Monday, September 2, 2024

சேபா ராணியின் இஸ்ரவேல் சுற்றுப்பயணம் (Queen of Sheba visits King Solomon), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

ஆரம்பநிலை வகுப்பு (PRIMARY)

வயது: 6 - 7 வயது

வகுப்பு: I & II

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம் – 17

சேபா ராணியின் இஸ்ரவேல் சுற்றுப்பயணம்

Click this link to visit the English Sunday School Lessons Blog

தாவீது ராஜாவின் காலத்திற்குப் பின் அவருடைய மகனான சாலொமோன் ராஜா இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாக பதவியேற்றார். அவர் ராஜாவான உடன் கிபியோன் என்ற இடத்தில் தேவனை ஆராதிப்பதற்காக ஏற்படுத்தியிருந்த கூடாரத்தில், தேவனுக்கு பலி செலுத்தி ஆராதிப்பதற்காக வந்தார். சாலொமோன் ராஜா பலி செலுத்தின நாள் இராத்திரியிலே ஆண்டவர் அவருக்கு தரிசனமாகி, அவருக்கு வேண்டியதை தன்னிடம் கேட்க வேண்டும் என்றும், அது அவருக்கு கொடுக்கப்படும் என்றும் கூறினார். சாலொமோன் ராஜா உடனே இஸ்ரவேல் மக்களை ஆளுகை செய்வதற்கு வேண்டிய ஞானம் தனக்கு தர வேண்டும் என்று கேட்டார். சாலொமோன் ராஜா செல்வத்தையோ, தன்னுடைய எதிரிகளின் மேல் வெற்றியையோ கேட்காமல் ஞானத்தைக் கேட்டதால், அவர் கேட்காத ஆசீர்வாதங்களையும் ஆண்டவர் அவனுக்குக் கொடுத்தார்.

தாவீதுராஜா ஆண்டவருக்கு மிகப்பெரிய ஆலயம் ஒன்றை கட்ட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஆண்டவர் தாவீதுராஜா ஆலயத்தைக் கட்டவேண்டாம் என்றும், அவருடைய மகனாகிய சாலொமோன் ராஜா அதைக் கட்டுவார் என்றும் கூறினார். அதன்படியே சாலொமோன் ராஜா மிகவும் விலை உயர்ந்த கற்களையும், பொருட்களையும் கொண்டு ஆண்டவருக்கு பிரமாண்டமான ஒரு ஆலயத்தைக் கட்டினார். அதுமட்டுமல்லாமல் வேறு எந்த நாட்டின் ராஜாவையும் விட மிகுந்த பொருட்செல்வமும், செல்வாக்கும் உடையவராகக் காணப்பட்டார். பரிசுத்த வேதாகமத்தின் நீதிமொழிகள் புஸ்தகத்தில் உள்ள பல நீதிமொழிகளையும் அவரே எழுதினார். மரங்கள், பறவைகள், விலங்குகள் பற்றியும் அவர் எழுதினார்.

சாலொமோன் ராஜாவின் புகழ் உலகமெங்கும் பரவினது. சாலொமோன் ராஜாவைப் பார்க்கவும், அவருடைய ஞானத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் பல உலக தலைவர்கள் விரும்பினார்கள். அவர்கள் சாலொமோன் ராஜாவை பார்க்க வரும்பொழுது காணிக்கையாக பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும், ஆடைகளையும், ஆயுதங்களையும், அரிய வாசனைப் பொருட்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டு வந்தார்கள் (2 நாளாகமம் 9:22-25).

சாலொமோன் ராஜாவின் மிகச்சிறந்த ஞானத்தைப் பற்றி சேபா என்ற ஒரு தேசத்தைச் சேர்ந்த மகாராணி கேள்விப்பட்டாள். அவள் சாலொமோன் ராஜாவைப் பார்க்கவும், கடினமான கேள்விகளால் அவருடைய ஞானத்தைப் பரிசோதிக்கவும் விரும்பினாள். அதனால் அவள் மிகுந்த பரிசுப்பொருட்களை எடுத்துக்கொண்டு எருசலேம் பட்டணத்திற்கு வந்தாள். அவள் அதிக அளவிலான தங்கத்தையும், இரத்தினக்கற்களையும், வாசனைப்பொருட்களையும் ஒட்டகங்களின்மேல் சுமந்துகொண்டு வந்தாள். சேபா தேசத்து மகாராணி சாலொமோன் ராஜாவிடம் தன் மனதில் இருந்த பல கடினமான கேள்விகளுக்கும் விடை தெரிந்துகொள்ள விரும்பினாள். அவள் பல விடுகதைகளையும் கேட்டாள். அவள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும், அவளுடைய சந்தேகங்களுக்கும் சாலொமோன் ராஜா பதிலளித்தார். அவருக்கு ஒன்றும் கடினமானதாக இருக்கவில்லை.

சேபா தேசத்து மகாராணி எருசலேம் பட்டணத்தையும், ராஜாவின் அரண்மனை போன்ற இடங்களையும் சுற்றிப் பார்த்தபொழுது பிரமித்துப்போனாள். அரண்மனையில் பரிமாறப்பட்ட உணவு வகைகளையும், சாலொமோன் ராஜாவின் ஊழியக்காரருடைய வீடுகளையும், அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும், தேவாலயத்தில் இருந்த நடைமண்டபம் போன்றவற்றையும் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினாள். சேபா தேசத்து மகாராணி சாலொமோன் ராஜாவைப் பார்த்து தான் தன்னுடைய தேசத்தில் கேள்விப்பட்டதெல்லாம் உண்மை என்று அறிந்து கொண்டதாகவும், சாலொமோன் ராஜாவின் சிறந்த ஞானத்தைப் பற்றி பாதி அளவில் கூட தனக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் கூறினாள். தான் கேள்விப்பட்டதைவிட அதிகமாக எருசலேமில் கண்டிருப்பதாகவும் வெளிப்படுத்தினாள். சாலொமோன் ராஜா ஆளுகை செய்யும் மக்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், தினம் அவருடைய ஞானத்தைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்த அவருடைய ஊழியக்காரர்களும் மிகவும் பாக்கியவான்கள் என்று கூறி சாலொமோனை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக்கின இஸ்ரவேலின் தேவனையும் புகழ்ந்தாள்.

சேபா தேசத்து மகாராணி சாலொமோன் ராஜாவிற்கு அதிக அளவிலான பொன்னையும், வாசனை திரவியங்களையும், நறுமணப்பொருட்களையும், விலை உயர்ந்த இரத்தினக்கற்களையும் பரிசாகக் கொடுத்தாள். சேபா மகாராணி கொடுத்த அளவிலான நறுமணப் பொருட்கள் அப்புறம் கொண்டு வரப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. சேபா மகாராணி சாலொமோன் ராஜாவிற்கு கொடுத்ததை விட அதிகமாக அவள் விரும்பிக் கேட்ட எல்லாவற்றையும் சாலொமோன் ராஜா அவளுக்குக் கொடுத்தார். இந்த மறக்கமுடியாத பயணத்திற்குப் பின் சேபா தேசத்து மகாராணி தன் தேசத்திற்கு திரும்பி சென்றாள்.

வேதபகுதி: 1 இராஜாக்கள் 10: 1–13; 2 நாளாகமம் 9:1-12

மனப்பாட வசனம்: ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். (நீதிமொழிகள் 3:13) 

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்:

1. சாலொமோன் ராஜா ஆண்டவரிடம் என்னத்தைக் கேட்டார்?  ……………………………………..

2. எருசலேமில் தேவாலயத்தைக் கட்டினது யார்? ……………………………………..

3. சேபா மகாராணி சாலொமோன் ராஜாவை எதற்காக பார்க்க விரும்பினாள்? ……………………………….

4. சேபா மகாராணி எருசலேமில் பார்த்த விசேஷமான ஏதாவது இரண்டு காரியங்களைப் பற்றி எழுதவும்? ……………………………..

5. சேபா மகாராணி சாலொமோன் ராஜாவிற்கு எதையெல்லாம் கொடுத்தார்?. …………………………………………… 

சரியான பதிலைத் தெரிந்தெடுக்கவும்

1. சாலொமோன் ராஜாவான உடன் தூர இடத்தை சுற்றிப் பார்ப்பதற்காக சென்றார். (    ) சரி      (    ) தவறு   

2. நீதிமொழிகள் புஸ்தகத்தில் உள்ள பல நீதிமொழிகளை தாவீது ராஜா எழுதினார்.      (     ) சரி      (    ) தவறு   

3. சேபா மகராணி கேட்ட எல்லா கேள்விகளுக்கும், சாலொமோன் ராஜா பதிலளித்தார்.     (     ) சரி       (    )  தவறு 

4. சாலொமோன் ராஜாவின் ஞானத்தைக் கேட்பதற்கு முன்பாக சேபா மகாராணி அவருடைய ஞானத்தைப் பற்றி கேள்விப்பட்டதை நம்பவில்லை.      (     ) சரி        (     ) தவறு    

5. சேபா மகாராணி விரும்பிக் கேட்ட எல்லாவற்றையும் சாலொமோன் ராஜா அவளுக்குக் கொடுத்தார்.      (     ) சரி     (      ) தவறு    



No comments:

Post a Comment

திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...