KINDER (பாலர் வகுப்பு)
வயது – 4 & 5
வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)
பாடம் – 14
சிம்சோனுக்குக் கிடைத்த ஊற்றுநீர்
உங்களுக்கு தாகம் எடுக்கும்பொழுது
என்ன செய்வீர்கள்?
நாம் குடிக்கும் தண்ணீர் எங்கிருந்து
கிடைக்கிறதென்று தெரியுமா?
இந்த பாடத்தில் சிம்சோனுக்கு
குடிப்பதற்காக தண்ணீரை ஆண்டவர் எங்கிருந்து கொடுத்தார் என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்!
இஸ்ரவேல் தேசத்திலே சிம்சோன் என்பவர் வாழ்ந்து வந்தார். இந்த உலகத்திலே வாழ்ந்தவர்களிலே
மிகவும் பலசாலி அவர் தான். சிம்சோன் மிகவும் விசேஷமானவர் ஏனென்றால் அவர் பிறப்பதற்கு
முன்பதாகவே ஆண்டவர் அவரைப் பற்றி அவர் பெற்றோரிடம் கூறியிருந்தார். ஆண்டவர் சிம்சோனுக்கு
மற்ற எந்த மனிதனைக் காட்டிலும் அதிகமான பலத்தைக் கொடுத்திருந்தார். அதனால் மற்ற மனிதர்களால்
செய்ய முடியாத பல வேலைகளை சிம்சோனால் எளிதாக செய்ய முடிந்தது.
சிம்சோன் இஸ்ரவேலின் நியாயாதிபதியாக இருந்தார். நியாயாதிபதி என்றால் இஸ்ரவேல் ஜனங்கள் யாருக்குள்ளாவது, ஏதாவது சண்டையோ, பிரச்சனையோ ஏற்பட்டால், அதை தீர்த்து வைத்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பவர்கள். சிம்சோன் வாழ்ந்த நாட்களிலே இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக பெலிஸ்தியர் என்கிற ஒருகூட்ட ஜனங்கள் போரிட வந்தார்கள். அவர்கள் இஸ்ரவேலரின் அதிக பலம் வாய்ந்த அவர்கள் தலைவனாகிய சிம்சோனைப் பிடித்துவிட்டால் இஸ்ரவேலரை எளிதில் தோற்கடித்துவிடலாம் என்று நினைத்தார்கள். அதனால் சிம்சோனைப் பிடிப்பதற்காக காத்திருந்தார்கள். அந்த நேரத்தில் சிம்சோன் லேகி என்ற இடத்தில் இருந்தார்.
சிம்சோன் அங்குமிங்கும் அலைந்தும்
அவருக்கு தண்ணீர் எங்கும் கிடைக்கவில்லை. அதனால் மிகவும் சோர்வுற்ற சிம்சோன் ஆண்டவரிடம்
வேண்டினார். தன்னை பிடிப்பதற்காக பெலிஸ்தியர் தேடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில்
தான் தண்ணீர் தாகத்தினால் சோர்பாயிருந்தால் பெலிஸ்தியர் தன்னை பிடித்துக் கொண்டு போய்
விடுவார்களே என்று ஆண்டவரிடம் கூறினார்.
அப்பொழுது ஒரு அதிசயம் நடந்தது.
ஆண்டவர் அந்த இடத்தில் ஒரு பள்ளத்தை தோன்றப்பண்ணினார். சிம்சோன் கண்களுக்கு முன்பாக
ஒரு ஊற்றுத்தண்ணீர் உருவானது. பூமிக்கடியிலிருந்து தண்ணீர் அந்த பள்ளத்தின் வழியாக
பெருக்கெடுத்து ஓடினது. அந்த தண்ணீரைக் குடித்து சிம்சோன் மறுபடியும் பெலனடைந்தார்.
தேவன் அதிசயமாய் தனக்கு தண்ணீர் கொடுத்த ஊற்றுக்கு
“எந்நக்கோரி” என்று பெயரிட்டார். அது இப்பொழுதும் இஸ்ரவேல் தேசத்திலே இருக்கிறது.
வேதபகுதி: நியாயாதிபதிகள்
15:17 - 19
மனப்பாட வசனம்: தவனமுள்ள
ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறார்
(சங்கீதம் 107:9)
No comments:
Post a Comment