இளநிலை வகுப்பு (JUNIOR)
வயது: 10 - 11 வயது
வகுப்பு: V &
VI
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission
is granted only for free distribution among Sunday School children.
No part of
this document can be modified, sold or used for any commercial purpose.
Click this link to visit the English Sunday School Lessons Blog
பாடம் – 15
யோனத்தானும்
தாவீதும்
இதற்கு
முந்தின பாடத்திலே நியாயாதிபதிகள் இஸ்ரவேல் தேசத்தை ஆளுகை செய்ததைப் பற்றி
பார்த்தோம். சாமுவேல் தான் இஸ்ரவேல் தேசத்தின் கடைசி நியாயாதிபதி. அதன்பின்
ராஜாக்கள் இஸ்ரவேல் தேசத்தை ஆளுகை செய்யத் தொடங்கினார்கள். இஸ்ரவேலின்
முதல் ராஜா சவுல். அவனுடைய மகன் யோனத்தான். இந்தப் பாடத்திலே யோனத்தானைப்
பற்றியும், அவனுடைய மிகவும் சிறந்த நண்பனான தாவீதைப் பற்றியும் கற்றுக் கொள்ளப்
போகிறோம். யோனத்தான் இஸ்ரவேல் தேசத்தின் முதல் ராஜாவின் மகனாகவும், பட்டத்து
இளவரசனாகவும் இருந்தான். ஒரு ராஜாவின் காலத்திற்குப்பின் பட்டத்து இளவரசன் தான்
ராஜாவாக முடிசூட்டப்படுவான். ஆகவே யோனத்தான் இஸ்ரவேல் தேசத்திலே மிகவும்
முக்கியமான ஓரு நபராக இருந்தான்.
சவுல் ராஜா
இஸ்ரவேல் தேசத்தை ஆளுகை செய்து கொண்டிருந்தபொழுது, ஒரு கொடூர நோயினால்
பாதிக்கப்பட்டார். ஒரு அசுத்த ஆவியினால் தாக்கப்பட்டு எப்பொழுதும் பதற்றத்துடனும்,
மனக்குழப்பத்துடனும் காணப்பட்டார். ஆகவே அவருடைய மனநிலையை சீர்படுத்துவதற்காக
நன்றாக இசைக்கருவிகளை வாசிக்கக்கூடிய ஒரு நபரை சவுல் ராஜாவின் அமைச்சர்கள்
தேடினார்கள். அப்பொழுது அவர்கள் திறமையாக சுரமண்டலம் வாசிக்கக்கூடிய
ஆடுமேய்ப்பவனாகிய ஒரு சிறுவனைக் கண்டுபிடித்தார்கள். அவன் பெயர் தாவீது. தாவீது சுரமண்டலம்
வாசித்தபொழுது சவுல் குணமாக்கப்பட்டு அவருடைய மனநிலை சீரானது. எபிரெய மொழியில்
சுரமண்டலம் என்பது “கின்னார் (கின்னரம்)” என்று அழைக்கப்பட்டது. பண்டைய காலங்களிலே
கின்னரம் ஆட்டுக்குடல்களையும், செம்மறியாட்டுக் கொம்புகளையும் கொண்டு
செய்யப்பட்டது.
பல வண்ண ஓட்டுத்துண்டுகளை இணைத்து செய்யப்படும் மொசெய்க் வேலைப்பாட்டில் தாவீது சுரமண்டலம் வாசிப்பது பொறிக்கப்பட்டுள்ளது, காசா பட்டணத்தில் உள்ள கிபி 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்த யூத தேவாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டது,
தாவீது,
ஈசாய் என்பவருடைய மகன். தாவீதிற்கு ஆறு அல்லது ஏழு சகோதரர்களும், இரண்டு
சகோதரிகளும் இருந்தார்கள் (1 சாமுவேல் 16:10; 1 நாளாகமம் 2:13 – 16). தாவீது
சிறுவயதிலிருந்தே ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தான். அவன் சிறுவனாக யூதேயாவின்
வனாந்தரங்களிலே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோதே பாடல்களை இயற்றி தேவனை புகழ்ந்து
பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவன் இயற்றின பாடல்களை பரிசுத்த
வேதாகமத்திலுள்ள சங்கீத புஸ்தகத்திலே வாசிக்க முடியும். ஆண்டவரும் இஸ்ரவேல்
தேசத்தின் வரலாற்றிலே நிறைவேற்றவேண்டிய மிகவும் பெரிய ஒரு வேலைக்காக தாவீதை தெரிந்தெடுத்திருந்தார்.
ஒருமுறை
சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதின் வீட்டிற்கு வந்தார். இஸ்ரவேல் தேசத்தை ஆண்டு
கொண்டிருந்த சவுல் ராஜா தொடர்ந்து ஆண்டவரின் வார்த்தைகளை மதிக்காமல்
கீழ்ப்படியாமல் இருந்து வந்ததால் தேவன் வேறு ஒருவரை ராஜாவாக அபிஷேகம் பண்ண
விரும்பினார். தேவன் தாவீதை இஸ்ரவேல் தேசத்தின் அடுத்த ராஜாவாக
தெரிந்தெடுத்திருந்தார். அதற்காகத்தான் தீர்க்கதரிசி சாமுவேலை அங்கு
அனுப்பியிருந்தார். சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதின் தலையிலே எண்ணெய் ஊற்றி அவனை
ராஜாவாக அபிஷேகித்தார். சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்தது,
மிகவும் இரகசியமாக அவன் குடும்பத்தார்முன் மாத்திரமே செய்யப்பட்டதால் மற்ற
இஸ்ரவேலர்கள் அதை அறியாதிருந்தார்கள். தாவீது இஸ்ரவேல் தேசத்தின் அடுத்த ராஜாவாக
தேவனால் அபிஷேகிக்கப்பட்டிருந்தாலும், அவன் தேசத்தின் பொறுப்பை எடுப்பதற்கு
இன்னும் பல வருடங்கள் இருந்தது. அதுவரைக்கும் அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தது
மட்டுமல்லாமல், இன்னும் பல வழிகளில் அவன் செய்யவேண்டிய அந்த மிகப்பெரிய வேலைக்காக
தேவனால் பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தான்.
ஒருமுறை
இஸ்ரவேல் தேச மக்களுக்கு அவர்களுடைய எதிரிகளிடமிருந்து பயமுறுத்தல் வந்தது.
ஒருமிகப் பெரிய இராட்சதன் இஸ்ரவேல் மக்களிடம் யாராவது ஒரு நபர் தனியாக வந்து, தன்னிடம்
சண்டையிட்டு, தன்னை தோற்கடிக்கும்படியாக சவால் விட்டான். அவனுடைய பெயர் கோலியாத். சவுல்
ராஜாவும், மற்ற படைவீரர்களும் அவனுடைய உருவத்தைப் பார்த்து பயந்து ஒளிந்து
கொண்டார்கள். ஆனால் தாவீதோ தேவன் தன்னுடன் இருப்பதால் அவனை எளிதாக மேற்கொள்ளலாம்
என்று எண்ணினான். அவன் நினைத்தபடியே தன் கையிலிருந்த கவணினாலும், ஒரே ஒரு
கூழாங்கல்லினாலும் கோலியாத் இராட்சதனை வீழ்த்தி இஸ்ரவேல் மக்களுக்கு வெற்றியைப்
பெற்று தந்தான். அப்பொழுது அவனை சவுல் ராஜாவிடத்திற்கு அழைத்து சென்றார்கள். அங்குவைத்து
தான் தாவீது முதல்முறையாக சவுல் ராஜாவின் மகனும், பட்டத்து இளவரசனுமாகிய யோனத்தானை
சந்தித்தான்.
யோனத்தான்
தாவீதை சந்தித்தபொழுது, தாவீதினுடைய ஆத்துமாவின் சிந்தனைகள், யூகங்கள்,
விருப்பங்கள் எல்லாம் தன்னுடையதைப் போன்றே இருப்பதை யோனத்தான் பார்த்து,
அன்றுமுதல் தாவீதின் மிகச்சிறந்த நண்பனாய் மாறினான். அதுமட்டுமல்லாமல் அவர்கள்
இருவரும் தங்களுக்குள்ளே ஒரு உடன்படிக்கையும் பண்ணிக்கொண்டார்கள். உடன்படிக்கை
என்றால் மிகவும் உறுதியாக செய்யப்படும் ஒரு வாக்குறுதி ஆகும். அந்த
உடன்படிக்கையின் அடையாளமாக யோனத்தான் தான் அணிந்திருந்த சால்வையைக் கழற்றி
அதையும், தன்னுடைய அங்கியையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன்
கச்சையையும் (Belt) தாவீதுக்குக் கொடுத்தான். அதன்மூலமாக தனக்குக் கொடுக்கப்பட்ட
ராஜமரியாதை தாவீதுக்கும் கிடைக்கும் என்று அவன் எண்ணியிருக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் யோனத்தான் தாவீதுக்குக் கொடுத்த அவனுடைய சால்வை பட்டத்து
இளவரசர்களாகும் ராஜகுமாரர்கள் அணியும் “மேய்ல் (me’il)” என்னும் விசேஷமான ஒரு
சால்வை. அதை தாவீதுக்குக் கொடுத்ததன்மூலம் தன்னுடைய ராஜபதவியை தாவீதுக்கு
விட்டுக்கொடுப்பதற்கும் அவன் ஆயத்தமாயிருந்தான். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய
தற்பாதுகாப்பிற்காக அவன் வைத்திருந்த தன்னுடைய ஆயதங்களையும் கூட தன் நண்பனுக்குக்
கொடுத்தான். தன்னுடைய சிறந்த நண்பன் மேல் அவன் வைத்திருந்த நம்பிக்கையையும்,
அவர்கள் இருவரில் யாருக்காவது ஆபத்து நேர்ந்தால், அவர்களை பாதுகாக்கும் கடமை
மற்றவருக்கு உண்டு என்று நினைவுபடுத்துவதாகவே இது அமைந்திருக்கும்.
தாவீது
கோலியாத்தை தோற்கடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அப்பொழுது அங்குள்ள
பெண்கள் ஆடல் பாடலோடு “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” என்று
பாடினார்கள். இதை சவுல் ராஜா கேட்டபொழுது அவனுக்கு தாவீதின் மேல் பொறாமை ஏற்பட்டது.
அதனால் தாவீதை எப்படியாவது கொன்று போட வேண்டும் என்ற எண்ணம் சவுல் ராஜாவிற்கு
உண்டானது. தாவீது சுரமண்டலத்தை வாசிக்கும்பொழுது தன்னுடைய
ஈட்டியை எறிந்து அவனைக் கொல்ல சவுல் ராஜா முயற்சித்தான். ஆனால் தாவீதைக்
கொல்லமுடியவில்லை. மேலும் தாவீதைப் பார்க்கும் இடத்தில் அவனைக் கொல்ல வேண்டும்
என்று தன்னுடைய மந்திரிகளுக்கு அவன் கட்டளையிட்டிருந்தான். சவுல் ராஜா கர்த்தருடைய
ஆவி தன்னை விட்டு நீங்கிவிட்டார் என்றும் அவர் தாவீதோடு கூட இருக்கிறார் என்றும்
அறிந்து அவன் இன்னும் அதிகமாய் அவனுக்குப் பயந்தான். ஆகவே தாவீதை கடினமான
யுத்தங்களுக்கு அனுப்பி அவனை எப்படியாவது கொன்று போட வேண்டும் என்று எண்ணினான்.
ஆனால் தேவன் தாவீதோடு இருந்ததினால், தாவீது கடினமான யுத்தங்களையும் எளிதாக
வென்றான். அதனால் இஸ்ரவேல் மக்கள் தாவீதை இன்னும் அதிகமாக மரியாதை செலுத்தி
கனப்படுத்தினார்கள். சவுல் ராஜா தாவீதை எவ்வளவு அதிகமாய் ஒடுக்க நினைத்தானோ அவ்வளவு
அதிகமாய் தாவீது பிரபலமடைந்தான்.
யோனத்தான்
தன்னுடைய தகப்பனாகிய சவுல் செய்வது தவறு என்று அறிந்திருந்தான். அதனால் அவன் சவுல்
ராஜாவின் ஆலோசனைகளுக்கு உடன்படவில்லை. அவன் தாவீதை எப்படியாவது காப்பாற்றி விட
வேண்டும் என்று எண்ணினான். அதனால் தன்னுடைய தகப்பனாரிடம் சென்று தாவீதிற்காகப்
பேசி, அவன் கோலியாத்தை தோற்கடித்ததின் மூலம் இஸ்ரவேல் தேசம் காப்பாற்றப்பட்டதை
நினைவுபடுத்தினான். உடனே சவுல் ராஜா மனம் மாறினார். ஆனால் சவுல் ராஜா நிலையான
மனநிலை உடையவரல்ல. அது தாவீதிற்கு நன்றாகத் தெரியும். யோனத்தானும் அதை
அறிந்திருந்தார். அவர்கள் எதிர்பார்த்தபடியே சவுல் ராஜா தாவீதை கொல்லுவதற்காக
மறுபடியும் தேடினார். அதனால் தாவீது வனாந்தரமான ஒரு இடத்திற்குப் போய் ஒளிந்து
கொண்டார்.
தன்னுடைய தகப்பனார்
தன்னுடைய சிறந்த நண்பனை கொலை செய்வதற்காகத் தேடினது யோனத்தானுக்கு மிகவும்
கவலையாயிருந்தது. யோனத்தான் தாவீதைத் தேடி வனாந்திரத்திற்கு சென்றார். யோனத்தான்
தாவீதை தைரியப்படுத்தி தன்னுடைய தகப்பனாகிய சவுல் தாவீதை ஒருபொழுதும்
கண்டுபிடிக்கமுடியாது என்று உறுதியாகக் கூறினார். அதோடு நிறுத்தாமல் தாவீது தான்
இஸ்ரவேல் தேசத்தின் அடுத்த ராஜாவாக வருவார் என்றும், தான் அவருக்கு இரண்டாவதாக
இருக்கப்போவதாகவும் கூறினார். யோனத்தான் ராஜபதவிக்கு தகுதியற்றவராக இருந்ததினால்
அதை விட்டுக் கொடுக்கவில்லை. யோனத்தானும் இஸ்ரவேலின் மிக சிறந்த படை தளபதி ஆவார்.
அவரும் இஸ்ரவேல் தேசத்திற்காக பல கடினமான யுத்தங்களை வென்றிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தாவீதைப் போலவே தனியாக தன்னுடைய ஆயுததாரியுடன் மட்டும் சென்றும்
அவர் யுத்தங்களை வென்றிருக்கிறார். அப்படியிருந்தும் அவர் தாவீது பல யுத்தங்களை
வென்று இஸ்ரவேல் மக்கள் மத்தியில் பிரபலமடைவதைக் குறித்து பொறாமையடையவில்லை.
அதற்கு மாறாக தன்னுடைய சிறந்த நண்பனான தாவீது தனக்குப் பதிலாக ராஜாவாக வரவேண்டும்
என்று விரும்பினார். யோனத்தான், கர்த்தர் தாவீதோடு கூட இருப்பதையும், தாவீதின்
வாழ்க்கையில் இருந்த தேவனுடைய அபிஷேகத்தையும், திட்டங்களையும் புரிந்து கொண்டார். யோனத்தான் தாவீதிடம், அவர்
ராஜாவாகும் பொழுது தன்னுடைய குடும்பத்தையும் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்
என்று கூறினார்.
யோனத்தான்
தாவீதிடம் கூறின எல்லாமே ஒரு தீர்க்கதரிசன சம்பவம் போலவே நிறைவேறினது. ஆனால் யோனத்தானுக்கு
தாவீதுக்கு இரண்டாவதாக இருக்கக்கூடிய வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. யோனத்தானுக்கு
தாவீதை அதன்பின் சந்திக்கக்கூடிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. யோனத்தான் சவுல்
ராஜாவோடுகூட ஒரு யுத்தத்திற்கு சென்ற இடத்தில் அங்கு மரணமடைந்தார். அதை தாவீது
கேட்ட பொழுது மிகவும் துக்கமடைந்து யோனத்தானுக்காக ஒரு புலம்பற்பாட்டு எழுதினார்.
யோனத்தான்
கூறினது போலவே தாவீது ராஜாவானார். அவர் யோனத்தானோடு செய்த உடன்படிக்கையை
மறக்கவில்லை. சவுல் ராஜா செய்த பல தவறுகளினிமித்தம் அவருடைய சந்ததியினர் பல
துன்பங்களை சந்திக்க வேண்டியிருந்தது. சவுல் ராஜாவின் எதிரிகள் அவர்களைக் கொலை
செய்யத் தேடினார்கள். யோனத்தானுக்கு இரண்டு கால்களும்
செயலிழந்த மேவிபோசேத் என்கிற மகன் இருந்தான். தாவீது தன்னுடைய சிறந்த நண்பனான யோனத்தானோடு
செய்த உடன்படிக்கையை மறக்காமல், யோனத்தானின் மகனை பத்திரமாகக் காப்பாற்றி தன்னுடைய
பிள்ளைகளோடு கூட வளரும்படியாக ஏற்பாடு செய்தார் (2 சாமுவேல் 9:11 – 13).
வேதபகுதி:
1 சாமுவேல் 17 - 20
மனப்பாட
வசனம்: சங்கீதம்
133:1, 2
பாடப் பயிற்சிகள்
கோடிட்ட இடத்தை நிரப்பவும்
1. இஸ்ரவேலின் முதல் ராஜா ………………….
2. தாவீது
………………………………. வாசித்தபொழுது சவுல் குணமாக்கப்பட்டு அவருடைய மனநிலை சீரானது.
3. சவுல்
ராஜா தன்னுடைய ……………………... எறிந்து தாவீதைக் கொல்ல முயற்சித்தார்.
4. யோனத்தானுக்கு இரண்டு கால்களும் செயலிழந்த ……………………………. என்கிற மகன் இருந்தான்.
ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. சவுல் ராஜா தாவீதை ஏன் பகைத்தார்?
2. யோனத்தான் தாவீதிடம் வைத்த கோரிக்கை என்ன?
3. யோனத்தான் செய்த வீரமான செயல் என்ன?
4. தாவீது யோனத்தானின் மகனை எவ்வாறு நடத்தினார்?
கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்
1. யோனத்தானும், தாவீதும் செய்துகொண்ட உடன்படிக்கையைப் பற்றி எழுதவும்.
No comments:
Post a Comment