Saturday, March 23, 2024

சாலொமோன் ராஜாவின் எழுச்சியும், வீழ்ச்சியும் (The Rise and Fall of King Solomon), இடைநிலை வகுப்பு (Intermediate) , ஞாயிறு பள்ளி வேதபாடம் - 16

இடைநிலை வகுப்பு (Intermediate)

12 - 13 வயது

ஞாயிறுபள்ளி பாடங்கள்

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 16

சாலொமோன் ராஜாவின் எழுச்சியும், வீழ்ச்சியும்

Click this link to get this lesson in English Language

மற்ற இடைநிலை பாடங்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

ராஜாவாக அபிஷேகிக்கப்பட்ட சாலொமோன்

தாவீது ராஜாவிற்குப் பின் அவரது மகனான சாலொமோன் இஸ்ரவேல் தேசத்தின் மூன்றாவது ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டார். பன்னிரண்டு கோத்திரங்களும் ஒன்றிணைந்த சமஸ்த இஸ்ரவேல் தேசத்தின் கடைசி ராஜாவாக ஆளுகை செய்தவரும் இவரே. அவரது காலத்திற்குப் பின் இஸ்ரவேல் தேசம் இரண்டு ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது. தாவீது ராஜாவிற்கும், பத்சேபாளிற்கும் பிறந்த இரண்டாவது மகன் தான் சாலொமோன். தாவீது ராஜாவிற்கு வயதாகி அவர் தேசத்தை ஆளுகை செய்ய முடியாத நிலை வந்தபோது, அவரது மகனான அதோனியா தேசத்தை ஆளுகை செய்ய விரும்பினான். தேசத்தின் சில முக்கியமான நபர்களை தன்னுடைய ஆதரவாளர்களாக சேர்த்துக்கொண்டான். உயிரோடிருந்த தாவீது ராஜாவின் மகன்களில் மூத்தவன் அவன் தான். இதை தாவீது ராஜாவின் நண்பரான நாத்தான் தீர்க்கதரிசி கேள்விப்பட்டபொழுது, அவர் இந்த செய்தியை சாலொமோனின் தாயாரான பத்சேபாளுக்கு அறிவித்தார். பத்சேபாள் தாவீது ராஜாவிடம் சென்று தன் மகன் சாலொமோனை ராஜாவாக்குவதாக தாவீதுராஜா தனக்குக் கொடுத்த உறுதிமொழியை ஞாபகப்படுத்தினாள். தாவீது ராஜா நாத்தான் தீர்க்கதரியையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், படைத்தளபதியாகிய பெனாயாவையும் அனுப்பினார் அவர்கள் சாலொமோனை ராஜாவாக அபிஷேகித்தார்கள். அதோனியாவும் அவனுடைய ஆதரவாளர்களும் பின்வாங்கிப் போய்விட்டார்கள்.

ஞானத்தில் சிறந்த சாலொமோன்

சாலொமோன் ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டபின், ஆசரிப்புக்கூடாரம் இருந்த கிபியோன் என்ற இடத்திற்கு பலி செலுத்துவதற்காக சென்றார். அங்கு அவர் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார். அன்று இராத்திரியிலே கர்த்தர் சாலொமோனுக்கு சொப்பனத்திலே தரிசனமாகி, அவர் விரும்புகிறதைக் கேட்டால் அது அவருக்குக் கொடுக்கப்படும் என்று கூறினார்.

சாலொமோன் ராஜா, இஸ்ரவேல் தேசத்தை நீதியான முறையில் அரசாளுவதற்கு தனக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தர வேண்டும் என்று கேட்டார். சாலொமோன் ராஜாவின் விண்ணப்பம் ஆண்டவரை மகிழ்வித்தது. அதனால் ஆண்டவர் அவர் கேட்ட ஞானத்தோடு கூட அவர் கேட்காத பொருட்செல்வங்களையும், பெயர்பெருமைகளையும், மகிமையையும் கொடுத்தார். ஞானத்திலே சாலொமோன் ராஜாவுக்கு ஈடாக அவருக்கு முன்பும், பின்பும் ஒரு நபரும் எழும்பப்போவது இல்லை என்றும் வாக்குக் கொடுத்தார்.

சாலொமோனின் ஞானப்பரீட்சை

வெகுவிரைவிலேயே சாலொமோன் ராஜாவின் ஞானத்தின் சிறப்பு பரீட்சைக்கு விடப்பட்டது. ஒரு நாள் சாலொமோன் ராஜாவைத் தேடி இரு பெண்கள் வந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். அச்சமயத்தில் அவர்கள் இருவரும் ஒரே நாள் குழந்தை பெற்றெடுத்திருந்தார்கள். ஒருநாள் இரவு உறங்கும்பொழுது, ஒரு பெண் தன் குழந்தையின்மேல் புரண்டுபடுத்ததினால் அந்த குழந்தை இறந்துபோனது. அந்த பெண் உடனே தன் குழந்தையை எடுத்து, உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் அருகில் கிடத்திவிட்டு, உயிரோடிருந்த மற்ற பெண்ணின் குழந்தையை தனக்காக எடுத்துக் கொண்டாள். உறங்கிக்கொண்டிருந்த மற்ற பெண் காலமே விழித்து பார்த்தபொழுது, தன் அருகே கிடத்தப்பட்டிருப்பது தன்னுடைய குழந்தை அல்ல என்று கண்டாள். உயிரோடிருக்கும் தன்னுடைய குழந்தையை இன்னொரு பெண் வைத்திருப்பதைக் கண்டாள். ஆனால் அந்த பெண்ணோ உயிரோடிருப்பது தன்னுடைய குழந்தை என்று கூறி அந்த குழந்தையைக் கொடுக்க மறுத்துவிட்டாள். அவர்கள் வாக்குவாதம் செய்தும் தீர்வு உண்டாகவில்லை. அதனால் சாலொமோன் ராஜாவைக் கண்டு நியாயமான முடிவை பெற விரும்பினார்கள். சாலொமோன் ராஜா அவர்கள் இருவர் கூறுவதையும் பொறுமையாக கேட்டுவிட்டு ஒரு வாளை கொண்டுவரச் சொன்னார். அந்த குழந்தையை இரண்டு துண்டாக்கி ஒரு பாதியை ஒரு பெண்ணிடமும், மற்றொரு பாதியை இன்னொரு பெண்ணிடமும் கொடுக்கும்படியாகக் கூறினார். குழந்தையின் உண்மையான தாய் இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தாள். குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி, அந்த குழந்தையை மற்ற பெண்ணிடமே உயிரோடு கொடுத்துவிடும்படியாகக் கூறினாள். மற்ற பெண்ணோ அந்த குழந்தையை வெட்டிக் கொடுக்கும்படியாகக் கூறினாள். 

சாலொமோன் ராஜாவிற்கு அந்த குழந்தையின் உண்மையான தாய் யார் என்பது புரிந்துவிட்டது. அவளிடமே அந்த குழந்தையைக் கொடுத்துவிட்டார். இந்த செய்தியை இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் கேள்விப்பட்டு தேசத்தை ஆளுவதற்கான ஞானத்தை தேவன் சாலொமோன் ராஜாவுக்குக் கொடுத்திருக்கிறார் என்று நிச்சயித்துக்கொண்டார்கள்.

சாலொமோன் ராஜாவின் பொன்மொழிகளும், எழுத்துக்களும்

தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும், புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். ஞானத்திற்குப் பேர் போன கிழக்குதேச ஜனங்களின் ஞானத்தைப் பார்க்கிலும், பண்டைய கால எகிப்து சாம்ராஜ்யத்தின் ஞானத்தைப் பார்க்கிலும்  சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது என்று வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பழைய ஏற்பாட்டில் மூன்று புஸ்தகங்கள் சாலொமோன் ராஜாவால் எழுதப்பட்டது. உன்னதப்பாட்டு, பிரசங்கி, நீதிமொழிகளின் பெரும்பகுதி ஆகியவை சாலொமோன் ராஜாவால் எழுதப்பட்டது. சாலொமோன் ராஜா மூவாயிரம் நீதிமொழிகளை உரைத்தார். அதுபோல ஆயிரத்து ஐந்து பாடல்களை எழுதினதாகவும் வேதாகமம் கூறுகிறது. அவர் பல்வேறு துறைகளிக் சிறந்து விளங்கினார். அவர் லீபனோனின் கேதுரு மரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள தாவரங்களைக் குறித்தும், மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், கடலில் வாழும் விலங்குகள் ஆகியவைப் பற்றியும் வாக்கியங்களைக் கூறியுள்ளார். சாலொமோன் ராஜாவின் ஞானத்தைப் பற்றி கேள்விப்பட்ட பூமியின் நான்கு திசைகளிலிருந்தும் அவருடைய ஞானத்தின் சிறப்பை அறிந்துகொள்ளுவதற்காக வந்தார்கள்.

எருசலேம் தேவாலயத்திற்கான ஆயத்தம்

சாலொமோன் ராஜாவின் தகப்பனாகிய தாவீது ராஜா உடன்படிக்கைப் பெட்டியை நிரந்தரமாக தங்க வைக்கும்படியாக ஓரு தேவாலயத்தை எருசலேமில் கட்ட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஆண்டவர் தாவீது ராஜாவை தேவாலயம் கட்ட அனுமதிக்கவில்லை. தாவீது ராஜாவின் மகனான சாலொமோனே அந்த ஆலயத்தைக் கட்டுவார் என்றும் அறிவித்தார். அதைக் கேட்ட தாவீது ராஜா மனமடியவில்லை. மாறாக, தனது மகன் சாலொமோன் தேவாலயம் கட்டும்போது தேவைப்படும் பொன்னையும், வெள்ளியையும், வெண்கலத்தையும், இரும்பையும், மரத்தையும், பளபளப்பான கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதகம் முதலிய கற்களையும் ஏராளமாக சேகரித்து வைத்தார். தாவீது ராஜா இறந்துபோவதற்கு முன்பாக சாலொமோனை வரவழைத்து தேவாலயம் கட்டுவதற்கான பொறுப்பைக் கொடுத்து, தான் தேவாலயத்திற்காக சேகரித்த பொருட்களையும் சாலொமோன் கையிலே ஒப்படைத்தார்.

சாலொமோன் ராஜா கட்டின தேவாலயம்

சாலொமோன் ராஜா தான் அரசாளத் துவங்கின நான்காம் வருடத்திலே தேவாலயம் கட்ட ஆரம்பித்தார். இந்த தேவாலயம் முதலாம் தேவாலயம் என்று அறியப்படுகின்றது. இது எருசலேமிலே தேவதூதன் தாவீதுராஜாவுக்கு தரிசனமான மோரியா மலையில் கட்டப்பட்டது. இதே மலையில் தான் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆபிரகாம் தன் மகனாகிய ஈசாக்கை பலியிடுவதற்காக அழைத்துக்கொண்டு சென்றார். இந்த எருசலேம் தேவாலயத்தை கட்டுவதற்கு ஏழு ஆண்டுகள் ஆனது. 

எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டிருந்த மோரியா மலை தற்காலத்தில்

சாலொமோன் ராஜாவுக்கு தீரு தேசத்தின் ராஜாவாகிய ஈராமோடு நல்ல பழக்கம் இருந்தது (தற்போது லெபனான் (Lebanon) தேசத்தின் ஒரு முக்கிய பட்டணமாக தீரு உள்ளது). ஈராம் ராஜா சாலொமோன் ராஜாவிற்கு தேவாலயம் கட்டுவதற்கு தேவையான கேதுருமரங்களையும், தேவதாரி மரங்களையும், வாசனை மரங்களையும் கொடுத்தான். அதற்கு பதிலாக சாலொமோன் ராஜா இருபதாயிரம் மரக்கால்* (பாடத்தின் இறுதியில் உள்ள ஆசிரியர் குறிப்பைப் பார்க்கவும்) கோதுமையையும், இருபதாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதாயிரம் குடம்* திராட்சரசத்தையும், இருபதாயிரம் குடம் எண்ணெயையும் தீரு தேசத்து ராஜாவிற்குக் கொடுத்தார்.

தீரு ராஜா தன்னுடைய நாட்டின் தலைசிறந்த கலைநிபுணனாகிய ஈராம் அபியென்னும் ஒருவனையும் அனுப்பினான். அவன் பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும, இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பர நூலிலும் (Purple Yarn)* , இளநீலநூலிலும் (Blue Yarn)* மெல்லிய நூலிலும் (Linen)*, சிவப்பு நூலிலும் (Crimson Yarn)* செய்யும் வேலைகளையும், சகலவிதக் கொத்துவேலைகளையும் (Engraving work) திறம்பட செய்ய அறிந்தவனாயிருந்தான். ஆலயத்தை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள், உடைத்து, செதுக்கப்பட்டு, பணிதீர்ந்து கொண்டுவரப்பட்டதால், அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் ஆலயம் கட்டுகிற இடத்திலே கேட்கப்படவில்லை. இவ்வாறு உலகின் மிக சிறப்பான மரங்கள், விலைமதிக்கமுடியாத கற்கள், இரத்தாம்பர நூல், மற்றும் மற்ற விலையேறப்பெற்ற பொருட்களைக் கொண்டு அந்த காலத்தின் ஒரு அடையாளச் சின்னமாக எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டது. 

எருசலேம் தேவாலயத்தின் முக்கிய பகுதிகள்

இரண்டு வெண்கல தூண்கள் (2 நாளாகமம் 3:15 – 17): ஆலயத்திற்கு முன்பாக முப்பத்தைந்துமுழ உயரமான வேலைப்பாடுகள் மிகுந்த இரண்டு வெண்கல தூண்களை செய்து வைத்தார், அதில் வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பெயர்.

தேவாலயத்தின் வெளிப்பகுதி பிராகாரம் என்று அழைக்கப்பட்டது. அது வெளிப்பிராகாரம், உட்பிராகாரம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஆசரிப்புக்கூடாரத்தின் பிரகாரத்தைப் போல் ஒரு திறந்தவெளியாக இல்லாமல், சாலொமோன் ராஜா கட்டின தேவாலயத்தின் பிராகாரம் ஒரு மண்டப வடிவிலே கட்டப்பட்டிருந்திருக்கலாம் என்று வேதபண்டிதர்கள் கருதுகிறார்கள் (1).

வெளிப்பிராகாரம் / பெரிய பிராகாரம் Outer Courtyard / Great Courtyard (1 இராஜாக்கள் 6:3; 2 நாளாகமம் 3:4; 4:9; 29:7).

உட்பிராகாரம் / ஆசாரியரின் பிராகாரம் The Court of the priests / Inner Court (2 நாளாகமம் 4:9; 1 இராஜாக்கள் 6:36). இங்கே தகனபலிபீடம் (2 நாளாகமம் 15:8), வெண்கலக் கடல் என்றழைக்கப்பட்ட தொட்டி (4:2 – 5) ஆகியவையும் பத்து வெண்கலக் கொப்புரைகளும் (1 இராஜாக்கள் 7:388,39) வைக்கப்பட்டிருந்தன. கொப்புரை என்பது அண்டா போன்ற ஒரு பெரிய பாத்திரமாகும்.

ஆலயத்தின் உட்பகுதி பரிசுத்த ஸ்தலம் (Holy Place), மகா பரிசுத்த ஸ்தலம் (Most Holy Place) என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

பரிசுத்த ஸ்தலம் (Holy Place) ஆலயத்தின் பெரிய மாளிகை (Greater house) என்றும் அழைக்கப்பட்டுள்ளது (2 நாளாகமம் 3:5). பரிசுத்தஸ்தலத்தின் அறை தேவதாருமரங்களின் பலகைகளினால் செய்யப்பட்டு, இழைத்த பசும்பொன்னினால் மூடப்பட்டு ரத்தினக்கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே (Holy Place) ஆராதனைக்குப் பயன்படும் மூன்று முக்கியமான பரிசுத்தமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை யாதென்றால்

1.     சமுகத்தப்பங்களை வைக்கும் மேஜை (Table of the bread of the presence)

2.     குத்து விளக்கு (Lampstand or the seven-branch candlestick)

3.     தூபபீடம் (Altar of incense) என்பவை ஆகும்.                

மகா பரிசுத்த ஸ்தலம் (Most Holy Place) உள் ஆலயம் Inner Sanctuary (1 இராஜாக்கள் 6:27), மகாபரிசுத்தமான ஆலயம் Room of the Holy of Holies (2 நாளாகமம் 3:8), சந்நிதி ஸ்தானம் (1 இராஜாக்கள் 6:19) ஆகிய வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. இங்கு தேவனுடைய பிரசன்னம் தங்கின பசும்பொன்னினால் செய்யப்பட்ட பரிசுத்தமான உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இங்கு பத்து அடி உயரமுள்ள இரண்டு கேரூபீன்கள் ஒலிவமரத்தால் செய்யப்பட்டு பசும்பொன்னால் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தின் சுவர் முழுவதும் பொன்னினால் மூடப்பட்டிருந்தது. தேவாலயத்தின் சுவற்றில் கேரூபீன், பேரீச்சமரம், மலர்ந்த பூக்கள் ஆகியை இழைக்கப்பட்டிருந்தன (1 இராஜாக்கள் 6:29).

திரைச்சீலை - பரிசுத்த ஸ்தலத்தையும், மகாபரிசுத்த ஸ்தலத்தையும் பிரிப்பதற்காக ஒரு திரைச்சீலை தொங்கவிடப்பட்டிருந்தது. அது இளநீலநூலாலும், இரத்தாம்பரநூலாலும், சிவப்புநூலாலும், மெல்லியநூலாலும் செய்யப்பட்டிருந்தது. அதில் கேரூபீன்களின் சித்திரத்தையல் வேலைப்பாடுகள் காணப்பட்டன.

தேவாலயம் கட்டிமுடிக்கப்பட்டபின் அதை அர்ப்பணிப்பதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டன. உடன்படிக்கைப்பெட்டி தாவீதுராஜா அதற்காக ஏற்படுத்தியிருந்த கூடாரத்திலிருந்து கொண்டுவரப்பட்டு தேவாலயத்தின் மகாபரிசுத்தஸ்தலத்திற்குள் வைக்கப்பட்டது. பாடகராகிய லேவியர்கள் தேவனைத் துதித்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பினது. 

தேவாலயத்தின் பிரதிஷ்டை (அர்ப்பணிப்பு) ஆராதனை ஏழு நாட்கள் நடைபெற்றது. அதன் பின் ஏழு நாட்கள் பண்டிகை கொண்டாடப்பட்டது. பண்டிகையின் எட்டாம் நாளிலே மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பும்படியாக சாலொமோன் ராஜா விடைகொடுத்தார்.

மேற்கு சுவர் / அழுகை சுவர், பண்டைய எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டபின் இந்த சுவர் மட்டுமே மிஞ்சியுள்ளது. இங்கே யூதர்கள் சென்று இடிக்கப்பட்ட தேவாலயத்தை நினைத்து புலம்புவது வழக்கம். அதனால் இது அழுகை சுவர் என்றும் அழைக்கப்படுகின்றது.

சேபா ராஜஸ்திரீயின் சுற்றுப்பயணம்

சேபா என்கிற தேசத்தின் மகாராணி சாலொமோன் ராஜாவின் அற்புதமான ஞானத்தைப் பற்றி கேள்விப்பட்டாள். பண்டைய சேபா ராஜ்யம் தற்போதைய ஏமன், எத்தியோப்பியா தேசங்களை உட்படுத்தியதாயிருந்தது. சேபா தேசத்து மகாராணி எருசலேம் பட்டணத்தை தானே சுற்றிப்பார்த்து சாலோமோன் ராஜாவின் ஞானத்தின் மகிமையை தெரிந்து கொள்ள விரும்பினாள். அதனால் ஒரு பெரும்படையோடு அதிக அளவிலான விலைமதிப்புள்ள பொருட்களை ஓட்டகங்களில் ஏற்றிக்கொண்டு சாலொமோன் ராஜாவை சந்திக்க புறப்பட்டாள். 

சேபா ராஜஸ்திரீ சாலொமோன் ராஜாவைக் கண்டு தன் மனதில் இருந்த கேள்விகள், புதிர்களையெல்லாம் ராஜாவிடத்தில் கேட்டாள். சாலொமோன் ராஜா எல்லாவற்றிற்கும் எளிதாக பதிலளித்தார். அதுமட்டுமல்லாமல் சாலொமோன் ராஜாவின் அரண்மனை, அவர் கட்டின கட்டிடங்களின் வடிவமைப்பு, அங்கு கொடுக்கப்பட்ட விருந்து, சாலொமோன் ராஜாவின் ஊழியக்காரர்கள் அணிந்திருந்த ஆடைகள் ஆகியவற்றைக் கண்டு அவள் பிரமிப்படைந்தாள். அவள் மிகுதியான வாசனைபொருட்களையும், நூற்று இருபது தாலந்து பொன்னையும், இரத்தினக்கற்களையும் சாலொமோன் ராஜாவிற்கு பரிசாகக் கொடுத்தாள். 

பண்டையகால இஸ்ரவேல் தேசத்தில் உபயோகிக்கப்பட்ட தாலந்து என்றழைக்கப்பட்ட எடை 34 கிலோகிராமிற்கு சமமாகும் (1 Talent = 34 Kilograms). சாலொமோன் ராஜாவும் சேபாதேசத்தின் மகாராணிக்கு அதிகமான பரிசுபொருட்களைக் கொடுத்தார்.. அவள் சந்தோஷத்தோடே தன்னுடைய தேசத்திற்கு திரும்பி சென்றாள். 

பண்டைய சேபா ராஜ்யத்தின் சிதைவுகள் (தற்கால ஏமன் தேசத்தில்)

சாலொமோன் ராஜாவின் கட்டுமானப் பணிகள்

சாலொமோன் ராஜா எருசலேம் நகரத்தைச் சுற்றிலும் பல பிரமாண்டமான கட்டுமான பணிகளை மேற்கொண்டார். எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டிருந்த மோரியா மலையின் மற்றொரு பகுதியில் பல கட்டிடங்களைக் கொண்ட ஒரு அரண்மனை வளாகத்தை உருவாக்கினார். 

இந்த அரண்மனை வளாகத்தில் உள்ள எல்லா கட்டிடங்களையும் கட்டி முடிப்பதற்கு பதின்மூன்று வருடங்கள் சென்றது. அரண்மனை வளாகத்திற்குள் இருந்த கட்டிடங்கள்

Ø  தூண்களால் நிறுத்தப்பட்ட மண்டபம் Hall of Pillars (1 இராஜாக்கள் 7:6) இது அரண்மனையின் நுழைவாயிலாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Ø  நியாயவிசாரணை மண்டபம் Throne Hall (1 இராஜாக்கள் 7:7). இங்கு அமர்ந்து தான் சாலொமோன் ராஜா நியாயவிசாரணை செய்தார்.

Ø  லீபனோன் வனம் என்னும் மாளிகை House of the forest of Lebanon (1 இராஜாக்கள் 7:2). இந்த மாளிகையில் பெரும்பாலும் லீபனோனிலிருந்து கொண்டுவரப்பட்ட கேதுரு மரங்களால் செய்யப்பட்டிருந்ததால் இந்த பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது ஆயுதங்களையும் தளவாடங்களையும் வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டது (1 இராஜாக்கள் 10:16,17).

Ø  சாலொமோனுடைய அரண்மனை மண்டபம் Solomon’s House (1 இராஜாக்கள் 7:8). இது அரண்மனை வளாகத்தின் நடுப்புறத்தில் இருந்தது. இந்த மண்டபத்திற்கு உள்ளாக, எகிப்து தேசத்திலிருந்து சாலொமோன் ராஜா திருமணம் செய்திருந்த ராஜகுமாரத்திக்காக தனியாக ஒரு மண்டபம் கட்டப்பட்டிருந்தது.

இங்கு அமைக்கப்பட்டிருந்த எல்லா கட்டிடங்களின் பயன்பாடுகளைப் பற்றி முழுமையாக அறியப்படாவிட்டாலும், இவை ராஜாவின் குடும்பத்தினர் தங்கும் இடங்களாகவும், நியாயவிசாரணை மற்றும் பிற ராஜாங்க அலுவல்களை மேற்கொள்ளும் இடங்களாகவும் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எருசலேம் பட்டணத்தின் தண்ணீர் தேவைகளை சந்திப்பதற்காகவும், மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காகவும் சாலொமோன் ராஜா மூன்று குளங்களை உருவாக்கினார். இவை “சாலொமோனின் குளங்கள்” என்று அறியப்படுகின்றன. இந்த குளங்கள் தான் பிரசங்கி 2:6ல் குறிப்பிடப்பட்டிருப்பதாக வேதப்பண்டிதர்கள் கருதுகிறார்கள். 

சாலொமோனின் குளங்கள்

எருசலேம் பட்டணத்தின் பாதுகாப்பிற்காக கோட்டைகளை எழுப்பி மில்லோ என்கிற பகுதியையும் பழுதுபார்த்துக் கட்டினார் (2 சாமுவேல் 5:9; 1 இராஜாக்கள் 11:27). சீரியா தேசத்தின் வனாந்திரப்பகுதியில் தத்மோர் (தற்காலத்து பல்மீரா Palmyra) என்கிற பட்டணத்தையும் எழுப்பிக் கட்டினார். சிவந்தசமுத்திரத்தின் கரையிலே கடல்வழி வர்த்தகத்துக்குப் பயன்படும்படியாக கப்பல்களைக் கட்டுவித்தார். இந்த கப்பல்களை ஒப்பீர் என்கிற தேசத்திற்கு அனுப்பி நானூற்று இருபது தாலந்து (14,280 கிலோகிராம்) பொன்னை சாலொமோன் ராஜாவிற்கு கொண்டுவந்தார்கள்.

சாலொமோன் ராஜாவின் பெருஞ்செல்வங்கள்

இந்த உலகவரலாற்றிலேயே அதிக அளவிலான பொருட்செல்வங்களை கொண்டிருந்த மன்னர்களில் சாலொமோன் ராஜாவும் ஒருவர். அவருடைய தகப்பனாரான தாவீதுராஜா அவருக்கென்று பெருஞ்செல்வங்களை திரட்டி வைத்திருந்தார். இஸ்ரவேல் தேசத்தின் அருகில் இருந்த பலதேச மன்னர்கள் அவருக்கு கப்பம் கட்டி வந்தார்கள். சாலொமோன் ராஜாவின் ஞானத்தைக் கேட்பதற்காக உலகின் பல தேசத்து ஜனங்கள் அவருடைய முகதரிசனத்தைத் தேடி வந்தார்கள். அவர்கள் வருடந்தோறும் காணிக்கையாக பொற்பாத்திரங்கலையும், வெள்ளிப்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், வாசனைப்பொருட்களையும்,, குதிரைகளையும், கோவேறுகழுதைகளையும் கொண்டுவந்தார்கள்.

லீபனோனின் (லெபனானின்) கேதுரு மரம்

சாலொமோன் ராஜாவின் காலத்தில் இஸ்ரவேல் தேசம் உலகின் பல தேசங்களோடு வர்த்தகத்தொடர்பில் இருந்தது. தரைமார்க்கம் வழியாக தீரு, எகிப்து, அரேபியா போன்ற தேசங்களோடும், கடல்மார்க்கம் வழியாக ஸ்பானியா, இந்தியா, ஆப்ரிக்கா தேசங்களோடும் வணிக தொடர்பு இருந்தது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சாலொமோன் ராஜாவின் கப்பல்கள் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும். சாலொமோன் ராஜாவின் காலத்தில் வெள்ளி கற்களைப் போலவும், கேதுருமரங்கள் காட்டுஅத்தி மரங்களைப் போலவும் சேர்த்து குவிக்கப்பட்டன. சாலொமோன் ராஜா பயன்படுத்தின பாத்திரங்களெல்லாம் பசும்பொன்னாயிருந்தது. சாலொமோன் ராஜாவின் காலத்தில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை என்று வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிறது (1 இராஜாக்கள் 10:21). சாலொமோன் ராஜாவுக்கு எகிப்து தேசத்திலிருந்து வாங்கப்பட்ட 1400 இரதங்களும், 12,000 குதிரைகளும் இருந்தது. சாலொமோன் ராஜா ஐபிராத்து நதிக்கு இப்புறத்தில் இருக்கிற திப்சா என்கிற இடம் துவக்கி பெலிஸ்தரின் தேசம் வரைக்கும் ஆண்டு வந்தார். (1 இராஜாக்கள் 4:24ல் “நதிக்கு இப்புறம்” என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஐபிராத்து நதிக்கு இப்புறமான பகுதிகளைக் குறிக்கும் வழக்குச்சொல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (2).

சாலொமோன் ராஜாவின் வீழ்ச்சி

சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவாக தேவனால் அபிஷேகிக்கப்பட்டிருந்தார். தேவன் அவருக்கு எண்ணடங்காத ஆசீர்வாதங்களைக் கொடுத்திருந்தார். ஆனால் அவர் ஆண்டவருக்கு பயந்து வாழவில்லை. சாலொமோன் 700 பெண்களை திருமணம் செய்திருந்தார். இவர்களில் பெரும்பாலானவர்கள் அண்டைய நாடுகளின் இளவரசிகள். அரசியல் நோக்கத்துக்காக திருமணம் செய்யப்பட்டவர்கள். பல பெண்களை திருமணம் செய்யும் கலாச்சாரம் இருந்த பண்டைய காலகட்டத்தில் இது சம்பவித்திருந்தாலும், அந்த கால வழக்கத்தின்படியும், இது ஏற்றுக்கொள்ள முடியாததாகவும், தேவனுடைய வார்த்தையை மீறுவதாகவும் அமைந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்தை விட்டு புறப்பட்டு கானான் தேசத்தை அடைவதற்கு முன்பாகவே, அவர்கள் தங்களுக்கென்று பெற்றுக்கொள்ளப் போகிற கானான் தேசத்திலே, அவர்களை ஆளப்போகிற ராஜாக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அவர்களுக்கு எழுதி கொடுத்திருந்தார் (உபாகமம் 17:15 - 20). சாலொமோன் ராஜா அவை எல்லாவற்றையும் மீறி நடந்தார். அவர் திருமணம் செய்திருந்த அண்டைய நாட்டு பெண்கள் அவர்கள் வழிபட்டு வந்த தங்களுடைய தெய்வங்களை வணங்கும்படியாக சாலொமோன் ராஜாவின் இருதயத்தை தவறான வழியில் இழுத்துச் சென்றார்கள். சாலொமோன் ராஜா அந்நிய தெய்வங்களை வழிபட்டது மட்டுமல்லாமல் அந்த தெய்வங்களுக்காக கோவில்களையும் மேடைகளையும் கட்டினார்.

சாலொமோன் ராஜாவின் எதிரிகளும், முடிவும்

சாலொமோன் ராஜா இஸ்ரவேல் மக்களை தனக்கு அடிமைகளாக்காவிட்டாலும், அவர்களை யுத்தமனுஷரும், தனக்குப் பணிவிடைக்காரரும், பிரபுக்களும், சேர்வைக்காரரும், இரதவீரரும், குதிரைவீரருமாய் வைத்துக்கொண்டார் (1 இராஜாக்கள் 10:19-22). தன்னுடைய கட்டுமானப்பணிகளுக்கு மரங்களைக் கொண்டுவரும்படியாக முப்பதாயிரம் பேரையும், சுமைசுமப்பதற்காகவும், மரங்களை வெட்டுவதற்காகவும் பல்லாயிரக்கணக்கான ஜனங்களை கட்டாய வேலைக்குட்படுத்தினார். (1 இராஜாக்கள் 5:13-16). இதனால் இஸ்ரவேல் மக்கள் வெறுப்படைந்தார்கள். சாலொமோன் ராஜா தான் திருமணம் செய்த அந்நியப்பெண்களின் தெய்வங்களை தானும் பின்பற்ற ஆரம்பித்தார். ஆண்டவர் சாலொமோனுக்கு கனவில் தோன்றி அவருடைய வழிகளை சரிசெய்யும்படியாக எச்சரித்தார். ஆனால் சாலொமோன் ராஜா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஒன்றன்பின்னொன்றாக அவருக்கு பல பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்தது.

ஆண்டவர் அகியா என்கிற தீர்க்கதரிசியை அனுப்பி சாலொமோன் ராஜாவின் ராஜ்யம் உடையப்போகிறது என்றும், சாலொமோன் ராஜா ஆளுகிற பன்னிரண்டு கோத்திரங்களில், பத்து கோத்திரங்கள் அவரிடமிருந்து எடுக்கப்பட்டு அவருடைய வேலைக்காரனாகிய யெரொபெபெயாம் என்னும் ஒருவருக்கு கொடுக்கப்படப்போகிறது என்றும், சாலொமோன் ராஜாவின் வம்சாவளியினருக்கு இரண்டு கோத்திரங்களே மிஞ்சும் என்றும் எச்சரித்தார். அதுமட்டுமல்லாமல் சாலொமோன் ராஜாவுக்கு சுற்றுப்புற தேசங்களிலிருந்து பல எதிரிகள் எழும்பினர். ஏதோம் என்கிற தேசத்தைச் சேர்ந்த ஆதாத் என்கிற ஒரு மனிதன் சாலொமோன் ராஜாவுக்கு விரோதமாக எழும்பினான். சோபா என்கிற தேசத்தைச் சேர்ந்த ரேசோன் என்னும் மனிதனும் சாலொமோன் ராஜாவை எதிர்த்தான். சாலொமோன் ராஜா நாற்பது வருடங்கள் இஸ்ரவேல் தேசத்தை அரசாண்டபின் மரணமடைந்து, தாவீதின் நகரத்திலே அடக்கம் பண்ணப்பட்டார். 

தாவீதின் நகரமாகிய எருசலேம் (தற்காலத்தில்)

அவருக்குப் பின் அவருடைய மகனான ரெகொபெயாம் இஸ்ரவேல் தேசத்தை ஆளத் தொடங்கினார். ஆனால் இஸ்ரவேல் மக்கள் அவருக்கு எதிராக கலகம் செய்தார்கள். இஸ்ரவேல் தேசம் பிரிக்கப்பட்டு அகியா தீர்க்கதரிசி சொன்னபடியே பத்து கோத்திரங்கள் யெரொபெயாமிற்கு கொடுக்கப்பட்டது. இஸ்ரவேல் தேசம் பத்து கோத்திரங்கள் அடங்கிய இஸ்ரவேல் ராஜ்யம் என்றும் இரண்டு கோத்திரங்கள் அடங்கிய யூதா ராஜ்யம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

சாலொமோன் ராஜாவின் வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் பாடங்கள்

சாலொமோன் ராஜாவின் வாழ்க்கையின் ஆரம்பம் மிகவும் சிறந்த முறையில் இருந்தது, ஆனால் முடிவோ அவ்விதமாய் இருக்கவில்லை. சாலொமோன் ராஜாவிற்கு தேவன் அளவற்ற ஞானத்தைக் கொடுத்திருந்தார். அவர் அந்த ஞானத்தை இந்த உலகத்தில் தனக்கு புகழை சம்பாதிப்பதற்கான வியத்தகு செயல்களை செய்வதிலேயே செலவழித்தார். தன்னுடைய ஆத்துமாவைப் பாதுகாப்பதற்காக அந்த ஞானத்தை செலவழிக்காமல் போனார்.

சாலொமோன் ராஜாவின் தந்தையான தாவீது ராஜா ஆண்டவரிடம், தான் ஆண்டவருக்குப் பயந்து நடக்கும்படி தன்னுடைய இருதயத்தை ஒரே நோக்கமுடையதாய் ஆக்க வேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினார் (சங்கீதம் 86:11). ஆனால் சாலொமோன் ராஜாவின் இருதயமோ ஒரே நோக்கமுடையதாய் இராமல், பல்வேறு ஆசைகளாலும் விருப்பங்களாலும் இழுக்கப்பட்டு பிரிக்கப்பட்டதாயிருந்தது. அவருடைய இருதயம் ஆண்டவருக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்படாமல், ஆவர் திருமணம் செய்த பல பெண்களின் தெய்வங்கள், தன்னுடைய பொருட்செல்வங்கள், வெளிநாட்டு பொக்கிஷங்கள் ஆகியவற்றின் மேல் நாட்டங்கொண்டது.

சாலொமோன் ராஜா ஆரம்பத்தில் ஆண்டவருக்கு பலிகளை செலுத்தி தொழுது கொண்டாலும், பின்நாட்களில் அவருடைய வேற்றுதேசத்து மனைவிகள் அவரை விக்கிரகாராதனைக்கு நேராக இழுத்துச் சென்றார்கள். பரிசுத்த வேதாகமத்தின்படி விக்கிரகங்களை நாட்டி வழிபடுவது மாத்திரம் விக்கிரகாராதனை அல்ல. தேவனுக்கு நாம் கொடுக்க வேண்டிய நேரத்தையும், இடத்தையும் எவைகளுக்கெலாம் கொடுக்கிறோமோ அவைகளெல்லாம் விக்கிரகங்கள் தான். பணம், பொருட்கள், சிற்றின்பங்கள், அடிமைப்படுத்தும் பொழுதுபோக்குகள், அதிகாரம், ஆதிக்கம் ஆகியவற்றின் மேல் இருக்கும் மோகம் ஆகியவையும் விக்கிரகங்கள் தான் (எபேசியர் 5:5). மனிதர்களால் தீவிரமாக பின்தொடரப்பட்டு, இருதயங்களில் நாட்டப்பட்டிருக்கும் (எசேக்கியேல் 14:4) இந்த ஆவிக்குரிய விக்கிரகங்களும் தேவனால் வெறுக்கப்படுபவைகளே!

தாவீதுராஜா ஆண்டவருக்கென்று ஓரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர் மிகுதியான யுத்தங்களை நடத்தியிருந்ததினால், ஆண்டவர் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. பிரமாண்டமான தேவனுடைய ஆலயத்தை கட்டும் பாக்கியத்தை ஆண்டவர் சாலொமோன் ராஜாவுக்குக் கொடுத்தார். அதன்படி எருசலேம் தேவாலயம், தலைதலைமுறையாக உலகமெங்குமுள்ள மக்கள் பிரமித்து நோக்கும்படியான ஒன்றாக கட்டப்பட்டது. உலகமெங்கிலுமிருந்து மக்கள் வந்து அந்த ஆலயத்தில் இஸ்ரவேலின் தேவனுக்கு ஆராதனைகளை ஏறெடுத்தார்கள். ஆனால் இருதயம் வழுவிப்போன சாலொமோன் ராஜாவோ அவ்விடத்தில் வந்து தன்னுடைய ஆராதனைகளை செலுத்தமுடியாமல் விக்கிரகங்களையும், மேடுகளையும் தேடிச்சென்றார்.

சாலொமோன் ராஜா தேவனுக்கென்று ஆலயத்தை கட்டினபொழுதிலும், அவருடைய இருதயம் தேவனுக்கு உண்மையாக இராதபடியால், அதில் சென்று தேவனுக்கு ஆராதனை செலுத்தமுடியாமற் போயிற்று. சாலொமோன் ராஜா கட்டின பிரமாண்டமான தேவாலயம் நூற்றாண்டுகளுக்குப்பின் இடிக்கப்பட்டது. ஆனால் அவருடைய தகப்பனாகிய தாவீதுராஜா தேவனுடைய ஆசரிப்புக்கூடாரத்திற்கு தூரமான இடங்களிலும், வனாந்தரத்திலும் இருந்து தன்னுடைய இருதயத்திலிருந்து தேவனுக்கு ஏறெடுத்த ஆராதனைகள் தேவனால் அங்கீகரிக்கப்பட்டன (சங்கீதம் 51:16,17; 141:2). அதனால் மாற்றப்படமுடியாத, காலத்தால் அழிக்கமுடியாத நித்தியமான உடன்படிக்கைகளை தேவன் தாவீதுராஜாவோடு ஏற்படுத்தினார்.

சாலொமோன் ராஜாவின் ஜெபத்தைக் கேட்டு ஞானத்தைக் கொடுத்தது போல, நம்முடைய ஜெபங்களுக்கு பதில் கொடுப்பதற்கு ஆண்டவர் உண்மை உள்ளவராய் இருக்கிறார். அவ்வாறு நமக்கு கொடுக்கப்படும் பதில்களை நமக்கு நன்மை உண்டாக பயன்படுத்துகிறோமா அல்லது தீமை உண்டாகப் பயன்படுத்துகிறோமா என்பது நம்முடைய கரங்களில் இருக்கிறது.

ஆசிரியர் குறிப்பு:

மரக்கால் என்பது எபிரெய பாஷையிலே கோர் (Kor) என்று அழைக்கப்படுகின்றது, 1 கோர் = 208 கிலோகிராம்

குடம் என்பது எபிரெய பாஷையிலே பாத் என்று அழைக்கப்படுகின்றது. 1 பாத் = 22 லிட்டர்கள்

இரத்தாம்பர நூல் (Purple Yarn) – மத்தியதரைக்கடலில் வாழும் முரெக்ஸ் Murex (சங்குமுள்ளி) வகை கடல் நத்தைகளிலிருந்து எடுக்கப்படும் சாயத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஊதாநிற (Purple) நூல். இந்த சாயத்தை செய்வது கடினமான வேலையானதால், இரத்தாம்பரநூல் கிடைப்பதற்கு அரிதாக இருந்தது. இந்த நூலைக்கொண்டு செய்யப்பட்ட உடைகள் விலை உயர்ந்தவைகளானதால், அரச குடும்பத்தினரும், செல்வந்தர்களும் மட்டுமே இந்த உடைகளை அணிந்து வந்தனர்.

  

இரத்தாம்பர நூல் எடுக்கப் பயன்படும் கடல்நத்தையும், இரத்தாம்பரநூலும், இரத்தாம்பர உடையும்

இளநீலநூல் (Blue Yarn) – இந்த நூலும் மத்தியதரைக்கடலில் வாழும் முரெக்ஸ் Murex (சங்குமுள்ளி) வகை கடல் நத்தைகள் (அதிலும் குறிப்பாக hexaplex trunculus வகை நத்தைகளிலிருந்து) எடுக்கப்படும் சாயத்தை பயன்படுத்தி உருவாக்கப்படுவது ஆகும். வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் இளநூலின் நிறம் தெளிந்த வானத்தின் (clear blue sky) இளநீல நிறம் ஆகும்.

                                                     கடல் நத்தை Hexaplex trunculus                     இளநீலநூல்   

சிவப்பு நூல் (Crimson / Scarlet Yarn) – “கெர்மீஸ் எகினெடஸ் (Kermes Echinatus)” என்கிற செதில் பூச்சியிலிருந்து கிடைக்கும் சிவப்பு சாயத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சிவப்பு நூல் ஆகும் (3).

 

                           கெர்மீஸ் பூச்சிகள்                              சிவப்பு நூல்

மெல்லிய நூல் (Linen) – இது சணல் நூல் என்றும் அழைக்கப்படும். லினன்' (Linen) என்று தற்போது பரவலாக அழைக்கப்படும் மெல்லியநூலின் நூலிழைகள் ஆளி செடியின் (Flax Plant) தண்டுகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த மெல்லியநூலிலிருந்து செய்யப்பட்ட உடைகளே “வெண்வஸ்திரம்” என்று வேதாகமத்தில் அழைக்கப்படுகின்றது.                

ஆளி செடியின் நூலிழைகள்                           லினன்   
ஆதார நூற்களின் பட்டியல்:

(1) James Orr (Ed), Court of the Sanctuary; Tabernacle; Temple. International Standard Bible Encyclopedia, Wm. B. Eerdmans Publishing Co. (1939).

(2) I Kings 4:24. Exposition of the Entire Bible by John Gill [1746-63]. https://sacred-texts.com/bib/cmt/index.htm

(3) The Scarlet Dye of the Holy Land. Amar Z. etal., BioScience, Volume 55, Issue 12, December 2005, Pages 1080–1083, https://doi.org/10.1641/0006-3568(2005)055[1080:TSDOTH]2.0.CO;2 

(மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களிலிருந்து, இந்த புஸ்தகத்தை ஆக்கியோர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது)

வேதபகுதி: 1 இராஜாக்கள் 1 – 11; 2 நாளாகமம் 1 – 9

மனப்பாட வசனம்: 1 இராஜாக்கள் 2:2, 3

Click this link to learn how to organize VBS / Retreats

Click this link to get Sunday School Guidelines (Part - 1) - Division of Sunday School Classes 

  Click this link to get Sunday School Guidelines (Part - 2) - Effective & Creative Teaching methods for Sunday School 

Click this link to learn how to help kids memorize Bible Verses

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

Click this link and visit devotions blog to read Christian articles  

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    சாலொமோன் ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டபின், ஆசரிப்புக்கூடாரம் இருந்த ………………… என்ற இடத்திற்கு பலி செலுத்துவதற்காக சென்றார்.

2.    ……………………………… ராஜா சாலொமோன் ராஜாவிற்கு தேவாலயம் கட்டுவதற்கு தேவையான மரங்களைக் கொடுத்தான்.

3.    சேபா ராஜஸ்திரீ ……………………… தாலந்து பொன்னை சாலொமோன் ராஜாவிற்கு பரிசாகக் கொடுத்தாள்.

4.    ……………………… என்கிற தீர்க்கதரிசி சாலொமோன் ராஜாவின் ராஜ்யம் உடையப்போகிறது என்று தீர்க்கதரிசனம் உரைத்தார். 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.    சாலொமோன் ராஜா சிறந்த ஞானத்தை எவ்வாறு பெற்றுக் கொண்டார்?  

2.    சேபா ராஜஸ்திரீ எதைக் கண்டு பிரமிப்படைந்தாள்

3.    சாலொமோன் ராஜாவால் அரண்மனை வளாகத்திற்குள் கட்டப்பட்ட கட்டிடங்கள் எவை?

4.    சாலொமோன் ராஜாவின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம் என்ன? 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.    சாலொமோன் ராஜாவின் வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் பாடம் என்ன?


 

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...