மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)
வயது: 8 - 9 வயது
வகுப்பு: III & IV
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for
free distribution among Sunday School children.
No part of this document can be
modified, sold or used for any commercial purpose.
Click this link to visit the English Sunday School Lessons Blog
பாடம் – 15
எபெனேசர்
முந்தின பாடத்தில் இஸ்ரவேல்
தேசத்தின் கடைசி நியாயாதிபதியான சாமுவேலின் பிறப்பைப் பற்றி பார்த்தோம். சாமுவேல் வளர்ந்து
வரும்போது ஏலி இஸ்ரவேல் தேசத்தை நியாயம் விசாரித்து வந்தார். ஒருமுறை ஏலி நியாயாதிபதியாய்
இருந்தபோது, பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் தேசத்திற்கு எதிராக யுத்தம் செய்து அநேகரைக் கொன்றுபோட்டார்கள்.
இஸ்ரவேலின் தலைவர்கள் மிகவும் துக்கமடைந்து, பெலிஸ்தியரை எப்படியாவது ஜெயிக்க வேண்டும்
என்று எண்ணினார்கள். ஆனால் பெலிஸ்தியரின் போர்படை பலம் வாய்ந்ததாக இருந்தது.
இஸ்ரவேல் மக்கள் தேவனை தொழுது
கொள்ளுவதற்காக சென்ற ஆசரிப்புக் கூடாரத்தின் உட்புறமாக அமைந்திருந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில்
புனிதமான உடன்படிக்கைப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து
கானான் தேசத்திற்கு பிரயாணம் செய்த போது உடன்படிக்கைப்பெட்டியை சுமந்து சென்ற இடங்களிலெல்லாம்
அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. ஆகவே இஸ்ரவேல் தேசத்து தலைவர்கள் பெலிஸ்தியருக்கு எதிராக
யுத்தம் செய்த இடத்திற்கு உடன்படிக்கைப் பெட்டியை கொண்டுபோக
வேண்டும் என்று எண்ணினார்கள். (உடன்படிக்கைப் பெட்டியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, பாடம் – 11, உடன்படிக்கைப் பெட்டி வாசிக்கவும்).
ஏலி மிகவும் வயது சென்றவராயிருந்தார்.
அவருடைய இரு மகன்களாகிய ஓப்னியும் பினெகாசும் ஆசரிப்புக்கூடாரத்தை கவனித்து வந்தார்கள்.
அவர்கள் கர்த்தருக்குப் பயப்படாதவர்கள். அவர்கள் தேவனையும், தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு
கொடுத்த கட்டளைகளையும் அறியாதவர்கள். ஆகவே அவர்கள் இஸ்ரவேல் தலைவர்களின் விருப்பப்படி
உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் செல்லுவதற்கு விட்டுவிட்டார்கள்.
உடன்படிக்கைப் பெட்டி யுத்தகளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதை தேவன் விரும்பவில்லை.
உடன்படிக்கைப் பெட்டி பரிசுத்தமான தேவனுடைய பிரசன்னத்தை வெளிப்படுத்தினபடியால் அது
ஆசரிப்புக்கூடாரத்தின் மகா பரிசுத்தஸ்தலத்திலேயே வைக்கப்பட வேண்டும். அதனால் இஸ்ரவேல்
மக்களுக்கு அந்த யுத்தம் தோல்வியிலே முடிந்தது.
பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலரைத்
தோற்கடித்தது மட்டுமல்லாமல், யுத்தகளத்திற்கு கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியையும்
கைப்பற்றினார்கள். அவர்கள் வெற்றியைக் கொண்டாடி, உடன்படிக்கைப்
பெட்டியை, தாங்கள் வணங்கி வந்த தாகோன் என்ற தெய்வத்தின் கோவிலுக்குள் கொண்டுபோய்
வைத்தார்கள். உடன்படிக்கைப் பெட்டியை அங்கு வைத்தது முதல் அங்கு பல வித்தியாசமான சம்பவங்கள்
நிகழ ஆரம்பித்தது. உடன்படிக்கைப் பெட்டிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தாகோனின் சிலை
கீழே விழுந்து உடைந்தது. அதன்பிறகு பெலிஸ்தியர்கள் கொடூரமான நோயினால் பாதிக்கப்பட்டார்கள்.
உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவந்ததினால் தான் தங்களுக்கு இவைகள் சம்பவிக்கின்றன என்று
அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆகவே உடன்படிக்கைப் பெட்டியை ஒரு மாட்டுவண்டியில் வைத்து,
குற்றநிவாரணமாக காணிக்கைப் பொருட்களையும் அதில் ஏற்றி அனுப்பினார்கள்.
உடன்படிக்கைப்பெட்டி இஸ்ரவேல்
தேசத்தின் பட்டணங்களில் ஒன்றான பெத்ஷிமேசுக்கு வந்து சேர்ந்தது. பெத்ஷிமேஸ் ஆசாரியர்களுக்கு
கொடுக்கப்பட்ட பட்டணமாகும் (யோசுவா 21:16). அதன்பின்னர் அங்கிருந்து கிரியாத்யாரீம்
என்கிற ஒரு பட்டணத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அபினதாப் என்கிற மனிதனின் வீட்டிலே
வைக்கப்பட்டிருந்தது. அபினதாப் ஒரு ஆசாரியக் குடும்பத்தையோ, லேவியக் குடும்பத்தையோ
சார்ந்தவனாக இருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். உடன்படிக்கைப் பெட்டியைப்
பார்த்துக்கொள்ளுவதற்காக அபினதாபின் மகனான எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். உடன்படிக்கைப்
பெட்டி கீரியாத்யாரீமிலே இருபது வருடங்கள் இருந்தது.
உடன்படிக்கைப் பெட்டியை ஒரு
இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லுவதற்கு நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டிருந்த
விதிமுறைகள் இருந்தன. உடன்படிக்கைப் பெட்டியும் மற்ற பரிசுத்தப் பொருட்களும் தோளில்
சுமந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதை லேவி கோத்திரத்தைச் சேர்ந்த கோகாத் குடும்பத்தினர்
மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். பரிசுத்த பொருட்களை சுமந்து செல்லும்படியாக ஆசாரியர்கள்
அவைகளை மூடி ஆயத்தம் செய்ய வேண்டும். லேவியர்களான கோகாத்தியர்களுக்கு பரிசுத்தபொருட்களை
உபயோகப்படுத்துவதற்கோ, மூடப்படும்பொழுது அவைகளை பார்ப்பதற்கோ அனுமதியில்லை, அதை சுமந்து
செல்லுவது மட்டும் தான் அவர்களுடைய வேலை (எண்ணாகமம் 4:2 – 20). ஏனென்றால் ஆசரிப்புக்
கூடாரத்திலிருந்த பொருட்களை பரிசுத்தப்படுத்துவது, பரிசுத்தக்குலைச்சல் ஏற்பட்டால்
அதற்காக தண்டனையை ஏற்பது ஆகியவை ஆசாரியர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருந்தது (லேவியராகமம்
16:32 – 34). பரிசுத்தக்குலைச்சல் என்றால் தேவன் எதை எவ்விதமாக உபயோகிக்க வேண்டும்,
அல்லது கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாரோ, அதை அவ்வண்ணமே கடைபிடிக்காமல்
மீறி மனிதனுடைய விருப்பத்தின்படி பயன்படுத்தப்படுவது. அவ்வாறு செய்யப்படும்பொழுது,
தேவனுடைய வார்த்தைகள் மீறப்படுவதால், பரிசுத்தக்குலைச்சல் ஏற்படுகிறது.
இவ்வாறு ஏதோ ஓரு காரணத்தினால்
தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி, சீலோவிலிருந்த ஆசரிப்புக் கூடாரத்திற்கு கொண்டுவரப்படாமல்,
கீரியாத்யாரீமிலே இருபது வருடங்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நாட்களில் பிரதான ஆசாரியனாகிய
ஏலியும், அவருடைய இருமகன்களான ஓப்னியும், பினெகாசும் இறந்து போய் விட்டார்கள். சாமுவேல்
இஸ்ரவேலை நியாயம் விசாரிக்கத் தொடங்கினார். இஸ்ரவேல் ஜனங்கள் ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து
உடன்படிக்கைப் பெட்டி எடுக்கப்பட்டதை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தார்கள். உடன்படிக்கைப்
பெட்டி, தேவன் இஸ்ரவேல் ஜனங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுபடுத்தும் ஒரு இன்றியமையாத
புனிதமான கருவியாக இஸ்ரவேல் ஜனங்களால் கருதப்பட்டது. ஆகவே உடன்படிக்கைப் பெட்டி ஆசரிப்புக்கூடாரத்தில்
இல்லாமல் இருந்தது தேவனோடு அவர்களுக்கு இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு, தேவனுடைய
உதவி அற்றுப்போனது போன்ற உணர்வைக் கொடுத்தது. அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களிடம்,
அவர்கள் தேவனுடைய வாக்கை மீறி செய்கின்ற பாவங்களை சுட்டிக்காட்டினார். அவர்கள் வழிபட்டு
வந்த அஸ்தரோத் மற்றும் பிற தெய்வங்களை அகற்றும்படி கூறினார். இஸ்ரவேல் ஜனங்கள் அவருடைய
வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்தார்கள்.
அப்பொழுது சாமுவேல், இஸ்ரவேல்
ஜனங்களுக்காக தான் கர்த்தரிடம் மன்றாடும்படி, அனைவரும் மிஸ்பா என்ற இடத்திலே கூடி வர
வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இஸ்ரவேல் ஜனங்களும் அதுபோலவே மிஸ்பாவிலே ஒன்று
கூடி, உணவு உண்ணாமல் உபவாசம் இருந்து, பாவ அறிக்கை செய்தார்கள். பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல்
ஜனங்கள் எல்லாரும் ஒன்றாக மிஸ்பாவிலே கூடியிருப்பதை கேள்விப்பட்டார்கள். அப்பொழுது
அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக போர் தொடுப்பதற்கு ஆயத்தமானார்கள். இஸ்ரவேல் ஜனங்கள்
சாமுவேலிடம் வந்து, பெலிஸ்தியரிடமிருந்து தேவன் தங்களை பாதுகாக்கும்படி தங்களுக்காக
தேவனிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
சாமுவேல் ஒரு ஆட்டுக்குட்டியை எடுத்து, அதை சர்வாங்கதகனபலியாக பலியிட்டு இஸ்ரவேல் ஜனங்களுக்காக தேவனிடம் மன்றாடினார். உடனே தேவன் அவர்களுக்கு பதில் கொடுத்தார். பெலிஸ்தியர்கள் யுத்தம் செய்ய நெருங்கும்பொழுது பலத்த இடிமுழக்க சத்தங்களை தேவன் கேட்கப்பண்ணினதினால், அவர்கள் கலக்கமடைந்து சிதறிப்போனார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அவர்களை எளிதாக தோற்கடித்தார்கள்.
அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, அதை மிஸ்பாவிற்கும், சேண் என்ற இடத்திற்கும் நடுவாக நிறுத்தி, இதுவரைக்கும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் என்று சொல்லி அதற்கு “எபெனேசர்" என்று பெயரிட்டார். பின்நாட்களிலே இஸ்ரவேல் ஜனங்களுக்கு யுத்தங்களோ, ஆபத்துக்களோ நேரிட்டால், அதுவரை அவர்களுக்கு உதவி செய்து, பாதுகாத்து, வழிநடத்தின தேவன் இனிமேலும் நடத்துவார் என்று தேவனுடைய உடன்படிக்கையை ஞாபகப்படுத்தும்படியாக “எபெனேசர்” என்ற அடையாளக்கல்லை சாமுவேல் அங்கு நிறுத்தி வைத்தார்.
பல வருடங்கள் கழித்து தாவீது ராஜா தேவனுடைய பெட்டியை கொண்டுவந்து அதை எருசலேமிலே தான்
அதற்கென்று விசேஷமாக செய்து வைத்திருந்த கூடாரத்திற்குள் கொண்டு வந்து வைத்தார் (2
சாமுவேல் 6:17; 1 நாளாகமம் 16:1). பின்னர் சாலொமோன் ராஜா தேவனுக்கென்று மிகவும் பிரமாண்டமான
ஒரு ஆலயத்தை எருசலேமிலே கட்டினார். அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் எதிர்பார்த்து காத்திருந்தபடியே
தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி கூடாரத்திலிருந்து மாற்றப்பட்டு தேவாலயத்தின் மகா பரிசுத்த
ஸ்தலத்திலே வைக்கப்பட்டது (1 இராஜாக்கள் 8:1-8).
ஆசிரியர் குறிப்பு
சீலோவிலே ஆசாரியனாகிய ஏலி பணிவிடை
செய்த ஆசரிப்புக்கூடாரம், உடன்படிக்கைப் பெட்டி எடுத்துச் செல்லப்பட்டபின், எண்ணமற்றுபோய்
அழிக்கப்பட்டுப்போயிருக்கலாமென்று வேதாகம தீர்க்கதரிசனங்களின் அடிப்படையில் (எரேமியா
7:12 – 15; 26:9) வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது. அதனால் தாவீது ராஜா தேவனுடைய
பெட்டியை கொண்டுவந்து எருசலேமிலே வைப்பதற்காக விசேஷமாக இந்த ஆசரிப்புக்கூடாரத்தை செய்திருக்கலாம்
(2 சாமுவேல் 6:17; 1 நாளாகமம் 16:1).
வேதபகுதி:
1
சாமுவேல் 6, 7:1 - 13
மனப்பாட
வசனம்: நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய
நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக. (சங்கீதம்
20:5)
பாடப்
பயிற்சிகள்
கேள்வி
பதில்
1. சாமுவேல் வளர்ந்து வரும்போது இஸ்ரவேலை நியாயம் விசாரித்தது யார்? ………………………………………
2. உடன்படிக்கைப் பெட்டி கீரியாத்யாரீமிலே யார் வீட்டிலே வைக்கப்பட்டது?
………………………………………
3. சாமுவேல்
எதை சர்வாங்கதகனபலியாக செலுத்தினார்? …………………………
4. இஸ்ரவேலர்கள் தேவனிடம் விண்ணப்பம் செய்யும்படி எங்கு கூடினார்கள்? ………………………………………
5. எபெனேசர் என்ற பெயரின் அர்த்தம் என்ன? …………………………
சரியான
பதிலைத் தெரிந்தெடுக்கவும்
1.
இஸ்ரவேலின் கடைசி நியாயதிபதி.
( சாமுவேல் / சவுல் )
2. ஓப்னியும், பினெகாசும் உடன்படிக்கைப் பெட்டியை
(வீட்டிற்கு / யுத்தகளத்திற்கு ) கொண்டுசென்றார்கள்.
3. பெலிஸ்தியர்கள் உடன்படிக்கைப்
பெட்டியை ( தாகோன் / பாகால்)
அருகில் வைத்தார்கள்.
4. பெலிஸ்தர்
உடன்படிக்கைப் பெட்டியை (
குற்றநிவாரண / ஸ்தோத்திர ) பலியோடு
சேர்த்து அனுப்பினார்கள்.
5. சாமுவேல்,
இதுவரைக்கும் ( கர்த்தர்
/ ஏலி) தங்களுக்கு உதவி செய்தார்
என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் நினைவு கூற வேண்டும் என்று விரும்பினார்.
No comments:
Post a Comment