இடைநிலை வகுப்பு (Intermediate)
12
- 13 வயது
ஞாயிறுபள்ளி பாடங்கள்
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
Permission is granted only for
free distribution among Sunday School children.
No part of this document can be
modified, sold or used for any commercial purpose.
Click this link to visit the English Sunday School Lessons Blog
பாடம் – 15
பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம்
இஸ்ரவேலின்
முதல் ராஜா சவுல்
இதற்கு முந்தின பாடத்தில் இஸ்ரவேல்
தேசத்தை நியாயாதிபதிகள் எவ்வாறு ஆளுகை செய்தார்கள் என்று பார்த்தோம். இஸ்ரவேலை ஆளுகை
செய்த நியாயாதிபதிகளில் மிகவும் முக்கியமானவர் தான் சாமுவேல். நியாயாதிபதிகளின் காலம் சுமார் 350 வருடங்கள் நீடித்து, சாமுவேலின்
காலத்தோடு நிறைவடைந்தது. நியாயாதிபதிகளின் காலம் முடிவடைந்தபின் ராஜாக்கள் இஸ்ரவேல்
தேசத்தை ஆளுகை செய்ய ஆரம்பித்தார்கள். இஸ்ரவேலின் முதல் ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டவர்
சவுல். சவுல் ராஜாவுக்கு அரண்மனையோ, போர்சேவகர்களோ இல்லை. சவுல் இஸ்ரவேலின் ராஜாவாக
அபிஷேகிக்கப்பட்ட காலத்திலும் இஸ்ரவேலருக்கும் அண்டைய நாடுகளுக்கும் கடுமையான யுத்தம்
நடந்து கொண்டிருந்தது.
பலி
செலுத்தின சவுல் ராஜா
ஒருமுறை பெலிஸ்தியர்களுக்கு எதிராக
யுத்தம் செய்ய வேண்டியதிருந்தது. சவுல் இஸ்ரவேல் மக்களை கில்காலுக்கு வரவழைத்தார்.
பெலிஸ்தியர்களும் இஸ்ரவேல் ஜனங்களோடு யுத்தம் செய்வதற்காக அங்கு வந்து கூடினார்கள்.
பெலிஸ்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு யுத்தம் செய்வதற்காக முப்பதாயிரம் இரதங்களையும், ஆறாயிரம்
குதிரை வீரர்களையும், மிகவும் அதிகமான ஜனக்கூட்டத்தையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் இதைக் கண்டபொழுது குகைகளிலும், முட்காடுகளிலும், மலைகளிலும் ஒளிந்துகொண்டார்கள்.
சவுல் கில்காலில் இருந்தார். பெலிஸ்தரோடு யுத்தம் செய்வதற்கு முன்பாக பலி செலுத்துவதற்கு
விரும்பினார். பலி ஆசாரியர்களால் செலுத்தப்பட வேண்டும்.
சாமுவேல் சவுலை ஏழு நாட்கள் பொருத்திருக்கும்படியாகக் கூறினார். ஆனால் ஏழு நாட்களுக்குள்ளாக
சாமுவேல் அங்கு வரவில்லை. ஆகவே சவுல் தானே பலி செலுத்துவதென்று தீர்மானித்து பலி செலுத்தினார்.
அவர் பலியை செலுத்தி முடிக்கும் நேரத்தில் சாமுவேல் அங்கு வந்தார்.
சவுலைக்
கண்டித்த சாமுவேல்
சாமுவேல் அங்கு வந்தபோது சவுல்
ராஜா தானே சர்வாங்கபலியை செலுத்தியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சவுல் ராஜா
தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாததால் ராஜ்யபாரம் அவருடைய குடும்பத்தில் நிலைத்திருக்காது
என்றும் தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனைத் தேடி அவனை இஸ்ரவேலின் தலைவராக
வைக்கப்போவதாகவும் சாமுவேல் கூறினார். பழைய ஏற்பாட்டிலே வாழ்ந்த தேவமனிதர்கள் பலியின்
மூலமாக மட்டுமல்லாமல் மேலும் பல விதங்களிலும் தேவனிடம் விண்ணப்பம் செய்து பதிலைப் பெற்றிருக்கிறார்கள்.
அதுபோல சவுல் ராஜாவும் செய்திருக்கலாம். சவுல் ராஜா அவ்வாறு செய்யாமல் தேவனுடைய கட்டளைகளை
மீறி தானே பலி செலுத்தினதினால் தேவனுடைய கோபம் மூண்டது. சாமுவேல் சவுலை விட்டு சென்றவுடன்
சவுல் யுத்தத்திற்கு சென்றார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் யாரிடமும்
யுத்தத்திற்கு எடுத்து செல்லுவதற்கான ஆயுதங்கள் இல்லை. சவுலுக்கும் யோனத்தானுக்கும்
மட்டுமே ஆயுதங்கள் இருந்தது (1சாமுவேல் 13:19 – 22). பலி செலுத்துவதற்கு துரிதப்பட்ட
சவுல், யுத்தத்திற்கு ஆயத்தம் செய்வதற்கு துரிதப்படவில்லை என்பது அவருடைய நிர்விசாரத்தை
வெளிப்படுத்துகிறது.
அமலேக்கியருக்கு
எதிரான யுத்தம்
மற்றொருமுறை சவுலுக்கு சாமுவேலிடமிருந்து ஒரு செய்தி வந்தது. அதில் அமலேக்கியருக்கு எதிராக போர் தொடுத்து, அங்கு உள்ள எல்லாவற்றையும் அழித்துப் போட வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதன்படியே சவுல் அமலேக்கியருக்கு எதிராக யுத்தத்திற்கு சென்றார்.
ஆனால் சாமுவேல் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் அழிக்கவில்லை.
அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பாதுகாத்து, ஆடுமாடுகளிலும் மற்ற பொருட்களிலும்
நல்ல தரமானவைகளை தங்களுக்கென்று எடுத்துக்கொண்டு, ஒன்றுக்கும் உபயோகமற்றவைகளை மாத்திரம்
அழித்துப் போட்டார். பின்னர் சவுல் அங்கிருந்து திரும்பி கர்மேல்
என்ற ஒரு இடத்திற்கு வந்து தனக்கென்று ஒரு ஜெயஸ்தம்பத்தை அல்லது வெற்றிக்கு அடையாளமான
தூணை நிறுவினார்.
கர்த்தரால்
புறக்கணிக்கப்பட்ட சவுல்
சவுல் தன்னுடைய வார்த்தைகளை நிறைவேற்றாததை
ஆண்டவர் சாமுவேலுக்கு வெளிப்படுத்தினார். சாமுவேல் சவுலை சந்திக்க சென்றார். அப்பொழுது
சவுல் சாமுவேலிடம் தான் ஆண்டவர் தனக்குக் கொடுத்த கட்டளைகளையெல்லாம் நிறைவேற்றியதாகக்
கூறினார். சாமுவேல் சவுலிடம் தன்னுடைய காதுகளில் விழுகின்ற ஆடுமாடுகளின் சத்தத்தைப்
பற்றி விசாரித்தார். அதற்கு சவுல் சாமுவேலிடம், ஆடுமாடுகளில் சிறந்தவற்றை கர்த்தருக்கு
பலியிடும்படி மீதம் வைத்திருப்பதாகக் கூறினார். சவுல் தன்னுடைய தவறை மறைக்க மக்கள்
தான் அதை ஆண்டவருக்கு பலியிடும்படியாக கொண்டுவந்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.
சாமுவேல் சவுல் கூறின எந்த காரணத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. சவுல் ஆண்டவருக்கு கீழ்ப்படியாததினால்
அவருக்கு அவன் மேல் கோபமூண்டிருப்பதையும், அவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ராஜமேன்மையிலிருந்து
அவன் புறக்கணிக்கப்பட்டிருப்பதையும் அவர் அவனுக்கு அறிவித்தார். தேவனுக்கு பலியிடுவதைப்
பார்க்கிலும் அவருக்கு கீழ்ப்படிவதே முக்கியமானது என்று சாமுவேல் கூறினார். தேவனுக்குக்
கீழ்ப்படியாமல் அவருக்குக் கொடுக்கும் பலிகளை அவர் அங்கீகரிப்பதில்லை. சிறிதுகாலம்
கழித்து சவுல் பெலிஸ்தரோடு யுத்தத்திற்கு சென்றபோது கில்போவா மலையில்வைத்து இறந்து
போனார். சாமுவேல் கூறினபடியே இஸ்ரவேலுடைய ராஜ்யபாரம் தாவீதின் கைகளில் கொடுக்கப்பட்டது.
புதிய
ஏற்பாட்டு ஆராதனையும், ஆவிக்கேற்ற பலிகளும்
பழைய ஏற்பாட்டிலே மக்கள் தேவனுக்கு பலிகளை செலுத்தி ஆராதனை
செய்தார்கள். புதிய ஏற்பாட்டிலே கிறிஸ்தவர்கள் ஆடுமாடுகளை பலியாக செலுத்தாவிட்டாலும்,
தேவனை ஆராதிப்பதற்காக ஆவிக்கேற்ற பலிகளை தேவனுக்கு பலியாக செலுத்த வேண்டும் (1 பேதுரு
2:5). பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டிலே தேவனுக்கு செலுத்தப்பட வேண்டிய ஆவிக்கேற்ற
பலிகளைப் பற்றி பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
ü நம்முடைய சரீரத்தையும், அதின் அவயவங்களையும் உயிருள்ள பலியாக ஒப்புக்கொடுப்பது (ரோமர் 12:1,2)
ü ஜெபம் (வெளிப்படுத்தின விசேஷம் 5:8; 8:3)
ü விசுவாசம் (பிலிப்பியர் 2:17)
ü துதி, ஸ்தோத்திரங்கள் (எபிரெயர் 13:15)
ü காணிக்கைகள் (பிலிப்பியர் 4:18)
ü தானதர்மங்கள், நற்கிரியைகள் (எபிரெயர் 13:16)
ஆவியிலும், உண்மையிலும் தேவனை ஆராதிப்பது
மேலே சொல்லப்பட்டதைப் போல, தேவனை ஆராதிப்பதற்காக செலுத்துவதற்கு
பல ஆவிக்கேற்றபலிகள் இருக்கிறது. அதில் ஒரு சிறு பகுதியே பாடல்களைப் பாடுவது ஆகும்.
ஒரு உண்மையான ஆராதனை நம்முடைய வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுடைய சித்தத்திற்கும்,
ஆளுமைக்கும் நம்மை ஒப்புக்கொடுத்து, தேவன் சகலத்தையும் நன்மைக்கேதுவாக செய்கிறவர் என்பதை
அங்கீகரிப்பதாக இருக்கும். நம்முடைய ஆராதனை சர்வவல்லமையுள்ள தேவனின் மகத்துவத்தையும்,
பரிசுத்தத்தையும் பிரதிபலிப்பதாகவும், அறிவிப்பதாகவும் இருக்க வேண்டும்.
சுயஇஷ்ட ஆராதனை
நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோள்களையும், நோக்கங்களையும், வெற்றிகளையும், மையமாக வைத்து, நம்முடைய சுயமேன்மைகளை அடைய உதவிய ஒரு கருவியாக மட்டுமே தேவனை வெளிப்படுத்துவதே சுயஇஷ்ட ஆராதனை ஆகும். இந்த ஆராதனைகளில் பாடல் அல்லது இசை தாலந்துள்ள சில நபர்கள் ஆராதனை வீரர்கள் என்று அடையாளங் காணப்பட்டு இந்த ஆராதனைகளின் ஈர்ப்பு மையங்களாக மாற்றப்படுகிறார்கள். நவீனஉலக கலாச்சாரத்தில் பிரபலமானவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதையும், சில வேளைகளில் வழிபாடுகள் கூட செய்யப்படுவதையும் நாம் பார்க்க முடியும். இந்த கலாசாரம் சபைகளில் நுழைந்திருப்பதன் ஒரு வெளிப்பாடே இந்த நார்சீசிச ஆராதனைகள் ஆகும். புதிய ஏற்பாட்டு காலத்தில் சபை வரலாற்றில் எந்த ஒரு காலகட்டத்திலும் ஆராதனை என்ற பெயரில் மக்களைக் கவரும் ஆடல்பாடல்களோ, கலைநிகழ்ச்சிகளோ நடத்தப்படவில்லை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.
ஆராதனை என்பது தேவனுக்கு செலுத்தப்படும் ஒன்றாகும். ஆகவே தேவன் தம்மை எவ்வாறு ஆராதிக்க வேண்டும் என்று வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருக்கிறாரோ அவ்வண்ணமே ஆராதனை செலுத்தப்பட வேண்டும். தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து அதன் அடிப்படையில் செய்யப்படும் ஆராதனை மட்டுமே தேவனால் அங்கீகரிக்கப்படும், எவ்வளவு சிறந்த பொருளாயிருந்தாலும் தேவனால் விலக்கி வைக்கப்பட்ட ஒன்று ஆராதனையில் அங்கீகரிக்கப்படாது என்பதே சவுல் ராஜாவின் வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் ஆகும்.
வேதபகுதி: 1 சாமுவேல் 13 - 15
மனப்பாட வசனம்: 1 சாமுவேல் 15:22
பாடப்
பயிற்சிகள்
கோடிட்ட
இடத்தை நிரப்பவும்
1. பழைய ஏற்பாட்டு பலிகள் ……………………………. செலுத்தப்பட வேண்டும்
2. சவுல் பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு சென்றபோது, சவுலுக்கும்
…………………………………… மட்டுமே ஆயுதங்கள் இருந்தது.
3. சவுல் ………………….. என்ற இடத்திலே தனக்கென்று ஒரு ஜெயஸ்தம்பத்தை
நிறுவினார்.
4. புதிய ஏற்பாட்டிலே தேவனை ஆராதிப்பதற்காக ……………………… பலிகளை
தேவனுக்கு பலியாக செலுத்த வேண்டும்
ஒன்று
அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்
1. இஸ்ரவேலர் பெலிஸ்தரைக் கண்டு ஏன் ஒளிந்துகொண்டார்கள்?2. சவுல்ராஜா தானாகவே ஏன் பலி செலுத்தினார்?
3. முதல்தரமான
ஆடுமாடுகளை விட்டுவைத்ததற்கு சவுல் கூறின காரணம் என்ன?
4. சவுல் முதல்தரமான சில ஆடுமாடுகளை விட்டுவைத்திருந்ததை சாமுவேல் கண்டபொழுது என்ன கூறினார்?
கீழ்கண்ட கேள்விக்கு
குறுகிய பதிலளிக்கவும்
1. சுயஇஷ்ட ஆராதனையைப் பற்றியும், ஆவியிலும், உண்மையிலும் தேவனை ஆராதிக்கும் புதிய ஏற்பாட்டு ஆராதனையைப் பற்றியும் சுருக்கமாக எழுதவும்.
No comments:
Post a Comment