Monday, October 31, 2022

கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் (Samuel Hears the Voice of God), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 15

ஆரம்பநிலை வகுப்பு (PRIMARY)

வயது: 6 - 7 வயது

வகுப்பு: I & II

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

பாடம் – 15

கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்

இந்த பாடத்தில் இஸ்ரவேல் தேசத்தின் கடைசி நியாயாதிபதியாகிய சாமுவேல் சிறு வயதாயிருந்தபொழுது அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம். சாமுவேல் நியாயாதிபதியாக மட்டுமல்லாமல், தீர்க்கதரிசியாகவும் இருந்தார். சாமுவேலுடைய தாயாராகிய அன்னாளுக்கு பல வருடங்களாக பிள்ளைகள் இல்லாமல் இருந்தது. ஒரு முறை அன்னாளுடைய குடும்பம், தேவனை தொழுது கொள்ளுவதற்காக சீலோ என்ற இடத்தில் இருந்த ஆசரிப்புக் கூடாரத்திற்கு சென்றிருந்தார்கள். (ஆசரிப்புக் கூடாரம் என்கிற விசேஷமான கூடாரத்தைப் பற்றி நாம் ஏற்கெனவே இதற்கு முந்தைய பாடங்களில் படித்திருக்கிறோம்). அப்பொழுது அன்னாள் தேவனிடம் ஒரு சிறப்பான விண்ணப்பத்தை ஏறெடுத்தாள். அது என்னவென்றால், தேவன் தனக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால் அதை தேவனுடைய பணிக்கென்று அர்ப்பணித்து விடுவதாகக் கூறினாள். 

அன்னாள் ஜெபித்ததுபோலவே தேவன் அவளுக்கு ஒரு மகனைக் கொடுத்தார். அன்னாள் அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள். சாமுவேல் சற்று வளர்ந்தவுடன், அன்னாள் தான் தேவனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படியாக சிறுவன் சாமுவேலை, சீலோவிலே ஆசாரியனாயிருந்த ஏலி என்பவரிடம் அழைத்துக் கொண்டு வந்தாள். 

அதன்பின், சிறுவன் சாமுவேல் ஆசாரியன் ஏலியால் வளர்க்கப்பட்டான். ஆனால் அவனுடைய தாயார் அவனை மறக்கவில்லை. வருடந்தோறும் ஆசரிப்புக்கூடாரத்திற்கு பலி செலுத்த வரும்பொழுதெல்லாம் சாமுவேலுக்கு ஒரு சிறிய சட்டையை தைத்து எடுத்துக் கொண்டு வந்தார்கள்.

ஆசாரியனாகிய ஏலிக்கு மிகவும் வயதாகிவிட்டது. சாமுவேல், ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைகளை கவனிப்பதற்கு ஏலிக்கு உதவி செய்து கொண்டு வந்தான். சாமுவேல் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்யும்பொழுதெல்லாம் சணல்நூல் ஏபோத்தை அணிந்து கொண்டிருந்தான். ஏபோத் என்பது ஆசரிப்புக் கூடாரத்தில் ஊழியம் செய்பவர்கள் அணியும் ஒரு பரிசுத்தமான அல்லது புனிதமான உடையாகும். பிரதான ஆசாரியர்கள் அணியும் ஏபோத், பல வண்ணங்கள் கொண்ட மற்றும் விலைமிகுந்த நூற்களினால் செய்யப்பட்ட அலங்காரமான வேலைப்பாடுகள் கொண்டதாகும். சாமுவேல், தாவீது ராஜா ஆகியோர் சணல் நாரினால் நெய்யப்பட்ட சணல்நூல் ஏபோத்தை அணிந்திருந்ததாக வேதாகமத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரவேல் தேசத்தின் வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் தீர்க்கதரிசிகளை எழுப்பி அவர்கள் மூலமாய் பேசுவதுண்டு. ஆனால் சாமுவேல் பிறந்த சமயத்தில் தேவன் அவ்வாறு யாரோடும் பேசவில்லை. ஒரு நாள் சாமுவேல் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிகளை முடித்து உறங்கச் சென்றான். அவன் தூங்கிக்கொண்டிருந்தபொழுது யாரோ தன்னுடைய பெயரை அழைப்பதைக் கேட்டான். அவன் ஆசாயனாகிய ஏலி தன்னை அழைப்பதாக நினைத்து, அவரிடம் சென்று, “இதோ இருக்கிறேன், என்னைக் கூப்பிட்டீரே” என்றான். அப்பொழுது ஏலி சாமுவேலிடம், தான் அவனை அழைக்கவில்லை என்றும், திரும்பப்போய் உறங்குமாறும் கூறினார். சிறிது நேரம் கழித்து மறுபடியும் யாரோ தன்னுடைய பெயரை அழைப்பதைக் கேட்டான். மறுபடியும் அவன் ஏலியிடம் சென்றான். ஆனால் ஏலி சாமுவேலை அழைக்கவில்லை. அதனால் திரும்பிச் சென்று உறங்குமாறு கூறினார்.

இதைப்போன்றே இன்னொரு விசையும் நடந்தது. அப்பொழுது சாமுவேல் ஏலியிடம் ஓடிச்சென்று, என்னைக் கூப்பிட்டீரா என்று கேட்டபொழுது, ஆசாரியனாகிய ஏலிக்கு சிறுவன் சாமுவேலை கர்த்தர் கூப்பிடுகிறார் என்று புரிந்து விட்டது. அதனால் ஆசாரியனாகிய ஏலி சாமுவேலிடம், நீ போய் படுத்துக் கொள், இன்னொருமுறை உன்னுடைய பெயரை சொல்லி கூப்பிடுவதைக் கேட்டால், “கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்” என்று சொல்லு என்று கூறினான். அதுபோலவே சாமுவேல் மறுபடியும் சென்று படுத்துக் கொண்டான். அப்பொழுது கர்த்தர் அங்கு வந்து நின்று முன்போலவே “சாமுவேலே, சாமுவேலே” என்று கூப்பிட்டார். உடனே சாமுவேல், “கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்” என்று கூறினான். அப்பொழுது கர்த்தர் சாமுவேலிடம் பேசத் தொடங்கினார்.

கர்த்தர் சாமுவேலிடம் கூறின செய்தி மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏலியின் இரு மகன்கள் ஆசரிப்புக்கூடாரத்தில் ஆசாரியர்களாய் இருந்தார்கள். ஆனால் அவர்கள் தேவனை மதிக்கவில்லை. அதனால் தேவன் அவர்களைத் தண்டிக்கப்போகிறார். அதுமட்டுமல்லாமல் அவனுடைய குடும்பத்தில் இனி யாரும் ஆசாரிய ஊழியம் செய்யப்போவதில்லை. சாமுவேலுக்கு இதைக் கேட்டபொழுது, துக்கமாக இருந்தது. 

மறுநாள் ஏலி சாமுவேலை அழைத்து, கர்த்தர் அவனுக்கு அறிவித்த செய்தி எல்லாவற்றையும் தன்னிடம் கூறுமாறு கேட்டுக்கொண்டான். சாமுவேலும் எல்லாவற்றையும் ஏலியிடம் கூறினான். ஏலிக்கு ஆண்டவர் கூறின எதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அவனால் தன்னுடைய மகன்களை சரிப்படுத்தவும் முடியவில்லை. 

சீக்கிரமே ஆண்டவர் சாமுவேல் மூலமாய் கூறின எல்லாம் ஏலியின் குடும்பத்தில் நிறைவேறியது. சாமுவேல் வளர்ந்தான். ஆண்டவர் அவனோடு அடிக்கடி பேசினார். சாமுவேல் தேவனால் எழுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்று இஸ்ரவேல் மக்களுக்கு எல்லாம் உறுதியானது.

வேதபகுதி: 1 சாமுவேல் 3:1-11

மனப்பாட வசனம்: இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். (ஏசாயா 43:1) 

இதற்கு முந்தின பாடத்தைப் பெற்றுக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும் (ஆரம்பநிலை பாடம் - 14, முகங்குப்புற விழுந்த தாகோன்) 

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்:

1.    எல்லா வருடமும் அன்னாள் சாமுவேலுக்கு என்ன கொண்டு வந்தார்கள்?  ……………………………………..

2.    சாமுவேல் அணிந்திருந்த ஏபோத் எதினால் செய்யப்பட்டது?

   ……………………………………..

3.    தன்னைக் கூப்பிடுகிற சத்தத்தைக் கேட்டு சாமுவேல் யாரிடம்      சென்றான்?

……………………………….

4.    கடைசியாக ஆண்டவர் சாமுவேலைக் கூப்பிட்டபோது அவன் கூறினது என்ன? ……………………………..

5.    தேவன் சாமுவேலிடம் கூறின செய்தி யார் குடும்பத்தைப் பற்றியது?

…………………………………………… 

சரியா / தவறா:

1.    அன்னாள் சாமுவேலை தேவனுக்கென்று அர்ப்பணித்தாள். ( சரி / தவறு )  

2.    அரண்மனையில் பணி செய்கிற எல்லாரும் ஏபோத்தை அணிந்திருப்பார்கள். ( சரி / தவறு )

3.    சாமுவேல் தூங்கும்பொழுது ஏலியை யாரோ கூப்பிடுவதைக் கேட்டான். ( சரி / தவறு )

4.    ஆண்டவர் ஏலியின் பிள்ளைகளின் மேல் கோபமாயிருந்தார். (சரி / தவறு ) 

5.    ஆண்டவர் சாமுவேலோடு கூறின யாவும் ஏலியின் குடும்பத்தில் சம்பவித்தது. ( சரி / தவறு ) 

 

 

 

No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...