Thursday, November 16, 2023

உதவ மறுத்த நாபால் (Nabal Refuses to Help), ஆரம்பநிலை வகுப்பு (Primary), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 16

ஆரம்பநிலை வகுப்பு (PRIMARY)

வயது: 6 - 7 வயது

வகுப்பு: I & II

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

Click this link to visit the English Sunday School Lessons Blog

பாடம் – 16

உதவ மறுத்த நாபால்

மற்ற ஆரம்பவகுப்பு பாடங்களைப் பெற்றுக்கொள்ள இந்த லின்க் ஐ கிளிக் செய்யவும்

Click this link to get this lesson in English

இஸ்ரவேல் தேசத்தில் மாகோன் என்ற ஊரில் நாபால் என்ற செல்வந்தர் ஒருவர் இருந்தார். அப்பொழுது சவுல் ராஜா இஸ்ரவேல் தேசத்தை ஆண்டு வந்தார். நாபாலிடம் ஆயிரம் வெள்ளாடுகளும், மூவாயிரம் செம்மறியாடுகளும் இருந்தன. அவருடைய மனைவியின் பெயர் அபிகாயில். நாபால் கஞ்சத்தனமான குணமற்ற மனிதராகக் காணப்பட்டார். அபிகாயிலோ தாராள குணமுள்ள நல்ல பெண்ணாக இருந்தாள்.

ஆட்டு மேய்ப்பன்

          
                             செம்மறி ஆடு (Sheep)                                   வெள்ளாடு (Goat)

ஆடுகளை வளர்க்கும் மேய்ப்பர்கள் ஆண்டிற்கு ஒருமுறை ஆடுகளின் ரோமத்தை வெட்டுவார்கள். ஆட்டின் ரோமம் குளிர்காலங்களில் பயன்படும் பலவிதமான கம்பளி உடைகள் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது. ஆட்டின் ரோமத்தை வெட்டுவது என்பது மனிதர்களுக்கு முடியை வெட்டுவது போன்றது. ஆடுகளின் ரோமம் வெட்டப்பட்டபின் திரும்பவும் முளைக்கும். பொதுவாக குளிர்காலம் முடிந்து, வசந்தகாலமும் முடியும் நேரத்தில் தான் ரோமங்களை கத்தரிப்பார்கள். அது கோடை காலங்களில் ஆடுகளின் உடல்நலன் சீராக இருக்க உதவும்.

ஆடுகளின் ரோமங்களை வெட்டுவது

ஆட்டுரோமங்களை கம்பளிநூலாகத் திரிப்பது

உலர்ந்த கம்பளி நூல்

கம்பளி ஆடை

பண்டைய காலங்களில் ஆடுகளுக்கு ரோமம் கத்தரிப்பதை விழாவாகக் கொண்டாடுவார்கள். ஆயிரக்கணக்கான ஆடுகளுக்கு ரோமம் கத்தரிக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு அதிகமான உதவிகள் தேவைப்படும். ஆகவே, உதவிக்காக உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் கூலியாட்கள் பயன்படுத்தப்படுவார்கள். ஆடுகளின் ரோமம் கத்தரிக்கப்பட்டு முடிந்தவுடன் அதை ஆடல், பாடல் மற்றும் விருந்துடன் கொண்டாடுவார்கள்.

ஒருமுறை நாபால், கர்மேல் என்ற இடத்தில் தன்னுடைய ஆடுகளுக்கு ரோமம் கத்தரிக்கும் விழா நடத்திக் கொண்டிருந்தார். ஆடு கத்தரிக்கும் விழா நடத்தும்போது மேய்ப்பர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். வெட்டப்பட்ட ரோமங்களை பக்கத்து ஊர்களிலிருந்து வரும் எதிரிகளோ, திருடர்களோ திருடி சென்றால் மேய்ப்பர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். அவர்களுடைய ஒருவருடத்திற்கான வருமானத்தை இழக்க நேரிடும்.

தாவீது சவுல்ராஜாவின் படைத்தளபதியாக இருந்தார். ஒருமுறை சவுல்ராஜாவிற்கு தாவீதின்மேல் கோபம் ஏற்பட்டு அவரைப் பிடித்து தண்டிக்க வேண்டும் என்று இருந்தார். தாவீது தன்னுடைய ஆட்களுடன் தப்பித்து கர்மேலுக்கு வந்தார். அப்பொழுது நாபால், கர்மேலில் ஆடுகளுக்கு ரோமம் கத்தரித்துக் கொண்டிருந்தார். தாவீதும் அவருடைய ஆட்களும் நாபாலின் ஆட்டு மந்தையருகே தங்கி இருந்தார்கள். அவர்கள் நாபாலுடைய மந்தைக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்.

ஒருமுறை தாவீதிற்கும் அவருடைய ஆட்களுக்கும் உணவு தேவைப்பட்டது. அவர் நாபாலிடம் உதவி பெறலாமென்று எண்ணினார். தன்னுடைய ஆட்களில் பத்து பேரை அனுப்பி உதவி கோரினார். ஆனால் நாபாலோ அவர்களுக்கு உதவி செய்ய மறுத்து, அவர்கள் தங்கள் எஜமானனை விட்டு ஓடிப்போனவர்கள் என்று கூறி அவமானப்படுத்தி அனுப்பினார்.

தாவீதிற்கு அந்த நேரம் உதவி தேவைப்பட்டிருந்தாலும் அவர் ஒரு சாதாரண நபர் அல்ல. அவர் சவுல் ராஜாவின் படைத்தளபதி. ஒரு நல்ல போர்வீரன். ஆண்டவர் அவரோடு கூட இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஆண்டவர் அவரை இஸ்ரவேல் தேசத்தின் அடுத்த ராஜாவாக தெரிந்தெடுத்தும் இருந்தார். ஆனால் பொல்லாத குணமுள்ள நாபாலோ தன்னுடைய மதியீனமான செயலால் தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும், நண்பர்களையும், வேலையாட்களையும் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளுகிறோம் என்று உணராமல் அவ்வாறு செய்தார்.

தாவீதின் ஆட்கள் திரும்பி வந்து நாபாலின் பதிலை தாவீதிற்கு சொன்னபொழுது, தாவீது நாபாலுக்கு பாடம் புகட்ட விரும்பினார். அதனால் தன்னுடைய நானூறு ஆட்களுடன் நாபால் மேல் படையெடுத்து சென்றார். இதை அறிந்தவுடன் நாபாலின் ஒரு வேலையாள் வேகமாக நாபாலின் மனைவியான அபிகாயிலிடம் போய் அதை கூறினார்.

தன்னுடைய குடும்பம் ஆபத்தில் இருப்பதை அறிந்த அபிகாயில் வேகமாக ஒரு முடிவெடுத்தாள். அவள் 200 அப்பங்களையும், 2 ஆட்டுத்தோலினால் ஆன பைகளில் திராட்சரசத்தையும், சமைக்கப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயிற்றையும், உலர்த்தப்பட்ட நூறு திராட்சைக்குலைகளையும், 200 உலர்த்தப்பட்ட அத்திப்பழ அடைகளையும் தாவீதிடம் எடுத்துசென்றாள். அவள் தாவீதிடம் ஞானமாய் பேசி தான் கொண்டுவந்த பொருட்களை தாவீதிடம் கொடுத்தாள். ஆகவே தாவீது நாபாலிடம் சண்டையிடவேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு, அபிகாயிலிடம் சமாதானம் கூறி அவளை அனுப்பினார். அபிகாயிலின் நல்ல குணத்தினால் அவளுடைய குடும்பம் தப்புவிக்கப்பட்டது.

வேதபகுதி: 1 சாமுவேல் 25:1 - 35

மனப்பாட வசனம்: ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? (1 யோவான் 3:17)

For Sunday School activities and stories in English https://jacobsladderactivity.blogspot.com/

பாடப் பயிற்சிகள்

கேள்வி பதில்:

1. நாபாலுடைய குணம் எப்படிப்பட்டதாயிருந்தது?  ……………………………………..

2. ஆட்டின் ரோமம் எதற்கு பயன்படும்? ……………………………………..

3. ஆட்டின் ரோமம் கத்தரிப்பதை எவ்வாறு கொண்டாடுவார்கள்? ……………………………….

4. தாவீது நாபாலிடம் எத்தனை ஆட்களை அனுப்பினார் ? ……………………………..

5. அபிகாயில் தாவீதிற்கு கொடுத்த ஏதாவது இரண்டு பொருட்களின் பெயரை எழுதவும். …………………………………………… 

சரியான பதிலைத் தெரிந்தெடுக்கவும்

1. நாபால் ஆடுகளுக்கு ரோமம் கத்தரித்த இடத்தின் பெயர்

    (அ) பெத்தேல்             (ஆ) எரிகோ              (இ) கர்மேல்

2. தாவீது யாரிடமிருந்து உணவு பெறுவதற்காக பத்து ஆட்களை அனுப்பினார்.

    (அ) சாமுவேல்             (ஆ) நாபால்             (இ) சவுல்

3. தாவீது யாருடைய படைத்தளபதி?

   (அ) சவுல்                        (ஆ) யோசுவா         (இ) சாலமோன்

4. தாவீது எத்தனை ஆட்களுடன் நாபால் மேல் படையெடுத்து சென்றார்?

     (அ) 100                           (ஆ) 400                      (இ) 200

5. யாருடைய புத்தியான செயலினால் நாபாலின் குடும்பம் பாதுகாக்கப்பட்டது?

    (அ) ராகாப்                    (ஆ) அன்னாள்          (இ) அபிகாயில்




No comments:

Post a Comment

திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...