Monday, November 2, 2020

மோசேயும் எகிப்தின் பத்து வாதைகளும் (Moses & The Ten Plagues of Egypt), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 9

மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது

வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

பாடம்- 9

மோசேயும் எகிப்தின் பத்து வாதைகளும் 

எகிப்தின் இளவரசனான மோசே:

மோசே லேவி கோத்திரத்தைச் சேர்ந்த அம்ராமுக்கும், யோகெபேத்திற்கும் பிறந்தவன். மோசே பிறந்தபொழுது இஸ்ரவேலர் எகிப்திலே அடிமைகளாய் இருந்தார்கள். அப்பொழுது பார்வோன் இஸ்ரவேலிலே பிறந்த எல்லா ஆண்பிள்ளைகளையும் கொல்லுவதற்கு வகை தேடிக் கொண்டிருந்தான். மோசேயின் தாய் அவனை ஒரு நாணற்பெட்டியிலே வைத்து அவனை நைல் நதியோரமாய் வைத்தாள். நதிக்கு ஸ்நானம் பண்ண (குளிக்க) வந்த பார்வோனின் மகள் அந்த குழந்தையைக் கண்டு அவனைத் தன் மகனாகவே வளர்த்தாள்.  மோசேக்கோ தான் ஒரு இஸ்ரவேலன் என்று தெரியும். 

அவன் தன் மக்கள் அடிமைத்தனத்தில் கொடூரமாய் நடத்தப்படுவதைப் பார்த்தான். மோசே நாற்பது வயதாயிருந்தபொழுது எகிப்தியன் ஒருவன் இஸ்ரவேலன் ஒருவனை அடிப்பதைப் பார்த்து, அந்த எகிப்தியனைக் கொன்று போட்டான். பின்னர் அவன் பார்வோனுடைய தண்டனைக்குப் பயந்து மீதியான் என்கிற தேசத்திற்கு ஓடிப் போனான். 
 

மோசே மீதியான் தேசத்தில்:

மோசே நற்பது வருடங்கள் மீதியான் தேசத்தில் ஆடு மேய்ப்பவனாய் தங்கியிருந்தான். நாற்பது வருடங்களின் முடிவில் தேவன் மோசேக்கு முட்செடியின் நடுவிலிருந்து தரிசனமானார். இஸ்ரவேல் ஜனங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்படியாக தாம் அவனை எகிப்து தேசத்திற்கு அனுப்பப்போவதாகவும் கூறினார். ஆனால் மோசேயோ தான் அதற்கு தகுதியற்றவன் என்றும், ஆண்டவர் வேறு யாரையாவது அனுப்பவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆண்டவர் மோசேயிடம் அவனுடைய சகோதரனாகிய ஆரோனை அழைத்துக் கொண்டு போகும்படியாக கூறினார். தேவன் மோசேயை அனுப்பினபோது மோசேக்கு 80 வயதும், அவனுடைய சகோதரனாகிய ஆரோனுக்கு 83 வயதும் இருந்தது. 

எகிப்தியர் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பு:

மோசேயும், ஆரோனும் முதல்முறையாக பார்வோனை சந்தித்து இஸ்ரவேலரை வெளியே விடும்படியாக கேட்டபொழுது பார்வோன் மறுத்துவிட்டான். அதனால் மோசே தேவன் தனக்கு காட்டிக் கொடுத்த முதல் இரண்டு அற்புதங்களையும் பார்வோனுக்கு முன்பாக செய்தான். ஆனால் பார்வோனுடைய மந்திரவாதிகளும் அதே அற்புதத்தை செய்ய முடிந்ததால் பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது. 

அதனால் தேவன் பத்து பயங்கரமான வாதைகளை (தண்டனைகளை) எகிப்தியர் மேல் அனுப்பினார். அந்த வாதைகள் தேவனுடைய வல்லமையை இஸ்ரவேல் மக்களுக்கும், பார்வோனுக்கும், எகிப்தியருக்கும் விளங்கப்பண்ணினது. அதுமட்டுமல்லாமல் தலைமுறை தலைமுறையாக பேசப்படும் அளவிற்கு பயங்கரமானதாயிருந்தது. இந்த வாதைகள் எகிப்தின் தெய்வங்கள் மேல் நீதி செலுத்துவதாகவும் அமைந்தது என்று வேதாகமம் சொல்லுகிறது (யாத்திராகமம் 12:12; எண்ணாகமம் 33:4)

முதல் வாதை – தண்ணீர் இரத்தமாக மாறுதல்

எகிப்தியர் மேல் தேவன் அனுப்பின முதல் வாதை நைல் நதி இரத்தமாக மாறினது தான். ஆரோன் தேவனுடைய கோலால் நைல் நதியை தொட்டவுடன் நதியின் தண்ணீர் இரத்தமாக மாறினது. நதியிலிருந்த மீன்கள் செத்து, நதி நாற்றம் எடுத்தது. இந்த வாதை 7 நாட்கள் நீடித்தது. ஆனால் பார்வோனுடைய மந்திரவாதிகளும் அதே அற்புதத்தை செய்ய முடிந்ததால், பார்வோன் அதைப் பற்றி கவலைப்படவில்லை. 

இரண்டாம் வாதை – தவளைகள்

எகிப்தின் மேல் தேவன் இரண்டாவதாக அனுப்பிய வாதை தான் தவளைகள். தவளைகள் நதியிலிருந்து ஏறி வந்து அவர்கள் வீடுகளிலும், மாவு பிசைகிற தொட்டிகளிலும், எல்லா இடங்களிலும் இருந்தது. பார்வோனுடைய மந்திரவாதிகளாலும் தவளைகளை பிறப்பிக்க முடிந்தது. ஆனால் தவளைகளை போக வைக்க முடியவில்லை. ஆகவே மோசேயின் உதவி பார்வோனுக்கு தேவை பட்டது.
 

மூன்றாம் வாதை – பூமியின் புழுதி பேன்களை பிறப்பித்தல்

ஆரோன் தன்னுடைய கையிலிருந்த கோலை நீட்டி, புழுதியை அடித்தபொழுது அது பேன்களைப் பிறப்பித்தது. பார்வோனுடைய மந்திரவாதிகளால் பேன்களை பிறப்பிக்க முடியவில்லை, அதனால் அவர்கள் இந்த வாதை “தேவனுடைய விரல்” என்றார்கள். இந்த வாதை தான் கடைசியாக ஆரோன் வரவழைத்த வாதை. இதன் பின்னர் உள்ள வாதைகள் அனைத்துமே மோசேயால் வரவழைக்கப்பட்டன. 

நான்காம் வாதை – வண்டு ஜாதிகள்

Sweet Publishing / FreeBibleimages.org.
இந்த வாதையின்பின் தான் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் உள்ள வித்தியாசத்தை தேவன் காண்பிக்கத் தொடங்கினார். இந்த வாதைக்குப் பின் எகிப்தியர் மாத்திரமே தாக்கப்பட்டதால் பார்வோன் தேவனிடம் பேரம்பேச முயற்சித்தான். பார்வோன் அவர்களிடம் எகிப்து தேசத்தில் வைத்தே பலி செலுத்தும்படி கூறினான். 

ஐந்தாம் வாதை – மிருக ஜீவன்கள் மேல் வந்த கொள்ளைநோய்

Sweet Publishing / FreeBibleimages.org.
எகிப்தின் ஐந்தாம் வாதை மிருகஜீவன்கள் மேல் வந்த கொள்ளைநோய் ஆகும். இந்த வாதை வருவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

ஆறாம் வாதை – எரிபந்தமான கொப்புளங்கள்

Sweet Publishing / FreeBibleimages.org.

ஆறாவது வாதை எரிபந்தமான கொப்புளங்கள். மோசே சூளையிலிருந்து சாம்பலை எடுத்து வானத்துக்கு நேரே வீசினான். அப்பொழுது அது மனிதர்கள் மேலும், மிருகஜீவன்கள் மேலும் கொப்புளங்களாக வந்து விழுந்தது. மந்திரவாதிகள் கேலும் கொப்புளங்கள் வந்ததால் முதன்முறையாக அவர்களாலும் மோசேயின் முன்பாக நிற்க முடியவில்லை.

ஏழாம் வாதை – கல்மழை

Sweet Publishing / FreeBibleimages.org.

ஏழாவது வாதையாக இடிமுழக்கங்களையும், கல்மழையையும் அனுப்பினார். அக்கினி தரையின்மேல் வேகமாக ஓடினது. வெளியே இருந்த மிருகஜீவன்கள் எல்லாம் அழிக்கப்பட்டது. சணலும், வாற்கோதுமையும் அழிக்கப்பட்டது. கோதுமையும், கம்பும் அழிக்கப்படவில்லை. அவர்களுடைய முக்கிய உணவு தானியங்கள் அழிக்கப்படாததால் அவர்களுக்கு இன்னுமொரு தருணம் கொடுக்கப்பட்டது. பார்வோன் இஸ்ரவேலரிடம், ஆண்கள் மாத்திரம் சென்று தேவனை ஆராதிப்பதற்கு அனுமதி கொடுப்பதாகவும், இஸ்ரவேலருடைய  குழந்தைகள் எகிப்து தேசத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தான். பின்னர் மோசேயை அங்கிருந்து துரத்தினான்.

எட்டாம் வாதை – வெட்டுக்கிளி

Sweet Publishing / FreeBibleimages.org.

எட்டாவது வாதையாக வெட்டுக்கிளிகள் எகிப்து தேசம் முழுவதையும் வந்து மூடினது. கல்மழைக்கு தப்பியிருந்த பயிர்வகைகளை வெட்டுக்கிளிகள் அழித்துப் போட்டது. எகிப்தியருடைய உணவிற்கான அனைத்து பயிர்வகைகளும் அழிக்கப்பட்டன. ஆகிலும் பார்வோன் தன் பிடியை தளர்த்தவில்லை. 

ஒன்பதாம் வாதை – காரிருள்

Sweet Publishing / FreeBibleimages.org.

ஒன்பதாவது வாதையாக மூன்றுநாள் வரைக்கும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்ககூடாதபடிக்கு காரிருள் வந்து மூடிக்கொண்டது. பார்வோனுக்கு அடுத்தபடியாக எகிப்தியர்களால் அதிகமாக வணங்கப்பட்டு வந்த ரா என்கிற சூரியக்கடவும் தன்னுடைய வெளிச்சத்தைக் கொடுக்கவில்லை. சூரியக்கடவுள் இஸ்ரவேலின் தேவனுக்கு முன்பாக மறைந்து போனது. அதனால் பயந்து போன பார்வோன், இஸ்ரவேலர் தேவனை ஆராதிப்பதற்கு தங்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போகலாம் ஆனால் ஆடு மாடுகளை கொண்டு போகக் கூடாது என்று கூறினான். ஆனால் மோசேயோ பலிப் பொருள் இல்லாமல் தாங்கள் தேவனை ஆராதிக்க போகமுடியாது என்று கூறி மறுத்து விட்டார்.

பத்தாம் வாதை – தலைப்பிள்ளை சங்காரம்

Sweet Publishing / FreeBibleimages.org.

எகிப்தியருக்கு கொடுக்கப்பட்ட வாதைகளிலே இந்த வாதை தான் மிகவும் கொடியதாகும். எகிப்தியருடைய மற்ற எல்லா தெய்வங்களைக் காட்டிலும் பார்வோனே உயர்ந்த கடவுளாக கருதப்பட்டான். மாம்ச அவதாரமெடுத்த ரா என்கிற சூரிய கடவுளுடைய அவதாரமாகவே பார்வோன் கருதப்பட்டான். பத்தாவது வாதையின் போது, எகிப்து தேசத்தின் எல்லா முதற்பிள்ளைகளும் மரித்துப் போனது. ஆனால் இஸ்ரவேலரோ பாதுகாக்கப்பட்டனர். 

இஸ்ரவேலர் தங்கள் வாசலின் சட்டத்தில் கொல்லப்பட்ட ஒரு ஆட்டின் இரத்தத்தை பூச வேண்டும். இராத்திரியிலே மரணதூதன் எகிப்து தேசத்தைக் கடந்து செல்லும்பொழுது இரத்தம் பூசப்பட்டிருக்கிற  வீடுகளுக்குள்ளே அவன் வராதிருப்பான் என்று மோசே அவர்களுக்குக் கூறியிருந்தார். இந்த ஆட்டிற்கு பஸ்கா ஆடு என்று பெயர். (இந்த பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்)

எகிப்தை விட்டு இஸ்ரவேலர் வெளியேறுதல்:

இந்த கடைசி வாதை பார்வோனை மிகவும் பாதித்ததினால், அவன் இஸ்ரவேலரை அனுப்புவதற்கு சம்மதித்தான். மோசேயும் இஸ்ரவேலரும் எகிப்தை விட்டு வேகமாக கடந்து போனார்கள். அவர்கள் வேகமாய் கடந்து சென்றதால் அப்பம் புளிக்கவில்லை. அதைத் தான் இஸ்ரவேலர் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை என்று அழைக்கின்றனர். இஸ்ரவேலர் 430 ஆண்டுகள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்ததாக வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

வேதபகுதி:  யாத்திராகமம் 2 – 12; அப்போஸ்தலர் 7:20 – 36

மனப்பாட வசனம்: எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங்கீதம் 136: 10 – 12)

 வரலாற்று ஆதாரங்கள்

அடிமைகள் செங்கல் செய்வதை விளக்கும் சித்திரம். விசியர் ரெக்மிரே என்பவருடைய கல்லறையிலிருந்து (TT100) தீப்ஸ் (லக்ஸ்ர்) என்கிற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்ரவேலர் எகிப்திலிருந்த புறப்பட்ட ஆண்டான 1446ஐ சார்ந்ததாக கருதப்படுகின்றது.


அமர்னா கற்பலகைகள் /அமர்னா எழுத்துக்கள் (Amarna Letters/ Amarna Tablets)

(படங்கள் பொது களத்திலிருந்து எடுக்கப்பட்டவை)

 

1988ஆம் ஆண்டு அமர்னா என்கிற இடத்தில் சுமார் 400 ஆப்பு வடிவமுள்ள கற்பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கிமு 1400 ஆம் ஆண்டு  ஆண்ட அமென்ஹொதெப் III மற்றும் அமென்ஹொதெப் IV ஆகியோர்களின் ராஜகாப்பகங்களை சார்ந்தவை. இவை மோசேயின் காலத்தில் எழுதப்பட்டதாக கருதப்படுகின்றன. எபிரெயர் கானான் தேசத்தில் நுழைந்ததற்கான முதல் ஆதாரத்தை இவை அளிக்கின்றன.

நைல் நதி தற்போதைய காலத்தில்
பத்து வாதைகளும், எகிப்திய தெய்வங்களும்

தேவன் எகிப்தியர் மேல் அனுப்பின பத்து வாதைகளின் மூலமாக எகிப்தின் தெய்வங்கள் மேல் நீதி செலுத்தினதாக வேதாகமம் சொல்லுகிறது (யாத்திராகமம் 12:12; எண்ணாகமம் 33:4). பத்து வாதைகளைப் பற்றியும், பண்டைய எகிப்தின் சில தெய்வங்களைப் பற்றியும் இந்த அட்டவணையில் பார்க்கலாம். 

வாதை எண்.

வாதைகள்

எகிப்தியருடைய தெய்வம் / தேவதை

1.

தண்ணீர் இரத்தமாக மாறுதல்

ஹப்பி - நைல் கடவுள்

 

2.

தவளைகள்

ஹெகெத் - வளமை, நீர், புதுப்பித்தல் ஆகியவற்றின் தவளை கடவுள்

3.

பூமியின் புழுதி பேன்களை பிறப்பித்தல்

ஜெப் - பூமி தெய்வம்

 

4.

வண்டு ஜாதிகள்

கெப்ரி - வண்டின் தலை உடைய  தெய்வம்

5.

மிருக ஜீவன்கள் மேல் வந்த கொள்ளைநோய்

ஹத்தோர் - மாட்டின் தலை உடைய தெய்வம்

6.

எரிபந்தமான கொப்புளங்கள்

செக்மெத் - கொள்ளை-நோய்க்கான தெய்வம்

7.

கல்மழை

நட் - வானதெய்வம்

8.

வெட்டுக்கிளி

ஒசிரிஸ் - பயிர்கள் மற்றும் வளமைக்கான தெய்வம்

9.

காரிருள்

ரா - சூரிய கடவுள்

10.

தலைப்பிள்ளை சங்காரம்

பார்வோன் - எகிப்தின் உச்ச அதிகாரத்தைக் கொண்ட கடவுள்


 

பண்டைய எகிப்தின் சில தெய்வங்களின் உருவங்கள்

                      
கொம் ஓம்பா (Kom Omba Temple) என்கிற பண்டைய எகிப்திய கோவிலில் செதுக்கப்பட்டிருந்த 
செக்மெத் (Sekhmet) என்கிற தேவதை

ராம்சேஸ் IV ( Ramses IV) என்கிற பார்வோனுடைய கல்லறையில் (Tomb) பொறிக்கப்பட்டிருந்த ரா(Ra) சூரிய கடவுளின் உருவம்

எகிப்தின் உச்ச அதிகாரத்தைக் கொண்டவர்களாக கருதப்பட்ட பார்வோன்களில் ஒருவரான ராம்சேஸ் IV என்பவருடைய கற்சிலை

எகிப்தின் சில தெய்வங்களுடைய உருவங்கள்

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    ஆரோன் தேவனுடைய கோலால் நைல் நதியை தொட்டவுடன் நதியின் தண்ணீர் …………………………… மாறினது.

2.    ஆரோன் தன்னுடைய கையிலிருந்த கோலை நீட்டி, புழுதியை அடித்தபொழுது அது ………………………………… பிறப்பித்தது.

3.     இடிமுழக்கங்களினாலும், கல்மழையினாலும் அழிக்கப்பட்ட பயிர்கள் ………………………………, ………………………………….

4.    இஸ்ரவேலர் …………………………. ஆண்டுகள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்ததாக வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.   ‘தேவனுடைய விரல்’ என்று அழைக்கப்பட்ட வாதை எது?

 

2.   இஸ்ரவேலருக்கும் எகிப்தியருக்கும் உள்ள வித்தியாசத்தை வெளிப்படுத்த தொடங்கிய வாதை எது? 


3.   எகிப்தியருக்கு ஏழாம் வாதையின் மூலமாக இன்னொரு தருணம் எவ்வாறு கொடுக்கப்பட்டது?



4.  எகிப்தியருடைய எட்டாம் வாதையைப் பற்றி எழுதவும்? 

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1. எகிப்தியர் மேல் வந்த பத்தாம் வாதையைப் பற்றியும், இஸ்ரவேலர் விடுவிக்கப்பட்டதைப் பற்றியும் எழுதவும்?   







திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...