Tuesday, December 28, 2021

மோசேயின் நியாயப்பிரமாணம் (The Law of Moses), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 12

மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது

வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம்- 12

 மோசேயின் நியாயப்பிரமாணம் 

மோசேயின் நியாயப்பிரமாணம் என்றால் என்ன? 

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து கானானை நோக்கி சென்று கொண்டிருந்தபொழுது வனாந்திரத்தில் நாற்பது வருடங்கள் தங்க வேண்டியதிருந்தது, அந்த சமயத்தில், தேவன் சீனாய் மலையில் வைத்து, இஸ்ரவேலரின் தலைவனாகிய மோசேக்குக் கொடுத்த வெவ்வேறு கட்டளைகளே “மோசேயின் நியாயப்பிரமாணம்” ஆகும். இதில் தேவன் சீனாய் மலையில் மோசே மூலமாக இஸ்ரவேல் ஜனங்களோடு ஏற்படுத்தின உடன்படிக்கையும் (Mosaic Covenant) அடங்கும். இந்த உடன்படிக்கைக்கு “சீனாய் மலை உடன்படிக்கை (Sinaitic Covenant or Mount Sinai Covenant)” என்ற பெயரும் உண்டு. அதே போல வேதாகமத்தின் பஞ்சாகமங்கள், அதாவது வேதாகமத்தின் முதல் ஐந்து ஆகமங்களும் (ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்) கூட்டாகவும் “மோசேயின் நியாயப்பிரமாணம்” என்று அழைக்கப்படுவதுண்டு. 

Picture credit: Tanny Keng, https://treasureboxmy.blogspot.com/

சீனாய் மலை உடன்படிக்கை (Mount Sinai Covenant or Mosaic Covenant) 

இந்த உடன்படிக்கை தேவனுக்கும், இஸ்ரவேல் தேசத்திற்கும் இடையே செய்யப்பட்ட ஒரு நிபந்தனைகளுக்குட்பட்ட உடன்படிக்கை (Conditional Covenant) ஆகும். (நிபந்தனைகளுக்குட்பட்ட உடன்படிக்கை என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள பாடம் – 7 ஐ வாசிக்கவும்). இந்த உடன்படிக்கை இஸ்ரவேல் தேசத்தோடு மட்டுமே செய்யப்பட்டது (யாத்திராகமம் 19:3-6), இந்த உடன்படிக்கைக்கு உட்படாத மற்ற எல்லா தேசத்தார்களும், இனங்களும் “புறஜாதிகள் (Gentiles)” என்றே அழைக்கப்பட்டனர். மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கும், சீனாய் மலை உடன்படிக்கைக்கும் உட்படாத புறஜாதிகள் “மனசாட்சி பிரமாணத்திற்கு (Law of Conscience)” உட்பட்டிருக்கிறார்கள் (ரோமர் 2:14 – 16). சீனாய் மலையில் மோசே மூலமாய் தேவன் இஸ்ரவேலரோடு செய்த இந்த உடன்படிக்கையைத் தான் “பழைய உடன்படிக்கை (Old Covenant)” என்று அழைக்கிறோம். 

613 கற்பனைகள் / கட்டளைகள் (The 613 Commandments)

பழங்காலத்து யூத ரபிக்களின் எழுத்துக்களின் தொகுப்பான தல்மூத், மோசேயின் நியாயப்பிரமாணத்தில் 613 கற்பனைகள் அல்லது கட்டளைகள் கொடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடுகின்றது. இதில் “செய்ய வேண்டியவை (Do’s)” என 248 கட்டளைகளும் “செய்யக்கூடாதவை (Don’ts)” என 345 கட்டளைகளும் அடங்கும். (1) “மிஷ்னே தோரா (Mishne Torah) என்பது ரபி மோஷே பென் மைமோன் என்பவர் எழுதிய மிகவும் புகழ்பெற்ற யூத சட்டத்தின் நெறிமுறைகள் ஆகும். அதில் இவர் மோசேயின் நியாயப்பிரமாணத்திலிருந்து 613 கட்டளைகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். இதுவே பெரும்பாலான யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகுப்பாகும். 

எடுத்துக்காட்டு: (இவரால் தொகுக்கப்பட்ட முதல் மூன்று கட்டளைகள்)

1.     தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை அறிய வேண்டும் (யாத்திராகமம் 20:2; உபாகமம் 5:6)

2.     நித்தியமான தேவனைத் தவிர வேறு எந்த தெய்வத்தைப் பற்றிய சிந்தையையும் அனுமதிக்கக் கூடாது (யாத்திராகமம் 20:3)

3.     தேவ தூஷணம் செய்யக்கூடாது (யாத்திராகமம் 22:27); அதற்கான தண்டனை மரணம் (லேவியராகமம் 24:16). (2) 

பெரிய கற்பனை எது? 

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களிலே பரிசேயர்கள் என்று அழைக்கப்பட்ட யூதர்களின் ஒரு பிரிவினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் உள்ள 613 கற்பனைகளையும் ஒன்றும் தவறாமல் அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்று எண்ணினர். அதற்காக ஒவ்வொறு கற்பனைக்கும் தங்களுடைய சொந்த புரிதலின்படி பல விளக்கங்களையும் வைத்திருந்தனர். அதையே மற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் யூத ஜனங்களிடையே பெரும் குழப்பமும் கலக்கமும் நிலவியது. ஒரு நாள் இயேசு கிறிஸ்துவிடம், பரிசேயர் கூட்டத்தை சேர்ந்த மோசேயின் நியாயப்பிரமாணத்தை நன்கு கற்றுத் தேர்ந்த நியாயசாஸ்திரி ஒருவன் வந்து கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எது என்று கேட்டான். இயேசு கிறிஸ்து அவனிடம் ‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக’ என்பதே முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், ‘உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக’ என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். 

மோசேயின் நியாயப்பிரமாணத்தின் உள்ளடக்கம் 

மோசேயின் நியாயப்பிரமாணத்தில் உள்ள கற்பனைகளை வகைப்படுத்த பல வேதபண்டிதர்கள் முயன்றுள்ளனர். அவர்களில் பழமைவாய்ந்த வேதபண்டிதர்களில் ஒருவரான தாமஸ் ஆக்கினாஸ் என்பவர் தான் மோசேயின் நியாயப்பிரமாணத்தை முதன்முறையாக மூன்று பகுதிகளாகப் பிரித்தார் (3). அந்த மூன்று பிரிவுகள் எவையெனில்

1.     ஒழுக்க சட்டங்கள் (Moral Laws)

2.     சடங்காச்சார சட்டங்கள் (Ceremonial Laws)

3.     குடிமையியல் சட்டங்கள் (Judicial / Civil Laws) 

ஒழுக்க சட்டங்கள் (Moral Laws) - மேசியாவை உலகத்திற்கு வெளிப்படுத்துவதற்கு, தேவனால் பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்த ஜனங்களாக இஸ்ரவேல் ஜனங்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கற்பிப்பதற்காக இந்த ஒழுக்க சட்டங்கள் கொடுக்கப்பட்டன. இதில் பத்து கற்பனைகள் மற்றும் ஒருவரோடொருவர் நேர்மையுடனும், நியாயத்துடனும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற கற்பனைகளும் அடங்கும். இந்த கற்பனைகளை மீறினால் கொடுக்கப்பட வேண்டிய தண்டனைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

உலகத்தின் மிகவும் பழமை வாய்ந்த பத்து கற்பனைகள் பொறிக்கப்பட்டுள்ள கற்பலகை, 
Photo credit: Matt Roppolo/Heritage Auctions, HA.com via AP

சடங்காச்சார சட்டங்கள் (Ceremonial Laws) – இவை இஸ்ரவேலருடைய ஆராதனை சம்பந்தமான சடங்குமுறைகள், ஆச்சாரங்கள், பண்டிகைகள், பலிகள் போன்றவைகளுக்கடுத்த சட்டங்கள் அடங்கும். இந்த சட்டங்கள் வருங்காலத்தில் மேசியாவாகிய இயேசு கிறிஸ்து நிறைவேற்றப்போகிற தியாக பலியின் நினைப்பூட்டுதலாகவும், நிழலாட்டமாகவும் அமைந்தன. இந்த சடங்காச்சார சட்டங்களில் அடங்கிய பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன 

Ø  ஆராதனை மற்றும் சுத்திகரிப்புக்கடுத்த சடங்குகள்

Ø  பண்டிகைகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளை நினைவு கூறுதல்

சுக்கோத் என்ற கூடாரப்பண்டிகையை கொண்டாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரம், 
Photo credit: Effi B.

Ø  இஸ்ரவேல் ஜனங்கள் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை உணர்த்துவதற்கான சட்டங்கள் (விருத்தசேதனம், உணவு முறைகள், உடைகள்)

 எண்ணாகமம் 15:38ல் கொடுக்கப்பட்டுள்ள இஸ்ரவேலர் தங்களுடைய ஆடையில் தொங்கல்களை உண்டாக்க வேண்டும் என்ற பிரமாணத்தை நிறைவேற்றுவதற்காக யூதர்களுடைய நவீன ஆடைகளில் செய்யப்பட்டுள்ள "ஸிட்ஸிட் Tzitzit எனப்படும் தொங்கல்கள், Photo credit: Etan J. Tal

Ø  மேசியாவின் வருகையை உணர்த்துவதற்கான அடையாள சடங்குகள் (பஸ்கா பலி, முதற்பேறு மீட்கப்படுதல்) 

     உபாகமம் 6:8ல் சொல்லப்பட்டுள்ள கர்த்தருடைய வார்த்தைகள் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாக இருக்க வேண்டும் என்ற பிரமாணத்தை நிறைவேற்றுவதற்காக யூத ரபி ஒருவர் டெஃபில்லின் அல்லது ஃபைலக்டெரிஸ் என்று அழைக்கப்படும் நான்கு கைப்பட எழுதிய வேதபகுதிகள் அடங்கிய ஒரு கறுப்புப் பெட்டியை தன்னுடைய நெற்றியில் கட்டியிருப்பதை படத்தில் காணலாம்.
 Photo credit: https://free.messianicbible.com/
உபாகமம் 6: 6-9 ல் சொல்லப்பட்டுள்ளபடி கர்த்தருடைய வார்த்தைகளை வீட்டின் நிலைக்கால்களில் எழுத வேண்டும் என்பதற்காக வேத எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ள காகிதத்தோல் அடங்கிய மெஸூஸா என்று அழைக்கப்படும் சிறிய அலங்கார பெட்டி ஒன்று யூத குடும்பம் வசிக்கும் வீட்டின் வாசல் நிலையில் தொங்கவிடப்பட்டிருப்பதை பார்க்கலாம், படம்: பொதுகளம்

குடிமையியல் சட்டங்கள் (Judicial / Civil Laws) – ஒரு தெய்வ இறைமை ஆட்சியாக (Theocracy) இஸ்ரவேல் நாடு எவ்வாறு ஆளப்பட வேண்டும் என்பதற்கான சட்டங்கள். தெய்வ இறைமை ஆட்சி என்றால் ஒரு நாட்டை தேவனே ஆளுகை செய்கிறார் என்று அர்த்தம், நாட்டின் ராஜாவாகவும், உச்ச நீதிபதியாகவும் தேவனே செயல்படுகிறார். 

இயேசு கிறிஸ்துவும், மோசேயின் நியாயப்பிரமாணமும் 

இயேசு கிறிஸ்து மோசேயின் நியாயப்பிரமாணத்தை பின்பற்றவில்லை என்று பரிசேயர்கள் அவரை குற்றஞ்சாட்டிவந்தனர். ஆனால் பரிசேயரோ, மோசேயின் நியாயப்பிரமாணத்தின் ஒரு எழுத்தையும் மாற்றாமல் அப்படியே பின்பற்றுவது போலக் காணப்பட்டாலும் அது வெளிப்புறமான ஒரு சடங்காச்சார ஆசரிப்பாக இருந்ததே ஒழிய மோசேயின் நியாயப்பிரமாணம் எந்த நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டதோ அது நிறைவேற்றப்படவில்லை. 

எடுத்துக்காட்டாக மோசேயின் நியாயப்பிரமாணத்தில் முக்கியமான கட்டளைகளில் ஒன்று ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டியது என்பதாகும். அதன்படி யூதர்கள் ஓய்வுநாளில் வேலை ஒன்றும் செய்யாமல் அதை பரிசுத்தமாக கடைபிடிக்க வேண்டும். அப்பொழுது, “எது வேலை? எது வேலை இல்லை? எந்த அளவிற்கு வேலை செய்யலாம்?” என்பது போன்ற பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்த பொழுது அந்த சந்தேகங்களை போக்குவதற்காக யூதமதத் தலைவர்கள் 39 பிரிவுகளின் கீழ் ஓய்வு நாளிற்கான சட்டங்களை வகுத்தனர். இந்த 39 பிரிவுகளுக்கு கீழாக பல உப பிரிவுகள் இருந்தன. இதில் ஓய்வு நாளில் எத்தனை அடிகள் எடுத்து வைத்து நடக்கலாம், எத்தனை வார்த்தைகள் எழுதலாம் என்று கூட சட்டங்கள் வகுக்கப்பட்டன. நாளடைவில் இந்த மனித கற்பனைகளே உபதேசங்களாக போதிக்கப்பட்டு இதற்கே பெருத்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிப்பதை விட இந்த சட்டதிட்டங்களுக்கே பரிசேயர்கள் அதிக  முக்கியத்துவம் கொடுத்தனர். இதைத்தான் இயேசு கிறிஸ்து பலமுறை “மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாக போதித்து வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள்” என்று பரிசேயரை அடிக்கடி கடிந்து கொண்டார். 

வெளிப்புறமாக மனிதர் காணும்படியான சடங்காச்சாரங்களுக்கும், முறைமைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து கடைபிடிக்கப்பட்டது. ஆனால் நியாயப்பிரமாணத்தின் விசேஷ கருப்பொருட்களாகிய நீதி, விசுவாசம், இரக்கம் ஆகியவை விட்டுவிடப்பட்டது. இதைத்தான் இயேசுகிறிஸ்து “கொசுயில்லாதபடி வழிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்” என்று வேதபாரகரை சாடினார் (மத்தேயு 23:23). இப்படி நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் மாற்றப்பட்டது. வேதபாரகரின் மனித கற்பனைகளால் வலுவிழந்த நியாயப்பிரமாணம், இஸ்ரவேலருக்கு நிறைவேற்றமுடியாத பாரமாக மாறினது. 

மோசேயின் நியாயப்பிரமாணத்தை முழுமையாக நிறைவேற்றினவர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மட்டுமே. அவர் அதை பரிசேயரின் புரிந்துகொள்ளுதலின்படியோ, பாரம்பரியத்தின்படியோ நிறைவேற்றாமல், வேத எழுத்துக்களில் கொடுக்கப்பட்ட மெய்யான சத்தியத்தின்படி அதை நிறைவேற்றினார். அதனால் தான் என்னில் குற்றமுண்டென்று உங்களில் யார் சொல்லக்கூடும் என்று கேட்டபொழுது, அவரை யாரும் குற்றம் சொல்ல முடியவில்லை. 

அதன் மூலமாக காலாகாலமாக யூதர்களால் நிறைவேற்றப்பட முடியாததாகவும், சுமக்கமுடியாத பாரமாகவும் மாறின நியாயப்பிரமாணத்தின் முடிவாகவும் அவரே மாறினார். எப்படியெனில், நியாயப்பிரமாணத்தில் நிழலாட்டமாக கொடுக்கப்பட்டவைகளின் பொருள் கிறிஸ்துவே. நியாயப்பிரமாணம் இஸ்ரவேலருக்கு எத்தகைய பரிசுத்தத்தை கற்றுக் கொடுத்து அவர்களை பிரித்தெடுக்கப்பட்ட ஒரு ஜாதியாய் உருவாக்க விரும்பினதோ, அது இயேசு கிறிஸ்துவின் மூலமாக நிறைவேறினது. இயேசுகிறிஸ்து நியாயப்பிரமாணத்தை ஒழிக்கவில்லை, அதை முழுமையாக நிறைவேற்றி அதை முடிவுக்கு கொண்டு வந்தார். 

நியாயப்பிரமாணத்தை அழிக்க அல்ல, நிறைவேற்ற வந்தேன் 

இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில், தான் நியாயப்பிரமாணத்தை அழிக்க அல்ல, நிறைவேற்ற வந்ததாக கூறியிருந்தார் (மத்தேயு 5:17). மோசேயின் நியாயப்பிரமாணம் வரப்போகிற காரியங்களின் நிழலாகவே இருந்தது, கிறிஸ்துவே அதன் பொருளாக இருக்கிறார் (எபிரெயர் 10:1). 

மோசேயின் நியாயப்பிரமாணத்தின் மூலமாக கொடுக்கப்பட்ட சடங்காச்சார சட்டங்களின் முழு நிறைவேறுதலாக கிறிஸ்து இருந்தார். இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட ஆராதனை முறைகள், சடங்குமுறைகள், பண்டிகைகள், பலிகள் எல்லாம் வரப்போகிற மேசியாவையும், தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தையும் வெளிப்படுத்துவதாகவே இருந்தது. இயேசு கிறிஸ்து மேசியாவாக, இரட்சகராக இந்த உலகத்தில் வெளிப்பட்டு தன்னை மனிதருடைய பாவங்களுக்காக பலியாக ஒப்புக்கொடுத்தன் மூலம் இந்த சடங்காச்சார சட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 

ஒரு தெய்வ இறைமை ஆட்சியாக (Theocracy) இஸ்ரவேல் நாடு எவ்வாறு ஆளப்பட வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட குடிமையியல் சட்டமும் மேசியாவின் வருகைக்குப்பின் முடிவுக்கு வந்தது. சாமுவேலின் காலத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு மற்ற ஜனங்களைப் போல ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டபொழுதே அவர்கள் தேவனுடைய ஆட்சியை நிராகரிக்கத் தொடங்கினார்கள். அதன்பின்னர் இயேசு கிறிஸ்துவின் வருகைக்குப்பின் தேவனுடைய ராஜ்யத்தின் சத்தியத்தை இயேசுகிறிஸ்து அவர்களுக்குப் போதித்த பொழுது, அதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் இயேசு கிறிஸ்து அவர்களிடம், “தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்” என்றார். அந்த “ஜனங்கள்” என்பது “தேவனுடைய திருச்சபை” ஆகும். தேவனுடைய திருச்சபை என்பது இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய உபதேசங்களுக்கு கீழ்ப்படிகிற ஜனங்களின் கூட்டமாகும். இகவே இது ஒரு குறிப்பிட்ட தேசத்தையோ, இனத்தையோ சார்ந்ததல்ல. தேவனுடைய ராஜ்யத்தின் செயல்களை நடப்பிப்பதற்காக தேவனுடைய சபையின் அங்கமாகும்படி உலகத்தின் எல்லா மனிதர்களுக்கும் அழைப்பு விடப்படுகின்றது. 

மோசேயின் நியாயப்பிரமாணத்தின் மூலம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒழுக்க சட்டங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. மேசியாவை உலகத்திற்கு வெளிப்படுத்துவதற்கு, தேவனால் பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்த ஜனங்களாக இஸ்ரவேல் ஜனங்கள் வாழுவதற்காக கொடுக்கப்பட்ட ஒழுக்க சட்டங்கள் மேசியாவின் வருகையோடு நிறைவேறி முடிந்தது. ஆனால் மோசேயின் காலத்திற்கு முன்பும் மனிதர்களுக்கு பல ஒழுக்க சட்டங்களை தேவன் கொடுத்திருந்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கொலை செய்யக் கூடாது, திருடக்கூடாது போன்ற சட்டங்கள் எல்லா தேசம் மற்றும் இனத்தை சார்ந்த மனிதர்களும் கடைபிடிக்க வேண்டும் என்று ஆதி முதல் தேவன் கட்டளையிட்ட உலகளாவிய ஒழுக்க சட்டங்கள் (universal moral laws) ஆகும். ஆகவே அவைகள் இன்றும் கடைபிடிக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. 

பழைய உடன்படிக்கை, புதிய உடன்படிக்கை 

இந்த பாடத்தின் ஆரம்பத்தில் பார்த்தது போல, சீனாய் மலை உடன்படிக்கை இஸ்ரவேல் தேசத்தோடு மட்டுமே செய்யப்பட்டது (யாத்திராகமம் 19:3-6), மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கும், சீனாய் மலை உடன்படிக்கைக்கும் உட்படாத புறஜாதிகள் “மனசாட்சி பிரமாணத்திற்கு (Law of Conscience)” உட்பட்டிருக்கிறார்கள் (ரோமர் 2:14 – 16). சீனாய் மலையில் மோசே மூலமாய் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை “பழைய உடன்படிக்கை (Old Covenant)” என்று அழைக்கப்படுகின்றது. இந்த பழைய உடன்படிக்கைக்குப் பதிலாக இயேசு கிறிஸ்து மூலமாக ஒரு புதிய உடன்படிக்கை (New Covenant) செய்யப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு பின், பழைய உடன்படிக்கைக்குக் கீழிருந்த இஸ்ரவேல் ஜனங்களும், மனசாட்சி பிரமாணத்திற்கு கீழிருந்த புறஜாதிகளும் ஒன்றாக புதிய உடன்படிக்கைக்குக் கீழாக கொண்டு வரப்பட்டார்கள். 

பிரமாண உடன்படிக்கை, கிருபை உடன்படிக்கை 

பழைய உடன்படிக்கை பிரமாணங்களின் மூலமாக செய்யப்பட்டது. பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிரமாணங்களை கைக்கொண்டால், அவர்கள் “நீதிமான்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ள தவறும் பட்சத்தில் அவர்களுக்கு தண்டனைக்கு உள்ளானார்கள். நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளுவதற்காக அவர்கள் செய்த “கிரியைகள்” மூலமாக அவர்கள் நீதிமான்கள் ஆக்கப்பட்டார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து மூலமாய் செய்யப்பட்ட புதிய உடன்படிக்கையோ, கிருபை சத்தியம் என்பவைகளின் வெளிப்பாடுகள் மூலம் செய்யப்பட்டது. ஆகவே இந்த புதிய உடன்படிக்கையின் காலத்தில், யூதர்களானாலும், புறஜாதிகளானாலும் சரி அவர்கள் நீதிமான்களாக்கப்படுவதற்கு மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டுள்ள கிரியைகளை நிறைவேற்ற வேண்டியதில்லை. நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாய், இயேசு கிறிஸ்து மனிதர்களுடைய பாவங்களைப் போக்குவதற்காக சிலுவையில் மரித்ததையும், உயிர்த்தெழுந்ததையும் விசுவாசிக்கும்பொழுது, கிருபையின் மூலமாக நீதிமான்களாக்கப்படுகிறோம். (நாம் இரட்சிக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லாவிட்டாலும், நாம் கிறிஸ்துவில் நிலை கொண்டிருக்கிறோம் என்பதை நம்மில் காணப்படும் கனிகள் அல்லது நம்முடைய கிரியைகள் வெளிப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (யோவான் 15:1-8). நற்கிரியைகள் [எபேசியர் 2:10; தீத்து 2:14; 3:1; 3:8]; விசுவாசத்தின் கிரியைகள் [2 தெசலோனிக்கேயர் 1:11; யாக்கோபு 2:14 – 26]) ஆகியவை நம்மில் காணப்பட வேண்டும்). 

புதிய உடன்படிக்கை – கிருபை மற்றும் சத்தியத்தின் உடன்படிக்கை

கிருபை மற்றும் சத்தியம் என்பது ஒன்றை விட்டு ஒன்றை பிரிக்கமுடியாத புதிய உடபடிக்கையின் இரண்டு பாகங்கள் ஆகும். இதைத்தான் யோவான் 1:17ல் “நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும், சத்தியமும் இயேசு கிறிஸ்து மூலமாய் உண்டாயின” என்று வாசிக்கிறோம். அதுமட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மாம்ச உருவெடுத்த பொழுது, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார் என்று யோவான் 1:14ல் வாசிக்கிறோம்.

கிருபை – நாம் தேவனுடைய இரக்கத்தை பெறுவதற்கு தகுதியற்றவர்களாய் இருக்கும்பொழுது, தேவன் நம்மிடத்தில் வெளிப்படுத்தும் அளவற்ற அன்பு, தயவு, இரக்கம், நீடிய பொறுமை ஆகியவை தான் கிருபை என்று அறியப்படுகிறது.

சத்தியம் – வேதவசனங்களின் மூலம் தேவன் நமக்கு கற்றுக் கொடுத்திருப்பவைகளே சத்தியம் (யோவான் 17:17; சங்கீதம் 119:142). வேதவசனங்களெல்லாம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டபடியால், நாம் வேதாகமத்தை வாசிக்கும்பொழுது சத்தியஆவியாகிய பரிசுத்த ஆவியானவரின் துணையோடு புரிந்து கொள்ள வேண்டும் (யோவான் 16:13 – 15).

கிருபையினாலே இரட்சிக்கப்பட்டபின், பாவத்திலே நிலைத்திருந்தால் கிருபை பெருகிக்கொண்டே இருக்கும் என்று வேதாகமத்தில் எங்கும் கற்றுத்தரப்படவில்லை (ரோமர் 6:1,2) மாறாக வேதசத்தியத்திற்கு எதிரான பொய்யான மாயைகளை பின்பற்றும்போது நமக்கு கிடைக்கும் கிருபையை போக்கடித்து விடுவோம் (யோனா 2:8); கிறிஸ்துவை விட்டு பிரியும்பொழுது கிருபையினின்று விழுந்து விடுவோம் (கலாத்தியர் 5:4) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.

சத்தியமற்ற கிருபையும், கிருபையற்ற சத்தியமும் வேதத்திற்கு முரணாணவை. கிருபையற்ற சத்தியம், நியாயப்பிரமாணத்தைப் போன்ற இன்னொரு பிரமாணமாய் குற்றப்படுத்துவதற்கும், நியாயத்தீர்ப்பதற்கும் ஏதுவாக அமையும். அதேபோல சத்தியமற்ற கிருபை யூதா 4ஆம் வசனத்தில் சொல்லப்பட்டிருப்பது போல ஒரு புரட்டப்பட்ட கிருபையாய் ஜனங்களை நித்திய ஆக்கினைத்தீர்ப்பிற்கு நேராக நடத்தி விடும். நாம் நிற்கிற கிருபை, தேவனுடைய மெய்யான கிருபை என்பதை நிச்சயித்துக்கொள்ள வேண்டும் (1 பேதுரு 5:12). இதுவே கிறிஸ்துவினால் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையின் புரிந்து கொள்ளுதல் ஆகும்.

மோசேயின் நியாயப்பிரமாணம் வரப்போகிற காரியங்களின் நிழலாட்டமாக இருந்தது. அவைகளின் பொருள் கிறிஸ்துவே. கிறிஸ்துவின் முதலாம் வருகைக்குப்பின் முதலாம் உடன்படிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு , கிறிஸ்துவையே மத்தியஸ்தராகக் கொண்ட ஒரு சிறந்த புதிய உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான குறிப்பு:

1)    இந்த பாடம் கிறிஸ்தவ அஸ்திபார உபதேசங்களை புரிந்து கொள்ளுவதற்கு மிகவும் முக்கியமான பாடம் என்பதால் கற்பிப்பதற்கு முன் மிகுந்த கவனமான முன் ஆயத்தம் தேவை.

2)    இந்த பாடத்தை ஒரே வகுப்பில் எடுத்து முடிப்பது சாத்தியமல்ல. நிதானமாய் 2 அல்லது மூன்று பாகங்களாகக் கற்றுக் கொடுப்பது பயன் தரும். 

ஆதார நூற்களின் பட்டியல்:

(1)              Hencht, M. The 613 Commandments (Mitzvot). Chabad–Lubavitch Media Centre. Retrieved November 22, 2021, from https://www.chabad.org/library/article_cdo/aid/756399/jewish/The-613-Commandments-Mitzvot.htm

(2)             Maimonides: The Rambam. The life and works of Moses Maimonides (1135-1204). Chabad–Lubavitch Media Centre. Retrieved November 22, 2021 from https://www.chabad.org/library/article_cdo/aid/889836/jewish/Maimonides-The-Rambam.htm

(3)             Bayes J. F. (2017). The Threefold Division of the Law. The Christian Institute. Retrieved November 23, 2021 from https://www.christian.org.uk/wp-content/uploads/the-threefold-division-of-the-law.pdf

(4)             What are some Sabbath observance rules that the Pharisees made? Retrieved on November 24, 2021 from https://bibleask.org/rules-pharisees-made-sabbath-observance/

(இந்த ஆதாரங்களிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது)

மனப்பாட வசனம்: எபிரெயர் 9:15 

For Sunday School activities and stories in English

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.     மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு உட்படாத புறஜாதிகள் “…………………………………………………… ” உட்பட்டிருக்கிறார்கள்

2.     தல்மூத்தின் அடிப்படையில் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் …………… கற்பனைகள் உள்ளன.

3.     ……………………………………………… ஆட்சி என்றால் ஒரு நாட்டை தேவனே ஆளுகை செய்கிறார் என்று அர்த்தம்.

4.     யோவான் 17:17ன் படி, ………………………………………. சத்தியம்.

 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும் 

1.  சீனாய் மலை உடன்படிக்கை என்றால் என்ன?

 

1.  மோசேயின் நியாயப்பிரமாணத்தில் உள்ள சடங்காச்சார சட்டங்கள் என்றால் என்ன?

 

2.  கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்த வேண்டிய கிரியைகள் எவை?

 

3.  புதிய உடன்படிக்கையை புரிந்து கொள்ள கிருபை மற்றும் சத்தியம் ஆகிய இரண்டும் ஏன் அவசியம்? 

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  “நியாயப்பிரமாணத்தை அழிக்க அல்ல, நிறைவேற்றவே வந்தேன்” என்று இயேசு கிறிஸ்து கூறியதன் அர்த்தம் என்ன? 

 

 

  

Tuesday, November 16, 2021

இஸ்ரவேலரை கலங்கப் பண்ணின ஆகான் (Achan Troubles Israel),இடைநிலை வகுப்பு (Intermediate) , ஞாயிறு பள்ளி வேதபாடம் - 12

                  இடைநிலை வகுப்பு (INTERMEDIATE) 

வயது: 12 - 13 வயது
வகுப்பு: VII & VIII

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் –12

இஸ்ரவேலரை கலங்கப் பண்ணின ஆகான்

இஸ்ரவேல் ஜனங்கள், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டபின், மோசேயின் தலைமையின் கீழ் கானான் தேசத்தை நோக்கி பிரயாணம் செய்தார்கள். இஸ்ரவேலருடைய தலைவனாகிய மோசே, கானானுக்குள் நுழைவதற்கு முன்பதாகவே தனது 120ஆவது வயதில் இறந்து போனார். அதன்பின்னர் மோசேயின் ஊழியக்காரனாகிய யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்கு வழிநடத்தினார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானுக்குள் செல்லுவதற்கு முன்பாக புரண்டோடிக்கொண்டிருந்த யோர்தான் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. அங்கே ஆண்டவர் ஒரு அற்புதம் செய்து, யோர்தான் ஆற்றை பின்னிட்டுத் திரும்பப்பண்ணினதினால், இஸ்ரவேல் ஜனங்கள் எளிதாக ஆற்றைக் கடந்து, கானான் தேசத்திற்குள் நுழைந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்தை சென்றடைந்திருந்தாலும், அதை தங்களுடைய சொந்த நாடாக மாற்றுவதற்கு முன்பாக, கானானிய பட்டணங்களை எல்லாம் ஒவ்வொன்றாக கானானிய ஜாதிகளிடமிருந்து பிடிக்க வேண்டியிருந்தது.

 

எரிகோவைக் கைப்பற்றுதல்:

யோர்தானைக் கடந்த உடன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிர்பட்ட முதல் பட்டணம், மதில் சூழ்ந்த எரிகோ பட்டணம். அதை கைப்பற்றுவது அசாத்தியமாக தோன்றினாலும், யோசுவா தேவன் தனக்கு கற்பித்ததின்படி, இஸ்ரவேலின் யுத்த வீரர்களை எரிகோ மதிலை சுற்றிவரப்பண்ணினார். முதல் ஆறு நாட்கள் ஒரு முறையும், ஏழாவது நாளில் ஏழு முறையும் சுற்றி வந்தார்கள். ஏழாவது முறை சுற்றி வந்த பொழுது ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதினார்கள். அப்பொழுது யோசுவா ஜனங்களை ஆர்ப்பரிக்கும்படியாக கூறினார், ஜனங்கள் சத்தமாய் ஆர்ப்பரித்தபொழுது எரிகோ மதில் இடிந்து விழுந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோ பட்டணத்திற்குள் சென்று அதை கைப்பற்றினார்கள். யோசுவா, ஜனங்களுக்கு முக்கியமான கட்டளை ஒன்றை கொடுத்து, எரிகோ பட்டணமும் அதில் உள்ள பொருட்களும் சாபத்தீடானதால், அதில் உள்ள எந்த ஒரு பொருளையும் எடுக்கக்கூடாது என்றும், அக்கினியால் சுத்திகரிக்கப்படக்கூடிய பொன், வெள்ளி, வெண்கலம் போன்ற பொருட்கள் மாத்திரம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும். அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றும் கூறியிருந்தார்.

Sweet Publishing / FreeBibleimages.org. 

ஆயி பட்டணத்தில் இஸ்ரவேலரின் பின்னடைவு:

எரிகோவிற்குப் பின் இஸ்ரவேலருக்கு எதிர்பட்ட அடுத்த பட்டணம் “ஆயி”. ஆயி பட்டணத்தை வேவு பார்த்து வரும்படியாக யோசுவா தன்னுடைய மனிதரில் சிலரை அனுப்பினார். அவர்கள் ஆயி பட்டணத்தை பார்த்து வந்து, ஆயி பட்டணம் ஒரு சிறிய பட்டணம் என்றும், அதனால் கொஞ்சம் யுத்த வீரர்களை வைத்து அதை எளிதாக கைப்பற்றிவிடலாம் என்றும் கூறினார்கள். அதனால் யோசுவா மூவாயிரம் யுத்த வீரர்களை மாத்திரம் அனுப்பினார். ஆனால் அந்த யுத்தம் அவர்கள் எதிர்பார்த்தபடி எளிதாக இருக்கவில்லை. ஆயி பட்டணத்து மனிதர்கள் இஸ்ரவேலரின் யுத்த வீரரில் முப்பத்தாறு பேரைக் கொன்று போட்டார்கள். அதனால் இஸ்ரவேலர் தோல்வியோடு தங்கள் பாளயத்திற்குத் திரும்பினார்கள். இஸ்ரவேலரின் தலைவனாகிய யோசுவா இதைக் கேட்டவுடன் தன்னுடைய அங்கியைக் கிழித்துக் கொண்டு, தன்னுடைய தலையில் புளுதியைப் போட்டுக் கொண்டு உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, இந்த தோல்வி தங்களுக்கு எதினால் வந்தது என்று ஆண்டவரிடம் முறையிட்டார். இஸ்ரவேலர் தோற்றுப் போனதை அவர்கள் எதிரிகள் கேட்டு தங்களை அழித்துவிடுவார்களோ என்றும் பயந்தார். 

Sweet Publishing / FreeBibleimages.org.

பாளயத்திற்குள் பாவம்:

அப்பொழுது ஆண்டவர் யோசுவாவோடே பேசி, இஸ்ரவேல் ஜனங்கள் தம்முடைய கட்டளையை மீறி பாவம் செய்து, எரிகோ பட்டணத்து கொள்ளை பொருட்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டதாகவும், அதனால் அவர்களுக்கு இந்த தோல்வி நேரிட்டதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் சாபத்தீடான பொருட்களை அவர்கள் நடுவிலிருந்து விலக்காவிட்டால் தாம் அவர்களோடு கூட இருக்கப் போவத்தில்லை என்றும் கூறினார். சாபத்தீடான பொருட்களை பாளயத்திற்குள் கொண்டு வந்து, இஸ்ரவேலரின் தோல்விக்கு காரணமாக இருந்தவனும் தண்டிக்கப்பட்டு பாளயத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டார். 

ஆகான் குறிக்கப்படுதல்:

மறுநாள் அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, இந்த தவறை செய்த நபரை கண்டி பிடிப்பதற்காக இஸ்ரவேலர் எல்லாரையும் கோத்திரம் கோத்திரமாக வரப் பண்ணினார். அப்பொழுது யூதா கோத்திரம் குறிக்கப்பட்டது. பின்னர் யூதா கோத்திரத்திலுள்ள வெவ்வேறு வம்சங்கள் வரவழைக்கப்பட்டது. அப்பொழுது சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்டது. அந்த வம்சத்திலுள்ள குடும்பங்கள் வொவ்வொன்றாக வரவழைக்கப்பட்டபொழுது, சப்தியின் குடும்பம் குறிக்கப்பட்டது. சப்தியின் குடும்பத்திலுள்ளவர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்ட பொழுது, கர்மீயின் மகன் ஆகான் தவறு செய்தவனாக குறிக்கப்பட்டான். 

Sweet Publishing / FreeBibleimages.org.

ஆகானின் கொள்ளை:

அப்பொழுது யோசுவா ஆகானைப் பார்த்து, “நீ இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தி, நீ செய்த தவறை மறைக்காமல் ஒத்துக் கொள்” என்று கூறினார். ஆகான் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு, தான் எரிகோ பட்டணத்து கொள்ளைப் பொருட்களில், மிகவும் சிறப்பான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளி கிண்ணத்தையும் எடுத்துக் கொண்டதாக கூறினான். அதை தன் கூடாரத்திற்கு நடுவில் பூமியில் புதைத்து வைத்திருப்பதாகவும் கூறினான். உடனே யோசுவா ஆட்களை அனுப்பி அதை எடுத்துக் கொண்டு வரும்படி கூறினார். ஆகான் கொள்ளைப் பொருளை எடுத்ததை யாரும் பார்க்கவில்லை, அதை மண்ணுக்கு அடியில் புதைத்ததையும் யாரும் பார்க்கவில்லை, அதனால் தான் செய்த தவறு யாருக்கும் தெரியாது என்று ஆகான் நினைத்திருக்கலாம். ஆனால் கர்த்தருடைய கண்களுக்கு மறைவானது ஒன்றும் இல்லை அவன் மறந்து போனான். 

Sweet Publishing / FreeBibleimages.org.

எங்களைக் கலங்கப் பண்ணினது என்ன?

யோசுவாயும், இஸ்ரவேலரும் ஆகானையும், அவன் கொள்ளையிட்ட சாபத்தீடான பொருட்களையும் ஆகோர் என்கிற பள்ளத்தாக்கிற்கு கொண்டு போனார்கள். அப்பொழுது யோசுவா ஆகானைப் பார்த்து, “நீ எங்களைக் கலங்கப் பண்ணினது என்ன? இன்று கர்த்தர் உன்னை கலங்கப் பண்ணுவார்” என்று கூறினார். அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் ஆகானை கல்லெறிந்து கொன்றார்கள். பின்பு அந்த இடத்தில் ஒரு கற்குவியல் உருவாக்கப்பட்டது.

Sweet Publishing / FreeBibleimages.org. 

ஆயி தோற்கடிக்கப்பட்டது:

சாபத்தீடான பொருட்கள் இஸ்ரவேலரின் பாளயத்திலிருந்து நீக்க்கப்பட்ட பின், ஆண்டவர் யோசுவாவிடம் பேசி அவனை தைரியப்படுத்தி, ஆயி பட்டணத்தை அவன் கையில் ஒப்புக்கொடுக்கப் போவதாக வாக்குக் கொடுத்தார். ஆயி பட்டணத்தின் மேல் எவ்வாறு போர் தொடுக்க வேண்டும் என்று ஆண்டவர் யோசுவாவிற்கு கற்றுக் கொடுத்தார். அதன்படியே யோசுவா செய்து, ஆயி பட்டணத்தை எளிதில் மேற் கொண்டார். 

அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆயி பட்டணத்தின் சிதைவுகள், biblearchaelogy.org

ஆசிரியர் குறிப்பு:

“சேக்கல்” அல்லது “ஷெகல் (Shekel)” என்பது பண்டைய காலத்து இஸ்ரவேல் நாட்டில் வழங்கப்பட்டு வந்த ஒரு எடை அலகு ஆகும். பின்னர் இது நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டது. பண்டைய காலத்து ஷெகல் சுமார் 11 கிராம் எடைக்கு இணையானது ஆகும். இஸ்ரவேல் நாட்டின் தற்போதைய நாணயமும் “ஷெகல்" என்றே அழைக்கப்படுகின்றது. ஆனால் தற்போது பயன்படுத்தப்படும் ஷெகலும், பண்டைய காலத்து ஷெகலும் வித்தியாசமான அளவுகளை குறிப்பவை ஆகும். 

            முதலாம் தேவாலய காலத்து இரண்டு ஷெகல் எடை, Shai Halevi, Israel Antiquities Authority
ராக்ஃபெல்லர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் தேவாலய காலத்து ஷெகல் நாணயம், பொதுகளம்

வேதபகுதி: யோசுவா 6 - 8 

மனப்பாட வசனம்: யோசுவா 3:5

  Click this link to learn how to organize VBS / Retreats

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    யோர்தானைக் கடந்த உடன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிர்பட்ட முதல் பட்டணம், மதில் சூழ்ந்த ……………………………… பட்டணம்.

2.    யோசுவா ஆயி பட்டணத்தை பிடிக்கும்படி ………………………….. யுத்த வீரர்களை அனுப்பினார்.

3.    ஆகான் ……………………….. வம்சத்தை சேர்ந்தவன்.

4.        யோசுவாயும், இஸ்ரவேலரும் ஆகானையும், அவன் கொள்ளையிட்ட சாபத்தீடான பொருட்களையும் …………………… என்கிற பள்ளத்தாக்கிற்கு கொண்டு போனார்கள்.

 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.    எரிகோ பட்டணத்தின் கொள்ளைப் பொருட்களைப் பற்றி யோசுவா கொடுத்த முக்கியமான கட்டளை என்ன?

 

2.    இஸ்ரவேல் ஜனங்கள் ஆயி பட்டணத்தில் “ஏன்” தோற்றுப் போனதாக ஆண்டவர் கூறினார்?

 

3.      யோசுவா இஸ்ரவேலர் எல்லாரையும் கோத்திரம், கோத்திரமாக ஏன் கூடிவரப் பண்னினார்?

 

4.      ஆகான் எரிகோ பட்டணத்தின் கொள்ளையிலிருந்து எடுத்துக் கொண்டது என்ன?

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  ஆயி பட்டணத்தில் இஸ்ரவேலருக்கு ஏற்பட்ட பின்னடைவை பற்றி எழுதவும்.

 

 

திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...