Tuesday, March 31, 2020

பரிசுத்த வேதாகமம்–தேவனின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் (The Holy Bible - God's Priceless Treasure), மேல்நிலை வகுப்பு (Senior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 1

மேல்நிலை வகுப்பு (SENIOR)

வயது: 14 - 15 வயது

வகுப்பு: IX & X

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.

Permission is granted only for free distribution among Sunday School children.

No part of this document can be modified, sold or used for any commercial purpose.

பாடம்- 1

பரிசுத்த வேதாகமம் – தேவனின் விலைமதிப்பற்ற பொக்கிஷம்
இந்த பாடத்தை ஆங்கிலத்தில் பெற இங்கு கிளிக் செய்யவும்
Click here to get this lesson in English
‘பைபிள்’ அல்லது ‘வேதாகமம்’ என்ற பெயரின் அர்த்தம் என்ன?
தேவன் நமக்கு 66 புஸ்தகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட ஒரு விலையேறப்பெற்ற புஸ்தகக் களஞ்சியத்தை நமது கையில் கொடுத்திருக்கிறார். அதைத் தான் நாம் தமிழில் ‘பரிசுத்த வேதாகமம்’ என்றும் ஆங்கிலத்தில் ‘ தி ஹோலி பைபிள் (The Holy Bible)’ என்றும் அழைக்கிறோம். ‘பைபிள்’ என்கிற ஆங்கில வார்த்தைக்கு லத்தின் மற்றும் கிரேக்க பாஷைகளின் அடிப்படையில் ‘புஸ்தகம்’ என்று அர்த்தம். யோவான் 20:30 மற்றும் 2 தீமோத்தேயு 4:13ல் கொடுக்கப்பட்டிருக்கிற ‘பிப்ளியோன் (Biblion)’; பிலிப்பியர் 4:3 ல் கொடுக்கப்பட்டிருக்கிற ‘பிப்ளோஸ்(Biblos)’ ஆகிய கிரேக்க வார்த்தைகளும் ‘புஸ்தகம்’ அல்லது ‘புஸ்தகங்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. (1)

கோடக்ஸ் சினாய்டிகஸ் (Codex Sinaiticus) என்று அழைக்கப்படும் 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த உலகின் தொன்மை வாய்ந்த முழு வேதாகமம் (இதை விட பழமை வாய்ந்த அநேக வேதாகமங்கள் தனிப்பட்ட புஸ்தகங்களாகவும், பகுதிகளாகவும் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்). Picture credit: British Library


பரிசுத்த வேதாகமத்தை எழுதியது யார்?

தெய்வீக ஆக்கியோனும், மனித ஆக்கியோர்களும் இணைந்து எழுதியதே பரிசுத்த வேதாகமாகும்.
தெய்வீக ஆக்கியோன் (The Divine Author): பரிசுத்த வேதாகமம் தேவன் தாமே நமக்கு கொடுத்த ஒரு விலையேறப்பெற்ற புஸ்தகமாகும். இதுவே பரிசுத்த வேதாகமத்திற்கும் உலகத்தில் உள்ள மற்ற எல்லா புஸ்தகங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம் ஆகும். 2 தீமோத்தேயு 3:16ல் ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது’ என்று வாசிக்கிறோம். தேவனுடைய ஆவியினால் அருளப்பட்ட வாக்கியங்கள் மனிதர்களால் எழுதப்பட்டு நமக்கு பரிசுத்த வேதாகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
மனித ஆக்கியோர்கள் (The Human Authors): தேவனுடைய பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட மனிதர்கள் பரிசுத்த வேதாகமத்தை எழுதினார்கள். பரிசுத்த வேதாகமம் 1500 வருடங்களுக்கும் மேற்பட்ட கால இடைவெளிகளில், நாற்பதிற்கும் மேற்பட்ட மனிதர்களால் எழுதப்பட்ட புஸ்தகமாகும். வேதாகமத்தில் உள்ள பெரும்பாலான புஸ்தகங்களில் அவைகளை ஆக்கியோனின் பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆக்கியோனின் பெயர்கள் கொடுக்கப்படாத சில புஸ்தகங்களின் வரலாறு மற்றும் பாரம்பரிய தகவல்களை வைத்து ஆக்கியோர்கள் கணிக்கப்படுகிறார்கள். 

உலகிலேயே முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் - கூடன்பர்க் வேதாகமம் 

(The Gutenberg Holy Bible), Picture Credit: New York Public Library

மனித ஆக்கியோர்களின் சிறப்புகள்:

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு புஸ்தகங்களும் வெவ்வேறு நூற்றாண்டுகளில் (1500 வருடங்களுக்கு மேல்), மூன்று வித்தியாசமான கண்டங்களில்* (ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா) உள்ள வெவ்வேறு நாடுகளில் வைத்து எழுதப்பட்டது. அதேப் போல பரிசுத்த வேதாகமத்தின் புஸ்தகங்கள் பல்வேறு சூழ்நிலைகளில் வைத்து எழுதப்பட்டது. மோசே வனாந்திரத்தில் வைத்தும்; தானியேல் அரண்மனையில் வைத்தும்; பவுலினுடைய சில நிருபங்கள் சிறைசாலையில் வைத்தும்; யோவானுடைய வெளிப்பாடு ஒரு தீவிற்கு நாடுகடத்தப்பட்ட போதும் எழுதப்பட்டது. 

பரிசுத்த வேதாகமத்தை எழுதிய யோசுவா ஒரு படைதளபதி, தாவீது ஒரு ராஜா, பவுல் ஒரு வேத பண்டிதன், பேதுரு ஒரு மீனவன். இப்படி, இவர்கள் வித்தியாசமான பின்னணியத்தை சார்ந்தவர்களாயிருந்தாலும், அவர்களுடைய எழுத்து நடை (writing style) அவர்களுடைய தனித்துவத்தை உணர்த்தினாலும், அவர்களுடைய மையக்கருத்து ஒன்றாகவே இருந்தது. 

பரிசுத்த வேதாகமத்தை எழுதிய மனித ஆக்கியோர்களின் சிறப்பு என்னவென்றால், இவர்கள் எல்லாரும் வெவ்வேரு காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள் அதுமட்டுமல்லாமல் வெவ்வேறு பின்னணியத்திலிருந்து வந்தவர்களாயிருந்தாலும் அவர்கள் எழுதிய புஸ்தகங்கள் எல்லாம் ஒரே கருத்தையே அதாவதுமனிதன் நித்திய ஜீவனை பெற்று கொள்ளுவது எப்படி’ என்கிற கருத்தையே மையமாக வைத்திருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. 

ஆக்கியோர்கள் - பழைய ஏற்பாடு

புதிய ஏற்பாடு

மோசேஐந்து ஆகமங்கள் (ஆதியாகமம் – உபாகமம்); யோபு 

யோசுவா: யோசுவா 

சாமுவேல், நாத்தான் அல்லது காத்: நியாயாதிபதிகள், ரூத், 1&2 சாமுவேல் (1 நாளாகமம் 29:29,30) 

எரேமியா: 1 & 2 ராஜாக்கள் 

எஸ்றா / நெகேமியா: 1& 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா (நெகேமியா 12:22,23) 

மொர்தெகாய்: எஸ்தர் 

தாவீது, ஆசாப், கோராகின் புத்திரர், ஏமான், ஏத்தான், சாலொமோன், மோசே மற்றும் பலர்: சங்கீதம் 

சாலொமோன்: நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு

ஏசாயா: ஏசாயா 

எரேமியா: எரேமியா & புலம்பல் (2 நாளாகமம் 35:25) 

தானியேல்: தானியேல் 

ஓசியா: ஓசியா 

யோவேல்: யோவேல் 

ஆமோஸ்: ஆமோஸ் 

ஒபதியா: ஒபதியா 

யோனா: யோனா 

மீகா: மீகா 

நாகூம்: நாகூம் 

ஆபகூக்: ஆபகூக் 

செப்பனியா: செப்பனியா 

ஆகாய்: ஆகாய் 

சகரியா: சகரியா 

மல்கியா: மல்கியா

மத்தேயு: மத்தேயு 

யோவான்@மாற்கு: மாற்கு 

லூக்கா: லூக்கா, அப்போஸ்தலருடைய நடபடிகள் 
(லூக்கா 1:1-4;  அப்போஸ்தலர் 1:1,2)

யோவான்: யோவான் சுவிசேஷம், 1,2 &3 யோவான் 

பவுல்: ரோமர், 1&2 கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர்,

கொலொசேயர், 1&2 தெசலோனிக்கேயர், 1&2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன் (எபிரெயர்- பவுல் எழுதினதாக இருக்கலாம்) 

யாக்கோபு: யாக்கோபு 

பேதுரு: 1&2 பேதுரு 

யூதா:யூதா 

 பரிசுத்த வேதாகமம் எழுதப்பட்ட மொழி:

பரிசுத்த வேதாகமம் வெவ்வேறு காலஇடைவெளிகளில் எழுதப்பட்ட படியால், அந்தந்த கால கட்டங்களில் பொதுவான வழக்கத்தில் இருந்த மொழிகளில் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு எபிரெய மற்றும் அரமேய மொழிகளிலும், புதிய ஏற்பாடு கொய்னேய கிரேக்க (Koine Greek) மொழியிலும் எழுதப்பட்டது. 

மனிதர்களால் எழுதப்பட்ட பரிசுத்த வேதாகமத்தை தேவனுடைய வார்த்தை என்று ஏன் அழைக்கிறோம்?

 பரிசுத்த வேதாகமம் மனிதனின் கையினால் எழுதப்பட்டாலும், அதில் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் தேவமனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது. எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் தன்னுடைய நண்பர்களுக்கு ஒரு தகவலை அனுப்ப விரும்பி ஒரு கடிதம் எழுதுகிறான் என்று வைத்து கொள்ளுவோம். அவன் ஒருவேளை அந்த தகவலை பல விதமான எழுதுகோல்களை பயன்படுத்தி எழுதினால், அவன் எழுதிய எழுத்துக்களின் நிறங்களும், வடிவமும் மாறுமே ஒழிய அவன் அனுப்பவிரும்பும் தகவலில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது.

 அதுபோலவே, பரிசுத்த வேதாகமம் முற்றிலும் வேறுபட்ட காலகட்டங்களில், முற்றிலும் வேறுபட்ட மனிதர்களால் எழுதப்பட்டாலும், எந்தவொரு புஸ்தகத்திலும் கருத்து பிசகு இல்லாமல் ‘மனிதன் நித்திய ஜீவனை பெற்று கொள்ளுவது எப்படி’ என்கிற கருத்தையே மையமாக வைத்து ஒரே ஆக்கியோனால் இயற்றப்பட்டதைப் போன்ற கருத்து ஒற்றுமையுடனும், கருத்து கோர்வையுடனும் காணப்படுகிறது. இதுவே பரிசுத்த வேதாகமத்தின் தனிப் பெரும் சிறப்பாகும்.

விண்வெளி வீரர் எட்கர் டி மிட்சல் என்பவரால் 1971ஆம் ஆண்டு நிலவுக்கு கொண்டு செல்லப்பட்ட உலகிலேயே மிக சிறிய வேதாகமம், Picture credit: Bonhams.com 

கும்ரான் குகைகளும், சவக்கடல் சுருள்களும் (Qumran Caves and the Dead Sea Scrolls)

சவக்கடல் சுருள்களின் கண்டுபிடிப்பு 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய தொல்லியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. இந்த சவக்கடல் சுருள்கள் “கும்ரான் குகைகள்” என்று அழைக்கப்படும் குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட சுருள்களில் வேதாகமக்காலத்தைச் சார்ந்த வேதாகம சுருள்களும், தள்ளுபடி ஆகமங்களும், மற்றும் பல பண்டைய கால எழுத்துக்களும் அடங்கும். இதுவரை கிடைத்திருப்பதிலேயே மிகவும் பழமையான வேதாகமப் புஸ்தகங்களின் பிரதிகள் இவைகளே ஆகும். 

1947 ஆம் ஆண்டு முகம்மது அல் தீப், என்கிற ஆடு மேய்க்கும் பாலஸ்தீன சிறுவன், தொலைந்து போன தன்னுடைய ஆட்டைத் தேடி சென்ற பொழுது, இந்த குகையைக் கண்டு உள்ளே சென்றான். அப்பொழுது அங்கு பல பழமையான பொருட்களும், சுருள்களும் இருப்பதைக் கண்டு தகவல் தெரிவித்தான். அதன் பின்னரே இந்த குகையைப் பற்றி வெளிஉலகிற்கு தெரிய வந்தது. இந்த கும்ரான் குகைகள் சவக்கடலின் மிக அருகில் உள்ளது. இங்கு கண்டு பிடிக்கப்பட்டிருக்கிற சுருள்கள் கிமு 2ஆம் நூற்றாண்டு முதல் கிபி 68ஆம் நூற்றாண்டை சார்ந்தவை. வேதாகமக் காலத்தைப் பற்றிய மிகவும் அரிதான தகவல்கள் இந்த குகைகளிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இன்றும் பல்வேறு தொல்லியல் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முதலில் கண்டுபிடிக்கப்பட்ட குகையை சுற்றி பல்வேறு குகைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த குகைகளிலிருந்தும், அதின் சுற்றுவட்டாரத்திலிருந்தும் பண்டைய கால கட்டடங்கள், நூலகம், கல்லறைகள், பொருட்கள் முதலானவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

                                                                                     கும்ரான் குகைகள் (Effi Schweizer / Public domain)

  
 ஏசாயா புஸ்தகத்தின் சுருள் (Israel Museum / Public domain)

மனப்பாட வசனம்: வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறதுதேவனுடைய மனுஷன் தேறினவனாகவும்எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படிஅவைகள் உபதேசத்துக்கும்கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும்நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:16,17)  

குறிப்பு: மூன்று வித்தியாசமான கண்டங்களில் என்பதற்கான விளக்கம்*

பரிசுத்த வேதாகமம் பெரும்பாலாக 

·         ஆசியா கண்டத்தில் உள்ள இஸ்ரவேல், சிரியா, துருக்கி, பெரிசியா (தற்போதைய ஈரான்), பாபிலோன் (தற்போதைய ஈராக்) ஆகிய நாடுகளில்

·         ஐரோப்பா கண்டத்தில் (பவுலின் சில நிருபங்கள் இத்தாலி தேசத்திலுள்ள ரோம சிறையில் வைத்து எழுதப்பட்டது)

·         ஆப்பிரிக்கா கண்டத்தில் (மோசே எழுதின புஸ்தகங்கள் எகிப்தில் வைத்து எழுதப்பட்டதாக கருதப்படுகிறது; எரேமியா தீர்க்கதரிசி எகிப்திற்கு சிறையாகக் கொண்டுபோகப்பட்ட பொழுது கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் எரேமியா 43, 44 அதிகாரங்களில் பார்க்கலாம்.

 ஆதார நூற்களின் பட்டியல்:

1.      Vine, W. E., Unger, M. F., White, W., & Vine, W. E. (1985). Vine's complete expository dictionary of Old and New Testament words. Nashville: Nelson.

2.     Qumran: Caves and Monastery of the Dead Sea Scrolls (Retrieved 5th August 2020 from https://whc.unesco.org/en/tentativelists/5707/)

3.     When was the Bible written? (Retrieved 5th August 2020 from https://www.biblica.com/resources/bible-faqs/when-was-the-bible-written/)

( மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களிலிருந்து இந்த புஸ்தகத்தை ஆக்கியோர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது)

For Sunday School activities and stories in English


உயர்நிலை வகுப்பிற்கான அடுத்த பாடத்தை (பாடம் - 2, பரிசுத்த திரித்துவம் (The Holy Trinity) வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்


The Holy Trinity என்கிற பாடத்தை ஆங்கிலத்தில் பெற இங்கே கிளிக் செய்யவும்


                                             பாடப் பயிற்சிகள்

கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1.    பரிசுத்த வேதாகமம் …………………………. மேற்பட்ட மனிதர்களால் எழுதப்பட்ட புஸ்தகமாகும்.

2.    பரிசுத்த வேதாகமம் ………………………………. கண்டங்களில் உள்ள வெவ்வேறு நாடுகளில் வைத்து எழுதப்பட்டது.

3.     பரிசுத்த வேதாகமம் ……………………… வருடங்களுக்கும் மேற்பட்ட கால இடைவெளிகளில் எழுதப்பட்டது.

4.    சவக்கடல் சுருள்கள் ……………………  குகையில் கண்டுபிடிக்கப்பட்டது.

 ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் பதிலளிக்கவும்

1.  ‘பைபிள்’ என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

 

2.  பரிசுத்த வேதாகமத்தை எழுதிய ஆக்கியோர்கள் சிலரின் பின்னணியைப் பற்றி எழுதவும்?

 

3.  பரிசுத்த வேதாகமம் எந்தெந்த மொழிகளில் எழுதப்பட்டது?

 

4.  கும்ரான் குகை எங்கு உள்ளது?  

கீழ்கண்ட கேள்விக்கு குறுகிய பதிலளிக்கவும்

1.    மனிதர்களால் எழுதப்பட்ட பரிசுத்த வேதாகமத்தை தேவனுடைய வார்த்தை என்று ஏன் அழைக்கிறோம்?

 


No comments:

Post a Comment

தாவீது என்ற ஆட்டு இடையச் சிறுவன் (David - The Little Shepherd Boy), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

பாலர் வகுப்பு (KINDER) வயது – 4 & 5 வகுப்பு – LKG & UKG ( பாலர் பள்ளி ) இந்த   நகலை   இலவசமாக   ஞாயிறு   பள்ளிகளில்   பயன்ப...