Tuesday, November 16, 2021

இஸ்ரவேலரை கலங்கப் பண்ணின ஆகான் (Achan Troubles Israel),இடைநிலை வகுப்பு (Intermediate) , ஞாயிறு பள்ளி வேதபாடம் - 12

                  இடைநிலை வகுப்பு (INTERMEDIATE) 

வயது: 12 - 13 வயது
வகுப்பு: VII & VIII

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் –12

இஸ்ரவேலரை கலங்கப் பண்ணின ஆகான்

இஸ்ரவேல் ஜனங்கள், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டபின், மோசேயின் தலைமையின் கீழ் கானான் தேசத்தை நோக்கி பிரயாணம் செய்தார்கள். இஸ்ரவேலருடைய தலைவனாகிய மோசே, கானானுக்குள் நுழைவதற்கு முன்பதாகவே தனது 120ஆவது வயதில் இறந்து போனார். அதன்பின்னர் மோசேயின் ஊழியக்காரனாகிய யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்கு வழிநடத்தினார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானுக்குள் செல்லுவதற்கு முன்பாக புரண்டோடிக்கொண்டிருந்த யோர்தான் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. அங்கே ஆண்டவர் ஒரு அற்புதம் செய்து, யோர்தான் ஆற்றை பின்னிட்டுத் திரும்பப்பண்ணினதினால், இஸ்ரவேல் ஜனங்கள் எளிதாக ஆற்றைக் கடந்து, கானான் தேசத்திற்குள் நுழைந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்தை சென்றடைந்திருந்தாலும், அதை தங்களுடைய சொந்த நாடாக மாற்றுவதற்கு முன்பாக, கானானிய பட்டணங்களை எல்லாம் ஒவ்வொன்றாக கானானிய ஜாதிகளிடமிருந்து பிடிக்க வேண்டியிருந்தது.

 

எரிகோவைக் கைப்பற்றுதல்:

யோர்தானைக் கடந்த உடன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிர்பட்ட முதல் பட்டணம், மதில் சூழ்ந்த எரிகோ பட்டணம். அதை கைப்பற்றுவது அசாத்தியமாக தோன்றினாலும், யோசுவா தேவன் தனக்கு கற்பித்ததின்படி, இஸ்ரவேலின் யுத்த வீரர்களை எரிகோ மதிலை சுற்றிவரப்பண்ணினார். முதல் ஆறு நாட்கள் ஒரு முறையும், ஏழாவது நாளில் ஏழு முறையும் சுற்றி வந்தார்கள். ஏழாவது முறை சுற்றி வந்த பொழுது ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதினார்கள். அப்பொழுது யோசுவா ஜனங்களை ஆர்ப்பரிக்கும்படியாக கூறினார், ஜனங்கள் சத்தமாய் ஆர்ப்பரித்தபொழுது எரிகோ மதில் இடிந்து விழுந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோ பட்டணத்திற்குள் சென்று அதை கைப்பற்றினார்கள். யோசுவா, ஜனங்களுக்கு முக்கியமான கட்டளை ஒன்றை கொடுத்து, எரிகோ பட்டணமும் அதில் உள்ள பொருட்களும் சாபத்தீடானதால், அதில் உள்ள எந்த ஒரு பொருளையும் எடுக்கக்கூடாது என்றும், அக்கினியால் சுத்திகரிக்கப்படக்கூடிய பொன், வெள்ளி, வெண்கலம் போன்ற பொருட்கள் மாத்திரம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும். அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றும் கூறியிருந்தார்.

Sweet Publishing / FreeBibleimages.org. 

ஆயி பட்டணத்தில் இஸ்ரவேலரின் பின்னடைவு:

எரிகோவிற்குப் பின் இஸ்ரவேலருக்கு எதிர்பட்ட அடுத்த பட்டணம் “ஆயி”. ஆயி பட்டணத்தை வேவு பார்த்து வரும்படியாக யோசுவா தன்னுடைய மனிதரில் சிலரை அனுப்பினார். அவர்கள் ஆயி பட்டணத்தை பார்த்து வந்து, ஆயி பட்டணம் ஒரு சிறிய பட்டணம் என்றும், அதனால் கொஞ்சம் யுத்த வீரர்களை வைத்து அதை எளிதாக கைப்பற்றிவிடலாம் என்றும் கூறினார்கள். அதனால் யோசுவா மூவாயிரம் யுத்த வீரர்களை மாத்திரம் அனுப்பினார். ஆனால் அந்த யுத்தம் அவர்கள் எதிர்பார்த்தபடி எளிதாக இருக்கவில்லை. ஆயி பட்டணத்து மனிதர்கள் இஸ்ரவேலரின் யுத்த வீரரில் முப்பத்தாறு பேரைக் கொன்று போட்டார்கள். அதனால் இஸ்ரவேலர் தோல்வியோடு தங்கள் பாளயத்திற்குத் திரும்பினார்கள். இஸ்ரவேலரின் தலைவனாகிய யோசுவா இதைக் கேட்டவுடன் தன்னுடைய அங்கியைக் கிழித்துக் கொண்டு, தன்னுடைய தலையில் புளுதியைப் போட்டுக் கொண்டு உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, இந்த தோல்வி தங்களுக்கு எதினால் வந்தது என்று ஆண்டவரிடம் முறையிட்டார். இஸ்ரவேலர் தோற்றுப் போனதை அவர்கள் எதிரிகள் கேட்டு தங்களை அழித்துவிடுவார்களோ என்றும் பயந்தார். 

Sweet Publishing / FreeBibleimages.org.

பாளயத்திற்குள் பாவம்:

அப்பொழுது ஆண்டவர் யோசுவாவோடே பேசி, இஸ்ரவேல் ஜனங்கள் தம்முடைய கட்டளையை மீறி பாவம் செய்து, எரிகோ பட்டணத்து கொள்ளை பொருட்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டதாகவும், அதனால் அவர்களுக்கு இந்த தோல்வி நேரிட்டதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் சாபத்தீடான பொருட்களை அவர்கள் நடுவிலிருந்து விலக்காவிட்டால் தாம் அவர்களோடு கூட இருக்கப் போவத்தில்லை என்றும் கூறினார். சாபத்தீடான பொருட்களை பாளயத்திற்குள் கொண்டு வந்து, இஸ்ரவேலரின் தோல்விக்கு காரணமாக இருந்தவனும் தண்டிக்கப்பட்டு பாளயத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டார். 

ஆகான் குறிக்கப்படுதல்:

மறுநாள் அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, இந்த தவறை செய்த நபரை கண்டி பிடிப்பதற்காக இஸ்ரவேலர் எல்லாரையும் கோத்திரம் கோத்திரமாக வரப் பண்ணினார். அப்பொழுது யூதா கோத்திரம் குறிக்கப்பட்டது. பின்னர் யூதா கோத்திரத்திலுள்ள வெவ்வேறு வம்சங்கள் வரவழைக்கப்பட்டது. அப்பொழுது சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்டது. அந்த வம்சத்திலுள்ள குடும்பங்கள் வொவ்வொன்றாக வரவழைக்கப்பட்டபொழுது, சப்தியின் குடும்பம் குறிக்கப்பட்டது. சப்தியின் குடும்பத்திலுள்ளவர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்ட பொழுது, கர்மீயின் மகன் ஆகான் தவறு செய்தவனாக குறிக்கப்பட்டான். 

Sweet Publishing / FreeBibleimages.org.

ஆகானின் கொள்ளை:

அப்பொழுது யோசுவா ஆகானைப் பார்த்து, “நீ இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தி, நீ செய்த தவறை மறைக்காமல் ஒத்துக் கொள்” என்று கூறினார். ஆகான் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு, தான் எரிகோ பட்டணத்து கொள்ளைப் பொருட்களில், மிகவும் சிறப்பான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளி கிண்ணத்தையும் எடுத்துக் கொண்டதாக கூறினான். அதை தன் கூடாரத்திற்கு நடுவில் பூமியில் புதைத்து வைத்திருப்பதாகவும் கூறினான். உடனே யோசுவா ஆட்களை அனுப்பி அதை எடுத்துக் கொண்டு வரும்படி கூறினார். ஆகான் கொள்ளைப் பொருளை எடுத்ததை யாரும் பார்க்கவில்லை, அதை மண்ணுக்கு அடியில் புதைத்ததையும் யாரும் பார்க்கவில்லை, அதனால் தான் செய்த தவறு யாருக்கும் தெரியாது என்று ஆகான் நினைத்திருக்கலாம். ஆனால் கர்த்தருடைய கண்களுக்கு மறைவானது ஒன்றும் இல்லை அவன் மறந்து போனான். 

Sweet Publishing / FreeBibleimages.org.

எங்களைக் கலங்கப் பண்ணினது என்ன?

யோசுவாயும், இஸ்ரவேலரும் ஆகானையும், அவன் கொள்ளையிட்ட சாபத்தீடான பொருட்களையும் ஆகோர் என்கிற பள்ளத்தாக்கிற்கு கொண்டு போனார்கள். அப்பொழுது யோசுவா ஆகானைப் பார்த்து, “நீ எங்களைக் கலங்கப் பண்ணினது என்ன? இன்று கர்த்தர் உன்னை கலங்கப் பண்ணுவார்” என்று கூறினார். அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் ஆகானை கல்லெறிந்து கொன்றார்கள். பின்பு அந்த இடத்தில் ஒரு கற்குவியல் உருவாக்கப்பட்டது.

Sweet Publishing / FreeBibleimages.org. 

ஆயி தோற்கடிக்கப்பட்டது:

சாபத்தீடான பொருட்கள் இஸ்ரவேலரின் பாளயத்திலிருந்து நீக்க்கப்பட்ட பின், ஆண்டவர் யோசுவாவிடம் பேசி அவனை தைரியப்படுத்தி, ஆயி பட்டணத்தை அவன் கையில் ஒப்புக்கொடுக்கப் போவதாக வாக்குக் கொடுத்தார். ஆயி பட்டணத்தின் மேல் எவ்வாறு போர் தொடுக்க வேண்டும் என்று ஆண்டவர் யோசுவாவிற்கு கற்றுக் கொடுத்தார். அதன்படியே யோசுவா செய்து, ஆயி பட்டணத்தை எளிதில் மேற் கொண்டார். 

அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆயி பட்டணத்தின் சிதைவுகள், biblearchaelogy.org

ஆசிரியர் குறிப்பு:

“சேக்கல்” அல்லது “ஷெகல் (Shekel)” என்பது பண்டைய காலத்து இஸ்ரவேல் நாட்டில் வழங்கப்பட்டு வந்த ஒரு எடை அலகு ஆகும். பின்னர் இது நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டது. பண்டைய காலத்து ஷெகல் சுமார் 11 கிராம் எடைக்கு இணையானது ஆகும். இஸ்ரவேல் நாட்டின் தற்போதைய நாணயமும் “ஷெகல்" என்றே அழைக்கப்படுகின்றது. ஆனால் தற்போது பயன்படுத்தப்படும் ஷெகலும், பண்டைய காலத்து ஷெகலும் வித்தியாசமான அளவுகளை குறிப்பவை ஆகும். 

            முதலாம் தேவாலய காலத்து இரண்டு ஷெகல் எடை, Shai Halevi, Israel Antiquities Authority
ராக்ஃபெல்லர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் தேவாலய காலத்து ஷெகல் நாணயம், பொதுகளம்

வேதபகுதி: யோசுவா 6 - 8 

மனப்பாட வசனம்: யோசுவா 3:5

  Click this link to learn how to organize VBS / Retreats

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    யோர்தானைக் கடந்த உடன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிர்பட்ட முதல் பட்டணம், மதில் சூழ்ந்த ……………………………… பட்டணம்.

2.    யோசுவா ஆயி பட்டணத்தை பிடிக்கும்படி ………………………….. யுத்த வீரர்களை அனுப்பினார்.

3.    ஆகான் ……………………….. வம்சத்தை சேர்ந்தவன்.

4.        யோசுவாயும், இஸ்ரவேலரும் ஆகானையும், அவன் கொள்ளையிட்ட சாபத்தீடான பொருட்களையும் …………………… என்கிற பள்ளத்தாக்கிற்கு கொண்டு போனார்கள்.

 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.    எரிகோ பட்டணத்தின் கொள்ளைப் பொருட்களைப் பற்றி யோசுவா கொடுத்த முக்கியமான கட்டளை என்ன?

 

2.    இஸ்ரவேல் ஜனங்கள் ஆயி பட்டணத்தில் “ஏன்” தோற்றுப் போனதாக ஆண்டவர் கூறினார்?

 

3.      யோசுவா இஸ்ரவேலர் எல்லாரையும் கோத்திரம், கோத்திரமாக ஏன் கூடிவரப் பண்னினார்?

 

4.      ஆகான் எரிகோ பட்டணத்தின் கொள்ளையிலிருந்து எடுத்துக் கொண்டது என்ன?

 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  ஆயி பட்டணத்தில் இஸ்ரவேலருக்கு ஏற்பட்ட பின்னடைவை பற்றி எழுதவும்.

 

 

No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...