Saturday, April 17, 2021

உடன்படிக்கைப் பெட்டி(The Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 11

மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

வயது: 8 - 9 வயது

வகுப்பு: III & IV

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 11

உடன்படிக்கைப் பெட்டி 

Please click the link to visit the English Blog for Sunday School Lessons in English
https://jacobsladdersundayschool.blogspot.com/

இன்றைய பாடத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் மிகவும் பரிசுத்தமாக அல்லது புனிதமாக கருதின ஒரு ஆராதனைப் பொருளைப்பற்றி பார்க்க போகிறோம். அதன் பெயர் தான் உடன்படிக்கைப் பெட்டி. இந்த உடன்படிக்கைப் பெட்டியை தான் ஆசாரியர்கள் சுமந்து கொண்டு யோர்தான் நதியில் கால் வைத்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து வெளியே வந்து வனாந்திரத்தில் இருந்த பொழுது, ஆண்டவர் மோசேயிடம் ஆசரிப்புக் கூடாரம் என்ற ஒன்றை உருவாக்கச் சொன்னார். 

ஆசரிப்புக் கூடாரம் என்பது, தற்பொழுது தேவாலயம் இருப்பது போல அந்தக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் சென்று தேவனுக்கு ஆராதனை செலுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கூடாரம் ஆகும். இதில் ஆராதனைக்கு பயன்படும் பரிசுத்தமான அல்லது புனிதமான அநேக பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்படி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பரிசுத்தமான பொருட்களில் ஒன்றுதான் உடன்படிக்கைப் பெட்டி. உடன்படிக்கைப் பெட்டியில் இருந்து உணரக்கூடிய தேவபிரசன்னம் வெளிப்பட்டபடியால் இஸ்ரவேல் ஜனங்கள் அதை மிகவும் மதிப்பிற்குரியதாக கருதினார்கள்.

இஸ்ரவேல் தேசத்தில் உள்ள திம்னா பார்க் என்கிற இடத்தில் செய்து வைக்கப்பட்டுள்ள ஆசரிப்புக் கூடாரத்தின் மாதிரி, Creative Commons License

உடன்படிக்கைப் பெட்டி என்பது சுத்தமான பசும்பொன்னினால் பொதியப்பட்ட ஒரு மரப்பெட்டியாகும். அந்த பெட்டி சித்தீம் மரத்தால் செய்யப்பட்டு, உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் முழுவதுமாக பொன்னினால் மூடப்பட்டிருந்தது. அந்த பெட்டியை செய்யவேண்டிய அளவுகளையும் ஆண்டவரே மோசேக்கு சொல்லிக் கொடுத்தார். 

உடன்படிக்கைப் பெட்டியின் மாதிரி, Jeremy Park, Bible-Scenes.com

உடன்படிக்கைப் பெட்டியின் மூடிக்கு “கிருபாசனம் (Mercy Seat)” என்று பெயர். கிருபாசனம் என்று அழைக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியின் மூடியில், பொன்னினால் செய்யப்பட்ட இரண்டு கேரூபீன்கள் ஒன்றுக்கொன்று எதிர்முகமாயும், தங்கள் சிறகுகளை விரித்து கிருபாசனத்தை மூடுகிறவைகளாகவும் காணப்பட்டன. கேரூபீன்கள் என்பவர்கள் தேவதூதர்களில் ஒருவகையினர். கிருபாசனத்தின் மேலுள்ள கேரூபீன்களின் நடுவிலிருந்து தான் ஆண்டவர் இஸ்ரவேலரோடு பேசினார்.

சித்தீம் மரம்

உடன்படிக்கைப் பெட்டிக்கு உள்ளாக பத்து கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் வைக்கப்பட்டிருந்தது (I இராஜாக்கள் 8:9; 2 நாளாகமம் 5:10; யாத்திராகமம் 40:20). மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம் சாட்சி சந்நிதியில் வைக்கப்பட்டிருந்தது (யாத்திராகமம் 16:33,34). ஆரோனுடைய துளிர்த்த கோல் சாட்சிபெட்டி அல்லது உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது (எண்ணாகமம் 17: 4,10,11). (ஆசிரியர் குறிப்பு: உடன்படிக்கைப் பெட்டியில் என்ன வைக்கப்பட்டிருந்தது என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், எபிரெயர் 9:4 வசனத்தில் உடன்படிக்கைப் பெட்டியில் வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டிருப்பதன்  தெளிவைப் பெறவும் பாடத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தைப் பார்க்கவும்).

உடன்படிக்கைப் பெட்டிக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஆரோனுடைய துளிர்த்த கோல், மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம், Illustration by templeinstitute.org
உடன்படிக்கைப் பெட்டியை ஆசரிப்புக் கூடாரத்தில், திரைச்சீலை என்று அழைக்கப்பட்ட ஒரு திரைக்கு (veil) பின்னால் உள்ள “மகா பரிசுத்த ஸ்தலம்” என்கிற சிறப்பான இடத்திலே வைத்தார்கள். 
பத்து கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகளின் மாதிரி, Jeremy Park, Bible-Scenes.com

உடன்படிக்கைப் பெட்டியின் நான்கு ஓரங்களிலும் நான்கு பொன் வளையங்களை இணைத்திருந்தார்கள். பொன்னால் மூடப்பட்ட நான்கு சித்தீம் மரத்தண்டுகளை அந்த வளையங்களில் பொருத்தி, அந்த மரத்தண்டுகளின் உதவியோடு ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை தங்கள் தோள்களில் சுமந்து செல்லுவார்கள். உடன்படிக்கைப் பெட்டியை தேவ ஆவியினால் நிரப்பப்பட்ட பெசலெயேல் என்கிற ஒரு மனிதன் செய்தான். இஸ்ரவேல் ஜனங்களின் ஆராதனையில் உடன்படிக்கைப் பெட்டி ஒரு முக்கியமான பங்கு வகித்தது.

ஆசிரியர் குறிப்பு:

உடன்படிக்கைப் பெட்டிக்கு உள்ளே என்ன இருந்தது?

எபிரெயர் 9:4ஐ வாசிக்கும்பொழுது உடன்படிக்கைப்பெட்டிக்கு உள்ளே பத்து கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகள், ஆரோனுடைய துளிர்த்த கோல், மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம் ஆகியவை வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் I இராஜாக்கள் 8:9; 2நாளாகமம் 5:10 ஆகிய இடங்களில் உடன்படிக்கைப் பெட்டிக்கு உள்ளே பத்து கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் மட்டுமே வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு ஆரோனுடைய துளிர்த்த கோல், மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம் ஆகியவை பின்நாட்களில் உடன்படிக்கைப் பெட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டதாக சில விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றது. ஆனால் இவ்வகை விளக்கங்களுக்கு வேதாகமத்தில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

வேதாகமத்தை கூர்ந்து நோக்கினால் மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம் சாட்சி சந்நிதியில் வைக்கப்பட்டிருந்தது (யாத்திராகமம் 16:33,34). அதாவது சாட்சி பெட்டி என்று அழைக்கப்பட்ட உடன்படிக்கைப்பெட்டி வைக்கப்பட்ட சந்நிதானத்தில் வைக்கப்பட்டது. ஆரோனுடைய துளிர்த்த கோல் சாட்சிபெட்டி அல்லது உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது (எண்ணாகமம் 17: 4,10,11) என்று தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் எபிரெயர் 9:4ல் “உடன்படிக்கைப் பெட்டியில்” அதாவது உள்ளில் என்று அர்த்தங்கொள்ளும்படியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற கிரேக்க வார்த்தையாகிய “என் (en)” என்பது உள்ளில், அருகில், முன்பில், ஒரே இடத்தில் ஆகிய பல பொருள்படும். ஆகவே உடன்படிக்கைப் பெட்டியின் உள்ளாக இவை இருந்தன என்கிற அர்த்தத்தை நாம் எடுக்காமல், இவை எல்லாம் மகா பரிசுத்த ஸ்தலத்தின் சாட்சி சந்நிதியில் இருந்தன என்று புரிந்து கொள்ள வேண்டும். (1) உடன்படிக்கைப்பெட்டிக்கு உள்ளாக பத்து கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகள் இருந்தது (2)

ஆதார நூற்களின் பட்டியல்:

(1) Lyons, E. (March, 2010), Contents of the Ark of the Covenant, [On-line], URL: https://apologeticspress.org/contents-of-the-ark-of-the-covenant-2851/

(2) The Holy of Holies, [On-line], URL: https://templeinstitute.org/illustrated-tour-the-holy-of-holies/

(மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது)

வேத பகுதி: யாத்திராகமம் 25:8-22; 37:1-9; எபிரெயர் 9:1-5

மனப்பாட வசனம்:  எபிரெயர் 9:15


For Sunday School activities and stories in English
https://jacobsladderactivity.blogspot.com/

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில் 

1.    தேவனுக்கு ஆராதனை செலுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட கூடாரத்தின் பெயர் என்ன?   ………………………………………

2.    உடன்படிக்கைப் பெட்டி எதினால் பொதியப்பட்டிருந்தது?

………………………………………

3.    உடன்படிக்கைப் பெட்டி எந்த மரத்தால் செய்யப்பட்டது? ………………………………………..

4.    உடன்படிக்கைப் பெட்டியின் மேல் எதை வைத்து மூடப்பட்டிருந்தது? …………………………………

5.    உடன்படிக்கைப் பெட்டி ஆசரிப்புக் கூடாரத்தில் எங்கு வைக்கப்பட்டிருந்தது? ………………………………………

சரியான பதிலைத் தெரிந்தெடுக்கவும்:

1.    உடன்படிக்கைப் பெட்டி என்பது …………………. செய்யப்பட்ட ஒரு பெட்டி ஆகும்.

அ) மரம்                   ஆ) வெள்ளி                    இ) வெண்கலம்

2.    கிருபாசனத்தின் மேல் ……………………… வைக்கப்பட்டிருந்தது.

அ) கேரூபீன்கள்        ஆ) கற்பலகைகள்        இ) வளையங்கள்

3.     உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யாருடைய கோல் வைக்கப்பட்டிருந்தது?

அ) தாவீது                  ஆ) மோசே                  இ) ஆரோன்

4.    உடன்படிக்கைப் பெட்டி ………………….. சுமந்து செல்லப்படும்

அ) இரதத்தில்            ஆ) குதிரையில்         இ) தோளில்

5.    உடன்படிக்கைப் பெட்டியை செய்தது

அ) மோசே             ஆ) பெசலெயேல்           இ) யோசுவா





Wednesday, April 7, 2021

அடையாளக் கற்கள் (The Memorial Stones), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 11

ஆரம்பநிலை வகுப்பு(PRIMARY )

வயது: 6 - 7 வயது 
வகுப்பு: I & II 
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Please click the link to visit the English Blog for Sunday School Lessons in English

https://jacobsladdersundayschool.blogspot.com/

For Sunday School activities and stories in English

https://jacobsladderactivity.blogspot.com/

பாடம் – 11

அடையாளக் கற்கள்

                   இதற்கு முந்தின பாடங்களில் மோசே எவ்வாறு இஸ்ரவேலரை வழிநடத்தினார் என்று பார்த்தோம். வெகுகாலங்கள் கழிந்தது. மோசே மிகவும் வயதாகி, தனது 120வது வயதில் இறந்து போனார். பின்னர் அவருடைய உதவியாளராகிய யோசுவா இஸ்ரவேலரை வழிநடத்தினார். இஸ்ரவேல் ஜனங்கள் கானான் அருகில் வந்து விட்டார்கள், ஆனால் அவர்கள் அதற்குள் செல்லுவதற்கு முன்பாக யோர்தான் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது.

                 ஆண்டவர் யோசுவாவிடம், ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை சுமந்து யோர்தான் ஆற்றில் முதலாவது கால் வைக்கவேண்டும். அவர்கள் கால்கள் பட்ட உடனே யோர்தான் ஆறு இரண்டாகப் பிரியும் என்று கூறினார். அவர் கூறினது போலவே நடந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் பிரிந்த ஆற்றின் நடுவே உலர்ந்த தரையில் நடந்து போனார்கள். ஆசாரியர்கள் ஆற்றின் நடுவே நின்றுகொண்டிருந்தார்கள்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                 இஸ்ரவேலர் எல்லாரும் யோர்தான் ஆற்றைக் கடந்தபின் ஆண்டவர் யோசுவாவிடம், இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொள்ளும்படி கூறினார். இஸ்ரவேலிலே கோத்திரங்கள் என்று பன்னிரண்டு பிரிவுகள் இருந்தார்கள். அதில் கோத்திரத்திற்கு ஒருவராக பன்னிரண்டு பேர் தெரிந்தெடுக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை, யோர்தான் ஆற்றின் நடுப்பகுதியில் ஆசாரியர்கள் நிற்கிற இடத்தின் அருகிலிருந்து பன்னிரண்டு கற்களை எடுத்துக்கொண்டு வந்து, அந்த கற்களை அவர்கள் அன்று தங்கப்போகிற இடத்தில் ஒரு குவியலாக வைக்கும்படி கூறினார்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                     அப்படிச் செய்வதற்கான காரணம் என்னவென்றால், வெகு காலம் கழிந்த பின்பு அதைப் பார்க்கின்ற சிறு குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் இங்கு வைக்கப்பட்டிருக்கின்ற பன்னிரண்டு கற்களின் அர்த்தம் என்ன என்று கேட்பார்கள். அப்பொழுது பெற்றோர் அவர்களிடம், புரண்டு ஓடிக்கொண்டிருந்த யோர்தான் ஆறு, தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாரியர்களின் கால்கள் பட்டவுடனே பிரிந்து போனது, அதன் நடுவே இஸ்ரவேலர் நடந்து போனார்கள். அதை நினைப்பூட்டும் அடையாளமாக இந்த கற்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்று அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

Sweet Publishing / FreeBibleimages.org.

                யோசுவா சொன்னபடியே அந்த பன்னிரண்டு பேரும் யோர்தானுக்கு நடுவாக போய் பன்னிரண்டு கற்களை எடுத்து, ஆண்டவர் தங்களுக்கு செய்த அற்புதத்தையும், கொடுத்த விடுதலையையும் நினைவு கூறும் விதமாக, அந்த கற்களை குவித்து வைத்தார்கள்.

வேதபகுதி: யோசுவா 4:1-8

மனப்பாட வசனம்: என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. (சங்கீதம் 103:2)

  

பாடப் பயிற்சிகள்

 கேள்வி பதில்:

 1.    மோசேயின் மரணத்திற்குப் பின் இஸ்ரவேலரை நடத்தினது யார்?  ……………………………………..

 2.    யார் யோர்தான் ஆற்றில் முதலாவது கால் வைக்க வேண்டும்? ……………………………………..

 3.    ஆசாரியர்கள் சுமந்து சென்றது என்ன?

……………………………….

 4.    யோசுவா எத்தனைப் பேரைத் தெரிந்தெடுத்தார்? ……………………………..

5.    யோர்தான் ஆற்றின் நடுப்பகுதியில் யார் நின்று கொண்டிருந்தார்கள்?

……………………………………………

 நிரப்புக:

1.     இஸ்ரவேல் ஜனங்கள் …………………. அருகில் வந்து விட்டார்கள்.      

2.    இஸ்ரவேல் ஜனங்கள் ……………………….. ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது.

3.    ……………………….. ஒருவராக பன்னிரண்டு பேர் தெரிந்தெடுக்கப்பட்டார்கள்

4.    ஆற்றின் நடுப்பகுதியில் இருந்து ……………………. கற்களை எடுத்துக்கொண்டு வந்தார்கள்.

5.    யோர்தான் நடுவே இஸ்ரவேலர் நடந்து போனதையும் நினைப்பூட்டும் அடையாளமாக அந்த ……………………….. வைக்கப்பட்டிருக்கிறது 

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...