Wednesday, January 10, 2024

அப்சலோமின் கலகம் (The Rebellion of Absalom), இளநிலை வகுப்பு (Junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 16

இளநிலை வகுப்பு (JUNIOR) 
வயது: 10 - 11 வயது
வகுப்புV & VI

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

Click this link and visit devotions blog to read Christian articles

பாடம் –16
அப்சலோமின் கலகம்

இந்த பாடத்தில், தாவீதுராஜா இஸ்ரவேல் தேசத்தை அரசாண்ட காலத்திலே நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தைப் பற்றி பார்க்கப் போகிறோம். அப்சலோம் தாவீது ராஜாவின் மகன்களில் ஒருவன். அவன் தாவீதுராஜாவின் மூன்றாவது மகன். அவனுடைய தாயின் பெயர் மாக்காள். அப்சலோம் வாழ்ந்த காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அவனைப் போல மெச்சிக்கொள்ளப்பட்டவன் ஒருவனும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அவனுடைய உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை எந்த ஒரு பழுதும் இல்லாமல் இருந்ததாக வருணிக்கப்பட்டுள்ளது. மிகவும் அடர்த்தியான தலைமுடியைக் கொண்டிருந்த அவன், அதை வருடத்திற்கு ஒருமுறை சிரைக்கும்பொழுது, இருநூறு சேக்கல் (வேதாகம காலத்து ஒரு சேக்கல் தற்போதைய 11 கிராம் எடைக்கு சமம்) எடை இருந்தது. 

அப்சலோம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது மட்டுமல்லாமல், மக்களை கவரும்படி நடந்துகொள்ளுவதிலும் கைதேறினவனாயிருந்தான். அப்சலோமிற்கு தாமார் என்ற மிகவும் அழகான ஒரு சகோதரியும் இருந்தாள். தாவீது ராஜாவிற்கு பத்திற்கும் மேற்பட்ட மகன்கள் இருந்தார்கள் (1 நாளாகமம் 3:1 – 9). அம்னோன் தாவீதுராஜாவின் மூத்தமகன். அம்னோன் தாவீதுராஜாவின் இன்னொரு மனைவியாகிய அகிநோவாம் என்பவளுடைய மகன். ஒருமுறை அம்னோன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரிடம் தவறாக நடந்துகொண்டான். தாவீதுராஜா இதைக் கேள்விப்பட்டு மிகவும் துக்கமடைந்தார், ஆனால் அவர் அம்னோனை தண்டிக்கவில்லை. அதனால் அப்சலோம் அம்னோனை தானே பழிவாங்க எண்ணினான். அப்சலோம் தன்னுடைய வீட்டில் ஒரு விருந்தை ஆயத்தம் செய்து, அம்னோனை வரவழைத்து, அவனைக் கொன்றுபோட்டான். தாவீதுராஜா இதைக் கேள்விப்பட்டு மிகவும் துக்கமடைந்தார்.

தன்னுடைய தகப்பனார் தன்னை தண்டிப்பார் என்று பயந்த அப்சலோம் தன்னுடைய தாயாரின் தகப்பனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவிடத்திற்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருடங்கள் தங்கியிருந்தான். தாவீது ராஜாவின் படைதளபதியாயிருந்த யோவாப், தாவீதுராஜாவிடம் அப்சலோமிற்காகப் பரிந்துபேசி அவனைத் திரும்பவும் இஸ்ரவேல் தேசத்திற்கு வரவழைத்து, இருவருக்கும் சமரசம் செய்து வைத்தார்.

அப்சலோம் தன் தகப்பனார், தாயார் இருவரின் வம்சாவளியிலும் ராஜபரம்பரையில் பிறந்தவன். அவனுடைய தாயார் கேசூர் பட்டணத்தின் ராஜகுமாரத்தி. தாவீது ராஜாவின் மூத்த மகனான அம்னோன் இறந்துபோன பின், உயிரோடிருந்த தாவீது ராஜாவின் மகன்களில் மூத்தவனாகவும் அவன் இருந்திருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தினால் இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாக தான் ஆக வேண்டும் என்று அவன் எண்ணினான். ஆனால் அவன் தாவீதுராஜாவின் காலம் நிறைவேறும்வரை காத்திருக்க விரும்பவில்லை. தன்னுடைய தகப்பனாரை சிங்காசனத்திலிருந்து நீக்கிவிட்டு ராஜாங்கத்தை தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினான். அதற்காக பல திட்டங்கள் தீட்டினான். ராஜாங்கத்திற்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளுவதற்காக அவன் ரதங்ககளையும், குதிரைகளையும் தனக்காக வாங்கி வைத்துக்கொண்டான். தன்னுடைய ரதத்திற்கு முன் ஓடுவதற்காக ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான். 

அதுமட்டுமல்லாமல், அவன் ஒவ்வொருநாள் காலைவேளையும் பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொள்வான். இஸ்ரவேல் மக்கள் தாவீது ராஜாவை சந்தித்து தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், நியாயம் கேட்பதற்காகவும் அந்த வழியாக செல்லுவது வழக்கம். அப்படி அவ்வழியாக செல்லுபவர்களை அப்சலோம் அழைத்து அவர்களிடம் அன்பாக பேசுவான். அவர்களுடைய குறைகளையும், காரியங்களையும் கேட்டறிவான். அவர்களிடம் உன்னுடைய காரியம் நேர்மையாயிருக்கிறது, ஆனால் தாவீதுராஜாவிடம் சென்றால் உன்னுடைய வழக்கை நேர்மையாக விசாரிப்பதற்கு யாரும் இல்லை என்று கூறுவான். பின்னர் அவர்களிடம் உங்களுடைய பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு கிடைப்பதற்கு என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் எவ்வளவு நலமாயிருக்கும் என்று கூறுவான். இவ்வாறு அவன் செய்து இஸ்ரவேல் மக்களுடைய இருதயங்களைக் கவர்ந்து கொண்டான்.

அப்சலோம் தன் தகப்பனாகிய தாவீது ராஜாவிடம் சென்று, தான் செய்த பொருத்தனை ஒன்றை நிறைவேற்ற வேண்டியதிருப்பதால் எப்ரோன் பட்டணத்திற்கு செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். தாவீதுராஜாவும் அதற்கு சம்மதித்தார். ஆனால் அப்சலோமோ ராஜ்யபாரத்தை தன் தகப்பனாகிய தாவீதிடமிருந்து தான் எடுத்துக்கொள்ளுவதற்காக செய்திருந்த தந்திரமான திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்தான். இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களுக்கும் ஆட்களை அனுப்பி, ஒரு எக்காள சத்தம் ஊதப்படும் என்றும், அந்த சத்தத்தைக் கேட்டவுடன் ‘’அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான்” என்று கூறவேண்டும் என்றும் அவர்களிடம் அறிவித்திருந்தான். இவ்வாறு அப்சலோம் தன்னுடைய தகப்பனாருக்கு எதிரான கலகத்தை ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் அப்சலோமின் திட்டங்கள் வெற்றிபெறுவது போல தோன்றினது. தாவீது ராஜா கலகத்தைப் பற்றிய செய்தியை கேள்விப்பட்டவுடன், அவசரமாக எருசலேம் பட்டணத்திலிருந்து வெளியேறி யோர்தான் ஆற்றின் அப்புறம் இருந்த மக்னாயீம் என்ற இடத்திற்கு நேரே விரைந்தார். தாவீது தன் மகனுக்கு பயந்ததினால் அவ்வாறு செய்யவில்லை. தாவீது ராஜா இஸ்ரவேல் தேசத்தின் தலைசிறந்த படைதளபதியாக இருந்து, பல யுத்தங்களை நடத்தி வெற்றி பெற்று தந்தவர். ஒரு யுத்தத்தைக் கூட நடத்தி பழக்கமில்லாத அப்சலோம் தன்  தகப்பனாருக்கு எவ்வளவேனும் ஈடு கிடையாது. தாவீது ராஜாவிற்கோ தன் மகனாகிய அப்சலோமின் மேல் இருந்த அன்பினால் அவனை அழிக்க விரும்பவில்லை. அப்சலோமால் தேசம் நாசமாக்கப்பட்டு, தேசத்து ஜனங்கள் பாதிக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. அதனால் தான் அவர் வேகமாக எருசலேமை விட்டு வெளியேறினார்.

ராஜாவின் அரண்மனை ஊழியக்காரர்களும், இஸ்ரவேல் ஜனங்களும் அவரோடு கூட நடந்து சென்றார்கள். அவருடைய யுத்த வீரர்கள் அவருக்கு முன்பாக நடந்து சென்றார்கள். அவர்கள் தூரமான ஒரு வனாந்திரத்திற்கு சென்றார்கள். தேவாலயத்தில் ஊழியம் செய்த சாதோக்கு, அபியத்தார் என்கிற இரு ஆசாரியர்கள் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமந்து கொண்டு தாவீது ராஜாவோடே கூட சென்றார்கள். தாவீது ராஜா கீதரோன் என்கிற ஆற்றைக் கடந்து (ஆங்கில வேதாகமத்தில் கீதரோன் பள்ளத்தாக்கு) என்று குறிப்பிடப்பட்டுள்ளது), வனாந்திர திசையில் நடக்க ஆரம்பித்த பொழுது, ஆசாரியர்களிடம் உடன்படிக்கைப் பெட்டியைத் திரும்பவும் எருசலேம் நகரத்திற்குள் எடுத்து செல்லக் கட்டளையிட்டார்.சாதோக்கும் அபியத்தாரும் உடன்படிக்கைப் பெட்டியை எருசலேம் நகரத்திற்கு திரும்ப எடுத்துச் சென்றார்கள். 


கீதரோன் ஆறும் அதை சுற்றியுள்ள பள்ளத்தாக்கும் (இஸ்ரவேல் தேசத்தில் தற்காலத்தில்)

தாவீது ராஜா எருசலேம் நகரத்தை விட்டு வெளியேறிய தினம் மிகவும் துக்கமான ஒரு தினமாக இருந்தது. தாவீதுராஜா தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து, அழுதுகொண்டே ஒலிவமலையில் ஏறிப் போனார். அவரோடு கூட இருந்த மக்களும் முகத்தை மூடி அழுதுகொண்டே நடந்து சென்றார்கள். அப்சலோம் எருசலேம் நகரத்திற்கு சென்றபோது, அங்கிருந்து தன்னுடைய தகப்பனார் வெளியேறியதை அறிந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சியை கைப்பற்றினார். இஸ்ரவேல் தேசத்தின் சில ஜனங்கள் தாவீது ராஜாவால் அப்சலோமை ஜெயிக்கமுடியாது என்று எண்ணி அப்சலோமோடு இணைந்து கொண்டார்கள். தாவீதின் ஆலோசகனாயிருந்த அகித்தோப்பேலும் அப்சலோமோடு இணைந்து கொண்டான். அப்சலோம் அவனைத் தனக்கு ஆலோசகனாக ஏற்றுக்கொண்டான். அகித்தோப்பேல் மிகவும் தந்திரமானவன், தந்திரமான ஆலோசனைகளைக் கொடுக்கக்கூடியவன். அவனுடைய ஆலோசனைகள் தன்னை வீழ்த்தக்கூடும் என்பதை அறிந்த தாவீதுராஜா, தேவனே அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவீராக என்று விண்ணப்பம் செய்தார். அதன்படியே அகித்தோப்பேல் கொடுத்த நல்ல ஆலோசனையை அப்சலோம் நிராகரிக்கும்படி ஆண்டவர் செய்தார்.

தாவீதுராஜாவின் படைத்தளபதியான யோவாப் அப்சலோமுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கு ஆயத்தம் ஆனார். தாவீது ராஜா அவர்களோடே கூட செல்லவில்லை. தாவீது ராஜாவிற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று எண்ணிய மக்கள் அவர் தங்களோடு கூட யுத்தத்திற்கு வரவேண்டாம் என்று கூறினார்கள். தாவீது ராஜா தன்னை எதிர்த்து போரிட ஆயத்தமாயிருந்த தன்னுடைய மகன் அப்சலோமிற்காக கவலையாயிருந்தார். அவர் அவனை எப்படியாவது கீழ்ப்படுத்தி அடக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அவன் உயிருக்கு ஆபத்து வருவதை அவர் விரும்பவில்லை. ஆகவே தன் படைத்தளபதியிடம் தன்னுடைய மகனை நிதானமாய் நடத்துமாறு கூறினார். ஆனால் அப்சலோமோ தன்னுடைய தகப்பனாரை எதிர்ப்பதில் முழுமனதோடு இறங்கினான். தானே தன்னுடைய படைகளை நடத்தி சென்றான்.

அப்சலோமின் படைகள் தாவீது ராஜாவின் படைகளை எப்பிராயீம் காட்டிலே எதிர்கொண்டன. தாவீது ராஜாவின் படைகள் அப்சலோமின் படைகளை எளிதாக தோற்கடித்தார்கள். அப்சலோம் தன்னுடைய கோவேறு கழுதையின் மேல் ஏறி யுத்தத்திற்கு வேகமாக செல்லும்பொழுது அவனுடைய தலைமுடி ஒரு கர்வாலிமரத்தில் (ஆங்கிலத்தில் ஓக் மரம் Oak Tree என்று அழைக்கப்படுகின்றது) மாட்டிக்கொண்டது. அவன் ஏறிச்சென்ற கோவேறு கழுதை நீங்கிப்போனது. அதனால் அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்.

 
                                                                        கோவேறு கழுதை (Mule) 
இஸ்ரவேல் தேசத்தில் காணப்படும் கர்வாலி மரம் (Oak Tree)
Photo courtesy:Ferrell Jenkins

அதனை ஒரு மனிதன் கண்டு தாவீதுராஜாவின் படைத்தளபதியான யோவாபிடம் கூறினான். யோவாப் அவனிடம் “நீ ஏன் அப்சலோமை கொல்லவில்லை? அப்சலோமைக் கொன்றிருந்தால் உனக்கு பத்து வெள்ளிக்காசையும் ஒரு கச்சையையும் கொடுத்திருப்பேனே” என்று கூறினான். அதற்கு அந்த மனிதன் நீர் எனக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தாலும் ராஜாவின் மகனை கொல்லமாட்டேன் என்று கூறினான். யோவாப் அதை பொருட்படுத்தாமல் தானே சென்று அப்சலோமைக் கொன்று ஒரு குழியில் போட்டான். பின்னர் எக்காளத்தை ஊதி யுத்தத்தை நிறுத்தினார். பண்டைய இஸ்ரவேல் தேசத்திலே யுத்தத்திற்காக மக்களை கூட்டுவதற்காகவும், யுத்தம் முடிந்துவிட்டதை அறிவிப்பதற்காகவும் ஆட்டுகிடாவின் கொம்பினால் செய்யப்பட்ட எக்காளம் ஊதப்பட்டது.

அப்சலோம் கொல்லப்பட்ட செய்தி தாவீது ராஜாவிற்கு கொண்டுசெல்லப்பட்டது. சாதோக் என்ற ஆசாரியனின் மகனாகிய அகிமாசும், கூஷி என்ற மனிதனும் தாவீது ராஜாவிற்கு செய்தியைக் கொண்டு சென்றார்கள். அந்த செய்தியைக் கேட்டு தாவீது ராஜா நிம்மதியடைவார் என்று எண்ணினார்கள். தாவீதுராஜா ஒலிமுக வாசலுக்கு நடுவே உட்கார்ந்திருந்தார். அகிமாஸ் தாவீதுராஜாவிடம் யுத்தத்தில் வெற்றிபெற்ற செய்தியைக் கூறினார். தாவீதுராஜா தன் மகன் அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டார். அகிமாஸ் ராஜாவிடம் தனக்கு அப்சலோமைப் பற்றி தெரியவில்லை என்று கூறினார். தாவீது ராஜாவிடம் அவருடைய மகன் இறந்த செய்தியைக் கூற விரும்பாமல் அவ்வாறு கூறினார். கூஷி தாவீது ராஜாவிடம் அவருடைய மகன் இறந்த செய்தியைக் கூறினார்.

தாவீது ராஜா மிகவும் துக்கமடைந்தார். தான் தன்னுடைய மகனுக்கு பதிலாக இறந்திருந்தால் நலமாக இருக்கும் என்று எண்ணினார். இஸ்ரவேல் மக்கள் தாவீதுராஜாவின் வெற்றியைக் கொண்டாடாமல் அமைதலாக தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். யோவாப் தாவீதிடம் அவரைப் பகைத்த அவருடைய மகனுக்காக அவர் துக்கம் கொண்டாடிக் கொண்டேயிருந்தால், மக்கள் எல்லாரும் அவரை விட்டு பிரிந்து சென்றுவிடுவார்கள் என்று கூறினார். தாவீது ராஜாவும் அவர் கூறுவதை ஏற்றுக்கொண்டார். அவ்விடம் விட்டு எழுந்து எருசலேமிற்கு திரும்பி சென்று அரசாட்சியை தொடர்ந்தார்.

 

வேதபகுதி2 சாமுவேல் 13 - 19

மனப்பாட வசனம்நீதிமொழிகள் 22:4, 5

பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    அப்சலோமிற்கு ………………. என்ற மிகவும் அழகான ஒரு சகோதரி இருந்தாள்.

2.    ………………….., ……………………. என்கிற இரு ஆசாரியர்கள் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமந்து கொண்டு தாவீது ராஜாவோடே கூட சென்றார்கள்.

3.    தாவீதின் ஆலோசகனாயிருந்த ……………………………… அப்சலோமோடு இணைந்து கொண்டான்.

4.    யோவாப் அப்சலோமைக் கொன்றால் ………………….. வெள்ளிக்காசையும் ஒரு …………………….. கொடுப்பதாக வாக்குக் கொடுத்தான்.

ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.   அப்சலோம் யார்?

 

2.    அப்சலோம் எதினால் கேசூருக்கு ஓடிப் போனான்ன?

 

3.     தாவீது ராஜா ஏன் எருசலேமை விட்டு வெளியேறினார்?

 

4.    அப்சலோம் எதினால் வானத்துக்கும் பூமிக்கும் நடுவாக தொங்கினான்? 

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.  அப்சலோம் இஸ்ரவேல் மக்களின் இருதயத்தை எவ்வாறு கவர்ந்து கொண்டான்?

 


No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...