Thursday, November 23, 2023

தாவீதும் ஒரு கூழாங்கல்லும் (David and Goliath), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 16

மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)

வயது: 8 - 9 வயது

வகுப்பு: III & IV

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

பாடம் – 16

தாவீதும் ஒரு கூழாங்கல்லும்

Click this link to get this lesson in English

மிக--இளநிலை வகுப்பின் மற்ற பாடங்களைப் பெற்றுக்கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

இதற்கு முந்தின பாடத்தில் இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதியான சாமுவேலைப் பற்றி அறிந்துகொண்டோம். நியாயாதிபதிகளின் காலத்திற்குப் பின் ராஜாக்கள் இஸ்ரவேல் தேசத்தை ஆளுகை செய்யத் தொடங்கினார்கள். சவுல் இஸ்ரவேல் தேசத்தின் முதல் ராஜாவாகத் தெரிந்தெடுக்கப்பட்டார். சவுல் ராஜா சிறிதுநாட்கள் நல்ல முறையில் ஆட்சிசெய்தார். ஆனால் அதன்பின்னர் அவர் ஆண்டவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியவில்லை. அதனால் ஆண்டவர் அவர்மேல் கோபங்கொண்டு அவரைப் புறக்கணித்தார். பின்னர் கர்த்தர் சாமுவேல் தீர்க்கதரிசியை பெத்லெகேம் என்ற ஊரில் வாழ்ந்து வந்த தாவீது என்ற ஆடு மேய்க்கும் சிறுவனை இஸ்ரவேல் தேசத்தின் அடுத்த ராஜாவாக அபிஷேகிக்கும்படியாக அனுப்பினார். தாவீது சுரமண்டலம் என்கிற இசைகருவியை வாசிப்பதில் தேறினவனாகவும் இருந்தான்.

தாவீதின் தகப்பனார் ஈசாய், வயதுசென்ற மனிதராயும், பெத்லெகேமிலே மதிக்கப்பட்ட ஒரு மனிதராகவும் இருந்தார். சாமுவேல் தீர்க்கதரிசி அவர்கள் வீட்டிற்கு சென்று, தாவீதை இஸ்ரவேல் தேசத்தின் அடுத்த ராஜாவாக அபிஷேகம் பண்ணினார். தாவீது சிறுவயதிலேயே ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டிருந்தாலும், சவுல் ராஜாவின் ஆட்சி நிறைவடைந்தபின்னரே அவன் இஸ்ரவேல் தேசத்தை ஆளுகை செய்யத் தொடங்கினான்.

இந்த பாடத்தில் நாம் கற்கப் போகும் சம்பவம், தாவீது ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டு சில காலம் கழித்து சம்பவித்தது.

ஒருமுறை பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் தேசத்திற்கு எதிராக யுத்தத்திற்கு வந்தார்கள். அவர்களை எதிர்த்து போரிடும்படி சவுல் ராஜாவும், அவருடைய போர்வீரர்களும் சென்றார்கள். தாவீதின் மூத்த சகோதரர்கள் சவுல் ராஜாவின் படையில் இருந்தார்கள். அதனால் அவர்களும் கூடசென்றார்கள். இரண்டு படைகளும் இரண்டு மலைஉச்சியின் மேல் நின்றார்கள். அவர்களுக்கு நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. இரண்டு படைகளும் உடனே யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. அதன் காரணம் என்னவென்றால், பெலிஸ்திய படையிலே கோலியாத் என்கிற பெயருள்ள ஒரு இராட்சதன் இருந்தான். அவன் தன்னுடைய படைக்கு முன்பாக வந்து நின்று இஸ்ரவேலரையும், அவர்களுடைய தேவனையும் ஏளனமாகப் பேசினான்.

கோலியாத்தின் உயரம் ஆறுமுழம் (சில மொழிபெயர்ப்புகளில் ஒன்பது அடி என்றும் கொடுக்கப்பட்டுள்ளது). அவன் தலைக்கு பாதுகாப்பிற்காக ஒரு வெண்கல தலைகவசமும், உடலை பாதுகாத்து கொள்வதற்காக போர்கவசமும்  அணிந்திருந்தான். அவன் கால்களை பாதுகாப்பதற்காகவும் ஒரு வெண்கல கவசம் அணிந்திருந்தான். அவன் ஒரு ஈட்டியையும் வைத்திருந்தான். அவனுடைய ஈட்டியின் முனை இரும்பாயிருந்தது.

கோலியாத் இரு படைகளும் யுத்தம் செய்வதை விரும்பவில்லை. அதற்கு பதிலாக இஸ்ரவேலிலிருந்து ஒரே ஒரு வீரன் தன்னிடம் வந்து போரிட வேண்டும் என்று சத்தமிட்டு கூறினான். தான் இஸ்ரவேலனிடம் தோற்றுவிட்டால் பெலிஸ்தர்கள் அனைவரும் இஸ்ரவேலர்களுக்கு அடிமைகளாகிவிடுவார்கள் என்றும், தான் இஸ்ரவேலனை தோற்கடித்தால் இஸ்ரவேலர்கள் அனைவரும் பெலிஸ்தியர்களுக்கு அடிமைகளாக வேண்டும் என்றும் கூறினான். இவ்வாறு அவன் நாற்பது நாட்கள் செய்தான். சவுல் ராஜாவும் அவனுடைய படைவீரர்களும் கோலியாத்தைக் கண்டு பயந்து ஒளிந்துகொண்டார்கள்.

இந்த சமயத்தில் தாவீதின் தகப்பனான ஈசாய் சவுலுடைய படையில் இருக்கும் தன்னுடைய மூத்த மகன்களை நலம் விசாரிக்க வேண்டும் என்று எண்ணினார். அவர் தன்னுடைய இளைய மகனான தாவீதை அழைத்து, அவனிடத்தில் வறுத்த பயிற்றையும், பத்து அப்பங்களையும் (ரொட்டிகள்) கொடுத்து அவர்களிடத்தில் நலம் விசாரித்து வர அனுப்பினார். தாவீதின் சகோதரர்கள் மேல் அதிகாரிகளாயிருந்த ஆயிரம் பேருக்கு அதிபதிகளுக்கு கொடுப்பதற்கு பத்து பால்கட்டிகளையும் (Food item similar to cheese) கொடுத்து அனுப்பினார். தாவீது தான் மேய்த்துவந்த ஆடுகளை ஒரு மனிதனிடம் ஒப்படைத்துவிட்டு தன்னுடைய சகோதரர்களை பார்க்க சென்றார்.

தாவீது படைவீரர்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்று தன்னுடைய சகோதரர்களை சந்தித்தார். அப்பொழுது கோலியாத் முன்போலவே வந்து நின்று இஸ்ரவேலரை நிந்தித்து தன்னுடைய சவாலை கர்ஜித்தார். தாவீது இதை கேட்டான். இஸ்ரவேலரின் படைவீரர்கள் கோலியாத்தைக் கண்டி ஓடிஒளிவதையும் பார்த்தான். தாவீதால் அதை நம்ப முடியவில்லை. கோலியாத்திடம் சண்டையிடுவதற்கு வேறுயாரும் போக முன்வரவில்லையென்றால் தானே போய் அவனிடம் கண்டையிடுவதாக தீர்மானித்தான்.

தாவீது சவுல் ராஜாவிடம் தன்னை கோலியாத்திடம் சண்டையிட அனுப்புமாறு கேட்டுக்கொண்டான். ஆனால் சவுலோ தாவீதால் கோலியாத்தை எதிர்நிற்க முடியாது என்று எண்ணி அவனை தடுக்க முயற்சித்தான். ஆனால் தாவீதோ தான் ஆடுகளை மேய்க்கும்பொழுது சிங்கத்தையும், கரடிகளையும் கொன்றிருப்பதாகவும் ஆகவே கோலியாத்தைப் பார்த்து தனக்கு பயமில்லை என்றும் கூறினான். 

சவுல் ராஜா இதை கேட்டவுடன், அவன் தாவீதிற்கு தன்னுடைய வஸ்திரத்தைக் கொடுத்து, ஒரு வெண்கல தலைகவசத்தையும், உடலைப் பாதுகாப்பதற்காக ஒரு கவசத்தையும் அணிவித்தான். தாவீது சவுலுடைய பட்டயத்தை அந்த வஸ்திரத்தில் கட்டிக் கொண்டு நடந்து பார்த்தான். அதிலே அவனுக்கு பழக்கமில்லாததினால் அவன் அதையெல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டான். தாவீது சவுலுடைய வஸ்திரத்தின்மேல் தன்னுடைய நம்பிக்கையை வைக்காமல் ஆண்டவர் மேல் தன்னுடைய நம்பிக்கையை வைத்தான்.

தாவீது தனக்கு நன்கு பழக்கப்பட்ட ஒரு ஆயுதத்தை கையில் எடுக்க தீர்மானித்தான். அவன் தன்னுடைய மேய்ப்பனின் கோலை எடுத்துக் கொண்டு, அருகில் இருந்த ஒரு ஆற்றிற்கு சென்றான். அந்த ஆற்றிலிருந்து ஐந்து கூழாங்கற்களை எடுத்துக் கொண்டான். அவன் யுத்தகளத்திற்கு சென்று கோலியாத்திற்கு நேரே ஓடினான். கோலியாத் சிறுவனான தாவீது தன்னுடன் யுத்தத்திற்கு வருவதைக் கண்டு எரிச்சலடைந்தான். அவன் தாவீதிடம் நீ என்னுடன் சண்டையிட கம்போடு வருவதற்கு நான் ஒரு நாயைப் போன்று இருக்கிறேனா என்று கேட்டான். அதுமட்டுமல்லாமல் தாவீதைக் கொன்று அவனுடைய உடலை பறவைகளுக்கு உணவாகக் கொடுக்கப்போவதாகவும் கூறினான்.

ஆனால் தாவீது அவனுடைய மிரட்டல்களுக்கு பயப்படவில்லை. தாவீது கோலியாத்தைப் பார்த்து நீ உன்னுடைய ஆயுதங்களை நம்பி என்னிடம் சண்டையிட வருகிறாய், நான் நீ அவமதித்த இஸ்ரவேலின் தேவனுடைய பெயரில் உன்னிடம் சண்டையிட வருகிறேன் என்று கூறினான். அதுமட்டுமல்லாமல் ஆண்டவர் கோலியாத்தை தனக்கு முன்பாக வீழ்த்துவார் என்றும், கோலியாத் எதை தாவீதிற்கு செய்ய நினைத்தானோ, அதை தாவீது கோலியாத்திற்கு செய்து, அவனுடைய உடலை பறவைகளுக்கு உணவாக கொடுக்கப்போவதாகவும் கூறினான்.

கவணும் கூழாங்கற்களும்.

பின்னர் தாவீது தாமதிக்காமல், கோலியாத்திற்கு நேரே ஓடிப் போய், தன்னுடைய பையில் வைத்திருந்த ஒரு கூழாங்கல்லை எடுத்து, அதை கவணிலே வைத்து சுற்றி, அது கோலியாத்தின் நெற்றியில் பட எறிந்தான். அந்த கல் குறிதவறாமல் கோலியாத்தின் நெற்றியில் பதிந்ததினால், அவன் கீழே சரிந்து விழுந்தான். இவ்வாறு தாவீது என்கிற ஒரு சிறுவன் ஒரு கவணினாலும், ஒரு கல்லினாலும் கோலியாத் என்கிற ஒரு பெரிய ராட்சதனை வீழ்த்தினான். பெலிஸ்தியர்கள் தங்களுடைய மாவீரன் கொல்லப்பட்டதைப் பார்த்து பயந்து தங்கள் பட்டணத்திற்கு ஓடிப் போனார்கள். தாவீது இஸ்ரவேலின் தேவன் மேல் மாத்திரம் நம்பிக்கை வைத்து, துணிந்து செயல்பட்டதினால் கோலியாத்தை எளிதாக வீழ்த்தினான்.

வேதபகுதி: 1 சாமுவேல் 16, 17

மனப்பாட வசனம்: என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். (சங்கீதம் 144:1)

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்

1.    தாவீதின் தகப்பன் யார்?

……………………………..

2.    தாவீது படையிலிருந்த தன் மூத்த சகோதரர்களுக்கு எடுத்து சென்றது என்ன?  

………………………………………

3.    தாவீது ஆற்றிலிருந்து எதை எடுத்தான்? …………………………

4.    தாவீது கோலியாத்திடம் என்ன கூறினான்? ………………………………………

5.    தாவீது கோலியாத்தை வீழ்த்துவதற்கு எத்தனை கற்களை பயன்படுத்தினான்? …………………………

 

சரியான பதிலைத் தெரிந்தெடுக்கவும் 

1.  கர்த்தர் சாமுவேல் தீர்க்கதரிசியை தாவீது என்ற ஆடு மேய்க்கும் சிறுவனை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகிக்கும்படியாக ………………………… என்ற ஊருக்கு அனுப்பினார்.

2. தாவீது ………………………….. வாசிப்பதில் தேறினவன்.

3. தாவீது சவுலுடைய ……………………….. அந்த வஸ்திரத்தில் கட்டிக் கொண்டு நடந்து பார்த்தான்.

4. கோலியாத்,, தாவீதைக் கொன்று அவனுடைய உடலை ………………………….. உணவாகக் கொடுக்கப்போவதாக கூறினான்.

5. தாவீது எறிந்த கல் குறிதவறாமல் கோலியாத்தின் …………………………. பதிந்தது.

 

No comments:

Post a Comment

திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...