மிக-இளநிலை வகுப்பு (SUB-JUNIOR)
பாடம் – 12
பூசணம் பூத்த அப்பங்களும், பொத்தலான துருத்திகளும்
இதற்கு முந்தைய பாடங்களில் இஸ்ரவேல்
ஜனங்கள் எகிப்திலிருந்து கானானுக்கு செய்த பயணத்தை பற்றி பார்த்தோம். இஸ்ரவேலருடைய
தலைவனாகிய மோசே வயது முதிர்ந்து இறந்து போன பின், யோசுவா அவர்களை வழிநடத்தினார். பாடம்
9ல் இஸ்ரவேல் ஜனங்கள் அதிசயமாக யோர்தான் நதியைக் கடந்து கானான் தேசத்திற்குள் நுழைந்ததைப்
பார்த்தோம். இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்திற்கு சென்றடைந்திருந்தாலும், அவர்கள் அதை
தங்கள் சொந்த தேசமாக்குவதற்கு முன்பாக கானானுடைய பல பட்டணங்களையும் அங்கு குடியிருந்த
கானானிய ஜாதிகளிடம் இருந்து கைப்பற்ற வேண்டியிருந்தது.
அதற்காக இஸ்ரவேலருடைய தலைவனாகிய
யோசுவா தலைமையில், இஸ்ரவேல் ஜனங்கள் தொடர்ச்சியான பல யுத்தங்களை செய்ய வேண்டியிருந்தது.
மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே, யோசுவா, எரிகோ மற்றும் ஆயி என்கிற இரு கானானிய பட்டணங்களைப் பிடித்துவிட்டார்.
ஆண்டவர் அவர்களோடு இருந்ததினால், அவர்கள் மிக எளிதாக இந்த இரு பட்டணங்களையும் பிடித்து
விட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட பக்கத்திலிருந்த மற்ற கானானிய பட்டணங்களை ஆண்ட ராஜாக்களுக்கு
இது மிகுந்த பயத்தைக் கொடுத்தது. அருகாமையிலிருந்த கானானிய பட்டணங்களில் கிபியோன் என்கிற
பட்டணமும் ஒன்று. கிபியோன் பட்டணம் மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்தது, அதுமட்டுமில்லாமல்
அதின் குடிகள் சிறந்த போர் வீரர்களுமாயிருந்தார்கள்.
ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோடு தேவன்
இருந்து அவர்களுடைய யுத்தத்தில் அவர்கள் வெற்றி பெற உதவுவதை, கிபியோனியர்கள் அறிந்து
கொண்டார்கள், அதனால் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களோடு யுத்தம் செய்ய விரும்பவில்லை. அவர்கள்
இஸ்ரவேல் ஜனங்களோடு சமாதானம் செய்து, தங்களை பாதுகாத்துக் கொள்ளுவதற்காக, ஒரு தந்திரமான
செயலை செய்யும்படி முடிவெடுத்தார்கள். அவர்கள் தங்களுடைய ஜனங்களில் சிலரை சமாதான தூதுவர்களாக
யோசுவாவிடம் அனுப்ப முடிவெடுத்தார்கள்.
தாங்கள் அருகில் இருக்கும் பட்டணத்தில் குடியிருப்பவர்கள்
என்று யோசுவா அறிந்தால், தங்களுடைய சமாதான கோரிக்கையை யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்களும்
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்த கிபியோனியர், தங்களை தூரத்திலுள்ள தேசத்திலிருந்து,
நீண்ட நேரம் பிரயாணம் செய்து வந்திருப்பவர்களாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.
அதனால் தாங்கள் அனுப்பின மனிதர்களுக்கு பழைய கந்தலான ஆடைகளையும், பழைய கிழிந்த காலணிகளையும்
அணிவித்தார்கள், அதுமட்டுமல்லாமல் பூசணம் பூத்த அப்பங்களையும், பழைய, கிழிந்து போன,
பொத்தலான திராட்சரசத் துருத்திகளையும் அவர்களுடைய கழுதைகளின் மேல் ஏற்றி அனுப்பினார்கள்.
(துருத்தி என்றால் ஆடு போன்ற மிருகத்தின் தோலைத் தைத்து தண்ணீர், திராட்சரசம் போன்றவற்றை
சேமித்து வைப்பதற்கு பயன்படும் கொள்கலம் ஆகும்)
கிபியோனியருடைய சமாதான தூதுவர்கள்
யோசுவாவிடம் வந்து தாங்கள் தூரத்திலுள்ள ஒரு தேசத்திலிருந்து வந்திருப்பதாகவும், தேவன்
இஸ்ரவேலருக்காக செய்த எல்லாவற்றையும் பார்த்து அவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்ய
வந்திருப்பதாகவும் கூறினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் முதலில் அவர்களை நம்ப மறுத்தார்கள்.
அப்ப்பொழுது அந்த கிபியோனியர் தாங்கள் கொண்டு வந்த பூசணம் பூத்த அப்பங்களையும், பொத்தலான
திராட்சரசத் துருத்திகளையும், தங்களுடைய கிழிந்த ஆடைகளையும் காண்பித்து, தங்கள் தேசத்திலிருந்து
புதிதாக கொண்டு வரப்பட்ட இவை அனைத்தும் தாங்கள் செய்த நீண்ட பயணத்தினால் பூசணம் பூத்ததாகவும்,
பொத்தலாகவும், கிழிந்ததாகவும், மாறிவிட்டதாகக் கூறினார்கள்.
இதனைக் கேட்ட இஸ்ரவேலர்கள் அவர்களுடன் உடன்படிக்கை செய்வதற்காக அவர்கள் கொண்டு வந்த அப்பங்களை வாங்கிக் கொண்டார்கள். ஆனால் தேவனிடம் விசாரிக்க வேண்டும் என்று மறந்து போனார்கள். தேவனிடம் விசாரிக்காமலே யோசுவா அவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்து, அவர்களுடன் யுத்தம் செய்யாமல் பாதுகாப்பாக வைப்போம் என்று வாக்குறுதி அளித்தார். மூன்று நாள் சென்ற பின் தான், கிபியோனியர் தங்களுக்கு அருகில் உள்ள பட்டணத்தில் வசிப்பவர்கள் என்று யோசுவாவிற்கும், இஸ்ரவேல் ஜனங்களுக்கும் தெரிய வந்தது.
இதைக் கேட்ட இஸ்ரவேல் ஜனங்கள் மிகவும்
கோபப்பட்டார்கள், தங்களை ஏமாற்றினதற்காக கிபியோனியரை தண்டிக்க வேண்டும் என்று முறையிட்டார்கள்.
ஆனால் இஸ்ரவேலரின் தலைவர்களோ, நாம் அவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்து, அவர்களை உயிரோடு
காப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டபடியால் அதை நாம் முறிக்கவோ, மீறவோகூடாது. அது
தேவனுக்கு முன்பாக பாவமாகும் என்று கூறினார்கள். அதனால் இஸ்ரவேலர்களின் தலைவர்கள் கிபியோனியரிடம்
நாங்கள் உங்களுக்கு வாக்கு கொடுத்தபடியால் நாங்கள் உங்களை அழிக்க மாட்டோம், ஆனால் நீங்கள்
தேவனுடைய ஆலயத்திற்கு தண்ணீர் எடுப்பவர்களாகவும், விறகு வெட்டுகிறவர்களாகவும்
எங்களுக்கு வேலைக்காரர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். அப்படியே கிபியோனியர்
தண்ணீர் எடுப்பவர்களாகவும், விறகு வெட்டுகிறவர்களாகவும் இஸ்ரவேல் ஜனங்களின் நடுவே குடியிருந்தார்கள்.
வேத
பகுதி: யோசுவா 9
மனப்பாட
வசனம்: உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும்,
உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன் (சங்கீதம் 119:66).
பாடப் பயிற்சிகள்
கேள்வி
பதில்
1. யோசுவாவினால்
கைப்பற்றப்பட்ட இரண்டு கானானிய பட்டணங்களின் பெயர் என்ன? ………………………………………
2. இஸ்ரவேலரோடு
சமாதானம் செய்ய தூதுவர்களை அனுப்பினது யார்?
………………………………………
3. கிபியோனியர்
கொண்டு வந்த அப்பங்களும், துருத்திகளும் எவ்வாறு இருந்தது? ………………………………………..
4. இஸ்ரவேலரின்
தலைவர்கள் கிபியோனியரோடு செய்த சமாதான உடன்படிக்கையை ஏன் முறிக்கவில்லை?
…………………………………
5. கிபியோனியர்
இஸ்ரவேலருக்காக எந்தெந்த வேலைகளை செய்தார்கள்? ………………………………………
1. இஸ்ரவேல்
ஜனங்கள் கானான் தேசத்திற்குள் நுழைந்தவுடன் அதை தங்களுடைய சொந்த தேசமாக மாற்ற முடிந்தது.
( )
2. கிபியோன்
சிறிய மற்றும் வலிமையற்ற ஜனங்களைக் கொண்ட பட்டணமாகும். ( )
3. கிபியோனின்
தூதுவர்கள் தாங்கள் தூர தேசத்திலிருந்து வந்திருப்பதாக யோசுவாவிடம் கூறினார்கள்.
( )
4. கிபியோனின்
தூதுவர்கள் விலையுயர்ந்த ஆடம்பரமான ஆடைகளையும், காலணிகளையும் அணிந்து வந்திருந்தார்கள்.
( )
5. இஸ்ரவேல் ஜனங்கள் கிபியோனியரோடு உடன்படிக்கை செய்வதற்கு முன்பாக தேவனிடம் விசாரிக்கவில்லை. ( )
No comments:
Post a Comment