Monday, January 30, 2023

இஸ்ரவேலின் முதல் ராஜா - சவுல் (Saul - The First King of Israel), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 15

மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது

வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

பாடம்- 15

இஸ்ரவேலின் முதல் ராஜா சவுல்

இறை ஆட்சி

இதற்கு முந்தின பாடத்தில் இஸ்ரவேல் தேசத்தை நியாயாதிபதிகள் எவ்வாறு ஆளுகை செய்தார்கள் என்று பார்த்தோம். இஸ்ரவேலை ஆளுகை செய்த நியாயாதிபதிகளில் மிகவும் முக்கியமானவர் தான் சாமுவேல். இவரே இஸ்ரவேல் தேசத்தின் கடைசி நியாயாதிபதியாகவும் இருந்தார். பண்டைய இஸ்ரவேல் தேசத்தின் அரசாங்கம் வித்தியாசமானது ஆகும். மற்ற நாடுகளை ராஜாக்கள் ஆண்டு வந்த போது, இஸ்ரவேல் தேசத்தை தேவனே ராஜாவாக ஆளுகை செய்து வந்தார். இதனால் தான் தேவன் “இஸ்ரவேலின் ராஜா” என்று வேதாகமத்தில் பல இடங்களில் புகழப்பட்டிருக்கிறார். இந்த அரசாங்க முறை “இறை ஆட்சி அல்லது கடவுள் இறைமை ஆட்சி (Theocracy)” என்று அழைக்கப்பட்டது. தேவனுடைய சார்பில் இஸ்ரவேல் தேசத்தை வழிநடத்துவதற்கு தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் தான் நியாயாதிபதிகள். 

நியாயாதிபதிகளின் காலம்

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வந்தபோது, அவர்களுடைய தலைவனாய் இருந்தது மோசே. மோசேக்குப் பின் இஸ்ரவேல் ஜனங்களை கானான் தேசத்திற்கு வழிநடத்தி சென்றது யோசுவா. மோசேயும், யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்திருந்தாலும், நியாயாதிபதிகளின் காலம் யோசுவாவிற்குப் பின் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த ஒத்னியேலின் காலத்திலிருந்தே கணக்கிடப்படுகிறது. நியாயாதிபதிகளின் காலம் சுமார் 350 வருடங்கள் நீடித்து, சாமுவேலின் காலத்தோடு நிறைவடைந்தது. நியாயாதிபதிகளின் காலம் முடிவடைந்தபின் ராஜாக்கள் இஸ்ரவேல் தேசத்தை ஆளுகை செய்ய ஆரம்பித்தார்கள். நியாயாதிபதிகளின் காலம் ஏன் முடிவுக்கு வந்தது என்றும் சவுல் எவ்வாறு ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டார் என்பதைப் பற்றி தான் நாம் இந்த பாடத்தில் கற்றுக்கொள்ளப் போகிறோம். 

www.biblefunforkids.com 

சாமுவேல் – இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதி

சிறுவயதிலிருந்தே ஆண்டவரின் சத்தத்தைக் கேட்டு வளர்ந்த சாமுவேல், ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். அவர் இஸ்ரவேலின் நியாயாதிபதியாகவும் செயல்பட்டார். இஸ்ரவேலில் உள்ள எல்லா கோத்திரங்களையும் நீதியாய் நியாயம் விசாரிக்கும்படி, ஒவ்வொரு இடமாக பிரயாணம் செய்து தன் சொந்த ஊருக்கு திரும்பி வருவார். சாமுவேலுக்கு வயதானபின் அவரால் இவ்வாறு பிரயாணம் செய்யமுடியவில்லை, இதனால் தன்னுடைய இரண்டு குமாரர்களாகிய யோவேலையும், அபியாவையும் இஸ்ரவேலிலே நியாயாதிபதிகளாய் வைத்தார். ஆனால் அவர்களோ தங்கள் தந்தையாகிய சாமுவேலைப் போல நீதியாய் நியாயவிசாரணை செய்யாமல், பண ஆசையினால் நியாயத்தைப் புரட்டினார்கள். இதனால் இஸ்ரவேல் மக்கள் அவர்களை நியாயாதிபதிகளாய் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார்கள்.

தங்களுக்கென்று ராஜாவைக் கேட்ட இஸ்ரவேல் மக்கள்

இஸ்ரவேல் மக்கள் தங்கள் அண்டையில் வசிக்கும் மற்ற நாடுகளைப் பார்த்து அவர்களுக்கு இருப்பது போல தங்களை நேரடியாக ஆளும்படி தங்களுக்கும் ஒரு ராஜா வேண்டும் என்று விரும்பினார்கள். சாமுவேலிடம் சென்று தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். சாமுவேலுக்கு இது துக்கமாயிருந்தது. சாமுவேல் தன்னுடைய மகன்களை இஸ்ரவேலர் ஏற்றுக் கொள்ளாததைப் பற்றி துக்கம்கொள்ளவில்லை. தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கு ராஜாவாய் இருக்கும்பொழுது, இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை தங்கள் ராஜாவாய் ஏற்றுக்கொள்ளாமல், மற்ற தேசங்களைப் போல தங்களுக்கும் ராஜா வேண்டும் என்று கேட்டது, அவனை வேதனைப்படுத்தியது.

 

ராஜாவை பற்றிய எச்சரிப்பு

சாமுவேல் தேவனிடம் சென்று இஸ்ரவேல் ஜனங்களின் விருப்பத்தை தெரிவித்தார். அப்பொழுது தேவன் சாமுவேலிடம் இஸ்ரவேல் ஜனங்கள் கேட்டுக்கொண்டபடியே அவர்களுக்கு, ராஜாவை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும், ஆனால் ஒரு மனிதனை ராஜாவாய் ஏற்படுத்தும்பொழுது என்னென்ன காரியங்கள் சம்பவிக்கும் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். ராஜா, இஸ்ரவேலருடைய ஆண் பிள்ளைகளை தன்னுடைய அடிமைகளாக்கி, தனக்காக கடின வேலை செய்யும்படியாக ரதசாரதிகளாகவும், உழவு வேலை செய்கிறவர்களாகவும், இன்னும் பல விதமான வேலைக்காரராகவும் வைத்துக் கொள்ளுவான். அவர்களுடைய பெண்பிள்ளைகளை வாசனை திரவியம் செய்கிறவர்களாகவும், சமையல்காரிகளாகவும் வைத்துக் கொள்ளுவான். இஸ்ரவேலருடைய சிறந்த நிலபுலன்களை தனக்கென்று எடுத்துக் கொள்ளுவான் என்றும் கூறினார்.

இஸ்ரவேல் ஜனங்களோ தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாய் இருந்தார்கள். இஸ்ரவேலர் இவ்வாறு தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்பார்கள் என்பதை முன்னறிந்த தேவன் ஒரு ராஜா எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்கிற வழிமுறைகளை இஸ்ரவேலர் சீனாய் வனாந்திரத்தில் இருக்கும்பொழுதே மோசே மூலமாய் கொடுத்திருந்தார் (உபாகமம் 17:14 – 20). 

 

கீசின் மகனாகிய சவுல்

பென்யமீன் கோத்திரத்திலே கீஸ் என்ற பெயர் கொண்ட ஒரு புகழ் வாய்ந்த மனிதர் இருந்தார். அவருக்கு சவுல் என்ற மகன் இருந்தான். அந்நாட்களிலே இஸ்ரவேலர்கள் ஆடு, மாடுகள், கழுதைகள் போன்ற மிருகஜீவன்களை வளர்த்து வந்தார்கள். இன்றைய நாட்களைப் போன்ற வாகன வசதிகள் இல்லாத அந்நாட்களிலே, கழுதைகள், மனிதர்கள் ஏறி அமர்ந்து செல்லும் வாகனங்களாகவும், பல விதமான பொருட்களை சுமந்து செல்லும் சுமை மிருகங்களாகவும் பயன்பட்டன. இதனால் கழுதைகள் மிகவும் மதிப்பு வாய்ந்தவைகளாக கருதப்பட்டு, கவனமாகப் பராமரிக்கப்பட்டன. சவுலின் தகப்பனாகிய கீசும் கழுதைகளை வளர்த்து வந்தார். ஒருமுறை கீசின் சில கழுதைகள் காணாமல் போயின. 

 
வாகனங்களாகவும், சுமை மிருகங்களாகவும் பயன்படுத்தப்படும் கழுதைகள் 

கீஸ் காணாமல் போன தன்னுடைய கழுதைகளை கண்டுபிடித்து வரும்படி, தன்னுடைய மகனாகிய சவுலையும், வேலைக்காரன் ஒருவனையும் அனுப்பினார். அவர்கள் பல இடங்களில் அலைந்து திரிந்தும் கழுதைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. வேலைக்காரனோ எப்படியாவது கழுதைகளை கண்டுபிடித்து விட வேண்டும் என்று நினைத்து, அங்கு நியாயாதிபதியாய் இருந்த சாமுவேலிடம் சென்று உதவி கேட்க வேண்டும் என்று எண்ணினான். அவ்வாறே அவர்கள் சாமுவேலிடம் புறப்பட்டு சென்றார்கள். சாமுவேலின் நாட்களிலே, நியாயாதிபதிகளை “ஞானதிருஷ்டிக்காரர்கள் (Seer)” என்று அழைத்தார்கள். 

ஞானதிருஷ்டிக்காரர்கள் என்பவர்கள் ஒரு சிறப்பான வரத்தை உடையவர்கள். அவர்கள் எப்பொழுதும் தேவனோடு நெருங்கிய உறவில் இருப்பதால், அவர்களுடைய ஞானக்கண்கள் திறக்கப்பட்டு, சாதாரண மனிதர்களால் பார்க்கக்கூடாத, மறைவான பல விஷயங்களையும், எதிர்கால நிகழ்வுகளையும் பார்க்கும் வரம் உடையவர்கள் என்று கருதப்பட்டார்கள்.

 

சாமுவேலை சந்தித்த சவுல்

அதனால் தான் சாமுவேல் தன்னுடைய கழுதைகள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பி, சவுல் சாமுவேலைத் தேடி சென்றான். சவுல் சாமுவேலை சந்திப்பதற்கு முன்பே ஆண்டவர் சாமுவேலுக்கு சவுல் வருவதை வெளிப்படுத்தி இருந்தார். அதுமட்டுமல்லாமல், அவனைத் தான் இஸ்ரவேலின் முதல் ராஜாவாக அபிஷேகம் பண்ண வேண்டும் என்றும் கூறியிருந்தார். சவுல் சாமுவேலை சந்தித்தபொழுது, சவுலுடைய கழுதைகள் கிடைத்துவிட்டதென்கிற நல்ல செய்தியை சாமுவேல் கூறி, அவனை அங்கே தங்கி இருக்கும்படி கூறினார். அவனுக்கு ஒரு விருந்தை ஆயத்தம் பண்ணினார். அவர்கள் பந்தி இருக்கும்பொழுது சாமுவேல், சவுலை பந்தியை தலைமை ஏற்பவர்கள் அமருகிற இடத்திலே அமர வைத்தார். 

மறுநாள் காலமே சவுல் தன் வீட்டிற்கு செல்லுவதற்கு ஆயத்தமானபொழுது, சாமுவேல் அவனை தனியே அழைத்து சென்று அவனை ராஜாவாக அபிஷேகம் செய்தார். பின்னர் அவனுக்கு நடைபெறப்போகிற சில சம்பவங்களையும் அடையாளமாகக் கூறினார். 

ராஜாவாகத் தெரிந்தெடுக்கப்பட்ட சவுல்

ஒருவரை ஒரு தேசத்தின் ராஜாவாக நியமிப்பதற்கு, ஒவ்வொரு தேசத்திலும் வித்தியாசமான முறைகளை கையாளுவார்கள். இஸ்ரவேல் தேசத்திலே ஒருவரை ராஜாவாக ஏற்படுத்துவதற்கு, அவர் தலை எண்ணெயினால் அபிஷேகம் செய்யப்படும். இஸ்ரவேல் தேசத்திலே ஒரு மனிதன் ராஜாவாகவோ, ஆசாரியனாகவோ நியமிக்கப்பட வேண்டும் என்றால் அவன் தலையிலே, அபிஷேக தைலம் என்று அழைக்கப்பட்ட விசேஷமான முறையில் தயார் செய்யப்பட்ட ஒலிவ எண்ணெயை ஊற்றி அபிஷேகிப்பார்கள். இந்த அபிஷேக தைலத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள யாத்திராகமம் 30: 22 – 33ஐ வாசிக்கவும். இந்த அபிஷேக தைலம் ஆட்டுக்கிடாவின் கொம்பிற்குள் (Ram’s horn) ஊற்றப்பட்டு உபயோகிக்கப்படுவதுண்டு, இந்த கொம்புதான் தைலக்கொம்பு என்று அழைக்கப்பட்டது. சில வேளைகளில் தைலத்தை ஒரு குப்பியில் எடுத்து சென்று பயன்படுத்துவதும் உண்டு.  

இவ்வாறு அபிஷேகதைலத்தினால் அபிஷேகிக்கப்படுவதன் நோக்கம் என்னவென்றால், இந்த மனிதன் இந்த பணியை செய்வதற்கு தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறான் என்று உறுதிபடுத்துவதற்காகவே ஆகும். இவ்வாறு பரிசுத்த அபிஷேக தைலத்தால் அபிஷேகிக்கப்பட்ட நபர்களை மிகவும் பயபக்தியுடன் நடத்துவார்கள். இவ்வாறு அபிஷேகிக்கப்பட்ட நபர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அபிஷேகத்தின் மதிப்பை உணர்ந்து சிறந்த பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பரிசுத்த அபிஷேக தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் தங்களுடைய கெட்ட நடத்தையினால் தங்கள் தலையில் உள்ள அபிஷேகத்தை அவமதித்தபொழுது தேவனால் தண்டிக்கப்படுவதையும் நாம் வேதாகமத்திலே வாசிக்கிறோம். இப்படி ஒட்டு மொத்த இஸ்ரவேலருக்காகவும் உத்தரவாதம் பண்ண வேண்டிய மிகப்பெரிய பொறுப்பை இவர்கள் ஏற்பதால், ஆண்டவருடைய திட்டமான வழிநடத்துதல் இல்லாமல் யாரையும் பரிசுத்த அபிஷேக தைலத்தினால் ராஜாவாகவோ, ஆசாரியனாகவோ அபிஷேகிக்கமாட்டார்கள்.

ஆட்டுக்கிடாவின் கொம்பு, இதைப்போன்ற கொம்பில் தான் அபிஷேகதைலம் ஊற்றப்பட்டு அபிஷேகிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. 

சாமுவேலுக்கு தேவன் சவுலைத்தான் ராஜாவாகத் தெரிந்தெடுத்திருக்கிறார் என்று தெளிவாகத் தெரிந்த பொழுதிலும், அவர் இஸ்ரவேலருக்கு முன்பாக அதை உறுதிபடுத்த வேண்டியிருந்தது. அதனால் அவர் இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பா என்கிற இடத்திலே கூடிவரச் செய்தார். பின்பு அவர்கள் தேவன் ராஜாவை எந்த கோத்திரத்திலிருந்து தெரிந்தெடுத்திருக்கிறார் என்று சீட்டுபோட்டு பார்த்தபொழுது, சீட்டு பென்யமீன் கோத்திரத்தின்மேல் விழுந்தது. பென்யமீன் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள் மேல் சீட்டு போட்டபொழுது, சீட்டு மாத்திரி குடும்பத்தின்மேல் விழுந்தது. பின்னர் சீட்டு கீசின் மகனாகிய சவுலின் மேல் விழுந்தது. இவ்வாறு ஆண்டவர் சவுலைத்தான் இஸ்ரவேலின் ராஜாவாக தெரிந்தெடுத்திருப்பதாக நிரூபித்தார்.

ராஜாவாக அபிஷேகிக்கப்பட்ட சவுல்

சவுல் ராஜாவாக தெரிந்தெடுக்கப்பட்டிருப்பதை இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்தவுடன் அவனை ராஜாவாக அபிஷேகிப்பதற்காக அவனைத் தேடினார்கள். அவனோ சாமான்கள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டிருந்தான். தேவன் அவன் இருக்கும் இடத்தை வெளிப்படுத்தினார். அவனை அழைத்துக் கொண்டுவந்து ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள். 

சவுல் எல்லா இஸ்ரவேல் ஜனங்களும் அவன் தோளின் கீழ் இருக்கும் அளவிற்கு மிகவும் உயரமானவனாயிருந்தான். இஸ்ரவேல் ஜனங்கள், தங்கள் அருகில் இருக்கும் மற்ற நாடுகளைப் போல தங்களுக்கும் ஒரு ராஜா கிடைத்துவிட்டது என்று மிகவும் உற்சாகத்தில் “ராஜா வாழ்க” என்று ஆர்ப்பரித்தார்கள். இவ்வாறு இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் ஒருங்கிணைந்த இஸ்ரவேல்  ராஜ்யத்தின் (United Israelite Kingdom or United Monarchy) முதல் ராஜாவாக சவுல் அபிஷேகிக்கப்பட்டான். ஆனால் சில மக்களுக்கு சவுல் ராஜாவானது பிடிக்கவில்லை, அதனால் அவனுக்கு மரியாதை செலுத்தாமல் அலட்சியம் செய்து, அவமானமான வார்த்தைகளை பேசினார்கள். அவனோ அதை பொருட்படுத்தாமல், காது கேளாதவன் போல் இருந்து விட்டான்.

 

சவுல் ராஜாவின் ஆளுகை

சவுல் ராஜாவாக தெரிந்தெடுக்கப்பட்டபொழுதிலும் அவனுக்கு சர்வாதிகாரம் கிடையாது. ஏனென்றால் ஒரு ராஜா எவ்வாறு செயல்படவேண்டும் என்று தேவன் ஏற்கெனவே எல்லா சட்டதிட்டங்களையும் கொடுத்துவிட்டார். அதன் அடிப்படையிலேயே அவன் ஆட்சி செய்யமுடியும். இஸ்ரவேலின் முதல் ராஜாவாக தெரிந்தெடுக்கப்பட்ட சவுலுக்கு அரண்மனையோ, போர்சேவகர்களோ இல்லை. அவன் ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டபின், திரும்பவும் தன்னுடைய தகப்பன் வீட்டிற்கே திரும்பி சென்று தன்னுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தான். பல நாட்கள் கழித்து, இஸ்ரவேலருக்கு எதிராக அம்மோனியர் யுத்தம் செய்யவந்தபொழுது தான் சவுல் இஸ்ரவேலரை வழிநடத்துவதற்கு வந்தான். இவ்வாறு இஸ்ரவேலின் முதல் ராஜாகிய சவுல் மிகவும் தாழ்மையுள்ள மனிதனாக ஒரு நல்ல ஆரம்பத்தை செய்தான். 

கீழ்ப்படியாமல் போன சவுல் ராஜா

ஒருமுறை பெலிஸ்தியர்களுக்கு எதிராக யுத்தம் செய்ய வேண்டியதிருந்தது. சவுல் இஸ்ரவேல் மக்களை கில்காலுக்கு வரவழைத்தார். பெலிஸ்தியர்களும் இஸ்ரவேல் ஜனங்களோடு யுத்தம் செய்வதற்காக அங்கு வந்து கூடினார்கள். சவுல் பெலிஸ்தரோடு யுத்தம் செய்வதற்கு முன்பாக பலி செலுத்துவதற்கு விரும்பினார். பலி ஆசாரியர்களால் செலுத்தப்பட வேண்டும். சாமுவேல் சவுலை ஏழு நாட்கள் பொருத்திருக்கும்படியாகக் கூறினார். ஆனால் ஏழு நாட்களுக்குள்ளாக சாமுவேல் அங்கு வரவில்லை. ஆகவே சவுல் தானே பலி செலுத்துவதென்று தீர்மானித்து பலி செலுத்தினார். அவர் பலியை செலுத்தி முடிக்கும் நேரத்தில் சாமுவேல் அங்கு வந்தார். சாமுவேல் அங்கு வந்தபோது சவுல் ராஜா தானே சர்வாங்கபலியை செலுத்தியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சவுல் ராஜா தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாததால் ராஜ்யபாரம் அவருடைய குடும்பத்தில் நிலைத்திருக்காது என்றும் தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனைத் தேடி அவனை இஸ்ரவேலின் தலைவராக வைக்கப்போவதாகவும் சாமுவேல் கூறினார்.

 

கர்த்தரால் புறக்கணிக்கப்பட்ட சவுல்ராஜா

மற்றொருமுறை சவுலுக்கு சாமுவேல் தீர்க்கதரிசியிடமிருந்து ஒரு செய்தி வந்தது. அதில் அமலேக்கியருக்கு எதிராக போர் தொடுத்து, அங்கு உள்ள எல்லாவற்றையும் அழித்துப் போட வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதன்படியே சவுல் அமலேக்கியருக்கு எதிராக யுத்தத்திற்கு சென்றார். ஆனால் சாமுவேல் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் அழிக்கவில்லை. அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பாதுகாத்து, ஆடுமாடுகளிலும் மற்ற பொருட்களிலும் நல்ல தரமானவைகளை தங்களுக்கென்று எடுத்துக்கொண்டு, ஒன்றுக்கும் உபயோகமற்றவைகளை மாத்திரம் அழித்துப் போட்டார். அப்பொழுது சவுல் சாமுவேலிடம் தான் ஆண்டவர் தனக்குக் கொடுத்த கட்டளைகளையெல்லாம் நிறைவேற்றியதாகக் கூறினார். சாமுவேல் சவுலிடம் தன்னுடைய காதுகளில் விழுகின்ற ஆடுமாடுகளின் சத்தத்தைப் பற்றி விசாரித்தார். அதற்கு சவுல் சாமுவேலிடம், ஆடுமாடுகளில் சிறந்தவற்றை கர்த்தருக்கு பலியிடும்படி மீதம் வைத்திருப்பதாகக் கூறினார். சவுல் தன்னுடைய தவறை மறைக்க மக்கள் தான் அதை ஆண்டவருக்கு பலியிடும்படியாக கொண்டுவந்திருக்கிறார்கள் என்றும் கூறினார். சாமுவேல் சவுல் கூறின எந்த காரணத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. சவுல் ஆண்டவருக்கு கீழ்ப்படியாததினால் அவருக்கு அவன் மேல் கோபமூண்டிருப்பதையும், அவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ராஜமேன்மையிலிருந்து அவன் புறக்கணிக்கப்பட்டிருப்பதையும் அவர் அவனுக்கு அறிவித்தார். தேவனுக்கு பலியிடுவதைப் பார்க்கிலும் அவருக்கு கீழ்ப்படிவதே முக்கியமானது என்று சாமுவேல் கூறினார்.

 

சவுல் ராஜாவின் மற்ற தவறுகள்

சவுல் தன்னுடைய தேசத்தில் குடியிருந்த கிபியோனியரை அழிக்க முயற்சித்தார். ஆனால் அவர்களோ யோசுவாவோடு செய்த ஒரு உடன்படிக்கையினால் பாதுகாக்கப்பட்டிருந்தார்கள் (யோசுவா 9). அதுமட்டுமல்லாமல் சவுல் ராஜா தனக்கும் தேசத்திற்கும் நன்மை செய்த, தேவனால் அபிஷேகிக்கப்பட்ட தாவீதின் மேல் பொறாமை கொண்டு அவனைப் பகைத்தான். அதன் காரணமாக பல ஆசாரியர்களையுங் கூட அவன் கொன்றுபோட்டிருந்தான்.

அஞ்சனம்பார்த்த சவுல் ராஜா

தேவனுடைய ஆவியானவர் சவுலை விட்டு விலகினார். அதனால் அவனால் தேவனுடைய ஆலோசனையை பெறமுடியவில்லை. அதுமட்டுமல்லாமல் தேவனுடைய வார்த்தைகளை பெற்று அவனுக்குக் கொடுக்கக்கூடிய தேவமனிதர்களையும் தன்னுடைய அருகில் அவன் விட்டுவைக்கவில்லை. அதனால் அவன் குறிசொல்லுகிறவர்களைத் தேடி செல்ல வேண்டியதிருந்தது. அவன் எந்தோர் என்ற ஒரு ஊரிலே குறிசொல்லுகிற ஒரு பெண் இருப்பதை அறிந்து அங்கு சென்று தனக்காக அஞ்சனம் பார்க்கவேண்டும் என்று கேட்டான். அப்படி அந்த பெண் அஞ்சனம் பார்த்தபொழுது சாமுவேல் தீர்க்கதரியைப் போன்று காட்சியளித்த ஒரு உருவம் எழும்பி வந்து, சவுல் விரைவில் இறந்துபோகப்போவதாகக் கூறினது. இதனால் சவுல் மிகவும் பதற்றமடைந்தார்.

சவுல் ராஜாவின் முடிவு

சவுல் எந்தோரில் குறிசொல்லுகிற பெண்ணை சந்தித்து திரும்பி சென்றபின் பெலிஸ்தரோடு ஒரு யுத்தம் வந்தது. யுத்தம் மிகவும் கடினமாயிருந்தது. அவனுடைய மூன்று மகன்கள் அந்த யுத்தத்திலே இறந்து போனார்கள்.சவுல் தன் ஆயுததாரியிடம் தன்னைக் கொன்றுவிடும்படி கூறினான். ஆனால் அவன் அதை செய்ய துணியவில்லை. அதனால் சவுல் தன்னுடைய பட்டயத்தை நட்டு அதன்மேல் விழுந்து இறந்து போனார். தேவனால் இஸ்ரவேல் தேசத்தின் முதல் ராஜாவாக தெரிந்தெடுக்கப்பட்டு மகிமையாக ஆரம்பமான சவுல்ராஜாவின் வாழ்க்கை பின்நாட்களில் தேவனால் புறக்கணிக்கப்பட்டதாக மாறினது. சவுல் ராஜா தொடர்ந்து ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் போனதால் ராஜ்யபாரம் அவனுடைய குடும்பத்தில் தொடராமல் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவராக காணப்பட்ட  தாவீதின் கைகளில் கொடுக்கப்பட்டது.

 

வேதபகுதி: 1 சாமுவேல் 8, 9, 10

மனப்பாட வசனம்: 1 தீமோத்தேயு 2:1, 2


For Sunday School activities and stories in English

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    நியாயாதிபதிகளின் காலம் ……………………………………….. காலத்திலிருந்தே கணக்கிடப்படுகிறது.

2.    சாமுவேலின் நாட்களிலே, நியாயாதிபதிகளை “………………………………….” என்று அழைத்தார்கள்.

3.    சாமுவேல், …………………………. பந்தியை தலைமை ஏற்பவர்கள் அமருகிற இடத்திலே அமர வைத்தார்.

4.    ராஜாவைத் தெரிந்தெடுப்பதற்கு போட்ட சீட்டு …………………………. கோத்திரத்தின்மேல் விழுந்தது.

 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  இறை ஆட்சி என்றால் என்ன?

 

2.    நியாயாதிபதிகளின் ஆட்சி எப்பொழுது ஆரம்பித்து எப்பொழுது நிறைவடைந்தது?

 

3.    இஸ்ரவேலர்கள் சாமுவேலின் மகன்களை நியாயாதிபதிகளாய் ஏற்றுக் கொள்ளாததற்கு காரணம் என்ன?

 

4.    சவுல் ராஜா ஏன் அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயை தேடி சென்றார்? 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  சவுல் ராஜா தேவனுக்குக் கீழ்ப்படியாததையும், தேவனால் புறக்கணிக்கப்படுவதையும் பற்றி எழுதவும்.

 


Tuesday, January 17, 2023

பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம் (Obedience is Better than Sacrifice!), இடைநிலை வகுப்பு (Intermediate) , ஞாயிறு பள்ளி வேதபாடம் - 15

இடைநிலை வகுப்பு (Intermediate)

12 - 13 வயது

ஞாயிறுபள்ளி பாடங்கள்

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

பாடம் – 15

பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம்

 

இஸ்ரவேலின் முதல் ராஜா சவுல்

இதற்கு முந்தின பாடத்தில் இஸ்ரவேல் தேசத்தை நியாயாதிபதிகள் எவ்வாறு ஆளுகை செய்தார்கள் என்று பார்த்தோம். இஸ்ரவேலை ஆளுகை செய்த நியாயாதிபதிகளில் மிகவும் முக்கியமானவர் தான் சாமுவேல். நியாயாதிபதிகளின் காலம் சுமார் 350 வருடங்கள் நீடித்து, சாமுவேலின் காலத்தோடு நிறைவடைந்தது. நியாயாதிபதிகளின் காலம் முடிவடைந்தபின் ராஜாக்கள் இஸ்ரவேல் தேசத்தை ஆளுகை செய்ய ஆரம்பித்தார்கள். இஸ்ரவேலின் முதல் ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டவர் சவுல். சவுல் ராஜாவுக்கு அரண்மனையோ, போர்சேவகர்களோ இல்லை. சவுல் இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகிக்கப்பட்ட காலத்திலும் இஸ்ரவேலருக்கும் அண்டைய நாடுகளுக்கும் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்தது.

பலி செலுத்தின சவுல் ராஜா

ஒருமுறை பெலிஸ்தியர்களுக்கு எதிராக யுத்தம் செய்ய வேண்டியதிருந்தது. சவுல் இஸ்ரவேல் மக்களை கில்காலுக்கு வரவழைத்தார். பெலிஸ்தியர்களும் இஸ்ரவேல் ஜனங்களோடு யுத்தம் செய்வதற்காக அங்கு வந்து கூடினார்கள். பெலிஸ்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு யுத்தம் செய்வதற்காக முப்பதாயிரம் இரதங்களையும், ஆறாயிரம் குதிரை வீரர்களையும், மிகவும் அதிகமான ஜனக்கூட்டத்தையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் இதைக் கண்டபொழுது குகைகளிலும், முட்காடுகளிலும், மலைகளிலும் ஒளிந்துகொண்டார்கள். சவுல் கில்காலில் இருந்தார். பெலிஸ்தரோடு யுத்தம் செய்வதற்கு முன்பாக பலி செலுத்துவதற்கு விரும்பினார். பலி ஆசாரியர்களால் செலுத்தப்பட வேண்டும். சாமுவேல் சவுலை ஏழு நாட்கள் பொருத்திருக்கும்படியாகக் கூறினார். ஆனால் ஏழு நாட்களுக்குள்ளாக சாமுவேல் அங்கு வரவில்லை. ஆகவே சவுல் தானே பலி செலுத்துவதென்று தீர்மானித்து பலி செலுத்தினார். அவர் பலியை செலுத்தி முடிக்கும் நேரத்தில் சாமுவேல் அங்கு வந்தார்.

சவுலைக் கண்டித்த சாமுவேல்

சாமுவேல் அங்கு வந்தபோது சவுல் ராஜா தானே சர்வாங்கபலியை செலுத்தியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சவுல் ராஜா தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாததால் ராஜ்யபாரம் அவருடைய குடும்பத்தில் நிலைத்திருக்காது என்றும் தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனைத் தேடி அவனை இஸ்ரவேலின் தலைவராக வைக்கப்போவதாகவும் சாமுவேல் கூறினார். பழைய ஏற்பாட்டிலே வாழ்ந்த தேவமனிதர்கள் பலியின் மூலமாக மட்டுமல்லாமல் மேலும் பல விதங்களிலும் தேவனிடம் விண்ணப்பம் செய்து பதிலைப் பெற்றிருக்கிறார்கள். அதுபோல சவுல் ராஜாவும் செய்திருக்கலாம். சவுல் ராஜா அவ்வாறு செய்யாமல் தேவனுடைய கட்டளைகளை மீறி தானே பலி செலுத்தினதினால் தேவனுடைய கோபம் மூண்டது. சாமுவேல் சவுலை விட்டு சென்றவுடன் சவுல் யுத்தத்திற்கு சென்றார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் யாரிடமும் யுத்தத்திற்கு எடுத்து செல்லுவதற்கான ஆயுதங்கள் இல்லை. சவுலுக்கும் யோனத்தானுக்கும் மட்டுமே ஆயுதங்கள் இருந்தது (1சாமுவேல் 13:19 – 22). பலி செலுத்துவதற்கு துரிதப்பட்ட சவுல், யுத்தத்திற்கு ஆயத்தம் செய்வதற்கு துரிதப்படவில்லை என்பது அவருடைய நிர்விசாரத்தை வெளிப்படுத்துகிறது.

அமலேக்கியருக்கு எதிரான யுத்தம்

மற்றொருமுறை சவுலுக்கு சாமுவேலிடமிருந்து ஒரு செய்தி வந்தது. அதில் அமலேக்கியருக்கு எதிராக போர் தொடுத்து, அங்கு உள்ள எல்லாவற்றையும் அழித்துப் போட வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதன்படியே சவுல் அமலேக்கியருக்கு எதிராக யுத்தத்திற்கு சென்றார். 

ஆனால் சாமுவேல் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் அழிக்கவில்லை. அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பாதுகாத்து, ஆடுமாடுகளிலும் மற்ற பொருட்களிலும் நல்ல தரமானவைகளை தங்களுக்கென்று எடுத்துக்கொண்டு, ஒன்றுக்கும் உபயோகமற்றவைகளை மாத்திரம் அழித்துப் போட்டார். பின்னர் சவுல் அங்கிருந்து திரும்பி கர்மேல் என்ற ஒரு இடத்திற்கு வந்து தனக்கென்று ஒரு ஜெயஸ்தம்பத்தை அல்லது வெற்றிக்கு அடையாளமான தூணை நிறுவினார்.

கர்த்தரால் புறக்கணிக்கப்பட்ட சவுல்

சவுல் தன்னுடைய வார்த்தைகளை நிறைவேற்றாததை ஆண்டவர் சாமுவேலுக்கு வெளிப்படுத்தினார். சாமுவேல் சவுலை சந்திக்க சென்றார். அப்பொழுது சவுல் சாமுவேலிடம் தான் ஆண்டவர் தனக்குக் கொடுத்த கட்டளைகளையெல்லாம் நிறைவேற்றியதாகக் கூறினார். சாமுவேல் சவுலிடம் தன்னுடைய காதுகளில் விழுகின்ற ஆடுமாடுகளின் சத்தத்தைப் பற்றி விசாரித்தார். அதற்கு சவுல் சாமுவேலிடம், ஆடுமாடுகளில் சிறந்தவற்றை கர்த்தருக்கு பலியிடும்படி மீதம் வைத்திருப்பதாகக் கூறினார். சவுல் தன்னுடைய தவறை மறைக்க மக்கள் தான் அதை ஆண்டவருக்கு பலியிடும்படியாக கொண்டுவந்திருக்கிறார்கள் என்றும் கூறினார். சாமுவேல் சவுல் கூறின எந்த காரணத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. சவுல் ஆண்டவருக்கு கீழ்ப்படியாததினால் அவருக்கு அவன் மேல் கோபமூண்டிருப்பதையும், அவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ராஜமேன்மையிலிருந்து அவன் புறக்கணிக்கப்பட்டிருப்பதையும் அவர் அவனுக்கு அறிவித்தார். தேவனுக்கு பலியிடுவதைப் பார்க்கிலும் அவருக்கு கீழ்ப்படிவதே முக்கியமானது என்று சாமுவேல் கூறினார். தேவனுக்குக் கீழ்ப்படியாமல் அவருக்குக் கொடுக்கும் பலிகளை அவர் அங்கீகரிப்பதில்லை. சிறிதுகாலம் கழித்து சவுல் பெலிஸ்தரோடு யுத்தத்திற்கு சென்றபோது கில்போவா மலையில்வைத்து இறந்து போனார். சாமுவேல் கூறினபடியே இஸ்ரவேலுடைய ராஜ்யபாரம் தாவீதின் கைகளில் கொடுக்கப்பட்டது.

புதிய ஏற்பாட்டு ஆராதனையும், ஆவிக்கேற்ற பலிகளும்

பழைய ஏற்பாட்டிலே மக்கள் தேவனுக்கு பலிகளை செலுத்தி ஆராதனை செய்தார்கள். புதிய ஏற்பாட்டிலே கிறிஸ்தவர்கள் ஆடுமாடுகளை பலியாக செலுத்தாவிட்டாலும், தேவனை ஆராதிப்பதற்காக ஆவிக்கேற்ற பலிகளை தேவனுக்கு பலியாக செலுத்த வேண்டும் (1 பேதுரு 2:5). பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டிலே தேவனுக்கு செலுத்தப்பட வேண்டிய ஆவிக்கேற்ற பலிகளைப் பற்றி பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

ü  நம்முடைய சரீரத்தையும், அதின் அவயவங்களையும் உயிருள்ள பலியாக ஒப்புக்கொடுப்பது (ரோமர் 12:1,2)

ü  ஜெபம் (வெளிப்படுத்தின விசேஷம் 5:8; 8:3)

ü  விசுவாசம் (பிலிப்பியர் 2:17)

ü  துதி, ஸ்தோத்திரங்கள் (எபிரெயர் 13:15)

ü  காணிக்கைகள் (பிலிப்பியர் 4:18)

ü  தானதர்மங்கள், நற்கிரியைகள் (எபிரெயர் 13:16)

ஆவியிலும், உண்மையிலும் தேவனை ஆராதிப்பது

மேலே சொல்லப்பட்டதைப் போல, தேவனை ஆராதிப்பதற்காக செலுத்துவதற்கு பல ஆவிக்கேற்றபலிகள் இருக்கிறது. அதில் ஒரு சிறு பகுதியே பாடல்களைப் பாடுவது ஆகும். ஒரு உண்மையான ஆராதனை நம்முடைய வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுடைய சித்தத்திற்கும், ஆளுமைக்கும் நம்மை ஒப்புக்கொடுத்து, தேவன் சகலத்தையும் நன்மைக்கேதுவாக செய்கிறவர் என்பதை அங்கீகரிப்பதாக இருக்கும். நம்முடைய ஆராதனை சர்வவல்லமையுள்ள தேவனின் மகத்துவத்தையும், பரிசுத்தத்தையும் பிரதிபலிப்பதாகவும், அறிவிப்பதாகவும் இருக்க வேண்டும்.

சுயஇஷ்ட ஆராதனை

நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோள்களையும், நோக்கங்களையும், வெற்றிகளையும், மையமாக வைத்து, நம்முடைய சுயமேன்மைகளை அடைய உதவிய ஒரு கருவியாக மட்டுமே தேவனை வெளிப்படுத்துவதே சுயஇஷ்ட ஆராதனை ஆகும். இந்த ஆராதனைகளில் பாடல் அல்லது இசை தாலந்துள்ள சில நபர்கள் ஆராதனை வீரர்கள் என்று அடையாளங் காணப்பட்டு இந்த ஆராதனைகளின் ஈர்ப்பு மையங்களாக மாற்றப்படுகிறார்கள். நவீனஉலக கலாச்சாரத்தில் பிரபலமானவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதையும், சில வேளைகளில் வழிபாடுகள் கூட செய்யப்படுவதையும் நாம் பார்க்க முடியும். இந்த கலாசாரம் சபைகளில் நுழைந்திருப்பதன் ஒரு வெளிப்பாடே இந்த நார்சீசிச ஆராதனைகள் ஆகும். புதிய ஏற்பாட்டு காலத்தில் சபை வரலாற்றில் எந்த ஒரு காலகட்டத்திலும் ஆராதனை என்ற பெயரில் மக்களைக் கவரும் ஆடல்பாடல்களோ, கலைநிகழ்ச்சிகளோ நடத்தப்படவில்லை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

ஆராதனை என்பது தேவனுக்கு செலுத்தப்படும் ஒன்றாகும். ஆகவே தேவன் தம்மை எவ்வாறு ஆராதிக்க வேண்டும் என்று வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருக்கிறாரோ அவ்வண்ணமே ஆராதனை செலுத்தப்பட வேண்டும். தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து அதன் அடிப்படையில் செய்யப்படும் ஆராதனை மட்டுமே தேவனால் அங்கீகரிக்கப்படும், எவ்வளவு சிறந்த பொருளாயிருந்தாலும் தேவனால் விலக்கி வைக்கப்பட்ட ஒன்று ஆராதனையில் அங்கீகரிக்கப்படாது என்பதே சவுல் ராஜாவின் வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம் ஆகும். 

வேதபகுதி: 1 சாமுவேல் 13 - 15

மனப்பாட வசனம்: 1 சாமுவேல் 15:22

 

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    பழைய ஏற்பாட்டு பலிகள் ……………………………. செலுத்தப்பட வேண்டும்

2.    சவுல் பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு சென்றபோது, சவுலுக்கும் …………………………………… மட்டுமே ஆயுதங்கள் இருந்தது.

3.    சவுல் ………………….. என்ற இடத்திலே தனக்கென்று ஒரு ஜெயஸ்தம்பத்தை நிறுவினார்.

4.    புதிய ஏற்பாட்டிலே தேவனை ஆராதிப்பதற்காக ……………………… பலிகளை தேவனுக்கு பலியாக செலுத்த வேண்டும்

 

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.    இஸ்ரவேலர் பெலிஸ்தரைக் கண்டு ஏன் ஒளிந்துகொண்டார்கள்?2.    சவுல்ராஜா தானாகவே ஏன் பலி செலுத்தினார்?  

3.    முதல்தரமான ஆடுமாடுகளை விட்டுவைத்ததற்கு சவுல் கூறின காரணம் என்ன?

4.    சவுல் முதல்தரமான சில ஆடுமாடுகளை விட்டுவைத்திருந்ததை                    சாமுவேல் கண்டபொழுது என்ன கூறினார்? 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.     சுயஇஷ்ட ஆராதனையைப் பற்றியும், ஆவியிலும், உண்மையிலும் தேவனை ஆராதிக்கும்  புதிய ஏற்பாட்டு ஆராதனையைப் பற்றியும் சுருக்கமாக எழுதவும். 

 


தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...