ஆரம்பநிலை வகுப்பு(PRIMARY )
இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை.
பாடம் – 13
யெருபாகால்
இதற்கு முந்தின பாடத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் கானான் தேசத்திற்கு சென்றதையும், அவர்கள் அதை தங்கள் சொந்த நாடாக்குவதற்காக எவ்வாறு பல பட்டணங்களை கைப்பற்ற வேண்டியிருந்தது என்றும் பார்த்தோம். சிறிது வருடங்கள் கழித்து, அவர்களை கானானுக்குள் அழைத்து சென்ற அவர்கள் தலைவனாகிய யோசுவா வயதாகி இறந்துவிட்டார். அந்த நாட்களிலே இஸ்ரவேலின் தலைவர்களை “நியாயாதிபதி” என்று அழைத்தார்கள்.
யோசுவா இறந்த பின் இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரை மறந்து, பல பாவ செயல்களிலே ஈடுபட ஆரம்பித்தார்கள். அதனால் அருகிலிருந்த மற்ற தேசங்கள் அவர்களை துன்புறுத்த ஆரம்பித்தனர். ஒருமுறை அவர்கள் அருகிலிருந்த “மீதியானியர்” என்கிற கூட்டத்தினர் இஸ்ரவேல் ஜனங்களை ஏழு வருடங்கள் கொடுமையாக ஒடுக்கினார்கள். திடீரென்று பெருங்கூட்டமாக படையெடுத்து வரும் அவர்கள், இஸ்ரவேல் தேசத்தில் அறுவடை செய்து வைத்திருக்கும் கதிர்களையெல்லாம் கொள்ளையடித்து சென்று விடுவார்கள். இதனால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மிகுந்த பயம் உண்டானது. ஏனென்றால் உணவு தானியங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டால், மக்கள் பசி பட்டினியில் இறந்து போக நேரிடும். ஏழு வருடங்களுக்குப் பின் இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் குற்றங்களை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு தங்களுக்கு உதவி செய்யும்படி வேண்டினார்கள். ஆண்டவர் அவர்கள் மேல் இரக்கமுற்று அவர்களை மீதியானியரிடத்தில் இருந்து விடுவிக்கும்படி அவர்களுக்காக ஒரு நியாயாதிபதியை எழுப்பினார்.
அதற்காக கர்த்தர் தெரிந்து கொண்ட மனிதர் யோவாஸ் என்பவரின் மகனான கிதியோன். கோதுமை அறுப்பின் நாட்கள் வந்தபொழுது, கிதியோன் கோதுமையை போரடிப்பதற்காக சென்றான். போரடிப்பது என்றால் கோதுமை மணிகளை, தாளிலிருந்து பிரித்தெடுப்பது. பின்னர் இந்த கோதுமை மணிகளை அப்பங்களாக (ரொட்டிகளாக) சுடுவதற்கு பயன்படுத்துவார்கள். கிதியோன் இவ்வாறாக போரடித்துக் கொண்டிருந்தபொழுது, கர்த்தருடைய தூதன் அங்கு வந்து ஒரு கர்வாலி மரத்தின் கீழ் உட்கார்ந்தார். கர்த்தருடைய தூதன் கிதியோனிடம், மீதியானியருக்கு எதிராக புறப்பட்டுப் போய், யுத்தம் செய்து, ஜெயித்து, இஸ்ரவேல் ஜனங்களை மீட்குமாறு கூறினார்.
கிதியோனுக்கோ தன்னால் மீதியானியரை ஜெயிக்க முடியும் என்ற எந்த நம்பிக்கையும் இல்லை. ஏனென்றால் இஸ்ரவேலின் சிறிய கோத்திரங்களில் ஒன்றாகிய மனாசே கோத்திரத்தில், மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவன் தான் இந்த கிதியோன். அவனுடைய குடும்பத்திலும் இவன் தான் மிகவும் சிறியவன். அவனுடைய குடும்பத்தினர் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை வழிபடவில்லை. அவர்கள் பாகால் என்கிற தெய்வத்தை வழிபட்டு அதற்கு ஒரு பலிபீடமும் கட்டியிருந்தனர். ஆண்டவர் கிதியோனிடம், மீதியானியரை தோற்கடிப்பதற்கு தான் அவனுக்கு உதவுவதாக வாக்களித்தார்.
அதே இரவிலே, ஆண்டவர் கிதியோனிடம், கிதியோனின் தகப்பனாகிய யோவாஸ் கட்டி இருந்த பாகாலின் பலிபீடத்தை இடித்து, அதின் அருகே தோப்பை வெட்டி விடுமாறு கூறினார். ஆண்டவர் கூறினபடியே, கிதியோன் தன்னுடைய பத்து வேலைக்காரரைக் கூட்டி கொண்டு போய், பாகாலின் பலிபீடத்தை இடித்து தோப்பையும் வெட்டி போட்டான். ஜனங்களுக்குப் பயந்ததினால் கிதியோன் அதை இராத்திரியிலே செய்தான். அந்த ஊர் மக்கள் காலையிலே எழுந்தபோது, பாகாலின் பலிபீடம் இடிக்கப்பட்டு, தோப்பு வெட்டப்பட்டு கிடப்பதையும் பார்த்து, அதை யார் செய்தது என்று விசாரித்தனர். அது கிதியோன் செய்தது என்று தெரிய வந்தது. அதனால் அவர்கள் கிதியோனை கொல்லும்படியாக தேடினார்கள்.
ஊர் மக்கள், கிதியோனின் தகப்பனாகிய யோவாசிடம், கிதியோன் செய்ததெல்லாவற்றையும் கூறி, அவனைக் கொல்லும்படியாக அவனை வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் கிதியோனின் தகப்பனோ, பாகாலின் பலிபீடத்தை கிதியோன் இடித்தால், பாகாலே அதற்காக வழக்காடட்டும் (பழிதீர்த்துக் கொள்ளட்டும்) என்று கூறினார். இதைக் கேட்டவுடன் ஜனங்கள் அவனை விட்டுவிட்டு சென்றார்கள். அதனால் கிதியோனுக்கு “யெருபாகால்” என்கிற இன்னொரு பெயரும் உண்டு. எதிர்பார்த்தபடியே, பாகால் கிதியோனை பழிதீர்க்கவும் இல்லை, கிதியோனுக்கு எதுவும் நடக்கவும் இல்லை. அவன் இஸ்ரவேலின் நியாயாதிபதியாய் மீதியானியருக்கு எதிரே யுத்தம் செய்து அவர்களை ஜெயித்து, இஸ்ரவேல் மக்களை விடுவித்தான்.
வேதபகுதி:
நியாயாதிபதிகள்
6:1-32
மனப்பாட வசனம்: சங்கீதம் 34:22
பாடப் பயிற்சிகள்
கேள்வி பதில்:
1. இஸ்ரவேலரை கொடுமையாக ஒடுக்கினது யார்? ……………………………………..
2. இஸ்ரவேலரை விடுவிப்பதற்காக தெரிந்துகொள்ளப்பட்ட மனிதன்
யார்? ……………………………………..
3. இஸ்ரவேலர் எதினால் மிகவும் பயந்தார்கள்?
……………………………….
4. கர்வாலி மரத்தின் கீழ் வந்து அமர்ந்தது யார்?
……………………………..
5. கிதியோனுக்கு கொடுக்கப்பட்ட புது பெயர் என்ன?
……………………………………………
பொருத்துக:
1. யோசுவா - பாகாலுக்கு பலிபீடம் கட்டினான்
2. கர்த்தருடைய தூதன் - கோதுமை போரடித்தான்
3. கிதியோன் - பாகால்
வழக்காடட்டும்
4. யோவாஸ் - கர்வாலி
மரத்தின் கீழ் அமர்ந்தார்
5. யெருபாகால் - கானானுக்குள் வழிநடத்தினார்
No comments:
Post a Comment