இடைநிலை வகுப்பு (INTERMEDIATE)
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
தெபொராள் – நான் எழும்புமளவும்!
இதற்கு முந்தின பாடத்தில் இஸ்ரவேல் ஜனங்கள், கானான்
தேசத்திற்குள் நுழைந்தபின், அதை
தங்களுடைய சொந்த தேசமாக மாற்றுவதற்கு முன்பாக, எவ்வாறு கானானிய பட்டணங்களை ஒவ்வொன்றாக
பிடிக்க வேண்டியிருந்தது என்று பார்த்தோம். இஸ்ரவேல் ஜனங்கள் தாங்கள் பிடித்த
பட்டணங்களில் வீடுகளைக் கட்டி, பயிரிட்டு, மிருக ஜீவன்களை வளர்த்தி, சுதந்திரமான
மக்களாக வாழத் தொடங்கினார்கள். சில வருடங்கள் கழித்து, அவர்களை கானான் தேசத்திற்குள்
வழிநடத்தின அவர்களுடைய தலைவனாகிய யோசுவா வயதாகி இறந்து போனார். அந்த நாட்களிலே
இஸ்ரவேலரின் தலைவர்களை “நியாயாதிபதி” என்று அழைத்தார்கள்.
நியாயாதிபதிகள்
இஸ்ரவேல்
தேசத்தில் யார் நியாயாதிபதியாய் வரவேண்டும் என்பதை தேவனே தீர்மானித்து, அதை
ஜனங்களுக்கு வெளிப்படுத்துவார். மற்ற தேசங்களை ராஜாக்கள் ஆண்டது போல இஸ்ரவேல்
தேசத்தை நியாயாதிபதிகள் ஆளுகை செய்தார்கள். இவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்குள்
ஏற்படும் வழக்குகள், சண்டை, சச்சரவுகளை விசாரித்து தீர்ப்பு கொடுத்தார்கள். மேலும்,
எதிரிகள் இஸ்ரவேல் தேசத்தை எதிர்த்து படை எடுத்து வந்தால், எதிரிகளுக்கு எதிராக
படையைத் திரட்டி, யுத்தத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பும் இவர்களைச் சார்ந்ததே
ஆகும். இவர்கள் தேவன் பேசுவதைக் கேட்டு அதை தேசத்திலே செயல்படுத்தும்
தீர்க்கதரிசிகளாகவும் இருந்தார்கள்.
இஸ்ரவேலரின்
மீறுதலும் மீட்பும்
இஸ்ரவேலருடைய
தலைவனாகிய யோசுவா இறந்து போனபின், இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை மறந்து, பாவம் செய்ய
ஆரம்பித்தார்கள். இதனால் அவர்கள் அருகிலே இருந்த பிற தேசங்கள், இஸ்ரவேலரை
துன்புறுத்தி, அவர்களை ஒடுக்கினார்கள். எப்பொழுதெல்லாம் இவ்வாறு சம்பவிக்கிறதோ
அப்பொழுதெல்லாம் இஸ்ரவேலர் ஆண்டவரிடம் மனந்திரும்பி விண்ணப்பம் செய்வார்கள்.
ஆண்டவரும் அவர்களை விடுவிக்கும்படி ஒரு நியாயாதிபதியை எழும்பப்பண்ணுவார். யோசுவாவின்
காலத்திற்குப் பின் தேவன் இவ்வாறு பல நியாயாதிபதிகளை எழுப்பியிருந்தார்.
இவர்களுடைய வரலாற்றை வேதாகமத்திலுள்ள நியாயாதிபதிகள் புஸ்தகத்திலே வாசிக்கலாம்.
இவ்வாறு தேவன் எழும்பப்பண்ணின நியாயாதிபதிகளில் ஒருவர் தான் ஏகூத். இவருடைய
காலத்திற்கு பின் இஸ்ரவேல் ஜனங்கள் மறுபடியும் பாவஞ்செய்யத் தொடங்கினார்கள்.
இஸ்ரவேலரை ஒடுக்கின
கானானிய ராஜா
இதனால் இஸ்ரவேல் ஜனங்களை ஆத்சோர் என்கிற இடத்தை ஆண்ட கானானிய ராஜாவாகிய யாபீன் என்பவன் ஒடுக்கும்படியாக தேவன் விட்டுவிட்டார். அவனுடைய படைத்தளபதியின் பெயர் சிசெரா.
இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் தான் தேவன் தெபொராளை இஸ்ரவேலிலே நியாயாதிபதியாக எழுப்பினார். அவள் தெபொராளின் பேரீச்சமரம் என்கிற பேரீச்ச மரத்தின் அடியிலே நியாயம் விசாரித்தாள். லபிதோத் என்பவருடைய மனைவியாகிய தெபொராள் தீர்க்கதரிசியாகவும் இருந்தாள். தேவன், மக்களுக்கு கொடுக்க நினைக்கும் செய்திகளை தேவனிடமிருந்து பெற்று மக்களுக்கு கொடுக்கும் நபர் தான் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவார்.
பாராக்
தெபொராள், பாராக்
என்கிற மனிதனை வரவழைத்து, இஸ்ரவேலிலிருந்து பத்தாயிரம் யுத்த வீரர்களைக்
கூட்டிகொண்டு தாபோர் என்கிற மலைக்கு போகும்படி கூறினார். தாபோர் மலை சிசெராவின்
வீட்டருகே இருந்தது. ஆண்டவர் பாராக்கிடம் சிசெராவை யுத்தத்திற்கு வரவழைத்து, அவனை
பாராக்கின் கையில் ஒப்புக்கொடுக்கப்போவதாகக் கூறினார். ஆனால் பாராக்கோ தெபொராள் தன்னுடன் வரவில்லையென்றால் தான்
யுத்தத்திற்கு போகப் போவதில்லையென்று கூறினான். தெபொராள் அவனுடன்கூட யுத்தத்திற்கு
செல்லுவதற்கு ஒப்புக்கொண்டாள். ஆனால் அந்த யுத்தத்தில் சிசெராவைக் கொன்று, வெற்றி
தேடி தந்ததற்கான புகழ் அவனுக்கு கிடைக்காதென்றும், அது ஒரு பெண்ணுக்கு கிடைக்கும்
என்றும் தெபொராள் கூறினாள். பாராக் அதை பொருட்படுத்தவில்லை.
பாராக், இஸ்ரவேலிலிருந்து 10,000 பேரை அழைத்துக் கொண்டு சிசெராவிற்கு எதிராக யுத்தத்திற்கு போனான். தெபொராள் பாராக்கை யுத்தத்தை தொடங்குவதற்கு கூறின பொழுது, பாராக்கும், யுத்த வீரர்களும் தாபோர் மலையிலிருந்து கீழே இறங்கினார்கள்.
சிசெரா ஓடிப்
போய், கேனியனான ஏபேர் என்பவனுடைய மனைவியாகிய யாகேலுடைய கூடாரத்திற்கு வந்தான்.
அந்த நாட்களிலே
இஸ்ரவேல் ஜனங்களின் நடுவிலே கேனியர் என்கிற ஒரு கூட்டத்தார் வாழ்ந்து வந்தார்கள்.
அவர்கள் இஸ்ரவேலர் அல்ல. அவர்கள் மோசேயின் மாமனாகிய ரெகுவேலின் வம்சாவளியைச்
சேர்ந்தவர்கள். அவர்களை மோசே அழைத்ததின் நிமித்தமாக அவர்கள் இஸ்ரவேலருடன் வந்து
குடியிருந்தார்கள் (எண்ணாகமம் 10:29; நியாயாதிபதிகள் 1:16). அவர்கள் கானானிய
ராஜாவாகிய யாபீனுடன் நல்ல நட்புறவில் இருந்தார்கள். அதனால் சிசெரா அங்கே
வந்திருக்கலாம். யாகேல் சிசெராவை தன்னுடைய கூடாரத்திற்குள் அழைத்து சென்றாள்.
அப்பொழுது அவன் அவளிடம் தண்ணீர் கேட்டான். அவள் அவனுக்கு பாலைக் கொடுத்தாள். அவன்
யுத்தத்தில் மிகவும் களைப்படைந்திருந்ததினால் அயர்ந்து உறங்கினான்.
சிசெரா யாகேலின்
கூடாரத்திற்குள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். இப்பொழுது யாகேல் ஒரு முக்கியமான
தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது. கேனியனான ஏபேருக்கு கானானிய ராஜாவாகிய யாபீனோடு
நல்ல உறவு இருந்தாலும், கானானியர் இஸ்ரவேலை ஒடுக்கினபொழுது அதனால் கேனியரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
யாகேல் தேசத்தின் சமாதானத்திற்காக ஒரு புத்தியான முடிவை எடுத்து, ஒரு தைரியமான செயலையும்
செய்தாள். அவள் ஒரு கூடார ஆணியையும், சுத்தியையும் எடுத்து அதினால் சிசெராவின் நெற்றியில்
அடித்தாள். அதினால் அவன் அங்கேயே மடிந்தான். சிசெராவை பிடிப்பதற்காக அவனை துரத்திக்
கொண்டிருந்த பாராக் அங்கே வந்தான். அப்பொழுது யாகேல் அவனை அழைத்துக் கொண்டு போய், இறந்து
கிடந்த சிசெராவை அவனுக்கு காண்பித்தாள். அதோடு இஸ்ரவேலருக்கு கானானியரோடு இருந்த யுத்தம்
முடிவுக்கு வந்தது. அதன் பின் தேசம் நாற்பது வருடங்கள் அமைதலாயிருந்தது. தெபொராள் பாராக்கிடம்
கூறினது போலவே, யுத்தத்தின் வெற்றிக்கான புகழ் யாகேலை சேர்ந்தது. “கூடாரத்தில் வாசமாயிருக்கிற
ஸ்திரீகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவள்” என்கிற பெயரையும் யாகேல் பெற்றாள்.
வேதபகுதி: நியாயாதிபதிகள் 4 & 5
மனப்பாட வசனம்: எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. (ஏசாயா 52:1)
பாடப்
பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1. யாபீனிடம் 9000 ………………………………………..
இருந்தது
2. கானானியர் இஸ்ரவேலரை ஒடுக்குவதற்கு
முன்பாக ………………………. வருட காலம் இஸ்ரவேல் தேசத்திலே சமாதானம் நிலவியிருந்தது
3. பாராக், ……………………. தன்னுடன் வரவில்லையென்றால்
தான் யுத்தத்திற்கு போகப் போவதில்லையென்றென்று கூறினான்.
4.
சிசெரா
கால்நடையாக ஓடி ………………………. கூடாரத்திற்கு வந்தான்.
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1.
பண்டைய கால இஸ்ரவேலிலே நியாயாதிபதிகளின் பொறுப்பு என்ன?
2. சிசெராவின் சேனை இஸ்ரவேலின் சேனையைக் காட்டிலும் எதினால் பலம் வாய்ந்ததாயிருந்தது?
3. தெபொராள் என்பவள் யார்? அவள் எங்கே நியாயவிசாரணை நடத்தினாள்?
4.
தெபொராள் எந்த சூழ்நிலையில் நியாயாதிபதியாக எழுப்பப்பட்டாள்?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1. யாகேல் – “கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள்” விளக்கவும்.