இடைநிலை வகுப்பு (INTERMEDIATE)
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.
Click this link to visit the English Sunday School Lessons Blog
பாடம் – 14
தேவனை அறியாத ஏலியின் குமாரர்கள்
பிரதான ஆசாரியனாகிய ஏலி
இஸ்ரவேல் தேசத்தில் நியாயாதிபதிகள் எவ்வாறு தலைவர்களாய் செயல்பட்டார்கள் என்று இதற்கு முந்தைய பாடங்களில் கற்றுக் கொண்டோம். அவ்வாறு இஸ்ரவேலை வழிநடத்தின நியாயாதிபதிகளில் ஒருவர் தான் ஏலி. அவர் சீலோ என்ற இடத்திலே வைக்கப்பட்டிருந்த ஆசரிப்புக்கூடாரத்தில் பிரதானஆசாரியராகவும் இருந்தார். ஏலிக்கு ஓப்னி, பினெகாஸ் என்கிற இருமகன்கள் இருந்தார்கள். அவர்களும் ஆசரிப்புக் கூடாரத்திலே ஆசாரியர்களாய் இருந்தார்கள். இக்காலங்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் தேவாலயத்திற்கு சென்று தேவனை தொழுதுகொள்ளுவது போல இஸ்ரவேல் தேசத்தில் தேவாலயம் கட்டப்படுமுன் ஜனங்கள் தேவனை ஆராதிப்பதற்கு சென்றுவந்த இடம் தான் ஆசரிப்புக் கூடாரம். (ஆசரிப்புக் கூடாரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும், இளநிலை பாடம் 11 - ஆசரிப்புக் கூடாரம்)
ஏலியின் பிள்ளைகள்
ஏலியின் இருமகன்களாகிய ஓப்னியும்,
பினெகாசும் தேவாலயத்திலே ஆசாரியர்களாய் இருந்த பொழுதிலும், அவர்கள் தேவனை
அறியவில்லை. அவர்கள் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறியவில்லை,
அதற்கு கீழ்ப்படியவும் இல்லை. இவ்வாறு இருக்கும் சமயத்தில் ஆசரிப்புக்கூடாரத்தில்
ஒரு சிறுவன், பிரதான ஆசரியனாகிய ஏலியினுடைய பொறுப்பில் வளரும்படி அவனுடைய
பெற்றோரால் விடப்பட்டான். அவனுடைய பெயர் சாமுவேல். சாமுவேல் தேவனுக்குப் பயந்து
அவருடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்தான். இஸ்ரவேல் ஜனங்கள் அவனை நேசித்தார்கள்.
ஆனால் ஏலியின் பிள்ளைகளாகிய ஓப்னியும்,
பினெகாசும் கெட்ட நடத்தையுள்ள துன்மார்க்கமான நபர்கள் என்று அர்த்தம் கொள்ளும்
“பேலியாளின் பிள்ளைகள்” என்று அழைக்கப்பட்டார்கள். அதன் காரணம் என்னவென்றால்
அவர்கள் தேவனுக்கு விரோதமான பாவங்களை செய்து, தேவனை ஆராதிப்பதற்காக
ஆசரிப்புக்கூடாரத்திற்கு வந்த இஸ்ரவேல் ஜனங்களை, தேவனுடைய கட்டளைகளின்படி ஆராதிக்க
விடாமல் தடுத்து, அவர்களை துன்புறுத்தி வந்தார்கள்.
ஆசரிப்புக்கூடார ஆராதனை
இஸ்ரவேல் ஜனங்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்கு தேவனை வழிபடுவதற்கு வரும்பொழுது, காணிக்கைகளையும், பலிப்பொருட்களையும் கொண்டு வருவது வழக்கம். பலிப்பொருட்களாக ஒருவருடைய பொருளாதார நிலைக்கேற்ப ஆடு, மாடு அல்லது புறாக்குஞ்சுகளை கொண்டுவரலாம் என்று தேவன் அனுமதித்திருந்தார். இதன்மூலமாக தேவன், கொடுக்கப்படுகிற காணிக்கை சிறிதோ, பெரிதோ என்று பார்க்கவில்லை. அதைக் கொடுப்பவரின் இருதயம் செம்மையாக இருக்கிறதா, நல்ல நோக்கத்தோடு அது கொடுக்கப்பட்டதா என்பதையே தேவன் பார்க்கிறார் என்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு உணர்த்துவித்திருந்தார். இஸ்ரவேல் ஜனங்கள் பலி செலுத்தும்பொழுது, அந்த மிருகத்திலிருந்து கொழுப்பும் சில உருப்புகளும் மட்டும் தனியே எடுக்கப்பட்டு தேவனுக்குரிய பங்காக பலிபீடத்தில் வைத்து எரிக்கப்படும். அதன் பின்னர் பலியில் மீதமுள்ளது ஆசாரியர்களுடைய பங்காக அவர்களுக்கு கொடுக்கப்படும். இவை ஆசரிப்புக்கூடாரத்தில் வேலை செய்த ஆசாரியர்களின் அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டன.
காணிக்கையை அவமதித்த ஓப்னி, பினெகாஸ்
ஏலியின் மகன்களாகிய ஓப்னியும்
பினெகாசும் தேவனுக்கென்று ஜனங்கள் கொண்டுவந்த காணிக்கையை அலட்சியமாக எண்ணி
அவமதித்தார்கள். அவர்கள் பலிசெலுத்திக் கொண்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களிடம் சென்று,
பலிப்பொருளின் தேவனுடைய பங்கை பலிபீடத்தில் எரிப்பதற்கு முன்பே, ஆசாரியனுடைய பங்கு
கொடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அதுமட்டுமல்லாமல் தங்களுடைய இஷ்டத்தின்படி
பலியை அனுபவிப்பதற்காக வேகவைத்த பலியை வாங்க மாட்டோம்; பச்சையான இறைச்சியையே
நாங்கள் உங்களிடம் வாங்குவோம்; அப்பொழுது தான் நாங்கள் விரும்புகிறபடி அதை
பொரித்து சமைக்கமுடியும் என்றும் கூறினார்கள். அப்படி ஆசாரியன் விரும்புகிறதுபோல பலியைக் கொடுக்காவிட்டால் நாங்கள்
வலுக்கட்டாயமாய் உன்னிடமிருந்து பறித்துக் கொள்ளுவோம் என்றும் கூறினார்கள் (1
சாமுவேல் 2:12 – 17).
ஓப்னி, பினெகாஸ் தேவனுடைய காணிக்கையை தங்களுடைய சொந்த மனவிருப்பத்தின்படி செய்வதற்காக அவமதித்ததை ஜனங்கள் பார்த்தபொழுது, அவர்கள் தேவனுக்கு காணிக்கை செலுத்துவதை வெறுப்பாக எண்ணினார்கள். அதனால் ஓப்னி, பினெகாசுடைய பாவம் ஆண்டவருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாக இருந்தது. ஆனால் அவர்களோ அதை உணராதிருந்தார்கள். தேவனுடைய கற்பனையை மீறி, இஸ்ரவேல் ஜனங்களின் ஆராதனையை அசுத்தப்படுத்தியதை அவர்கள் பெரிதாக நினைக்கவில்லை.
தீர்க்கதரிசிகளின் மூலம் எச்சரிக்கப்படுதல்
ஆனால் தேவன் அதை
பொறுத்துக்கொள்ளவில்லை. அவர் தம்முடைய தீர்க்கதரிசியை ஏலியிடம் அனுப்பி, அவனுடைய
மகன்கள் தேவனுக்குப் பயப்படாமல் வாழ்ந்து, தேவனுடைய காணிக்கையை அலட்சியம்
பண்ணுவதால் அவர்களை அழிக்கப்போவதாகக் கூறினார். அதுமட்டுமல்லாமல் சாமுவேல்
மூலமாகவும் ஏலியோடு பேசினார். ஓப்னி, பினெகாசும் தவறு செய்வதினால் அவர்கள்
தண்டிக்கப்படப்போவதாகவும் எச்சரித்தார். பிரதான ஆசாரியனாயிருந்த ஏலியோ, தன்னுடைய
பிள்ளைகளை எச்சரிக்காமல், கர்த்தருடைய பார்வைக்கு சரியாகத் தோன்றுவதை அவர்
செய்வாராக என்று கூறி விட்டுவிட்டார்.
ஏலியின் குமாரர்கள் தண்டிக்கப்படுதல்
அந்த நாள் விரைவிலேயே வந்தது.
இஸ்ரவேல் தேசத்திற்கு எதிராக பெலிஸ்தியர்கள் என்பவர்கள் யுத்தத்திற்கு வந்தார்கள்.
அப்பொழுது யுத்தம் மிகவும் கடினமாயிருந்தபடியால், இஸ்ரவேலின் தலைவர்கள்
உடன்படிக்கைப் பெட்டியை யுத்தம் நடக்கிற இடத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று
நினைத்தார்கள். ஆசரிப்புக்கூடாரத்தில் ஆசாரியர்களாய் இருந்த, தேவனை அறியாத ஏலியின்
மகன்களும் அதற்கு சம்மதித்தார்கள். ஏற்கெனவே தேவனுக்கு விரோதமான பாவத்தைச் செய்து
தேவகோபத்திற்கு உள்ளாகியிருந்த அவர்கள், இன்னும் ஒரு பெரிய தவறை செய்கிறோம் என்று
உணராதிருந்தார்கள். ஏனென்றால் உடன்படிக்கைப்பெட்டி ஆசரிப்புக்கூடாரத்தின்
மகாபரிசுத்த ஸ்தலத்திலே வைக்கப்பட வேண்டும்.
அன்றைய தினம் அவர்கள் உடன்படிக்கைப்பெட்டியை பெலிஸ்தருக்கு எதிரான யுத்தம் நடந்த இடத்திற்கு கொண்டு சென்றார்கள். தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவவில்லை. இஸ்ரவேலர் பெலிஸ்தரால் தோற்கடிக்கப்பட்டார்கள். தேவன் எச்சரித்தபடியே, ஏலியின் இரு மகன்களாகிய ஓப்னியும், பினெகாசும் அந்த யுத்தத்திலே கொல்லப்பட்டார்கள். பிரதான ஆசாரியப்பட்டமும் அவர்களுடைய குடும்பத்தைவிட்டு எடுக்கப்பட்டு வேறோரு குடும்பத்திற்குக் கொடுக்கப்பட்டது.
புதிய
ஏற்பாட்டில் காணிக்கை, பலி மற்றும் ஆராதனை முறைகள்
பழைய ஏற்பாட்டில் தேவனுடைய
ஊழியக்காரர்களாக செயல்பட்ட ஆரோனுடைய வம்சாவளியினரான ஆசாரியர்கள் இஸ்ரவேல் மக்களின்
சார்பாக பலிகளை செலுத்தி தேவனுக்கு ஆராதனை செய்தார்கள். புதிய ஏற்பாட்டில் தேவனுடைய
ஊழியத்திற்கென்று அழைக்கப்பட்ட ஊழியக்காரர்கள் மட்டுமல்லாமல், இயேசு கிறிஸ்துவின் மூலமாய்
இரட்சிப்பைப் பெற்றிருக்கிற ஒவ்வொருவரும் ஆவிக்குரிய பலிகளை செலுத்தும்படி
ஆசாரியர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள் (1 பேதுரு 2:5).
பழைய ஏற்பட்டில் தேவனுக்கென்று
செலுத்தப்பட்ட காணிக்கைகளையும், பலிகளையும் இரண்டு வகையாகப் பிரிக்கமுடியும்.
1. பாவநிவிர்த்திக்காக செலுத்தப்பட்ட
பலிகள்
2. நன்றிகடனாக செலுத்தப்பட்ட ஸ்தோத்திர பலிகள்.
புதிய ஏற்பாட்டிலே இயேசுகிறிஸ்து
தம்மைதாமே நித்தியமான பாவநிவாரணபலியாக ஒப்புக்கொடுத்ததினால், பாவநிவிர்த்திக்காக
இன்னொருமுறை எந்த ஒரு மிருகத்தையும் பலியாகவோ, அல்லது வேறு எந்த ஒரு
காணிக்கைகளையுமோ செலுத்த வேண்டிய அவசியமில்லை. நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து
நம்முடைய பாவங்களை அறிக்கையிடும்பொழுது, நம்முடைய பாவங்களை மன்னித்து எல்லா
அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியும்
உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:9). புதிய ஏற்பாட்டு காலத்தில் ஸ்தோத்திரபலிகள் மிருகஜீவன்களை
பலியிட்டு செலுத்தப்படாவிட்டாலும், வேறு விதங்களில் செலுத்தப்படுவதை நாம் பார்க்க முடியும்.
ஆவிக்குரிய பலிகள்
இயேசு கிறிஸ்துவின் மூலமாக
பாவமன்னிப்பைப் பெற்று, நித்திய ஜீவனை கண்டடைந்திருக்கிற நாம் அதன் மூலமாக, புதிய
உடன்படிக்கையில் ஆசாரியர்களாக, ஆவிக்குரிய பலிகளை செலுத்தும் பாக்கியத்தையும்
பெற்றிருக்கிறோம். புதிய ஏற்பாட்டிலே நாம் செலுத்தக்கூடிய பலவிதமான ஆவிக்குரிய
பலிகளைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது.
ü தேவனுக்கு நன்மையும், பிரியமுமான
ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட சரீரம்
(ரோமர் 12:1, 2)
ü ஜெபம் (வெளிப்படுத்தல் 5:8; 8:3)
ü விசுவாசம் (பிலிப்பியர் 2:17)
ü துதி ஸ்தோத்திரம் (எபிரெயர் 13:15)
ü காணிக்கைகள் (பிலிப்பியர் 4:18)
ü தானதர்மம், நற்கிரியைகள் (எபிரெயர்
13:16)
பலியிடும்பொழுது ஏதாவது ஒரு
பலிப்பொருள் பலிபீடத்தில் வைக்கப்படும். அவ்வாறு பலிபீடத்தில் வைக்கப்படும்
பொருள், தகனிக்கப்பட்டு
சாம்பலாக்கப்படும். ஆகவே பலியிடுவது என்பது முழுவதுமாக ஒப்புக்கொடுக்கப்படுவது அல்லது
சரணடைவதைக் குறிக்கும். நம்முடைய சுயசித்தம் தேவசித்தத்திற்கு முன்பாக
சரணடையும்பொழுது, அது “சுயம் அல்லது நம்முடைய விருப்பங்கள்” நம்மை ஆளுகை செய்வதைத்
தடுத்து, நம்முடைய வாழ்வில் தேவனுடைய ஆளுகையைக் கொண்டுவருகிறது. சுயத்தை
முன்னிறுத்தியும், சுயநலத்துடனும் செய்யப்படும் ஆராதனை, காயீனின் காணிக்கையைப் போல
வீணானதாகவும், அங்கீகரிக்கப்படாததாகவும் இருக்கும்.
ஆவியிலும், உண்மையிலும் தேவனை
ஆராதித்தல்
இன்று பொதுவாக கிறிஸ்தவர்கள் மத்தியிலே காணப்படுகின்ற கருத்து என்னவென்றால், ஆராதனை எவ்வாறு செய்யப்படுகின்றது என்பது முக்கியமல்ல என்பதாகும். ஆனால் வேதாகமத்தில் நாம் பார்க்கும்பொழுது, தேவன் இந்த உலகத்தை சிருஷ்டித்த நாள் முதல் தன்னை எவ்வாறு ஆராதிக்க வேண்டும் என்பதையும், தான் அங்கீகரிக்காத காணிக்கை, ஈனமான பலிகள், ஏற்றுக்கொள்ளாத ஆராதனை ஆகியவைகளைப்பற்றி பல எடுத்துக்காட்டுகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆராதனை என்பது நம்மைப்பற்றியதோ அல்லது நாம் எவ்வாறு உணர்ந்தோம் என்பதைப் பற்றியதோ அல்ல. ஆராதனை என்பது தேவனைப் பற்றியது. ஆராதனைக்கு உரிய ஒருவர் தனக்கு எவ்வாறு ஆராதனை செய்யப்பட வேண்டும் என்று வெளிப்படுத்தியிருக்கிற அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதே ஆராதனை. ஆராதனையில் நாம் அனுபவிக்கும் விடுதலைகள், மகிழ்ச்சி ஆகியவை ஆராதனையின் இடைவிளைவுப் பொருட்கள் (Byproducts), இவை ஆராதனையின் பிரதான நோக்கம் அல்ல. ஆராதனையின் பிரதான நோக்கம் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவதே ஆகும். ஆராதனை என்பது ஆராதிப்பவரின் விருப்பு வெறுப்புகள், அவருடைய தாலந்துகளின் அடிப்படையில் நிகழ்த்திக்காட்டக்கூடிய கலைநிகழ்ச்சிகள் அல்ல, மாறாக தேவனுடைய பரிசுத்தத்தையும், அவருடைய தெய்வீக தன்மைகளையும் பறைசாற்றும்படி பரிசுத்த வேதாகமத்தின் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கும் ஆராதனைமுறைகளே ஆகும். இவ்வாறு நாம் செய்யும்பொழுது நாம் தேவனை ஆவியோடும், உண்மையோடும் தொழுது கொண்டு அவர் விரும்பும் ஆராதனை செலுத்த முடியும்.
வேதபகுதி: 1 சாமுவேல் 2,3,4
மனப்பாட வசனம்: பிரசங்கி 5:1, 2
பாடப்
பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1.
2. இஸ்ரவேல் ஜனங்கள் பலி
செலுத்தும்பொழுது, பலி மிருகத்திலிருந்து ………………………, சில உருப்புகளும் தேவனுக்குரிய
பங்காக பலிபீடத்தில் வைத்து எரிக்கப்படும்.
3. ………………………… பட்டம் ஏலியின் குடும்பத்தை
விட்டு எடுக்கப்படப்போவதாக தேவன் எச்சரித்தார்.
4. உடன்படிக்கைப்பெட்டி
ஆசரிப்புக்கூடாரத்தின் ……………………………. ஸ்தலத்திலே வைக்கப்பட வேண்டும்.
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. ஏலி
என்பவர் யார்?
2. ஓப்னியும்,
பினெகாசும் “பேலியாளின் பிள்ளைகள்” என்று ஏன்
அழைக்கப்பட்டார்கள்?
3. பலியில்
தேவனுடைய பங்காக எரிக்கப்பட்டது எது?
4. ஏலிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிப்பு என்ன?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1. புதிய ஏற்பாட்டில் படைக்கக்கூடிய காணிக்கை, பலி மற்றும் ஆராதனை
முறைகளைப் பற்றி வேதத்தின் ஆதாரத்தில் எழுதவும்.
No comments:
Post a Comment