Tuesday, September 10, 2024

திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

வயது: 8 - 9 வயது

வகுப்பு: III & IV

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

பாடம் –17

திருப்பி கொண்டு வரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி

Click this link to get this lesson in English

மிக--இளநிலை வகுப்பின் மற்ற பாடங்களைப் பெற்றுக்கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

பாடம் – 15 ல், ஏலி நியாயாதிபதியாய் இருந்த காலத்தில் இஸ்ரவேல் மக்களோடு நடந்த ஒரு யுத்தத்தின்போது பெலிஸ்தர்கள் உடன்படிக்கைப் பெட்டியை பிடித்துச் சென்றதையும், பின்னர் அவர்கள் தண்டிக்கப்பட்டதால் இஸ்ரவேல் மக்களிடமே உடன்படிக்கைப் பெட்டியை திருப்பி அனுப்பினதையும் பற்றி பார்த்தோம். அந்த சமயத்தில் உடன்படிக்கைப் பெட்டி கீரியாத்யாரீம் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அபினதாப் என்பவருடைய வீட்டில் வைக்கப்பட்டது. இருபது வருடங்கள் உடன்படிக்கைப் பெட்டி அங்கேயே இருந்தது.

இஸ்ரவேல் மக்கள் தேவனை ஆராதிப்பதற்காக சென்ற ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வைக்கப்பட்டிருந்த புனிதமான பொருட்களில் ஒன்றுதான் உடன்படிக்கைப் பெட்டி. அது அங்கு இல்லாதது இஸ்ரவேல் மக்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. ஆகவே அதை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தார்கள் (1 சாமுவேல் 7:1,2). அப்பொழுது அவர்களை நியாயம் விசாரித்துக் கொண்டிருந்த சாமுவேல் தீர்க்கதரிசி, இஸ்ரவேல் மக்களை ஒன்று திரட்டி மிஸ்பா என்ற இடத்திலே உபவாசத்தை அறிவித்தார். இஸ்ரவேல் மக்கள் தங்கள் பாவங்களை விட்டு ஆண்டவரிடம் திரும்பினால், அவர்கள் பெலிஸ்தர்களிடமிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். இஸ்ரவேல் மக்கள் அவ்விதமே செய்தார்கள். சில வருடங்களுக்குப் பின் சவுல் ராஜா இஸ்ரவேல் தேசத்தின் முதல் ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டார். சாமுவேல் தீர்க்கதரிசியும் இறந்து போனார். இந்த சமயங்களில் எல்லாம், சுமார் 100 வருடங்கள் உடன்படிக்கைப்பெட்டி அபினதாபின் வீட்டிலேயே இருந்தது. (1)

உடன்படிக்கைப்பெட்டியின் மாதிரி

பின்னர் சவுல் ராஜாவின் காலத்திற்குப் பின் தாவீது இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாக பொறுப்பேற்றார். தாவீது ராஜா எருசலேம் பட்டணத்தை எபூசியர் என்கிற கானானிய மக்களிடமிருந்து கைப்பற்றி, அதில் இருந்த சீயோன் கோட்டையில் குடியேறினார். எருசலேமிற்கு “தாவீதின் நகரம்” என்று பெயரிட்டார் (2 சாமுவேல் 5:6-9; யோசுவா 15:63, நியாதிபதிகள் 1:21). தாவீது ராஜாவானபோது ஒரு பெரிய கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இஸ்ரவேல் தேசம் முழுவதிலுமிருந்து மக்கள் வந்து கூடியிருந்தார்கள். அவர்களுக்கு விருந்து ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது. அந்த கொண்டாட்டம் மூன்று நாள் நடைபெற்றது. எல்லாரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் தாவீது ராஜாவின் எண்ணமோ உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமிற்கு திரும்ப கொண்டு வருவதைப் பற்றி இருந்தது. தாவீது ராஜா இஸ்ரவேலின் தலைவர்களிடமும், படைத்தளபதிகளிடமும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைத் திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் தேவனுடைய ஆலோசனையைக் கேட்காமல் உடனடியாக தேவனுடைய பெட்டியைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள்.

தாவீது ராஜா தேவனுடைய பெட்டியை கொண்டு வரும்படி 30,000 ஆட்களை அழைத்துக் கொண்டு கீரியாத்யாரீமிற்கு சென்றார். அங்கிருந்து பெட்டியைக் கொண்டு வருவதற்கு ஒரு புது மாட்டுவண்டியை ஆயத்தம் செய்தார்கள். அப்பொழுது தான் தவறு நேர்ந்தது. உடன்படிக்கைப் பெட்டி போன்ற பரிசுத்தமான பொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும்பொழுது, அவைகள் எவ்வாறு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று தேவன் ஏற்கெனவே கட்டளை கொடுத்திருந்தார். அவைகள் கோகாத்தியர் வம்சத்தைச் சார்ந்த லேவியரால் தோள்களின் மேல் சுமந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும் (எண்ணாகமம் 7:7-9). தாவீது ராஜா அவ்வாறு செய்யாமல் உடன்படிக்கைப் பெட்டியை ஒரு புது மாட்டுவாண்டியில் ஏற்றினார். ஊசா, அகியோ ஆகிய இரண்டு பேர் அந்த வண்டியை நடத்தினார்கள்.

அவர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக வண்டியைக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது திடீரென்று நாகோனின் களம் என்ற இடம் அருகே வந்தபொழுது மாடுகள் மிரண்டது. இந்த இடம் கீதோனின் களம் என்றும் அழைக்கப்படுகின்றது (1 நாளாகமம் 13:9). மாடுகள் மிரண்டபொழுது பெட்டிகள் அசைந்ததினால் ஊசா தேவனுடைய பெட்டியைப் பிடிப்பதற்காக தன்னுடைய கைகளை நீட்டினான். உடனே அவன் ஆண்டவரால் தண்டிக்கப்பட்டான். அதனால் தாவீது ராஜா உடன்படிக்கைப் பெட்டியை எருசலேம் பட்டணத்திற்குள் கொண்டு வருவதற்கு பயப்பட்டு, அதை ஓபேத் ஏதோம் என்பவருடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி ஓபேத் ஏதோம் என்பவருடைய வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தது. அதனால் ஓபேத் ஏதோமுடைய வீடு ஆசீர்வதிக்கப்பட்டது. இதை தாவீதுராஜா கேள்விப்பட்டபோது உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்கு கொண்டுவருவதற்கு இருந்த பயம் மாறினது.

ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்தார். ஆனால் இந்த முறை நியாயப்பிரமாணத்தில் கட்டளையிட்டபடி அதை கொண்டுவருவதற்கு ஏற்பாடுகள் செய்தார். லேவியர்களை அழைத்து தங்களை பரிசுத்தம் செய்து கொள்ளும்படியாக அறிவுறுத்தினார். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி உடன்படிக்கைப் பெட்டியை சுமந்து வராததினால் கொடுக்கப்பட்ட தண்டனை பற்றியும் அறிக்கை செய்தார் (1 நாளாகமம் 15:13). 

இந்த முறை உடன்படிக்கைப்பெட்டியை லேவியர்கள் அதின் தண்டுகளினாலே தோளில் சுமந்து கொண்டு வந்தார்கள். உடன்படிக்கைப் பெட்டி கொண்டு வரப்படும்போது தம்புரு, சுரமண்டலம், கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்களின் இசையோடு தங்கள் சத்தத்தை உயர்த்தி பாடும்படி லேவியர்களைச் சார்ந்த பாடகர்களை நிறுத்த வேண்டும் என்றும் கூறினார். 

தாவீது ராஜாவும் மிகுந்த மகிழ்ச்சியோடு சணல் நூல் ஏபோத்தை அணிந்து கொண்டு நடனத்தோடு உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வந்தார். பின்னர் அந்தப் பெட்டியை தாவீது ராஜா ஏற்படுத்தி வைத்திருந்த கூடாரத்திற்குள் வைத்தார்கள். தாவீதுராஜா பலிகளை செலுத்தினார். பின்னர் அவர் ஆண்டவருடைய நாமத்தினாலே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதித்தார். அதன்பின் இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு அப்பத்தையும், இறைச்சித் துண்டையும், ஒரு படி திராட்சைப்பழ ரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தார். உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் சேவை செய்யும்படியாக லேவியர்களையும் ஏற்படுத்தினார்.

ஆதார நூல் பட்டியல்:

(1)           Orr, James, M.A., D.D. General Editor. "Entry for 'ABINADAB'". "International Standard Bible Encyclopedia". 1915.  

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதார நூலிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது

வேதபகுதி: 2 சாமுவேல் 6:1-19; 1 நாளாகமம் 13, 15, 16:1-6

மனப்பாட வசனம்: இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். (சங்கீதம் 63:2, 3).

 

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்

1.    தாவீது ராஜா முதல்முறையாக உடன்படிக்கைப் பெட்டியை எவ்வாறு கொண்டு வந்தார்?

……………………………..

2.    ஆண்டவர் ஊசாவை தண்டித்தவுடன் தாவீதுராஜா உடன்படிக்கைப் பெட்டியை எங்கு கொண்டு சென்றார்?

………………………………………

3.    தாவீது ராஜா இரண்டாவதுமுறையாக உடன்படிக்கைப் பெட்டியை எவ்வாறு கொண்டு வந்தார்?

…………………………

4.    உடன்படிக்கைப்பெட்டி கொண்டு வரப்பட்டபொழுது தாவீதுராஜா மகிழ்ச்சியோடு என்ன செய்தார்? ………………………………………

5.    உடன்படிக்கைப் பெட்டி கூடாரத்திற்குள் வைக்கப்பட்டபின் தாவீதுராஜா இஸ்ரவேல் மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தது என்ன? …………………………

 

சரியான பதிலைத் தெரிந்தெடுக்கவும்

1.  எருசலேம் பட்டணம் ………………………. நகரம் என்று அழைக்கப்பட்டது.

2.   உடன்படிக்கைப் பெட்டி …………………………… களம் என்ற இடம் அருகே வந்தபொழுது மாடுகள் மிரண்டது.

3.  உடன்படிக்கைப்பெட்டி ………………………… வம்சத்தைச் சார்ந்த லேவியரால் தோள்களின் மேல் சுமந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

4.  உடன்படிக்கைப் பெட்டி ……………………….. வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தபோது அவருடைய வீடு ஆசீர்வதிக்கப்பட்டது.

5.  தாவீது ராஜா மிகுந்த மகிழ்ச்சியோடு …………………………….. அணிந்து கொண்டு நடனத்தோடு உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வந்தார்.



Monday, September 2, 2024

சேபா ராணியின் இஸ்ரவேல் சுற்றுப்பயணம் (Queen of Sheba visits King Solomon), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

ஆரம்பநிலை வகுப்பு (PRIMARY)

வயது: 6 - 7 வயது

வகுப்பு: I & II

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 17

சேபா ராணியின் இஸ்ரவேல் சுற்றுப்பயணம்

Click this link to visit the English Sunday School Lessons Blog

தாவீது ராஜாவின் காலத்திற்குப் பின் அவருடைய மகனான சாலொமோன் ராஜா இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாக பதவியேற்றார். அவர் ராஜாவான உடன் கிபியோன் என்ற இடத்தில் தேவனை ஆராதிப்பதற்காக ஏற்படுத்தியிருந்த கூடாரத்தில், தேவனுக்கு பலி செலுத்தி ஆராதிப்பதற்காக வந்தார். சாலொமோன் ராஜா பலி செலுத்தின நாள் இராத்திரியிலே ஆண்டவர் அவருக்கு தரிசனமாகி, அவருக்கு வேண்டியதை தன்னிடம் கேட்க வேண்டும் என்றும், அது அவருக்கு கொடுக்கப்படும் என்றும் கூறினார். சாலொமோன் ராஜா உடனே இஸ்ரவேல் மக்களை ஆளுகை செய்வதற்கு வேண்டிய ஞானம் தனக்கு தர வேண்டும் என்று கேட்டார். சாலொமோன் ராஜா செல்வத்தையோ, தன்னுடைய எதிரிகளின் மேல் வெற்றியையோ கேட்காமல் ஞானத்தைக் கேட்டதால், அவர் கேட்காத ஆசீர்வாதங்களையும் ஆண்டவர் அவனுக்குக் கொடுத்தார்.

தாவீதுராஜா ஆண்டவருக்கு மிகப்பெரிய ஆலயம் ஒன்றை கட்ட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஆண்டவர் தாவீதுராஜா ஆலயத்தைக் கட்டவேண்டாம் என்றும், அவருடைய மகனாகிய சாலொமோன் ராஜா அதைக் கட்டுவார் என்றும் கூறினார். அதன்படியே சாலொமோன் ராஜா மிகவும் விலை உயர்ந்த கற்களையும், பொருட்களையும் கொண்டு ஆண்டவருக்கு பிரமாண்டமான ஒரு ஆலயத்தைக் கட்டினார். அதுமட்டுமல்லாமல் வேறு எந்த நாட்டின் ராஜாவையும் விட மிகுந்த பொருட்செல்வமும், செல்வாக்கும் உடையவராகக் காணப்பட்டார். பரிசுத்த வேதாகமத்தின் நீதிமொழிகள் புஸ்தகத்தில் உள்ள பல நீதிமொழிகளையும் அவரே எழுதினார். மரங்கள், பறவைகள், விலங்குகள் பற்றியும் அவர் எழுதினார்.

சாலொமோன் ராஜாவின் புகழ் உலகமெங்கும் பரவினது. சாலொமோன் ராஜாவைப் பார்க்கவும், அவருடைய ஞானத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் பல உலக தலைவர்கள் விரும்பினார்கள். அவர்கள் சாலொமோன் ராஜாவை பார்க்க வரும்பொழுது காணிக்கையாக பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், அரிய வாசனைப் பொருட்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டு வந்தார்கள் (2 நாளாகமம் 9:22-25).

சாலொமோன் ராஜாவின் மிகச்சிறந்த ஞானத்தைப் பற்றி சேபா என்ற ஒரு தேசத்தைச் சேர்ந்த மகாராணி கேள்விப்பட்டாள். அவள் சாலொமோன் ராஜாவைப் பார்க்கவும், கடினமான கேள்விகளால் அவருடைய ஞானத்தைப் பரிசோதிக்கவும் விரும்பினாள். அதனால் அவள் மிகுந்த பரிசுப்பொருட்களை எடுத்துக்கொண்டு எருசலேம் பட்டணத்திற்கு வந்தாள். அவள் அதிக அளவிலான தங்கத்தையும், இரத்தினக்கற்களையும், வாசனைப்பொருட்களையும் ஒட்டகங்களின்மேல் சுமந்துகொண்டு வந்தாள். சேபா தேசத்து மகாராணி சாலொமோன் ராஜாவிடம் தன் மனதில் இருந்த பல கடினமான கேள்விகளுக்கும் விடை தெரிந்துகொள்ள விரும்பினாள். அவள் பல விடுகதைகளையும் கேட்டாள். அவள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும், அவளுடைய சந்தேகங்களுக்கும் சாலொமோன் ராஜா பதிலளித்தார். அவருக்கு ஒன்றும் கடினமானதாக இருக்கவில்லை.

சேபா தேசத்து மகாராணி எருசலேம் பட்டணத்தையும், ராஜாவின் அரண்மனை போன்ற இடங்களையும் சுற்றிப் பார்த்தபொழுது பிரமித்துப்போனாள். அரண்மனையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளையும், சாலொமோன் ராஜாவின் ஊழியக்காரருடைய வீடுகளையும், அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும், தேவாலயத்தில் இருந்த நடைமண்டபம் போன்றவற்றையும் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினாள். சேபா தேசத்து மகாராணி சாலொமோன் ராஜாவைப் பார்த்து தான் தன்னுடைய தேசத்தில் கேள்விப்பட்டதெல்லாம் உண்மை என்று அறிந்து கொண்டதாகவும், சாலொமோன் ராஜாவின் சிறந்த ஞானத்தைப் பற்றி பாதி அளவில் கூட தனக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் கூறினாள். தான் கேள்விப்பட்டதைவிட அதிகமாக எருசலேமில் கண்டிருப்பதாகவும் வெளிப்படுத்தினாள். சாலொமோன் ராஜா ஆளுகை செய்யும் மக்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், தினம் அவருடைய ஞானத்தைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்த அவருடைய ஊழியக்காரர்களும் மிகவும் பாக்கியவான்கள் என்று கூறி சாலொமோனை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக்கின இஸ்ரவேலின் தேவனையும் புகழ்ந்தாள்.

சேபா தேசத்து மகாராணி சாலொமோன் ராஜாவிற்கு அதிக அளவிலான பொன்னையும், வாசனை திரவியங்களையும், நறுமணப்பொருட்களையும், விலை உயர்ந்த இரத்தினக்கற்களையும் பரிசாகக் கொடுத்தாள். சேபா மகாராணி கொடுத்த அளவிலான நறுமணப் பொருட்கள் அப்புறம் கொண்டு வரப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. சேபா மகாராணி சாலொமோன் ராஜாவிற்கு கொடுத்ததை விட அதிகமாக அவள் விரும்பிக் கேட்ட எல்லாவற்றையும் சாலொமோன் ராஜா அவளுக்குக் கொடுத்தார். இந்த மறக்கமுடியாத பயணத்திற்குப் பின் சேபா தேசத்து மகாராணி தன் தேசத்திற்கு திரும்பி சென்றாள்.

வேதபகுதி: 1 இராஜாக்கள் 10: 1–13; 2 நாளாகமம் 9:1-12

மனப்பாட வசனம்: ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். (நீதிமொழிகள் 3:13) 

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்:

1. சாலொமோன் ராஜா ஆண்டவரிடம் என்னத்தைக் கேட்டார்?  ……………………………………..

2. எருசலேமில் தேவாலயத்தைக் கட்டினது யார்? ……………………………………..

3. சேபா மகாராணி சாலொமோன் ராஜாவை எதற்காக பார்க்க விரும்பினாள்? ……………………………….

4. சேபா மகாராணி எருசலேமில் பார்த்த விசேஷமான ஏதாவது இரண்டு காரியங்களைப் பற்றி எழுதவும்? ……………………………..

5. சேபா மகாராணி சாலொமோன் ராஜாவிற்கு எதையெல்லாம் கொடுத்தார்?. …………………………………………… 

சரியான பதிலைத் தெரிந்தெடுக்கவும்

1. சாலொமோன் ராஜாவான உடன் தூர இடத்தை சுற்றிப் பார்ப்பதற்காக சென்றார். (    ) சரி      (    ) தவறு   

2. நீதிமொழிகள் புஸ்தகத்தில் உள்ள பல நீதிமொழிகளை தாவீது ராஜா எழுதினார்.      (     ) சரி      (    ) தவறு   

3. சேபா மகராணி கேட்ட எல்லா கேள்விகளுக்கும், சாலொமோன் ராஜா பதிலளித்தார்.     (     ) சரி       (    )  தவறு 

4. சாலொமோன் ராஜாவின் ஞானத்தைக் கேட்பதற்கு முன்பாக சேபா மகாராணி அவருடைய ஞானத்தைப் பற்றி கேள்விப்பட்டதை நம்பவில்லை.      (     ) சரி        (     ) தவறு    

5. சேபா மகாராணி விரும்பிக் கேட்ட எல்லாவற்றையும் சாலொமோன் ராஜா அவளுக்குக் கொடுத்தார்.      (     ) சரி     (      ) தவறு    



திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...