பாடம் – 13
கர்த்தருடைய பட்டயம், கிதியோனுடைய பட்டயம்
இதற்கு
முந்தின பாடங்களில், இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து
விடுதலையாகி, கானான் தேசத்திற்கு சென்றடைந்ததையும், அங்குள்ள பட்டணங்களை
சொந்தமாக்குவதற்கு முன்பாக அவற்றை கானானிய ஜாதிகளிடமிருந்து கைப்பற்றியதையும்
பார்த்தோம். இஸ்ரவேல் ஜனங்கள் அங்கு வீடுகளைக் கட்டி, தொழில்களை செய்து
சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். பல வருடங்கள் கழித்து, அவர்களை கானானுக்குள்
செல்லுவதற்கு தலைமையேற்று நடத்தின யோசுவா வயதாகி இறந்து போனார். அந்த நாட்களில்
இஸ்ரவேலரின் தலைவர்களை “நியாயாதிபதி” என்று அழைத்தார்கள்.
இஸ்ரவேல் தேசத்தில் யார் நியாயாதிபதியாய் வரவேண்டும் என்பதை தேவனே தீர்மானித்து, அதை ஜனங்களுக்கு வெளிப்படுத்துவார். மற்ற தேசங்களை ராஜாக்கள் ஆண்டது போல இஸ்ரவேல் தேசத்தை நியாயாதிபதிகள் ஆளுகை செய்தார்கள். மற்ற ராஜாக்களுக்கு இருந்த பொறுப்புகளோடு சேர்த்து இவர்களுக்கு வேறு பல பொறுப்புகளும் இருந்தது. எதிரிகள் இஸ்ரவேல் தேசத்தை எதிர்த்து படை எடுத்து வரும்பொழுது அவர்களுக்கு எதிராக படையைத் திரட்டி யுத்தங்களை செய்வது, மற்றும் இஸ்ரவேல் ஜனங்களுக்குள் ஏற்படும் வழக்குகள், சண்டை, சச்சரவுகளை விசாரித்து தீர்ப்பு கொடுப்பதும் இவர்களுடைய வேலையே ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் பேசுவதைக் கேட்டு அதை செயல்படுத்தும் தீர்க்கதரிசிகளாகவும் அவர்கள் செயல்பட்டார்கள்.
இஸ்ரவேலருடைய
தலைவனாகிய யோசுவா இறந்து போனபின், இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை மறந்து, அவரவர் வழியிலே
நடந்து, பாவம் செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் அவர்கள் அருகிலே இருந்த பிற தேசங்கள்,
இஸ்ரவேலரை துன்புறுத்தி, தேசத்தை சேதப்படுத்துவார்கள். எப்பொழுதெல்லாம் இவ்வாறு
சம்பவிக்கிறதோ அப்பொழுதெல்லாம் இஸ்ரவேலர் ஆண்டவரிடம் மனந்திரும்பி விண்ணப்பம்
செய்வார்கள். ஆண்டவரும் அவர்களை விடுவிக்கும்படி ஒரு நியாயாதிபதியை
எழும்பப்பண்ணுவார். ஒருமுறை இஸ்ரவேல் தேசத்திற்கு அருகே இருந்த மீதியானியர் என்கிற புறஜாதிகள் இஸ்ரவேலரை ஏழு வருடங்கள்
கொடுமையாய் ஒடுக்கினார்கள். (புறஜாதிகள் – இஸ்ரவேல் தேசத்தை சாராத உலகில் உள்ள
எல்லா தேசத்தார்களும் புறஜாதிகள் என்றே அழைக்கப்பட்டார்கள்).
மீதியான்
தேசத்திலிருந்து ஒரு பெருங்கூட்டமாய் படையெடுத்து வரும் இவர்கள், இஸ்ரவேல்
தேசத்தில் அறுவடை செய்து வைத்திருக்கும் உணவு தானியங்களை எல்லாம் கொள்ளை அடித்து
சென்று விடுவார்கள். இவ்வாறு உணவு தானியங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு
விட்டால், இஸ்ரவேல் ஜனங்கள் பட்டினியால் இறந்து போக நேரிடும். இதனால் பயமடைந்த
இஸ்ரவேல் ஜனங்கள் மலைகளிலுள்ள குகைகளில் தஞ்சமடைய தொடங்கினார்கள். இவ்வாறு ஏழு
வருடங்கள் கழிந்தபின், இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் தவறை உணர்ந்து, தங்களை
விடுவிக்கும்படி ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்தார்கள். ஆண்டவர் அவர்கள் விண்ணப்பத்தை
ஏற்று அவர்களுக்காக ஒரு புதிய நியாயாதிபதியை எழும்பப் பண்ணினார்.
இஸ்ரவேல் மக்களை விடுவிப்பதற்காக ஆண்டவர் தெரிந்து கொண்டது யோவாசின் மகனான கிதியோன் என்பவரைத் தான். கோதுமை அறுவடை செய்யும் நாட்கள் வந்த போது, கிதியோன் தான் அறுத்து வந்த தானியங்களை மீதியானியரிடமிருந்து காப்பாற்றுவதற்காக அதை தன்னுடைய தந்தையின் திராட்சைரச ஆலைக்கு சமீபமாக போரடித்தான். (போரடிப்பது என்பது கோதுமையை அதன் தாளிலிருந்து பிரித்தெடுப்பது).
அவன் போரடித்து
கொண்டிருந்தபோது, கர்த்தருடைய தூதன் ஒருவர் அங்கு ஒரு கர்வாலி மரத்தின் கீழ் வந்து
உட்கார்ந்தார். அவர் கிதியோனிடம் மீதியானியருக்கு எதிராகப் போரிட்டு இஸ்ரவேலரை
விடுவிக்கும்படியாகக் கூறினார். அதைக் கேட்டபொழுது, கிதியோன் அதிர்ச்சியடைந்தான். தான்
இஸ்ரவேலின் சிறிய கோத்திரங்களில் ஒன்றாகிய மனாசேயை சேர்ந்தவன் என்றும், அதிலும்
தன்னுடைய குடும்பம் எளிய குடும்பம் என்றும், தான் எவ்வாறு இஸ்ரவேலை இரட்சிக்க
முடியும் என்றும் தூதரிடம் கேட்டான்.
ஆண்டவர் கிதியோனிடம் தான் அவனுடன் இருந்து மீதியானியரை எளிதாக தோற்கடிப்பதற்கு அவனுக்கு உதவுவதாக வாக்களித்தார். கிதியோன் ஒரு அடையாளத்தை பெற விரும்பினான். இஸ்ரவேலருக்கு தலைவனாக ஆண்டவர் தன்னை தெரிந்தெடுத்திருந்தால் தன்னுடைய காணிக்கையை அவர் அங்கீகரிக்க வேண்டும் என்று அவன் விண்ணப்பம் செய்தான். அவன் வெள்ளாட்டுக்குட்டியின் இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பங்களையும் ஒரு கற்பாறையின் மேல் வைத்து அதன் மேல் ஆணத்தை ஊற்றினான். ஆணம் (broth) என்றால் இறைச்சியை வேக வைக்கும்பொழுது கிடைக்கும் சாறு. அப்பொழுது தூதன் தன் கையிலிருந்த கோலின் நுனியினால் அதை தொட்டார். உடனே நெருப்பு அந்த பாறையிலிருந்து எழும்பி இறைச்சியையும், அப்பங்களையும் எரித்து சாம்பலாக்கியது.
கிதியோன் தன்னிடம் பேசினது கர்த்தருடைய தூதன் என்று உறுதிபடுத்திக் கொண்டான். அதினால் அவன் மிகவும் பயமடைந்தான். ஆண்டவர் அவனுக்கு சமாதானம் உரைத்து, அவனுக்கு எதுவும் நேரிடாது என்று கூறினார். அந்த இடத்தில் கிதியோன் ஆண்டவருக்கென்று ஒரு பலிபீடத்தைக்கட்டி அதற்கு “யெகோவா ஷாலோம்” என்று பேரிட்டான். யெகோவா ஷாலோம் என்றால் சமாதானத்தின் கர்த்தர் (The Lord is Peace) என்று அர்த்தம். அந்த ராத்திரியிலே ஆண்டவர் அவனிடம் பேசி, அவனுடைய தகப்பனாகிய யோவாஸ் பாகாலுக்கென்று கட்டி வைத்திருந்த பலிபீடத்தை இடித்து, அதன் அருகே நாட்டப்பட்டிருந்த தோப்பையும் வெட்டி போடும்படி கூறினார். (அந்த நாட்களிலே கானானிய தேவதைகளில் ஒன்றாகிய அஷேரா (Asherah)விற்காக புனித மரங்களை நட்டு தோப்புகளை உருவாக்குவது வழக்கம்). கிதியோன் தன்னுடைய வேலையாட்களில் பத்து பேரை அழைத்து சென்று ஆண்டவர் தனக்கு கட்டளையிட்டபடி செய்தான்.
காலமே அவனுடைய ஊர் மக்கள் பாகாலின் பலிபீடம் இடிந்து கிடப்பதையும், தோப்பு வெட்டப்பட்டு கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள். அவர்கள் விசாரித்தபொழுது, அதை செய்தது கிதியோன் என்று அறிந்துகொண்டார்கள். அதனால் அவனை கொல்ல நினைத்தார்கள். அவர்கள் கிதியோனின் தகப்பனாகிய யோவாசிடம் சென்று, கிதியோனை வெளியே அனுப்பும்படி கூறினார்கள். கிதியோனின் தகப்பனாகிய யோவாஸ் அவர்களிடம், பாகாலின் பலிபீடத்தை இடித்ததற்கு பாகாலே அவனை தண்டிக்கட்டும் என்று கூறினார். அதனால் மக்கள் அவனை விட்டுவிட்டு சென்றார்கள். அதனால் கிதியோனுக்கு “யெருபாகால்” என்ற பெயரும் உண்டு. யெருபாகால் என்றால் “பாகால் தனக்காக வழக்காடட்டும்” என்று அர்த்தம். எதிர்பார்த்தபடியே பாகால் தனக்காக வழக்காடவுமில்லை, கிதியோனுக்கு ஒன்றும் சம்பவிக்கவுமில்லை.
கிதியோனுக்கு இஸ்ரவேலரை விடுவிப்பதற்காக தேவன் தன்னை தான் தெரிந்தெடுத்திருக்கிறார் என்று நம்புவதற்கு கடினமாயிருந்தது. ஆகவே இன்னொரு முறையும் அதை உறுதிபடுத்த விரும்பினான். கிதியோன் ஆண்டவரிடம், தான் ஆட்டுரோமத்தை தரையில் போடுவதாகவும், பனி பெய்யும்பொழுது, பனி ரோமத்தில் மாத்திரம் விழுந்து, தரை காய்ந்திருந்தால், அதை ஒரு அடையாளமாக எடுத்துக் கொள்ளுவதாக கூறினான். அவன் கேட்டுகொண்டபடியே பனி ரோமத்தில் மாத்திரம் விழுந்திருந்தது. திரும்பவும் அவன் ஆண்டவரிடம் விண்ணப்பித்து, இன்னொருவிசை தரை ஈரமாயிருக்கவும், ரோமம் காய்ந்திருக்கவும் வேண்டும் என்று கூறினான். அவன் கேட்ட அடையாளத்தின்படியே அங்கு சம்பவித்தது. அதனால் கிதியோன் இஸ்ரவேலரை விடுவிக்க தேவன் தன்னையே தெரிந்தெடுத்திருக்கிறார் என்று உறுதிபடுத்திக் கொண்டான்.
கிதியோன்
இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்து 32,000 பேரை யுத்தம் செய்வதிற்கென்று தெரிந்தெடுத்தான்.
ஆண்டவர் கிதியோனிடம் அவனிடம் அதிக ஆட்கள் இருப்பதாக கூறி, யுத்த விரர்களின் எண்ணிக்கையை
குறைக்கும்படி கூறினார். ஆகவே வெறும் 300 பேர் மட்டுமே தெரிந்தெடுக்கப்பட்டனர். மற்ற
யுத்தங்களைப் பார்க்கிலும் இந்த யுத்தம் வித்தியாசமானது. ஏனென்றால் கிதியோன் கையிலும்,
அவன் வீரர்களின் கையிலும் எக்காளமும், வெறும் பானையும், தீவட்டியும் இருந்தது (தீவட்டி
என்றால் தீப்பந்தம்). நடுராத்தியிலே அவர்கள் தங்கள் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து,
தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு,
கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டார்கள். முந்நூறுபேரும் எக்காளங்களை
ஊதுகையில், பாளயத்தில் கூடியிருந்த மீதியானியர் குழப்பமடைந்து ஒருவரையொருவர் பட்டயத்தினால்
தாக்கி, அலறியடித்து, அங்கிருந்து ஓடிப்போனார்கள். இவ்வாறு கர்த்தர், கிதியோன் மூலமாய்
மீதியானியர் மேல் இஸ்ரவேலருக்கு வெற்றியைக் கொடுத்தார்.
வேதபகுதி:
நியாயாதிபதிகள் 7
மனப்பாட வசனம்: 2 நாளாகமம் 14:11
Click this link to learn how to organize VBS / Retreats
For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/
பாடப் பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1. மீதியானியர் இஸ்ரவேலரை ……………….
வருடங்கள் கொடுமையாய் ஒடுக்கினார்கள்.
2. மீதியானியரிடமிருந்து கோதுமை தானியங்களை காப்பாற்றுவதற்காக கிதியோன்
அதை தன்னுடைய தந்தையின் …………………………….. சமீபமாக போரடித்தான்.
3. கிதியோன் ஆண்டவருக்கென்று ஒரு பலிபீடத்தைக்கட்டி அதற்கு “…………………………………………..”
என்று பேரிட்டான்
4. கிதியோனுக்கு “………………………………..” என்ற இன்னொரு பெயரும் உண்டு.
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. இஸ்ரவேல் தேசத்தின்
“நியாயாதிபதி” என்பவர்கள் யார்?
2. மீதியானியர் இஸ்ரவேல் ஜனங்களை எவ்வாறு ஒடுக்கினார்கள்?
3.
தேவனுடைய தூதன் கிதியோனை சந்தித்த
பொழுது அவன் என்ன செய்து கொண்டிருந்தான்?
4. கிதியோன் தேவனுக்கு கொடுத்த காணிக்கை என்ன?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1.
கிதியோன் மீதியானியரை எவ்வாறு வென்றான் என்று எழுதவும்.
No comments:
Post a Comment