இளநிலை வகுப்பு (JUNIOR)
வயது: 10 - 11 வயது
வகுப்பு: V &
VI
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for
free distribution among Sunday School children.
No part of this document can be modified, sold or used for any commercial purpose.
Click this link to visit the English Sunday School Lessons Blog
பாடம் –14
ரூத் – இஸ்ரவேலின் தேவனுடைய
செட்டைகளின் கீழ்
ஓருமுறை நியாயாதிபதிகள்
இஸ்ரவேல் தேசத்தை ஆண்டு வந்த காலத்தில் கொடிய பஞ்சம் உண்டானது. யூதா கோத்திரத்தின்
பட்டணங்களில் ஒன்றான பெத்லெகேமில், எலிமெலேக்கு என்ற மனிதனும், அவனுடைய மனைவியாகிய
நகோமியும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு மக்லோன், கிலியோன் என்று இரண்டு மகன்கள்
இருந்தார்கள். தேசத்திலே பஞ்சம் அதிகரித்தபொழுது அவர்கள் பிழைப்பதற்காக மோவாப்
என்கிற தேசத்திற்கு சென்றார்கள். அங்கு அவர்கள் சென்ற சில வருடங்களில் எலிமெலேக்கு
இறந்து போனார். கொஞ்சம் காலம் கழித்து மக்லோனும்,
கிலியோனும் மோவாபிய பெண்களான ஓர்பாள், ரூத் என்பவர்களை திருமணம் செய்து
கொண்டார்கள். சுமார் பத்து வருடங்கள் சென்ற பின் மக்லோனும், கிலியோனும் கூட
இறந்துபோனார்கள்.
அதன்பின்னர் நகோமி தன் மோவாபிய மருமகள்களான ஓர்பாள், ரூத் ஆகியோருடன்
வசித்து வந்தார்கள். மோவாபியர்கள் இஸ்ரவேலர்கள் அல்ல. அவர்கள் ஆபிரகாமின் சகோதரனுடைய மகனான லோத்துவின் வம்சாவளியினர்.
அவர்கள் இஸ்ரவேலின் தேவனை வழிபடுவதை விட்டுவிட்டு கேமோஷ் என்கிற தெய்வத்தை
வழிபட்டுவந்தார்கள். நகோமியும் அவள் குடும்பத்தாரும் பெத்லெகேமிலிருந்து மோவாப் தேசத்திற்கு
பிழைப்பதற்காக சென்றிருந்தாலும், அவர்கள் இஸ்ரவேலின் தேவனை தொழுது கொள்ளுவதை
விட்டுவிடவில்லை.
ஒரு நாள் நகோமிக்கு இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு நல்ல செய்தி கிடைத்தது. தேசத்தின் பஞ்சம் முடிவுக்கு வந்து, அங்கு உணவு கிடைக்கின்றது என்பது தான் அந்த நல்ல செய்தி. நகோமி தன் சொந்த ஊராகிய பெத்லெகேமுக்கு திரும்பி செல்லுவதென்று தீர்மானித்தாள். நகோமியும் அவளுடைய மருமகள்களான ஓர்பாளும், ரூத்தும் பெத்லெகேம் செல்லுவதற்காகப் புறப்பட்டார்கள். நகோமி, ஓர்பாள், ரூத் மூவரும் ஒருவரோடொருவர் சமாதானமாகவும், அன்பாகவும் இருந்தார்கள். ஆனால் நகோமிக்கு ஓர்பாள், ரூத் ஆகியோரைப் பற்றி கவலை ஏற்பட்டது. மோவாப் தேசத்தைச் சார்ந்த ஓர்பாளும், ரூத்தும் அவர்களுக்குப் பழக்கமில்லாத புதிய இடமாகிய பெத்லெகேமுக்கு வந்தால் அவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை நடத்துவார்கள் என்று கலங்கினாள். அவர்கள் தங்கள் சொந்த தேசத்திலே தங்கள் உறவினர்களோடே இருந்துவிட்டால் நன்றாகப் பராமரிக்கப்படுவார்கள் என்று எண்ணினாள்.
நகோமி தன்னுடைய மருமகள்களாகிய ஓர்பாளையும், ரூத்தையும் அழைத்து அவர்களுடன் பேசி, தங்கள் சொந்த ஜனங்களிடம் திரும்பி செல்லுமாறு கூறினாள். அவள் சொன்னது ஓர்பாளுக்கு சரியாகத் தோன்றினதினால் அவள் நகோமியை முத்தமிட்டு தன் சொந்த ஊரிலுள்ள தன் உறவினர்களிடம் திரும்பி சென்றாள்.
ஆனால் ரூத்தோ தன் மாமியாரை விட்டுவிட்டு தன்
சொந்த ஜனங்களிடம் செல்லுவதற்கு மறுத்து விட்டாள். அவள் நகோமியைப் பார்த்து, தான்
திரும்பிப் போவதைக் குறித்து இனி தன்னிடம் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள். நகோமி
செல்லும் இடத்திற்கு தானும் வருவதாகவும், அவள் தங்கும் இடத்திலேயே தானும்
தங்குவதாகவும், அவளுடைய ஜனம் தன்னுடைய ஜனம் என்றும், அவளுடைய தேவனே தன்னுடைய தேவன்
என்றும் கூறினாள். ரூத் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பிப் போவதில்லை என்பதில்
தீர்மானமாயிருந்தாள். ஆகவே அதன்பின் நகோமி அதைப்பற்றி அவளிடம் ஒன்றும் பேசவில்லை. நகோமியும்,
ரூத்தும் மோவாப் தேசத்திலிருந்து பெத்லெகேமிற்கு நடந்தே சென்றார்கள்.
நகோமியும், ரூத்தும் பெத்லெகேமிற்கு போய் சேர்ந்தபொழுது, அந்த ஊரில் உள்ளவர்கள் அவளை சரியாக அடையாளங்காண முடியாமல், இவள் நாகோமியாய் இருக்குமோ என்று பேசிக்கொண்டார்கள். நகோமி இஸ்ரவேல் தேசத்திலிருந்து மோவாப் தேசத்திற்கு சென்றபின் பல துன்பங்களை அனுபவித்திருந்தாள். அந்நிய தேசத்திலே முதலாவது தன்னுடைய கணவரையும், பின்னர் தன்னுடைய இரு மகன்களையும் இழந்திருந்தாள். ஆகவே அன்றாட தேவைகளை சந்திப்பதற்காக அவள் கடினமாக உழைக்க வேண்டியிருந்திருக்கும். அவள் தேவன் தன்னை வெறுமையாகச் செய்து, தனக்கு வேதனையை அனுமதித்ததால் தன்னுடைய வாழ்க்கை கசப்பாக மாற்றிவிட்டதாக எண்ணினாள். ஆகவே அவள் தன் ஊராரிடம் இனி தன்னை நகோமி என்று அழைக்க வேண்டாமென்றும், தன்னை “மாராள்” என்று அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள். மாராள் என்றால் எபிரெய மொழியில் கசப்பு என்று அர்த்தம். ஆனால் தேவனோ நகோமிக்கு மிகவும் சிறப்பான ஒரு பிற்காலத்தை வைத்திருந்தார். ஆகவே அவள் கேட்டுக்கொண்டபடி அவளுடைய பெயர் மாராள் என்று மாறவில்லை.
நகோமியும்,
ரூத்தும் பெத்லெகேமிற்கு வந்து சேர்ந்தபொழுது
அங்கு வாற்கோதுமை அறுவடை நடந்து கொண்டிருந்தது. ரூத் தனக்காகவும், தன்னுடைய மாமியாகிய நகோமிக்காகவும் உணவு சேகரிக்கும்படிக்கு வயல்வெளிக்கு சென்றாள். அங்கு ஒரு வயலிலே அறுப்பு நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து அங்கு சிந்திக்கிடந்த வாற்கோதுமை தானியங்களை பொறுக்கத் தொடங்கினாள்.
இஸ்ரவேல் தேசத்தின் நியாயப்பிரமாணத்தின்படி,
அறுவடை செய்யும்பொழுது கீழே சிந்துகின்ற தானியங்களை அறுக்கிறவர்கள்
எடுக்கக்கூடாது. அதை ஏழைகள் எடுத்துக்கொள்ளும்படியாக விட்டுவிட வேண்டும்.
அதைப்போலவே தானியக்கட்டை மறந்து வயலிலே விட்டுவந்தால் அதை திரும்பிப் போய்
எடுக்கக் கூடாது என்றெல்லாம் தேவன் அவர்களுக்கு கற்பித்திருந்தார் (லேவியராகமம்
23:22; உபாகமம் 24:19 – 21). இவ்வாறு செய்வதன் மூலமாக ஏழை எளியவர்கள்,
மட்டுமல்லாமல் மற்ற மிருகஜீவன்களும் கூட பசியாறமுடியும். ரூத்
தானியங்களைப் பொறுக்குவதற்காக தற்செயலாக சென்ற அந்த வயல் போவாஸ் என்ற செல்வந்தனான
ஒரு மனிதனுடையதாயிருந்தது. போவாஸ் எலிமெலேக்கின் நெருங்கின
உறவினருமாயிருந்தார்.
போவாஸ்
தன்னுடைய வயலிலே வாற்கோதுமையைப் பொறுக்கிக்கொண்டிருந்த அந்த பெண் யாரென்று
விசாரித்தபொழுது, அவள் நகோமியோடுகூட வந்த ரூத் என்று அவருக்கு சொல்லப்பட்டது.
அப்பொழுது அவர் அவளை அழைத்து தன்னுடைய வயலிலே தாராளமாக கதிர்களைப் பொறுக்கிக்
கொள்ளலாம் என்றும், அவளுக்கு தாகம் எடுத்தால் வேலைக்காரருடைய
தண்ணீர்க்குடத்திலிருந்து தண்ணீர் குடிக்கலாம் என்றும் அனுமதி கொடுத்தார். அவளை
தொந்தரவு செய்யாமல் இருக்கும்படிக்கு தன்னுடைய வேலைக்காரர்களுக்கும் கட்டளையிட்டார்.
ரூத்திற்கு போவாசின் செயல்கள் ஆச்சரியமாயிருந்தது. அப்பொழுது போவாஸ் ரூத்தைப்
பார்த்து, அவள் தன்னுடைய மாமியாருக்காக செய்தது எல்லாம் தனக்கு
அறிவிக்கப்பட்டதென்றும், ஆகவே அவளுடைய செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் அவளுக்கு கட்டளையிடுவார்
என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய
செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றும்
ஆசீர்வதித்தார்.
ரூத்
தனக்காகவும், தன்னுடைய மாமிக்காகவும் வேண்டிய தானியங்களை பொறுக்கினபின் தன்னுடைய
வீட்டிற்கு திரும்பி வந்தாள். ரூத் நகோமியிடம் தான் போவாசின் வயலில்
வாற்கோதுமையைப் பொறுக்கினதாக கூறினபொழுது, நகோமி சந்தோஷப்பட்டாள். அவள் ரூத்திடம்,
போவாஸ் அவர்களுடைய நெருங்கின உறவினர் என்றும் அவர்களை ஆதரிக்கிற சுதந்திரவாளி
என்றும் கூறினாள். இஸ்ரவேல் தேசத்தின் நியாயப்பிரமாணத்தின்படி ஒரு மனிதன்
இறந்துபோனால், அவனுடைய வயல்நிலங்களோ, உடைமைகளோ அவர்களுடைய கோத்திரத்தை விட்டு வேற்று
கோத்திரத்துக்கு செல்லாதபடிக்கு, அவனுடைய நெருங்கின உறவினர் யாராவது அதை வாங்கிக்
கொள்ள வேண்டும். அவர்களைத்தான் சுதந்திரவாளி என்று கூறுவார்கள். போவாஸ் எலிமெலேக்கின்
நெருங்கின உறவினராய் இருந்தபடியால் எலிமெலேக்கின் வயல்நிலங்களை நகோமி போவாசிடம்
விற்க விரும்பினாள். அவ்வாறு வயலை வாங்கும்பொழுது அவர் ரூத்தையும் திருமணம்
செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாள். எலிமெலேக்கிற்கு போவாசைக்காட்டிலும்
நெருங்கின இன்னொரு சுதந்திரவாளி இருந்தார். ஆனால் அவர் மோவாபிய பெண்ணான ரூத்தை
திருமணம் செய்யவிரும்பவில்லை. ஆகவே போவாஸ் சுதந்திரவாளியாய் எலிமெலேக்கின் வயல்
நிலங்களை வாங்குவதற்கும், ரூத்தை திருமணம் செய்வதற்கும் சம்மதித்தார்.
போவாஸ் ரூத்தை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஓபேத் என்கிற ஒரு மகன் பிறந்தான். நகோமியுடைய அண்டை வீட்டிலுள்ள பெண்கள், நகோமிக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான் என்று கொண்டாடினார்கள், ஏழு மகன்களைக் காட்டிலும் அவளிடத்தில் அதிக அன்பு செலுத்தின அவளுடைய மருமகள் அவனைப் பெற்றாள் என்று கூறி அவளை வாழ்த்தினார்கள். நகோமியின் கசப்பு மாறினது. ஓபேதின் பேரன்தான் இஸ்ரவேல் தேசத்தின் இரண்டாம் ராஜாவாகிய தாவீது. தாவீதின் சந்ததியில் தான் உலகமீட்பராக இயேசுகிறிஸ்துவும் வெளிப்பட்டார்.
இஸ்ரவேல் தேசத்தை சேராத, இஸ்ரவேலின் காணியாட்சிக்கு புறம்பாயிருந்த மோவாபிய பெண்ணாகிய ரூத்திற்கு இஸ்ரவேலின் தலைசிறந்த ராஜாவாகிய தாவீது, அவனுடைய ராஜவம்சம், மற்றும் உலக இரட்சகரான இயேசுகிறிஸ்துவின் வம்சஅட்டவணையில் இடம் கொடுக்கப்பட்டது. போவாஸ் அவளிடம் கூறினது போல இஸ்ரவேலின் தேவனுடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாக வந்த அவளுக்கு நிறைவான பலன் கொடுக்கப்பட்டது. தகுதியற்றவர்கள் மேல் பாராட்டப்படும் தேவனுடைய புரிந்து கொள்ள இயலாத மகத்துவமான கிருபை, பழைய ஏற்பாட்டில் ரூத்தின் வாழ்க்கையில் வெளிப்படுவதை நாம் இதில் பார்க்கலாம். இந்த கிருபையை புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நாம் நிறைவாகப் பெற்றிருக்கிறோம்.
வேதபகுதி:
ரூத் புஸ்தகம்
மனப்பாட வசனம்: ரூத் 2:12
பாடப் பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1. எலிமெலேக்கும் நகோமியும்
………………………………. வசித்து வந்தார்கள்.
2. மோவாபியர்கள்
ஆபிரகாமின் சகோதரனுடைய மகனான ……………………… வம்சாவளியினர்.
3. ரூத்
தானியங்களைப் பொறுக்குவதற்காக சென்ற வயல் ………………….. என்ற மனிதனுடையது.
4. ரூத்திற்கு
…………………… என்கிற ஒரு மகன் பிறந்தான்.
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. மோவாபியர்கள்
யாரை வணங்கினார்கள்?
2. நகோமி தன்னை எல்லாரும் மாராள் என்று அழைக்கும்படி ஏன் கூறினாள்?
3.
வயலில் ரூத் தானியங்களை
பொறுக்கிக்கொண்டிருந்தபொழுது போவாஸ் அவளை எவ்வாறு ஆசீர்வதித்தார்?
4. ஓபேத் பிறந்தபொழுது அண்டைவீட்டு பெண்கள் நகோமியிடம் கூறினது என்ன?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1.
ரூத் பெத்லெகேமிற்கு வந்தபின் அவளுக்கு நடந்தது
என்ன?
No comments:
Post a Comment