Tuesday, June 14, 2022

சாமுவேல்: கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் (Samuel: Asked of the Lord), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 14

மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

வயது: 8 - 9 வயது

வகுப்பு: III & IV

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

பாடம் – 14

சாமுவேல்: கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன்

இந்த பாடத்தில் இஸ்ரவேல் தேசத்தின் முக்கியமான தீர்க்கதரிசிகளில் ஒருவரான சாமுவேல் என்பவரது பிறப்பின் வரலாற்றைப் பற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம். சாமுவேல் தீர்க்கதரிசி தான் இஸ்ரவேல் தேசத்தின் கடைசி நியாயாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது காலத்திற்குபின் இஸ்ரவேல் தேசத்தின் தலைவர்களாக ராஜாக்கள் செயல்பட்டார்கள். எல்க்கானா என்ற மனிதர் இஸ்ரவேல் தேசத்தின் எப்பிராயீம் மலைதேசத்திலிருந்த ராமதாயீம் என்கிற ஊரிலே வசித்து வந்தார். எல்க்கானா லேவி கோத்திரத்தை சார்ந்தவர் (1 நாளாகமம் 6:16-28). அவருடைய மனைவிக்கு அன்னாள் என்று பெயர். எல்க்கானாவிற்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். அவளுடைய பெயர் பெனின்னாள். அன்னாளுக்கு பிள்ளைகள் இல்லாமல் இருந்தது. பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தார்கள்.

Moody Publishers / FreeBibleimages.org.

எல்லா வருடமும், எல்க்கானா, சீலோ என்கிற இடத்தில் இருந்த ஆசரிப்புக் கூடாரத்திற்கு, தேவனைத் தொழுது கொள்ளுவதற்காக தன்னுடைய குடும்பத்துடன் செல்லுவது வழக்கம். அங்கே அவர்கள் பலிகளை செலுத்தி தேவனை தொழுது கொள்ளுவார்கள். பலி செலுத்துவதற்கு ஆசாரிப்புக் கூடாரத்திற்கு போகும்பொழுது அதைப் பண்டிகையாய் சந்தோஷமாய் கொண்டாடுவார்கள்.

Moody Publishers / FreeBibleimages.org.

பலி செலுத்தி முடித்தபின் மீதியாயிருப்பதை பங்கிட்டு விருந்து உண்பார்கள். அப்படி எல்க்கானா தன்னுடைய குடும்பத்தார் எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுப்பான். எல்க்கானா அன்னாளிடம் அதிகமான அன்பு செலுத்தினபடியால், அவளுக்கு இரண்டு மடங்கு கொடுப்பான். எல்லாரும் பண்டிகையைக் கொண்டாடும்பொழுது, பெனினாள் அன்னாளுக்கு குழந்தைகள் இல்லாதபடியால் மனம் நோகும்படியாக பேசுவாள். அதினால் அன்னாள் துக்கப்பட்டு, விருந்தை எல்லாரோடும் சந்தோஷமாக சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பாள்.

ஒருமுறை இவ்வாறு அவர்கள் பலி செலுத்துவதற்காக சென்றிருந்தபோது, பலி செலுத்தி முடித்தபின் அன்னாள் ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்யும்படி ஆசரிப்புக் கூடாரத்திற்கு சென்றாள். அப்பொழுது ஆசாரியனாயிருந்த ஏலி ஆலயத்தின் வாசல் அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஏலி மிகவும் வயது சென்றவராயிருந்தார். அன்னாள் உள்ளே சென்று தேவனிடம் மன்றாடி, தனக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடுத்தால், அவனை ஆண்டவருக்கென்றே ஒப்புக் கொடுப்பதாகவும், அவன் வாழ்நாளெல்லாம் தலை முடி வெட்டப்படாமல் இருப்பான் என்றும் பொருத்தனை செய்தாள். வேதாகமத்தில் குறிப்பாக சொல்லப்படாவிட்டாலும், இது ஒரு நசரேய பொருத்தனையாக இருந்திருக்கலாம் (எண்ணாகமம் 6:1 – 21).

அன்னாள் தன்னுடைய இருதயத்தின் கவலைகளை ஆண்டவரிடம் வெளிப்படுத்தினாள். அவள் விண்ணப்பம் செய்தபொழுது, அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது. அவளுடைய சத்தம் வெளியே கேட்கவில்லை. அவள் அதிகநேரமாக இவ்வாறே ஜெபித்துக் கொண்டிருப்பதை ஆசாரியனான ஏலி கவனித்துக் கொண்டிருந்தார். ஏலிக்கு அன்னாள் மேல் சந்தேகம் வந்தது. பலி செலுத்தி கொண்டாடியபொழுது மது அதிகமாக அருந்தினதால், தான் எங்கே இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஒருவேளை இவ்வாறு வெகு நேரமாக இங்கே அமர்ந்திக்கிறாள் என்று நினைத்தார். அதனால் ஏலி அவளைப் பார்த்து கோபத்துடன் பேசினார்.  நீ எவ்வளவு நேரமாக இதேபோன்று குடித்துவிட்டு அமர்ந்திருக்கப்போகிறாய் என்று கேட்டார்.

அன்னாள் ஏலியிடம், தன்னை தவறாக எண்ண வேண்டாம் என்றும், தான் குடிக்கவில்லை என்றும் தான் கவலையுடன் இருந்ததால் அவ்வாறு ஜெபித்ததாகவும் கூறினாள். அப்பொழுது ஏலி தன் தவறை உணர்ந்து, அன்னாளின் விண்ணப்பத்திற்கு ஆண்டவர் பதில் கொடுக்க வேண்டும் என்று ஆசீர்வதித்தார். அன்னாள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அவள் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து திரும்பி வந்தபின் விருந்து உண்டாள். அதன் பின்பு அவளுடைய முகம் துக்கமாயிருக்கவில்லை.

Moody Publishers / FreeBibleimages.org.

சீலோவிலிருந்து எல்க்கானாவும், அவனுடைய குடும்பமும் அவர்களுடைய சொந்த ஊருக்கு திரும்பி சென்றார்கள். அன்னாள் ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொண்டபடியே, அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அன்னாள், “கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன்” என்று சொல்லி,  அவனுக்கு “சாமுவேல்” என்று பெயர் சூட்டினாள். அன்னாள் தான் தேவனிடம் செய்த பொருத்தனையை மறக்கவில்லை. சாமுவேல் சற்று வளர்ந்து, பலமான ஆகாரத்தை உண்ண ஆரம்பித்தபின் அன்னாள் சாமுவேலை ஏலியிடம் அழைத்து வந்தாள். அன்னாள் ஏலியிடம் தான் ஆசரிப்புக்கூடாரத்தில் ஏறெடுத்த விண்ணப்பத்தை நினைவுபடுத்தி, இந்த குழந்தைக்காகவே தான் அவ்வாறு ஜெபித்ததாக கூறி, ஏலி அவனை வளர்க்கும்படியாக அவனிடம் ஒப்படைத்தாள். சாமுவேல் அங்கே சீலோவிலே ஆசாரியன் ஏலியினால் வளர்க்கப்பட்டு, ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைகளில் உதவி செய்து கொண்டு வந்தான்.

அன்னாள் சாமுவேலை ஆண்டவருக்கென்று அர்ப்பணித்தாள். ஆண்டவர் அன்னாளை ஆசீர்வதித்தார். அவளுக்கு சாமுவேலுக்குப் பின், மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தார்கள். அன்னாள் சாமுவேலை மறந்துவிடவில்லை. ஒவ்வொரு ஆண்டு பலி செலுத்த வரும்பொழுதும், சாமுவேலுக்கு ஒரு சிறிய சட்டையை தைத்து எடுத்துக் கொண்டு வருவாள். 

சாமுவேல் வளர்ந்தான். ஆண்டவர் சாமுவேலின் மூலமாக பேசினார். அது எல்லாம் நிறைவேறினது. அதனால் இஸ்ரவேல் மக்கள் சாமுவேல் ஒரு தீர்க்கதரிசி என்று அறிந்து கொண்டார்கள். பின்நாட்களிலே அவன் இஸ்ரவேல் தேசத்தில் ஒரு பெரிய தீர்க்கதரிசியாய் தேவனால் பயன்படுத்தப்பட்டான்.

Moody Publishers / FreeBibleimages.org.

வேதபகுதி: 1 சாமுவேல் 1

மனப்பாட வசனம்: இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். (யோவான் 16:24)

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

இதற்கு முந்தைய பாடத்தைப் பெற்றுக் கொள்ள இந்த லின்க் ஐ கிளிக் செய்யுங்கள் (மிக-இளநிலை பாடம் - 13, சிம்சோன்: தேவனுக்கென்று நசரேயன்)

இதற்கு அடுத்த பாடத்தைப் பெற்றுக் கொள்ள இந்த லின்க்-ஐ கிளிக் செய்யவும், மிக-இளநிலை பாடம் - 15, எபெனேசர்

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்

1.    எல்க்கானா வாழ்ந்த ஊரின் பெயர் என்ன?   ………………………………………

2.    எல்க்கானா யாருக்கு இரண்டு மடங்கு பங்கு கொடுத்தான்?  

………………………………………

3.    ஆசரிப்புக்கூடார வாசலிலே அமர்ந்திருந்தது யார்? …………………………

4.    அன்னாள் தன் மகனுக்கு சாமுவேல் என்று ஏன் பெயரிட்டாள்? ………………………………………

5.    சாமுவேல் யாரால் வளர்க்கப்பட்டான்? …………………………

சரியா தவறா

1.     எல்க்கானா லேவி கோத்திரத்தைச் சார்ந்தவன்.

       ( சரி / தவறு )

2.        பெனினாளுக்கு பிள்ளைகள் இல்லை ( சரி / தவறு )

3.        ஏலி அன்னாள் குடித்திருப்பதாக நினைத்தான் ( சரி / தவறு )

4.       அன்னாள் தன்னுடைய பொருத்தனையை மறந்து விட்டாள். 

        (சரி / தவறு )

5.       அன்னாள் எல்லா வருடமும் சாமுவேலுக்கு ஒரு சட்டை கொண்டுவருவாள். ( சரி / தவறு ) 

 


No comments:

Post a Comment

திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...