவதற்காக
ஒரு ………………………………. கன்றுகுட்டியை செய்து கொடுத்தார்.
2.
இஸ்ரவேலில்
அபிஷேகிக்கப்பட்ட முதல் பிரதான ஆசாரியன் ………………………..
3.
………………………,
………………………… ஆண்டவர் கட்டளையிடாத அந்நிய அக்கினியை கொண்டுவந்தார்கள்
4.
ஆரோனுக்குப்பின் அவருடைய
மகனான …………………………….. பிரதான ஆசாரியனாக அபிஷேகிக்கப்பட்டார்.
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1.
அமலேக்கியரோடு நடந்த யுத்தத்தின் போது ஆரோனும், ஊரும்
மோசேக்கு எவ்வாறு உதவி செய்தார்கள்?
2.
ஆரோன் ஏன் பொன் கன்றுகுட்டியை செய்தான் ?
3.
ஆண்டவர் ஏன் நாதாபையும், அபியூவையும் தண்டித்தார்?
4.
தேவன் ஆரோனை ஏன் கானான் தேசத்திற்குள் செல்ல
அனுமதிக்கவில்லை?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1.
பிரதான ஆசாரியன் என்பவர் யார்? அவருடைய கடமைகள்
என்ன ?
No comments:
Post a Comment