Tuesday, October 25, 2022

ரூத் (Ruth Helps Naomi), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 15

பாலர் வகுப்பு (KINDER)

வயது – 4 & 5

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

பாடம் – 15

ரூத்

எலிமெலேக்கும், நகோமியும் இஸ்ரவேல் தேசத்திலுள்ள பெத்லெகேம் ஊரிலே வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு மக்லோன், கிலியோன் என்று இரு மகன்கள் இருந்தார்கள். ஒருமுறை பெத்லெகேமிலே பஞ்சம் உண்டாயிருந்தது. பஞ்சம் என்றால் உண்ணுவதற்கு உணவு கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுவது தான்.


நமக்கு உணவு எவ்வாறு கிடைக்கின்றது என்று தெரியுமா?

நாம் உண்ணும் உணவு வகைகளை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று சைவம், இன்னொன்று புலால் அல்லது அசைவம். சைவ உணவு மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கும் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவைகளிலிருந்து கிடைக்கின்றது. அசைவ உணவு மிருகங்களிலிருந்து கிடைக்கும் முட்டை, இறைச்சி போன்றது. ஆகவே மரம், செடி, கொடிகள் மற்றும் உணவு பயிர்கள் நல்ல விதத்தில் பயரிடப்பட்டு வளருவது நமக்கு உணவு கிடைப்பதற்கு முக்கியமான ஒன்றாகும்.


உணவு பயிர்கள் நன்கு செழிப்பாக வளருவதற்கு மழை மிகவும் அத்தியாவசியமானது. ஆகவே ஒரு தேசத்தில் மழை நீண்டகாலம் பெய்யாவிட்டால், உணவுபயிர்கள் சரியாக வளரமுடியாமல் காய்ந்து உணவு பற்றாக்குறை ஏற்படும். இப்படி தான் பெத்லெகேமிலும் பஞ்சம் ஏற்பட்டது. அதனால் எலிமெலேக்கும், நகோமியும் அவர்கள் இரண்டு பிள்ளைகளோடுங்கூட பஞ்சத்திலிருந்து தப்பிக்கும்படியாக மோவாப் என்கிற இன்னொரு தேசத்திற்கு புறப்பட்டு சென்றார்கள்.

அங்கு அவர்கள் தங்கியிருக்கும்பொழுது எலிமெலேக்கு இறந்து போனார். அதன்பின்னர் மக்லோனும், கிலியோனும் மோவாப் தேசத்தை சேர்ந்த ஓர்பாள், ரூத் என்கிற பெண்களை திருமணம் செய்து கொண்டார்கள். கொஞ்சம் வருடங்கள் கழித்து மக்லோனும், கிலியோனும் கூட இறந்து போனார்கள்.

ஒருநாள் நகோமி, தன்னுடைய சொந்த ஊராகிய பெத்லெகேமிலே பஞ்சம் முடிவிற்கு வந்து, உணவுப்பொருட்கள் தாராளமாகக் கிடைக்கிறதென்றும், மக்கள் நல்லமுறையில் வாழ்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டாள். அதனால் மோவாப் தேசத்தைவிட்டு தன்னுடைய சொந்த ஊராகிய பெத்லெகேமிற்கு திரும்பி செல்லுவதென்று முடிவெடுத்தாள். ஓர்பாள், ரூத் ஆகிய இருவரும் மோவாப் தேசத்தை சேர்ந்தவர்கள், ஆகவே அவர்களுக்கு பெத்லெகேம் தேசத்தின் பழக்கவழக்கங்கள் வித்தியாசமானதாய் இருக்கும். மேலும் மோவாப் தேசத்திலே அவர்களுடைய உறவினர்கள் இருப்பதால் இவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளுவார்கள் என்றும் நகோமி எண்ணினாள்.

நகோமி, ஓர்பாள், ரூத் ஆகிய இருவரையும் அழைத்து, அவர்களுடைய பெற்றோரிடத்திற்கு திரும்பி செல்லுமாறு அறிவுரை கூறினாள். ஓர்பாள் சிறிது நேரம் யோசித்து தன்னுடைய மாமியார் கூறினபடியே தன்னுடைய உறவினர்களிடம் திரும்பி சென்று விட்டாள். 

ரூத்திற்கோ தன்னுடைய மாமியாரை தனியே விட மனமில்லை. நகோமி தனியாக சென்றால் தினமும் பல வேலைகளை செய்து மிகவும் கஷ்டப்பட வேண்டியதிருக்கும். தான் தன் மாமியாரோடு கூட சென்றால் அவளுக்கு உதவி செய்யமுடியும் என்று எண்ணினாள். ஆகவே அவளும் நகோமியோடு சேர்ந்து பெத்லெகேமிற்கு சென்றாள். ரூத்தும், நகோமியும் பெத்லெகேமை சென்றடைந்தார்கள். அங்கு அவர்கள் உணவு வாங்குவதற்காக ஏதாவது வேலை கிடைக்குமா என்று ரூத் தேடினாள். அப்பொழுது பெத்லெகேமிலே அறுவடை காலம் நடந்து கொண்டிருந்தது. பயிர்கள் வளர்ந்து, விளையும்பொழுது, அதை அறுவடை செய்வார்கள். அப்படி அறுவடை செய்யும்பொழுது சில தானியங்கள் தரையிலே விழும். அந்த தானியங்களை ஏழைமக்கள் எடுத்துக் கொள்ளும்படியாக விட்டுவிடுவார்கள். ஆகவே ரூத் அங்கு உள்ள ஒரு வயலிலே தானியங்களை பொறுக்கி எடுத்து தங்களுடைய உணவிற்காக பயன்படுத்தும்படியாக சென்றாள்.

ரூத் தானியங்களை பொறுக்கின வயல் நிலம், அவள் அறியாமலேயே அவளுடைய மாமனாரான எலிமெலேக்கின் உறவினர் ஒருவருடையதாக இருந்தது. அவருடைய பெயர் போவாஸ். போவாஸ் ரூத்தின் நல்லகுணங்களைப் பற்றி கேள்விப்பட்டதால் அவளை அன்பாக நடத்தினார். அதுமட்டுமின்றி அவளை நன்றாக நடத்தும்படியாக தன்னுடைய வேலைக்காரர்களுக்கும் கட்டளை கொடுத்தார். சிறிது காலம் கழித்து போவாஸ் ரூத்தை திருமணம் செய்தார். ரூத்தும், போவாஸும் மற்றவகளிடம் அன்பு செலுத்தி, உதவிகளை செய்து, நற்குணத்தை வெளிப்படுத்தினதினால் தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

வேதபகுதி: ரூத் புஸ்தகம்

மனப்பாட வசனம்: எபேசியர் 4:32

 

 

No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...